Dec 25, 2012

இது வேறொரு பெரிய யானையை குறித்து..


சென்ற வாரத்தில் ஒரு நாள் மகனுக்கு கதை சொல்ல ஆரம்பித்திருந்தேன். அவனுக்கு கதை கேட்பதில் ஆர்வம் அதிகம். ஏற்கனவே அறிமுகமான கதைகளைச் சொல்வதில்லை. அந்தச் சமயத்தில் கற்பனையில் என்ன தோன்றுகிறதோ அதை கதையாக்கிவிடுவதுதான் வழக்கம். மான்-புலி, மயில்-பாம்பு, இந்தியா-சீனா, ஏகே 47, பிரமோஸ் ஏவுகணை என எதுவாக இருந்தாலும் கதையில் ஒன்றிவிடுவான் - அது எவ்வளவு மொக்கையாக இருந்தாலும்.

“ஒரு ஊர்ல ஒரு மான் இருந்துச்சாமா...” என்று கதையை ஆரம்பித்தேன். 

“ம்ம்ம்” கொட்ட ஆரம்பித்தான். 

“அந்த மான் புல் மேஞ்சிட்டிருந்துச்சு” மான் புல் மேய்வதைப் போல குனிந்து பாவனை செய்கிறேன்.

அவனும் என்னைப் போலவே செய்து காட்டுகிறான்.

“அந்த மானை ஒரு புலி பார்த்துடுச்சு தங்கம்” என்று சொல்லிவிட்டு பதுங்கி காட்டுகிறேன்.

“ம்ம்ம்ம்” என்கிறான்.

“இப்போ புலி மெதுவா வருது...திரும்பி அந்தப்பக்கம் பார்க்குது...இந்தப்பக்கம் பார்க்குது”- தலையை இடவலமாக அசைக்கிறேன்.

சில வினாடிகள் அமைதி. அறைக்குள் நிசப்தம் பரவுகிறது.

திடீரென்று குரலை உயர்த்தி உச்சஸ்தாயியில் “புலி Sudden ஆ எடுத்துச்சு பாரு ஓட்டம்” என்ற போது ஒரு கணம் பயந்துவிட்டான்.

கதையை நிறுத்திவிட்டு “பயந்துட்டியா தங்கம்?” என்றவுடன் சுதாரித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். 

“புலி Sudden ஆ எடுத்துச்சு பாரு ஓட்டம்” என்ற வரி அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. திரும்பத் திரும்ப அதே வரியை உச்சரித்துக் கொண்டிருந்தான். அதற்கு பிறகாக கதை என்ன ஆனது என்பது பற்றி அவன் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வரியை மட்டுமே அடுத்த சில நாட்களுக்கு கொண்டாடிக் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வரி கொடுத்த Jerk என நம்புகிறேன். 

குழந்தைகளுக்கு பாதிப்பில்லாத அதிர்வுகள் மிகப் பிடிக்கும். அந்த அதிர்வு அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை அவர்கள் உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் மிகுந்த உற்சாகமாகிவிடுவார்கள். Jerk குழந்தைகளுக்கு மட்டுமில்லை, பெரியவர்களுக்கும் கூட விருப்பமானதுதான். ட்விஸ்ட் இல்லாத சமாச்சாரங்களை நாம் அதிகம் விரும்புவதில்லை. சினிமாவாகட்டும், கதையாகட்டும் எல்லாவற்றிலும் அதிர்வையும் சலனத்தையும் நம் மனம் எதிர்பார்க்கிறது. 

இதே மனநிலையில் கவிதையிலும் அதிர்வு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வாசகனை அதிர்வடையச் செய்ய வேண்டும் என்ற எத்தனிப்பு இல்லாத அதிர்வுதான் நமக்கு பிடித்தமானதாக இருக்கும். கவிதையோடு ஒன்றிய, இயல்பான அதிர்வாக இருக்க வேண்டும். கதிர்பாரதியின் “யானையோடு நேசம் கொள்ளும் முறை” என்ற கவிதையில் அப்படியான ஒரு Jerk இருக்கிறது. கவிதை நேரடியானது. எளிமையான கவிதையும் கூட. 

