Dec 6, 2012

ப்ளாக் அண்ட் ஒயிட் நாயகியின் அட்டகாச போஸ்


ப்ளாக் அண்ட் ஒயிட் கதாநாயகி விளக்குமாரைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்த சினிமா காட்சி நினைவில் வந்து போனது என்று சொன்னேன் அல்லவா? கீழே இருக்கும் படம்தான் காரணம்.

சமூக சேவை செய்யலாம் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுப்பதற்கோ, ஏழைகளுக்கு விலையில்லா மிக்ஸி கொடுப்பதற்காகவோதான் அழைக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தலையை ஆட்டிவிட்டேன். ஹார்லிக்ஸ் பாட்டிலுக்கு அஞ்சா நெஞ்சனும், மிக்ஸிக்கு அம்மாவும் இருக்கிறார்கள் என்று சொல்லி கையில் கடப்பாரையைக் கொடுத்துவிட்டார்கள். ஒருவரை எதிர்த்தால் அடி; இன்னொருவரை எதிர்த்தால் ஜெயில். எதற்கு வம்பு என்று குத்த ஆரம்பித்துவிட்டேன்- மண்ணைத்தான்.

சுத்தம் செய்ய வேண்டிய இடத்தை முன்பே பார்த்திருக்கிறேன். வழக்கமாக டீ குடிக்கும் கடை இந்த ஏரியாவில்தான் இருக்கிறது. டீக்கடை மலையாளியுடையது. மலையாளிகளின் டீக்கடை இல்லாத இடம் என்று ஏதாவது இருக்குமா எனத் தெரியவில்லை. அப்படியொரு இடத்தைக் கண்டுபிடித்து கின்னஸில் சேர்த்துவிட வேண்டும். நீல் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நிலவில் ஏதேனும் மலையாளி டீக்கடை வைத்திருந்தானா எனக் கேட்டிருக்கலாம். இருக்கட்டும். இந்த டீக்கடைக்கு எதிராகத்தான் தேவலோகம் இருக்கிறது.

இந்த தேவலோகம்தான் பன்றிகள் கொஞ்சி விளையாடும் அந்தப்புரமாகவும், குழந்தைகளின் ‘ஆய்’ துணிகளை வீசும் சொர்க்கபுரியாகவும் இருந்தது. அதையெல்லாம் பார்த்தால் ஆகுமா? புண்ணாக்கு விற்பவன், பருத்திக் கொட்டை விற்பவன் எல்லாம் சமூக சேவகன் என்று சொல்லிக் கொள்கிறான் அவ்வளவு ஏன் அண்ணா ஹசாரே கூட சமூக சேவகராம். இனி நானும் என்னை சமூக சேவகன் என்று சொல்லிக் கொள்ளலாம் என முழு பலத்தையும் கடப்பாரையில் காட்டிக் கொண்டிருந்தேன்.

இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த ஏரியாவை சுத்தமாக்கியிருந்தோம். அந்த இடத்தில் ஒரிரண்டு  கற்களை நட்டுவைத்திருந்தார்கள். அருகில் இருக்கும் குடிசைவாசிகளின் கோயில் அது. அதைச் சுத்தம் செய்து மாலை போட்டு ஒரு பூசையைச் செய்தால் நம் சமூக சேவை முடிந்தது என்றார்கள். பக்கத்தில் இருந்த பைப்பில் தண்ணீரைப் பிடித்து வந்து சிலைகளின் மீது ஊற்றிக் கொண்டிருந்தோம். 

இப்பொழுது கதாநாயகன் எண்ட்ரி. போதையில் ஒரு குச்சியை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தார். 

“இந்த சாமியை அந்த கிணத்து மேட்டுல இருந்து நான் தான் தூக்கிகினு வந்தேன் தெர்மா?” என்று சாமியாட்டத்தை ஆரம்பித்தார். 

ஒருத்தன் கிடைத்துவிட்டால்- அதுவும் அவன் மப்பில் இருந்துவிட்டால் நம் ஆட்களுக்கு தலைகால் புரிவதில்லை. எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவருக்கும் புரியவில்லை “ம்ம்ம் அப்டியா? எத்தினி வருஷம் இருக்கும்?” என்றார். 

சீரியஸாகத்தான் கேட்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த போது குண்டை வீசினார். “சரி இப்போ தொட்டுட்டாங்க. இன்னா பண்ணலாம்”

இந்தக் கேள்வியின் காரணமாக குடிகாரர் உற்சாகம் ஆகிவிட்டார். “அது எப்டி என்னைக்கேட்காம தொடலாம்?” 

