Dec 5, 2012

கொன்றுவிட்டு போனவனின் அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள்


அன்புள்ள திரு மணிகண்டன்,

“கொன்றுவிட்டு போனவன்” என்ற தலைப்பிலான தங்கள் பதிவை வாசித்தேன். எங்களோடு பணிபுரிந்த நண்பரைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என சந்தேகப்படுகிறேன். அவர் பழைய ஏர்போர்ட் சாலையில் (HAL மார்க்கெட் தாண்டி) நவம்பர் 30 வெள்ளிக்கிழமையன்று விபத்தில் இறந்துபோனார். அவரது குடும்பமோ எங்களது நிறுவனமோ இந்த நிகழ்வைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற முடியவில்லை. உங்களால் தகவல் தர முடியுமானால் அது மிக உபயோபமானதாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்,
கணேஷ் செண்பகராமன்
                                                  
                                                                ***
                
அன்புள்ள கணேஷ்,

அடையாளம் தெரியாத வாகனங்களால் கொல்லப்படுவது கொடுமையானது. வாகன ஓட்டியை தண்டிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை- ஆனால் குறைந்தபட்சம் இன்ஸூரன்ஸ் பெறுவதற்காகவது வாகனம் பற்றிய அடையாளம் தெரிய வேண்டியது அவசியம். 

எனது ஒன்றுவிட்ட அண்ணன் சில மாதங்களுக்கு முன்பாக அலுவலகம் முடித்து வரும் போது  ஒரு லாரி அவரை அடித்துவிட்டு போய்விட்டது. அவருக்கு ஆறு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகளும் உண்டு. அவரது பணியைத் தவிர பெரிய பொருளாதார பலம் எதுவும் இல்லை. அந்த லாரியைக் கண்டுபிடித்தால் அந்த லாரியின் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து கணிசமான தொகையை நஷ்ட ஈடாக பெற முடியும் என்றும் அது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் என்று நண்பர்கள் தெரிவித்தார்கள். ஆனால் எவ்வளவு முயன்றும் லாரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பிட்ட விபத்துக்களுக்கும் மேல் செய்தால் வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற தண்டனை இருப்பதால் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் சரணடைவதில்லை. அப்படியே கண்டுபிடித்தாலும் டிரைவர்களின் வாழ்வாதாரமே அந்த ஓட்டுனர் உரிமம் என்பதால் அவர்களை ஒத்துக் கொள்ள வைப்பதும் அவ்வளவு எளிதில்லை. 

நான் குறிப்பிடும் சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் நீங்கள் குறிப்பிடும் இதே சம்பவத்தை பார்த்ததாக ஒரு அனானிமஸ் நண்பர் கமெண்ட் எழுதியிருந்தார். இந்த மின்னஞ்சலை நிசப்தத்தில் பதிவிடுகிறேன். யாரேனும் சம்பவம் பற்றிய தகவல்களைத் தந்தால் நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.

அன்புடன்,
மணிகண்டன்.

*******

“கொன்றுவிட்டு போனவன்” பதிவு உலுக்கியது. பாரமாக்க வேண்டுமென எழுதாவிட்டாலும் எழுத்தின் வலிமை அதை நிகழ்த்தி விட்டிருப்பது உங்கள் தவறன்று.  

என் 9 வயதில் தந்தையையும் 19 வயதில் என்னில் ஒன்றரை வயது மூத்த அண்ணனையும் சாலை விபத்தில் இழந்திருக்கிறோம். விபத்துக்குப் பின்னான சாத்தியங்களாக குறிப்பிட்டிருக்கும் பலவற்றை அனுபவித்திருக்கிறோம்.  

எத்தனையோ கனவுகளை நசுக்கிய சாலைகள் மேல்தான் எல்லோருமே பயணித்துக் கொண்டே இருக்கிறோம்.
இந்த பதிவு பல விபத்துகளை நேராமல் தவிர்க்கவும் உதவும் என்பதை நினைவில் கொள்க.

அன்புடன்,
ராமலக்ஷ்மி

2 எதிர் சப்தங்கள்:

பாலு said...

நமக்கு எல்லாவற்றிலும் ஒரு நிதானமற்ற தன்மை இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி-மைசூர் விரைவு ரெயிலில் வரும்போது மதுரை ரயில் நிலையத்துக்குச் சற்று முன்பாக ஒரு இரு சக்கர வாகனம் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டுத் தூக்கி வீசப்பட்டது. டிரைவர், கார்ட் எல்லோரும் light எடுத்துக் கொண்டு தேடினர். நாங்களும் செல்போன் லைட் வைத்துக் கொண்டு தேடினோம். splendor பைக் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு பீஸ் பீஸாகச் சிதறிக் கிடந்தது. பின்னர் மதுரை நண்பர்களுடன் விசாரித்ததில் அவர் ஒரு electrician எனத் தெரிய வந்தது. அந்தப் பயணமும் மிக வலி மிக்கதாக ஆனது. எதற்கு அவர் அவசரப்பட்டு ரயில் பாதையைக் கடக்க வேண்டும் என்ற கேள்வி இன்னமும் எழும்பிக் கொண்டே இருக்கிறது.

Thozhirkalam Channel said...

சிறு கவனக்குறைவால் எத்தனை எத்தனை விபத்துக்கள் எத்தனை உயிர்கள் பலியாகின்றன அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்