Nov 3, 2012

துப்பாக்கியா? எப்பவுமே கில்லிதான்நம் ஊரில் புண்ணாக்கு விற்பவரோ, பருத்திக் கொட்டை விற்பவரோ கூட துப்பாக்கி பற்றி பேசினால் நிச்சயம் ஏகே 47 பற்றி ஏதாவது 'பிட்' போடுவார். அத்தனை புகழ்பெற்ற ஏகே 47 பற்றி கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தகவலைத் திரட்டிக் கொண்டிருந்தேன். உலகின் அதிபயங்கர ஆயுதங்ளைப் பற்றிய டேட்டாபேஸ் தயாரிக்கலாம் என்று நினைத்திருந்த சமயம் அது. திட்டம் முழுமையடையவில்லை.ஆனாலும் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைப்பற்றிய உலகம் எப்பொழுதுமே ஈர்ப்பு மிகுந்தவை என்பதை புரிந்துகொள்ள உதவியது. இருளுக்குள் தீப்பெட்டியை தேடி எடுத்துவிடும் சந்தோஷத்தை கொடுப்பவை அந்தத் தகவல்கள்.

ஏகே 47 துப்பாக்கி உருவாக்கத்திற்கு குட்டி ப்ளாஷ்பேக் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மானியர்கள் துப்பாக்கி வடிவமைப்பில் பின்னி படல் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ரஷ்யா தனது துப்பாக்கி வடிவமைப்பாளர்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் போரில் காயமடைந்திருந்த கலாஸ்நிகோவ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆர் படுத்துக் கொண்டே ஜெயித்தது போல கலாஸ்நிகோவ் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே ஏகே 47 ஐ வடிவமைத்தார். தனது துப்பாக்கி மாடல் ஹிட் அடித்துவிட, தொழிலை ஆயுத வடிவமைப்பாளராக மாற்றிக் கொண்டார். 

'ஏகே'யில் 'கே' என்பது கூட கலாஸ்நிகோவைத்தான் குறிக்கிறது. இந்தத் துப்பாக்கி 1947 ஆம் ஆண்டு புழக்கத்திற்கு வந்ததால் 47 என்ற வால் துப்பாக்கியின் பெயரில் ஒட்டிக் கொண்டது. இப்போதைக்கு துப்பாக்கி வகையறாக்களில் ஏகே 47தான் உலகின் மிக முக்கியமான ஆயுதம். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவங்கள் ஏகே 47 ஐ தங்களின் தளவாடங்களில் வைத்திருக்கின்றன. ஆயுதங்களைக் கையாளும் அத்தனை தீவிரவாதக் குழுக்களிடமும் இது இருக்கிறது.

ஆரம்பத்தில் ஏகே 47 துப்பாக்கியின் வடிவமைப்பு மொத்த உற்பத்தி(Mass Production)க்கு ஏற்றதாக இருந்ததாலும், கையாளுவதற்கு எளிதாக இருந்ததாலும்,  ரஷ்ய ராணுவத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதன் எதிர்பாராத பலன்களின் மூலம் உலகின் ஆயுதங்கள் வரிசையில் தனக்கான இடத்தை ஏகே 47 முக்கியமானதாக்கிக் கொண்டது. அந்த பலன்களில் ஒன்று  ஆயுள்- இருபது முதல் நாற்பது ஆண்டுகளுக்கும் 'ரவுண்ட்' கட்டி அடிக்கும் திறன் உடையது.

இன்னொன்று- பயன்படுத்துவதில் இருக்கும் எளிமை. ஏகே 47க்குள் இருக்கும் 'மேட்டர்' புரிந்து கொள்வதற்கு மிக எளிது. புரிந்து கொண்டால் 'உண்டி வில்' தயாரிக்கும் ரேஞ்சில் இதைத் தயாரிக்கலாம்.சிறார்களை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் குழுக்கள், சிறார்களுக்கு வழங்கும் ஆயுதம் ஏகே 47 தான். அந்த அளவுக்கு அவற்றை உபயோகப்படுத்துவது எளிது. 