இரண்டு பேருமாக பஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இரண்டு பேர்களின் வாயையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தோம். யாராவது நாட்டாமை வந்தால் பரவாயில்லை போலிருந்தது. இப்போதைக்கு சரத்குமார் வெட்டியாகத்தான் இருக்கிறார் என்று எங்கேயோ படித்த ஞாபகம். ஆனால் இந்த வெட்டி பஞ்சாயத்துக்கு அவரை அழைத்தால் வெற்றிலை பாக்கிலிருந்து குதிரை வண்டி வரைக்கும் ஏகப்பட்ட செலவு செய்ய வேண்டுமே எனத் தோன்றியது.

பத்து நிமிட உரையாடலுக்கு பிறகு ஆட்டோக்காரர் கிளம்பிவிட்டார். ஹீரோதான் தர்ணாவை தொடர்ந்து கொண்டிருந்தார். அருகிலிருக்கும் குடிசையிலிருந்து நல்லவேளையாக ஒரு ஜூனியர் சரத்குமார் வந்தார். 

“இன்னா சார் ப்ராப்ளம்?” என்றார். எங்களுடன் இருந்த பெண்ணொருத்தி பிரச்சினையை விளக்கினாள். ஜீன்ஸ் போட்டிருந்த அவளிடம் பேயே இறங்கிவிடும் நாட்டாமையா இறங்கமாட்டார்? 

“நான் பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு எங்களிடம் இருந்து இருபது ரூபாயை வாங்கி ஹீரோவிடம் நீட்டினார். 

ஹீரோ வாங்கி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அதே டயலாக்கை திரும்பப் பேசினார். “அது எப்டி என்னைக் கேட்காம தொடலாம்?”

இது ஒத்துவராது போலிருக்கிறது என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். திரும்பி போய்விடலாம் என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

“சப்ப்ப்ப்ப்”- அறை விழுந்திருந்தது.

இப்பொழுது ஹீரோ பத்து அடி பின்னால் நகர்ந்து “அது எப்டி என்னைக் கேட்காம தொடலாம்?” என்றார். 

“டேய்” என்றார் நாட்டாமை.

ஹீரோ இன்னும் பத்து அடி பின்னால் நகர்ந்தார்- “அது எப்டி என்னைக் கேட்காம தொடலாம்?”

நாட்டாமைக்கு கோபம் வந்துவிட்டது “அடிங்ங்ங்” என்று எகிறினார்.

இப்பொழுது ஹீரோவைக் காணவில்லை. சத்தம் மட்டும் வந்தது “அது எப்டி என்னைக் கேட்காம தொடலாம்?”

“இனி வரமாட்டான் நீங்க பூஜை போடுங்க மேடம்” என்று ஜீன்ஸிடம் சொன்னார் நாட்டாமை. முப்பத்திரண்டு பல்லும் தெரிந்தது. வாயின் ஓரமாக தமிழகத்திற்கு வராத காவிரி பெருக்கெடுத்தது.


முக்கியமான விஷயம். பூஜை முடிந்து மூன்று நாட்களாகிவிட்டது. இன்று அந்த இடத்தைப் பார்த்தேன். பழையபடிக்கு அந்தப்புரமாகவும், சொர்க்கபுரியாகவும் குமட்டிக் கொண்டிருந்தது.

4 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...

அந்த ஜீன்சையும் ஒரு படம் பிடித்துப் போட்டிருக்கலாம்... (ஜீன்ஸை மட்டும்தான் சொன்னேன்...) :)

Anonymous said...

:)) hahaha...enjoyed

semmalai akash said...

நீல் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நிலவில் ஏதேனும் மலையாளி டீக்கடை வைத்திருந்தானா எனக் கேட்டிருக்கலாம்.////


இனி பேச வாய்ப்பே கிடைக்காது ஹா ஹா ஹா ஹா !!!
அருமையான பதிவு. ரசித்தேன்.

Uma said...

பூஜை முடிந்து மூன்று நாட்களாகிவிட்டது. இன்று அந்த இடத்தைப் பார்த்தேன். பழையபடிக்கு அந்தப்புரமாகவும், சொர்க்கபுரியாகவும் குமட்டிக் கொண்டிருந்தது

--தமிழக அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் போலிருக்குது!