Nov 5, 2012

எளிமையும் குரூரமும் கலந்து கட்டிய ஓட்டம்



நேற்று போட்ட கோலத்தின் மீது செக்கச் சிவப்பாக வாதாம்பழம் கிடந்தால் இன்றைய நாள் நன்றாக துவங்கியிருக்கிறது என்கிறார் வண்ணதாசன். சில புரட்சிகர எழுத்துக்களை வாசித்தால் இந்த தேசமே வாழத்தகுதியற்றதாகவும் சுற்றி இருப்பவர்கள் ஒவ்வொருவருமே அயோக்கியன் என்ற பிம்பம் உருவாகிறது. இந்த இரண்டுமே இரண்டு Extreme ஆகத்தான் தெரிகிறது. வண்ணதாசன் பார்ப்பதைப் போல எனக்கு வாழ்க்கை அத்தனை எளிமையானதாகவும் இல்லை, தோழர்கள் சொல்வதைப் போல அத்தனை குரூரமானதாகவும் தெரியவில்லை. யதார்த்தத்தில் எளிமையும் குரூரமும் கலந்துதான் கிடக்கிறது. 

இந்த வார இறுதியில் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. நள்ளிரவு தாண்டிய இரண்டு மணியளவில் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு நிறைய முறை வந்திருக்கிறேன். ஆனால் எப்பொழுதும் கடைகளைத் தேடியதில்லை. இந்த முறை சேலத்தில் இறங்கிய போது இரண்டரை மணி ஆகியிருந்தது. சில வார இதழ்களை வாங்குவதற்காக அலைந்த போது பெரும்பாலான கடைகளை மூடியிருந்தார்கள். சேலம் புதிய பேருந்து நிலையம் தூங்கி வழியும் என்று எப்பொழுதும் நினைத்ததில்லை.  சேர்களின் மீது அமர்ந்தவாறும், கீழே ஒரு லுங்கியை விரித்தும் படுத்திருக்கும் கடைக்காரர்களின் கால்களை மிதித்துவிடாமல் நடக்கும் போது ஒவ்வொரு முகமும் ஒரு கதையைச் சொல்லியது. சில கடைகளில் எப்.எம்மை நிறுத்தாமலே தூங்கியிருந்தார்கள். பழத்தின் விலையை ஒரு ரூபாய் குறைத்துக் கேட்டதற்காக சென்றமுறை என்னை துரத்திவிட்டு சில வசவுகளை உதிர்த்த கடைக்காரரின் முகத்தைத் தேடினேன். சாக்குப்பையை தலைக்கு சுருட்டி வைத்து கைகளை கட்டிக் கொண்டு படுத்திருந்தார். கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக எரியவிடப்பட்ட கொசுவர்த்திகள் வீசும் காற்றில் தங்களின் நெடியை முகவரி இல்லாமல் தொலைத்துக் கொண்டிருந்தன. தங்களின் வாழ்க்கையைப் பற்றிய அத்தனை புகார்களையும் படுக்கையில் சுருட்டி வைத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு போகும் அடுத்த பேருந்தில் தூங்குவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அரசுப்பேருந்துகளில் முன்பெல்லாம் டிவியில் படம் போடுவார்கள். அதற்கு தினமும் பராமரிப்பாளருக்கு வாடகை கொடுக்க வேண்டுமாம். அதிமுக ஆட்சி வந்த பிறகு சிக்கன நடவடிக்கை என்று இந்தத் திட்டத்தை கேன்சல் செய்துவிட்டார்கள். தினத்தந்தி பேப்பரை வாங்கி பையில் வைத்துக் கொண்டு கண்ணயர்ந்துவிட்டேன். ஒன்றரை மணி நேரப்பயணம். பேருந்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். பெரும்பாலும் வியாபாரிகள். மகுடஞ்சாவடியில் கண்டக்டர் யாரிடமோ சில்லறைக்கு சண்டை பிடித்தபோது மட்டும் ஒரு வினாடி விழித்துவிட்டுத் தூங்கினேன். சங்ககிரியிலும் அதே சத்தம் “சில்லரையோட பஸ்ல ஏறமாட்டீங்களா?” என்றார். பற்கள் நிறைய கறையோடு பூக்கூடையை தூக்கிக் கொண்டிருந்த அந்தப்பாட்டி "கானாங்காத்தால எதுக்கு தம்பி ஓரியாட்டம் ? ரெண்டு ரூவாதானே நீங்களே வெச்சுக்குங்க” என்று சொல்லிவிட்டு இறங்கியதிலிருந்து தூக்கம் தொலைந்து போனது. 

