முதன்முதலாக ஐ லவ் யூ சொன்னது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா?. அது நீங்கள் யாருக்கோ சொன்னதாக இருக்கலாம் அல்லது யாராவது உங்களிடம் சொன்னதாக இருக்கலாம். எனக்கு சட்டென்று நினைவில் வரவில்லை. ஆனால் முதன் முதலாக ஐ லவ் யூ கார்ட் தயாரித்தது ஞாபகத்தில் இருக்கிறது.
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பருவம் அது. மனசு சிறகடிக்கத் துவங்கிய அந்தச் சமயத்தில் நாங்கள் ஆண்கள் பள்ளி என்ற பாலைவனத்தில் சிக்கியிருந்தோம். சைட் அடிக்கக் கூட வழியில்லாத சிறை வாழ்க்கை. தனம் டீச்சரின் ட்யூசனுக்கு போகும் போது மட்டும் கொஞ்சம் மல்லிகைப்பூ வாசம் பிடித்துக் கொண்டிருந்தோம். அங்கு பெண்களுக்கு தனி வகுப்பு நடக்கும். பெண்களுக்கு முடிந்த பிறகு ஆண்களுக்கு. பெண்கள் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே அங்கு போய் நின்று கொள்வோம். எங்களில் ஆளாளுக்கு ஒரு ஆள் உண்டு. ஒருத்தனுக்கும் அந்தப் பெண்களிடம் போய் பேச தைரியம் இருக்காது. ’அவள் இவனுக்கு’ என நாங்களாக ஃபிக்ஸ் செய்து வைத்திருந்தோம். கண்ணனின் ஆள் வந்தால் எல்லோரும் “கண்ணன்” என்று உரக்கக் கத்துவோம். சங்கர் குருவின் ஆள் வந்தால் அவன் பெயரைச் சொல்லுவோம். அவ்வளவுதான் எங்கள் காதல்.
தனசேகரன் என்றொரு நண்பன் எங்கள் கூட்டத்தில் இருந்தான். எங்கள் வகுப்பிலேயே அழகானவன். அவனை மன்மதன் என்போம். மன்மதன் என்றால் அவனும் எந்தப்பெண்ணிடமும் பேசியதில்லை. மற்ற பெண்கள் அவனைத்தான் ஓரக்கண்ணில் பார்ப்பார்கள். எங்கள் காதுகளில் புகைவிட்டுக் கொண்டே அவனை மன்மதன் என்று அழைப்பது வழக்கமாகியிருந்தது. தனசேகரனுக்கும் ஒரு ஆள் இருந்தாள். பெயர் மறந்துவிட்டது. மற்ற பெண்களை விடவும் கூடுதலாக தனசேகரனை பார்ப்பாள். கடைக்கண் பார்வையை அவள் காட்டியதால் பையன் காதல் பித்து ஏறித் திரிந்தான்.
எப்படியும் தனது காதலைச் சொல்லிவிடுவதாக முடிவு செய்தவன் அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுதத் திட்டம் தீட்டினான். நாங்கள் சூழ்ந்து நின்று கொண்டிருக்க அந்த வைபவம் நிகழ்ந்தது. ஒரு வெண்ணிறதாளில் முதலில்
"I ♥ U" என்று பென்சிலில் எழுதினான். அதன் மீது அவனுடைய ரத்தத்தால் எழுதப்போவதாகச் சொல்லியிருந்தான். எங்களுக்கு காதல் வரலாற்றின் அற்புதத் தருணத்தை தரிசிக்கப் போவதாக ஒரு நினைப்பு. ஷாஜகானுக்குப் பிறகு தனசேகரன் என்று பேசிக்கொண்டோம். அவனும் அதே கெத்தில் திரிந்தான். ஒரு பின்னூசியில் விரலை குத்தி குத்தி ரத்தத்தால் எழுதினான். அப்பொழுதைய அவன் முக பாவனையும், செயல்களையும் பார்க்கவேண்டுமே. யாரோ அவனை கீழே படுக்க வைத்து அவனது பின்னங்கழுத்தை ரம்பத்தால் அறுத்திருந்தால் கூட அத்தனை எஃபெக்ட் கொடுத்திருக்க மாட்டான்.
