Nov 30, 2012

பைக்கிலிருந்து கீழே விழுபவனின் குறிப்புகள்


பெங்களூரில் சங்கம் ஹவுஸ் என்ற இடம் இருக்கிறது.  எழுத்தாளர்களுக்கு  தேவையான தங்கும் இடம், உணவு என வசதிகளைச் செய்து கொடுத்துவிடுகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் வந்து ஓரிரு வாரங்களுக்குத் தங்கி படைப்பாக்கங்களில் ஈடுபடுகிறார்கள். தமிழில் இருந்து சா.கந்தசாமி, சுகுமாரன், பெருமாள் முருகன் என பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த வாரம் ஜே.பி.சாணக்யா வருகிறார். பெங்களூர் கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து அவரை அழைத்துக் கொண்டு சங்கம் ஹவுஸ் செல்ல வேண்டும். என்னிடம் பைக்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பது கிலோ மீட்டர் தூரம். சாணக்யாவிடம் போனில் பேசினேன். பைக்கிலேயே செல்வது கூட எனக்கு பிரச்சினையில்லை என்றார். ஒரு எழுத்தாளனை இப்படி சித்ரவதைக்குள்ளாக்க வேண்டுமா என எனக்குத்தான் சங்கடமாக இருக்கிறது. 

தனியாக பைக் ஓட்டினாலே மாதம் மும்முறை விழுந்து எழுவேன். இதில் டபுள்ஸ் வேறு.  பெரும்பாலும் கீழே விழும் நாட்களில் எல்லாம் உள்மனம் உறுத்தும். லாரிச்சக்கரத்திற்குள்ளோ அல்லது பஸ் சக்கரத்திற்குள்ளோ தள்ளிவிடாமல் பாதுகாப்பான இடத்தில் தள்ளிவிடச் சொல்லி பைக்கிடம் கெஞ்சிக் கொள்வேன். அதுவும் தோதான இடம் பார்த்து தள்ளிவிடும். பைக்குக்கும் எனக்கும் இடையே ஒரு மெளனமான ஒப்பந்தத்தின் நீட்சிதான் இந்தச் செயல். வலது கை முட்டியின் பின்புறம், வலது காலின் மேற்பாதம் என புண்களுக்கு என இடங்களை ரிசர்வ் செய்து வைத்திருக்கிறேன். அந்த இடங்களில் மட்டுமே புண் ஆகிறது.

இதில் ஒரு செளகரியம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் யாராலும் புதுப்புண்ணா பழைய புண்ணா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. எப்பவாவது கேட்டால் “அது அன்னைக்கு விழுந்தது” என்று ஒரே டயலாக்கைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். புண் வலியைக் கூட தாங்கிக் கொள்ளலாம். அட்வைஸ் வலிதான் கர்ண கொடூரமாக இருக்கும். நான் விழுந்து விழுந்து எழுவதால் எப்படி முறியாமல் தற்காத்துக் கொள்வதென எலும்புகள் பழகிக்கொண்டன போலிருக்கிறது. Survival of the fittest.

இன்று ரயில் ஏறுவதற்கு முன்பாக சாணக்யா இந்தக் குறிப்பை படிக்க மாட்டார் என நம்புகிறேன். அப்படி படித்துவிட்டால் பைக்கில் ஏறும் கணத்தில் அவரது மனநிலையை நினைத்துப் பார்க்கிறேன். Space shuttle இல் முதன் முறையாக ஏறும் போது கிடைக்கும் திகிலை அவர் பெறக்கூடும். அவரை விட்டுவிட்டு திரும்ப வரும் போது பழ.அதியமான் என்னோடு வருவார் என நினைக்கிறேன். 

சாணக்யாவாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கக் கூடும். நான் Fresh ஆக இருக்கும் போது பைக்கில் ஏறுவார். அவரை நாற்பது கிலோமீட்டர் விட்டுவிட்டு களைத்துப் போய் நான் திரும்ப வரும் போது ஏறிக்கொள்ளும் அதியமானின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அனேகமாக “நான் டாக்ஸி பிடித்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிடுவார் என நம்புகிறேன். 