தினத்தந்தியும் அந்த நேரத்தில் வாசிக்க ஏதுவானது இல்லை. தெரிந்திருந்தும் புரட்டினேன். தனது கள்ளக்காதலனை திருமணம் செய்துகொள்வதற்கு தடையாக இருக்கும் இரண்டரை வயது குழந்தையை துப்பட்டாவில் கழுத்தை நெறுக்கிக் கொன்றவள் தினத்தந்தியில் அரைப்பக்கத்தை பிடித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பத்தொன்பது வயதுதான். அந்தக் குழந்தையின் நினைவுகள் அலைகழித்தது. மீண்டும் தூங்கினால் அந்தக் குழந்தை கனவில் வரக்கூடும். விழித்துக் கொண்டே ஈரோட்டை அடைந்தேன்.

அடுத்த பேருந்து கோபிச்செட்டிபாளையத்திற்கு. சுந்தரபாண்டியன் படம் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியாக நான் பார்த்த திரைப்படம் ‘தில்லாலங்கடி’. அதற்கு பிறகு எந்தப்படமும் பார்க்கவில்லை. திரைவறட்சி என்னை புரட்டிக் கொண்டிருந்திருக்கிறது.  பேருந்தில் பெரும்பான்மையானவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் எட்டி விழுந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ஸீன் கூட தவறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அருகில் இருந்த சிலர் என்னை ஒரு மார்க்கமாக பார்த்த போதும் நான் அலட்டிக் கொள்ளவில்லை. யாராவது குறுக்கே வரும் போது எழுந்து நின்று பார்த்தேன். சுந்தரபாண்டியன் அத்தனை சிலாகிப்புக்குரிய படம் இல்லை என்றாலும் எதனால் அப்படி லயித்துப்போனேன் என்று புரியவில்லை. கோபி பேருந்து நிலையம் வந்த போது இடைவேளை வரைதான் ஓடியிருந்தது. நான் இறங்க வேண்டும். ஆனால் சத்தியமங்கலம் வரைக்கும் டிக்கெட் எடுத்து படத்தை பார்த்து முடித்தேன். வீட்டை ஆறு மணிக்கு அடைந்திருக்க வேண்டும். ஆனால் எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தேன்.

இப்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கும் அதிகாலை மூன்றரை மணிக்கும் எங்கேயோ டிவி ஓடிக் கொண்டிருக்கிறது. வீரா படத்தில் ரஜினியும் ரோஜாவும்  ஹை-வால்யூமில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஜன்னலைத் திறந்து பார்த்தால் வீட்டிற்கு கீழே குடியிருக்கும் கட்டட வேலை செய்பவர்களின் குடிசையிலிருக்கும் டிவியில். எனக்குத் தெரிந்து இவர்கள் டிவியை அணைப்பதேயில்லை. விடியும் வரை டிவி பார்க்கும் இவர்களால் எப்படி அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு வேலைக்கு போக முடிகிறது எனத் தெரியவில்லை. 

ஒவ்வொருவருக்கும் ஒரு Preference அல்லது விருப்பம் இருக்கிறது. போகிறபோக்கில் விட்டுப்பிடித்தால் வாழ்க்கை சந்தோஷமானதாகவே இருக்கிறது.

3 எதிர் சப்தங்கள்:

pravinfeb13 said...

super sir

pravinfeb13 said...

super sir

Manikandan said...

தல கலக்குங்க ....... படிக்கும்போது சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து கோபி போனது போல உணர்வு .........