கவிதை இதுதான்-

யானையோடு நேசம்கொள்ள எண்ணி இருக்கும் நாம்
முதலில் தந்தத்தை நீவிவிட்டு நேசத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
துதிக்கைக்கு முத்தங்கள் ஈந்தாலும் தப்பில்லை
அதுவும் நேசத்தின் கணக்கில் சேரும்.
தேக்குமரத் தூணையொத்த கால்களைப் பிணித்திருக்கும்
இரும்பு சங்கிலியை அகற்றுவதும் நல்லதுதான்.
மத்தகத்தைப் பாதிக்கும் அங்குசத்தை தூரதூரத்துக்கு
எறிந்துவிட்டால் போதும்
யானை நம்மை ஒரு குழந்தைப் போல தூக்கிக்கொண்டு
ஓடிக் களிக்க ஆரம்பிக்கும்.
இப்போது அதன் துதிக்கையில் ஒட்டியிருக்கும்
சப்பாத்திக் கள்ளி முள்ளை எடுத்துவிட்டு
ஏற்பட்டிருக்கும் சிறுகாயத்தின் மீது
நம் கவலையைப் பூசிவிடுகையில் உணர்ந்துவிடும்
நேசத்தின் ஆழத்தை. பிறகு,
அதன் பிரமாண்ட கனவுக்குள் எப்போதும் நமது ஆதிக்கம்தான்.
கவனம் நண்பர்களே...
ஆசீர்வாதம் வாங்குவது இப்போது யானைக்குப் பிடித்திருக்கிறது.

(மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பிலிருந்து)

யானையை எப்படி பழக்குவது, அதனோடு எப்படி நேசம் கொள்வது என்று சர்வசாதாரணமாக நகர்கிறது கவிதை. தந்தத்தை நீவி விடுங்கள், இரும்புச் சங்கிலியை அகற்றிவிடுங்கள், அங்குசத்தை தூரமாக வீசிவிடுங்கள் என்றெல்லாம் வாசிப்பிற்கான சுவாரசியத்தைக் கூட்டிக் கொண்டே நகரும் கவிதையின் கடைசி வரியை கவனியுங்கள்.

வனத்தில் கம்பீரமாக அலைந்து திரியும் அந்தப் பெரிய ஜீவனோடு நேசம் கொள்வது என்பது அதனை பிச்சையெடுக்க வைக்கத்தான் என்று முடிகிறது.  யானையை வைத்து பிச்சை எடுப்பதை மறைமுகமாகவும் அதே சமயத்தில் வாசிப்பவனுக்கு சலனமுண்டாக்கும் படியாகவும் இருக்கும் இந்த வரியை Jerk/ட்விஸ்ட்/சலனம்/அதிர்வு என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். 

இந்த அதிர்வு எனக்கு மிகப்பிடித்தமான கவிதையியல் அதிர்வு. யானையைப் பார்க்கும் போதெல்லாம் அல்லது யானையை நினைக்கும் போதெல்லாம் இந்தக் கவிதை உங்களுக்கு ஞாபகத்தில் வருமானால் இந்த அதிர்வு உங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

7 எதிர் சப்தங்கள்:

இராஜராஜேஸ்வரி said...

யானையை வைத்து பிச்சை எடுப்பதை மறைமுகமாகவும் அதே சமயத்தில் வாசிப்பவனுக்கு சலனமுண்டாக்கும் படியாகவும் இருக்கும் இந்த வரியை Jerk/ட்விஸ்ட்/சலனம்/அதிர்வு என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்

நிசப்தமாய் ஒரு அதிர்வு..

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க குழந்தைகளுக்கு கதை சொல்ல தனிதிறமை வேனும். இந்தக்கலக்குழந்தைகள் எப்ப என்ன கேள்வி கேப்பாங்கன்னே தெரியாது.
யானைக்கவிதை உருக்கம்

ஜீவ கரிகாலன் said...

true....

Unknown said...

நல்ல இடுகை! வாசிப்பில் அயர்ச்சியையும் சலிப்பையும் தரும் நிறைய கவிதைகளை நான் எதிர்கொள்வதுண்டு மணி, (எல்லா கவிதைகளும் / கதிர்பாரதியின் கவிதைகளும் அவ்வரிசையில் வருவதில்லை). மன உளைச்சலும், தன்னையே தாழ்த்திக் கொள்வதும்தான் மிச்சமாகிறது. இந்த ’கவிதையை புரிதல்’ பகுதியில் உங்களின் பார்வைகளை, புரிதல்களை தயங்காமல் வெளிப்படுத்துகிறீர்கள், மகிழ்ச்சியளிப்பதோடு உங்களின் புரிதல் எனது புரிதலுக்கும் (என் புரிதல்களை சிலபோது ஒப்பிட்டுப்பார்க்கவும்) உதவி புரிகிறது. அந்த வகையில் இந்த ‘கவிதையை புரிதல்’ பகுதியை விரும்பி பார்வையிடுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள் மணி.

அகல்விளக்கு said...

இதுபோன்ற கவிதைகள் நிறைய அறிமுகப்படுத்தலாமே...

Vaa.Manikandan said...

நன்றி Lakshmi, கரிகாலன், தியாகு.

அகல்விளக்கு,

லேபிளில் “கவிதையை புரிதல்” “நவீன கவிதையுலகம்” ”விமர்சனம்” போன்றவை கவிதையைப் பற்றிய பதிவுகள்தான். நன்றி :)

Uma said...

ஆசீர்வாதம் வாங்குவது இப்போது யானைக்குப் பிடித்திருக்கிறது.----அருமை!