பாலாவைப் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். சதுக்கம் என்ற வலைப்பூவை வைத்திருக்கிறார். எப்பொழுது பேசினாலும் பூதாகரமாக எதையாவது படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லுவார். சிலர் பூக்கோ படித்துக் கொண்டிருக்கிறேன் என்று அடித்துவிடுவார்கள். அதோடு நாமும் நிறுத்திக் கொள்ள வேண்டும். பூக்கோவில்  “என்ன படிக்கிறீங்க?” என்று கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது. ஆனால் பாலா அப்படியில்லை. நிஜமாகவே வாசிக்கக் கூடிய ஆள். புத்தகங்களின் பக்கக் கணக்கிலிருந்து பத்திவரைக்கும் சொல்வார். அந்த அளவுக்கு ஆழமாக படிக்கக் கூடிய மகராசன். பெங்களூரில் இருக்கும் போது “ஆரங்கள்” என்ற அமைப்பை தீவிரமாக ஒழுங்கு செய்தார். குரூப்பாக அமர்ந்து குறுந்தொகை, புறநானூறு என்று வாசிப்பார்கள். நானும் வருகிறேன் என்று சொல்லிக் கொண்டேடேடேடேடேடேடேடே இருந்தேன். போகவே இல்லை. அதற்குள் சென்னைக்கு இடம்மாறுதலில் சென்றுவிட்டார். இப்பொழுது ஆரங்கள் பரணில் கிடக்கின்றன என்று கடந்த முறை பார்த்தபோது புலம்பினார்.

அதியமான், சாணக்யா பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போது பாலா எதற்கு குறுக்கே வந்தார்? ஆங்! பாலா நடத்திய கூட்டங்களுக்கு நான் போகாமல் இருக்க குடும்பஸ்தன் ஆகிவிட்டதுதான் முக்கியக் காரணம். சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவோ மனைவி, குழந்தையை விட்டுவிட்டு குறுந்தொகை படிக்கப் போகிறேன் என்று சொல்ல ஒரு ‘தில்’ வேண்டுமில்லையா. டிசம்பர் வந்தால் திருமணம் முடிந்து  நான்கு வருடம் முடிகிறது. ஆனால் அந்த எழவெடுத்த தில்தான் இன்னும் வரவில்லை. நாளைக்கு ஜெர்மனி போய்விட்டு மனைவி திரும்ப வருகிறார். அவரை விமான நிலையத்திற்கு சென்று அழைத்து வர வேண்டிய நேரத்தில்தான் சாணக்யாவை அழைத்துக் கொண்டு சங்கம் ஹவுஸ் செல்ல வேண்டும்.

உண்மையைச் சொல்லத்தான் தில் இல்லையே தவிர பொய் சொல்லும் திறமை இருக்கிறது. அலுவலகத்தில் வேலை இருக்கிறது என சொல்லிவிடலாம். சாணக்யா,அதியமான் போன்ற படைப்பாளுமைகளுடன் நெருங்கிப் பேசுவதற்கு அதிசயமாகக் கிடைக்கும் வாய்ப்பை இழந்துவிட மனமில்லை. எப்பொழுதுமே எழுத்தாளர்களுடன் பேசிவிட்டு வரும் போது அடுத்த சில நாட்களுக்கு ‘எனர்ஜெடிக்’ ஆகிவிடுவதாக உணர்ந்திருக்கிறேன் அல்லது அப்படி நம்புகிறேன்.

சும்மா இருந்திருக்கலாம். அவசரப்பட்டு நிசப்தத்தில் விலாவரியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் கொஞ்ச நாட்களாக மாமனார் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் நிசப்தம் படித்துவிடுகிறாராம். இப்படி ரகசியங்களை எழுதினால் அவரை மட்டும் தனியாக கவனிக்க வேண்டும். 

                                                                   ***

ஆன்லைனில் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகளைத் தேடியபோது இந்த இணைப்பு கிடைத்தது. 

பழ.அதியமானின் கட்டுரைகள் இணையத்தில் நிறையக் கிடைக்கின்றன. கூகிள் செய்தால் போதும்.

5 எதிர் சப்தங்கள்:

பாலு said...

Manikandan sir! You are in IT industry. Madam goes to Germany. Why not buy a Car? If not for you at least it will help fellow writers...

manjoorraja said...

உங்க பதிவைப் படிப்பதால் எங்களுக்கும் கொஞ்சம் எனர்ஜி கிடைக்குது போலெ! அல்லது நாங்க அப்படி நம்புகிறோமோ!

அகல்விளக்கு said...

:-)

திண்டுக்கல் தனபாலன் said...

இரு இணைப்புகளுக்கும் நன்றி...

Unknown said...

சார் ஈமெயில் சந்தா வேலை செய்ய வில்லை கவனிக்கவும்.பின் தெரிய படுத்தவும்..star9688@gmail.com