சுற்றி நின்றவர்கள் “உன் காதல் சூப்பர்டா மச்சி..கண்டிப்பா சக்ஸஸ்” என்று உசுப்பேற்றினார்கள். ஒரு மிக முக்கியமான செயலைச் செய்துவிட்ட திருப்தி அவன் முகத்தில். அடுத்த நாள் காலை கடிதத்தை அவளிடம் தரப்போவதாகச் சொல்லியிருந்தான். பள்ளியில் நாங்கள் நகங்களை கடித்துக் கொண்டிருந்தோம். தூரத்தில் தனசேகரனை பார்த்தவுடனே அவன் அருகில் ஓடியபோது அவன் அத்தனை செழிப்பாக இல்லை. விசாரித்ததற்கு அந்தத் தாளை நீட்டினான். ஒன்றும் புரியவில்லை. நுகர்ந்து பார்க்கச் சொன்னான்.
கிட்டத்தட்ட வாந்தி வராத குறைதான். ரத்தச் சூறை கொடூரமாக இருந்தது. அந்தத் தாளின் மீது கோகுல் டால்க் பவுடரைப் பூசியதாகவும் இருந்தாலும் துர்நாற்றம் போகவில்லை என ஃபீல் செய்தான். அவனோடு சேர்ந்து நாங்களும் ஃபீலிங் விட்டுவிட்டு நகர்ந்துவிட்டோம். வேறு ஒரு ஐடியா செய்யப்போவதாகச் சொல்லிவிட்டு அந்தத் தாளை கிழித்து வீசினான். கிழிக்காமல் வீசினால் வேறு எவனாவது யூஸ் செய்து கொள்வான் என்ற பயம்தான் காரணம். அவனது காதலை இன்னொரு நாள் சொல்கிறேன்.
ரத்தத்தில் கடிதம் எழுதும் கான்செப்ட் எனக்கு பிடித்துப் போனது. நானும் அதே டெக்னிக்கை முயற்சிப்பது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் பின்னூசியால் விரலைக் குத்திக் கொள்ளும் அளவுக்கு என்னுடைய காதல் ஸ்ட்ராங் காதலாக இல்லை. ஐ லவ் யூ எழுதவிருக்கும் தாள் மீது இரண்டு மூன்று நாட்களுக்கு தினமும் கொஞ்சமாக பன்னீர் சந்தனம் என்று தெளித்து ரெடியாக்கி வைத்திருந்தேன். ரத்தம் எடுத்தால் காரியம் முடிந்த மாதிரிதான்.
அந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ரத்தம் பொரியல் செய்தே தீர வேண்டும் என அடம் பிடித்திருந்தேன். என் நச்சரிப்பு தாங்காமல் அரைக்கிலோ ரத்தம் குடல் வாங்கி வர அப்பாவிடம் அம்மா சொல்லியிருந்தார். அப்பா வாங்கி வந்து வைத்துவிட்டு வேறு ஏதோ வாங்கிவர கடைக்கு போய்விட்டார். எனக்கு மிகுந்த சந்தோஷம். அப்பா திரும்பி வந்தபோது ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கிறது அம்மா குறை சொல்லிக் கொண்டிருந்தது ஞாபகத்தில் இருக்கிறது. தனது ரெகுலர் கடையைக் குறை சொல்வதை அப்பாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருவருக்கும் சண்டை முட்டிக் கொள்ளும் சூழல் வந்தது. நான் டியூஷன் முடித்துவிட்டு வந்து சாப்பிட்டுக் கொள்வதாக கிளம்பினேன்.
அப்பொழுது ரத்தத்தின் அளவு குறைந்ததற்கு கசாப்புக் கடைக்காரன் காரணமில்லை என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். இப்பொழுது உங்களுக்கும்.
3 எதிர் சப்தங்கள்:
நல்ல பதிவு சார்
"தனம் டீச்சர் டியூஷன்.. கண்ணன்.. சங்கர் குரு.. " அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே.. நண்பனே !! 1997 க்கு பின்னோக்கி சென்று வந்தது போல் இருக்கிறது. - கார்த்திக்
ம்ம்ம்.. 70, 80 துகளில் காதல் இனிமையானது மட்டுமல்ல கொஞசம் த்ரிலிங்கும் கோணங்கித்தனமும் கலந்த கதம்பம்தான்.
என்னைக் கூட வரும் போதும் போகும் போதும் ராஜூமா, ராஜூமா என என் அப்போதைய காதலரின் (இப்போதைய கணவர்) பெயரினை சேர்த்தழைத்த நண்பர்களுக்கு நன்றி. இப்போ நினைத்துப்பார்க்கும் போதும் இனிக்கிறதே.
Post a Comment