அப்புறம், கள்ளச் சந்தையில் மிக அதிகமாக புழங்கும் ஆயுதமும் இதுதான். நாடுகளுக்கு தகுந்த படி  விலை வேறுபடுகிறது. ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளில், குறிப்பாக புரட்சிக் குழுக்களிடம் பதினைந்து டாலர் என்ற அளவில் இருந்து ஏகே 47 விற்பனை கன ஜோராக ஆரம்பிக்கிறது. இப்படி இதன் ப்ளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏகே 47 லிருந்து வரும் குண்டுகள் ஒரு வினாடிக்கு 710  மீட்டர் வேகத்தில் பாய்கின்றன. குண்டுகள் 7.62 மிமீ அளவுடையவை. குறி வைத்து சுடுவதெல்லாம் ஏகே 47இல் வேலைக்கு ஆகாது. நூறு மீட்டரை தாண்டியவுடன் குண்டுகளின் துல்லியம் மாறிவிடும் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு குத்துமதிப்பாக அடித்துவிட வேண்டியதுதான். அப்படி சுடுவதற்கு ஏற்ற துப்பாக்கி வகைதான் இது. இந்த துல்லியமற்ற தன்மையைத்தான் ஏகே 47ன் குறையாகச் சொல்ல முடியும். மற்றபடி டாப் க்ளாஸ்தான்.

இந்தத் துப்பாக்கியின் மார்கெட்டை காலி செய்ய  எம்16 என்ற ரக துப்பாக்கியை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. ஆனாலும் ம்ஹூம்.  ஏகேவுக்கென இருக்கும் மார்கெட் இன்னமும் அசையாமலேயேதான் இருக்கிறது. ஏகே 47 ஐத் தொடர்ந்து தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஏகே 101,103, 107 என்ற அடுத்த தலைமுறை துப்பாக்கிகளை ரஷ்யா வடிவமைக்கத் துவங்கியது. இவை அனைத்துமே ஏகே 47ன் வாரிசுகள்தான். அடிப்படை வடிவமைப்பில் ஒரே மாதிரியாக இருந்தாலும் குண்டுகள் பாயும் திறனிலும், துப்பாக்கியின் எடையிலும் வேறுபட்டவையாக இருந்தன. என்றாலும் ஏகே 47ன் பெயரையும் புகழையும் இவைகளால் அடைய முடியவில்லை.

உலகம் முழுவதும் கணக்கெடுத்தால் சிறு ஆயுதங்கள்(Small arms) உருவாக்கும் மரணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு இலட்சங்களை தாண்டுகிறதாம்.  சிறு ஆயுதங்கள் என்றால் ரிவால்வரில் ஆரம்பித்து ஏகே 47 வரைக்கும்.  உலகில் புழக்கத்தில் இருக்கும் ஐம்பது கோடி சிறு ஆயுதங்களில் பத்துக் கோடிக்கும் அதிகமானவை ஏகே வகையைச்  சார்ந்தவை. அதில் ஏழரைக் கோடிக்கும் அதிகமானவை ஏகே 47 துப்பாக்கிகள்.

அதெல்லாம் சரிதான். ஆசிட் அடிக்க உடைந்த முட்டையும், ஒரு ஆட்டோ ஆட்களும் போதுமான நமக்கு எதற்கு ஏகே 47 பற்றியெல்லாம்? சும்மா இருக்கட்டும் விடுங்க...

2 எதிர் சப்தங்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

வேறு ஏதோ என்று நினைத்து வந்தேன்...

முடிவில் உண்மை வரிகள்...

பல தகவல்களுக்கு நன்றி...

Uma said...

இருளுக்குள் தீப்பெட்டியை தேடி எடுத்துவிடும் சந்தோஷத்தை கொடுப்பவை அந்தத் தகவல்கள்.
அருமையான வரிகள்

வழக்கம் போல கடைசி வரி கலக்கல்!