அன்பின் மணிகண்டன்,
வணக்கம். வண்ணதாசனைப் போல் எனக்கு கடிதத்தைக் கவிதையாய் எழுத வராது. சொல்ல வந்ததைச் சொல்லிப் புரிய வைத்துவிட்டாலே பேரதிசயம்.
கவிதை, கதை என்று இலக்கியம் பேச, வாசித்த ஒரு கவிதையை, எழுதிய ஒரு பத்தியைப் பற்றி விவாதிக்க யாருமின்றித் தனியனாய் உணர்கிறேன். நேற்று சுப்ரபாரதி மணியனின் "ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் .. " சிறுகதையை வாசித்துவிட்டு அதை யாரிடம் பகிர்வது, பாராட்டுவது என்பது கூட புரியாமல் இருளில் படுத்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தேன்.
இதோ அதைப் போலவே சட்டென்று தோன்றிய கவிதையை பகிர்ந்து கொள்ள, பாராட்ட, குறைந்த பட்சம் தலையில் குட்டுவதற்குக் கூட ஆளில்லாமல் விழி பிதுங்கி நிற்கிறேன் நண்ப (இப்படி விளிப்பது இன்னும் பிடித்திருக்கிறது :) ).
சுருங்கச் சொன்னால் இலக்கியப்பித்து சற்று முற்றிவிட்டது போலும். இதற்கு என்ன செய்தால் தகும்??
நீங்கா அன்புடன்,
கார்த்திக் பாலசுப்பிரமணியன்.
************
அன்புள்ள கார்த்திக்,
வணக்கம்.
உங்களின் கடிதம் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் அதே சமயம் சந்தேகமாகவும் இருந்தது. வேறு யாருக்காவது அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை எனக்கு அனுப்பி வைத்துவிட்டாரோ என முதல் வரியை திரும்ப திரும்ப வாசித்துப்பார்த்தேன். எத்தனை முறை வாசித்தாலும் ‘மணிகண்டன்’ என்றே இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டே அடுத்த வரிகளை வாசிக்கிறேன். கடிதம் அனுப்பியதற்கு நன்றிகள். ஜீப்பில் ஏறிவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.
முதலில் உங்களுக்கு கவிதையாய் கடிதம் எழுத வராது என்பதற்காக சந்தோஷப்படுகிறேன். உங்களுக்கு கவிதையாகத்தான் எழுதத் தெரியாது. எனக்கு கடிதமே எழுதத் தெரியாது. கடிதமே எழுதத் தெரியாதவன் தெரிந்தவரைப் பார்த்து சந்தோஷப்படத்தானே முடியும்? அல்லது பொறாமைப்படலாம்.
“அன்புள்ள அம்மா அப்பாவுக்கு” என்று ஆரம்பிக்கும் ஒரு கடிதத்தைத் கூட எழுத வேண்டிய அவசியம் வரவில்லை. பிறந்த ஊரை விட்டு படிப்பிற்காகவும் பிழைப்பிற்காகவும் வெளியேறிய போது கைகளுக்குள் செல்போன் இடம் பிடித்துக் கொண்டது. “ஹலோ” என்ற வார்த்தை போஸ்ட் கார்டை விட எளிதானதாகிவிட்டது. கவிதையோ,விமர்சனமோ அல்லது நண்பனுக்கு எதையாவது எழுத வேண்டிய அவசியம் வந்தபோது கீ போர்டில் வேகமாக தட்டிப்பழகிக் கொண்டேன். அதன்பிறகு இன்லேண்ட் கவர் எப்படியிருக்கும் என்பதே மறந்து போய்விட்டது. வெளியில் சொன்னால் வெட்கக் கேடுதான் - இப்பொழுதெல்லாம் என் எழுத்தைப் பார்க்க எனக்கே பிடிப்பதில்லை. இங்க் பேனாவைப் பிடித்து எழுதி பல வருடங்கள் ஓடிவிட்டன. பள்ளிப்பருவத்தில் வைத்திருந்த பேனாவுக்கு ஐந்து பைசா கொடுத்து இங்க் ஊற்றிக் கொண்ட சரஸ்வதி புக் ஸ்டோர்சை எதேச்சையாகத் தாண்டும் போதெல்லாம் ‘லீக்’ ஆவதை நிறுத்துவதற்கு வெள்ளைத்தாள் சுற்றி வைத்திருந்த பேனா பூதாகரமாக நினைவில் வந்து போகிறது.
எழுதுவதை மறந்துவிட்டு, கடிதத்தையும் மறந்துவிட்ட ஒரு சமயத்தில் மின்னல் கீற்று போல உங்கள் கடிதம்.
கடிதம் இருக்கட்டும். வாசிப்பதற்கு வருகிறேன். வாசிப்பதை பகிர்ந்துகொள்ள ஆட்கள் தேவை என ஒரு போதும் நினைத்ததில்லை. வாசிப்பது சுயபுரிதலுக்கான கருவி. நல்ல படைப்புகள் மனதுக்குள் நொதித்து, நம்மை அலைகழித்து, கொந்தளிக்கச் செய்து என எதை வேண்டுமானாலும் செய்யட்டும். அதற்கான அத்தனை உரிமையையும், சுதந்திரத்தையும் படைப்புக்கு கொடுத்துவிடுவதுதான் படைப்புக்கு வாசகன் செய்யும் மரியாதை. மிகப் பெரிய அதிர்வை உருவாக்கும் எந்த ஒரு படைப்பும் ஒரு கட்டத்தில் தெளிந்த நீரோடையென அமைதியடைகிறது. அந்த அமைதிநிலையில் அந்தப்படைப்பைப் பற்றிய சிந்தனையோ அல்லது அதைப் பற்றிய ஒரு குறிப்பை எழுதுவதன் மூலமோ படைப்பு குறித்தான ஒரு தொன்மத்தை அழுத்தமாக மனதிற்குள் பதிவு செய்து கொள்ள முடிகிறது. இப்போதைக்கு இதுதான் என்னளவில் வாசிப்பு முறை.
உங்களின் கேள்விக்கு இது நேரடியான பதிலாக இருக்காவிட்டாலும் சுற்றி வளைத்து மூக்கைத்தொட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.
அன்புடன்,
வா.மணிகண்டன்.
1 எதிர் சப்தங்கள்:
//உங்களுக்கு கவிதையாகத்தான் எழுதத் தெரியாது. எனக்கு கடிதமே எழுதத் தெரியாது.// மிகவும் ரசித்தேன் :))
Post a Comment