Nov 19, 2012

குடிசையில் வாழும் திருடர்கள்
வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடிசைப் பகுதி இருக்கிறது. அங்கு பெரும்பாலும் தமிழர்கள்தான். இரண்டு மூன்று தலைமுறையாக பெங்களூரில் செட்டிலானவர்கள். இழுத்து என்பதை இஸ்து என்பார்கள். அப்படியா என்று கேட்பதற்கு பதில் ஆமாவா என்பார்கள். சில வார்த்தைகளை சிரமப்பட்டு புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். மற்றபடி தமிழர்கள்தான். 

மொத்த குடிசைப்பகுதியும் ஒரு லோக்கல் தாதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தாதா ஏதாவது அரசியல் மீட்டிங்க்கு போனால் அவரது பெயர் பொறித்த பேனரைத் தூக்கிக் கொண்டு அவரது ‘வெயிட்டை’ இவர்கள் காண்பிப்பார்கள். தாதாவோடு ஒத்துப்போகவில்லை என்றால் குடிசைக்கு வரும் கரண்ட்டை கட் செய்துவிட்டு போய்விடுவார். சில சமயம் நான்கு பேரைக் கூட்டிவந்து மொத்திவிட்டும் போவார். தாதாவுக்கு இவர்கள் அவ்வப்போது ‘மால்’ வெட்டுவதும் உண்டு.

குடிசையை ஒட்டியிருக்கும் எங்கள் லே-அவுட்டில் குடியிருப்பவர்கள் மிடில்-க்ளாஸ் மாதவன்களும் மாதவிகளும். அநேகமாக ஐ.டியில் வேலை செய்கிறார்கள். குடிசைப்பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகாத சோம்பேறிகள் என்ற இமேஜை இவர்கள் பில்ட் அப் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த குடிசைவாசிகள்தான் அவ்வப்போது லே-அவுட் வீடுகளில் திருடுகிறார்கள் என்று பேசிக் கொள்வதுண்டு.

ஒரு மாதுஸ் என்னிடம் சில நாட்களுக்கு முன்னால் போனில் பயங்கர ரகசியம் ஒன்றைச் சொன்னார். இதை கவனிக்க வேண்டும்- எங்கள் வீடுகள் இருப்பது ஒரே லே-அவுட்டில்தான். நான்கு வீடு தள்ளி அவரது வீடு. ஜன்னலைத் திறந்து வைத்து சத்தமாக பேசிக் கொண்டால் கூட காது கேட்கும். ஆனால் சம்பாஷணைகள் அனைத்தும் போனில்தான். அவர் சொன்ன ரகசியம் இதுதான் - அவரது வீட்டில் ஒரு ஜோடி செருப்பு காணாமல் போய்விட்டதாம். அதை குடிசைவாசிகள்தான் திருடிவிட்டார்கள் என்றார். அவர் சொன்ன தொனி இருக்கிறதே அதுதான் முக்கியம் “அமெரிக்க சி.ஐ.ஏ என் வீட்டில் ஒரு ஜோடி செருப்பை திருடிவிட்டது” என்ற ரேஞ்சில் இருந்தது. “அப்படியா சார், நாங்களும் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறோம். முதல் வேலையாக செருப்புக் கூட்டுக்கு ஒரு பூட்டு வாங்குகிறேன்” என்று நான் சொன்னது அவரை திருப்திபடுத்திவிட்டது. ஒரு மிகப்பெரிய திருட்டில் இருந்து என்னைக் காப்பாற்றிவிட்ட திருப்தி அது. இதே விவகாரத்தை அவர் காலனிவாசிகளுக்குள் நடக்கும் மாதாந்திர கூட்டத்திலும் அழுத்தம் திருத்தமாக சொன்னதாக கேள்விப்பட்டேன்.

குடிசைவாசிகள் உண்மையிலேயே விளிம்பு நிலை மனிதர்கள். அவர்களின் வாழ்க்கை முறையை மிக நெருக்கமாக பார்க்கிறேன். அடுத்தவன் மீதான தேவையில்லாத பயத்தோடு பொதுக்குழாயில் தண்ணீர் எடுப்பதற்கான சண்டைகளில் ஆரம்பித்து அடுத்த குடிசையின் கழிவு நீர் தனது குடிசைக்கு முன்னால் வருகிறது என்ற வசவுகள் வரை வெளிப்படையான வாழ்க்கை முறையை வாழ்கிறார்கள். ஊசியில் விஷம் தடவி அதை நாசூக்காக வாழைப்பழத்தில் செருகிக் கொடுக்கும் ‘நவ நாகரீக’ வாழ்முறைக்கு அது முற்றிலும் வேறானது. பிரச்சினைகளையும் வன்மத்தையும் மனதிற்குள் பூட்டி வைக்கத் தெரியாத வெள்ளந்தி மனிதர்கள் இவர்கள். கோபம் வந்தால் அடித்துக் கொள்வதும் அடுத்த ஓரிரு நாட்களில் பேசிக் கொள்வதுமான இயற்கையான சமூக வாழ்க்கை அவர்களுடையது.  இவர்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள், தள்ளுவண்டியில் காய்கறி விற்கிறார்கள், குப்பை பொறுக்குகிறார்கள்.

அவர்களின் குழந்தைகள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. அந்தக் குழந்தைகள் குழந்தைமையை அனுபவிக்கிறார்கள். மண்களில் விளையாடுவதும், தண்ணீரில் நனைவதும் அவர்களின் உரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. மாலை வேளையை விளையாடிக் கழிப்பது அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. சாக்கடை மீதான பயத்தை, கொசுக்கடியை என சகலத்தையும் உதாசீனப்படுத்துகிறார்கள். ஆனால் மாதவன்களின் பிள்ளைகள் சோடாப்புட்டி கண்ணாடியை அணிந்து கொண்டு புத்தகமூட்டையோடு காலை ஏழு மணிக்கு சாலைகளில் நிற்கிறார்கள். பள்ளி வேன்கள் அவர்களை மூட்டைகளோடு மூட்டைகளாக தூக்கிச் சென்று மாலையில் மீண்டும் அதே சாலையில் துப்புகின்றன. பிறகு ட்யூசன், டான்ஸ் க்ளாஸ், சூப்பர் சிங்கர் கனவுகள், வீடியோ கேம், கிருமிகள், அழுக்கு பயம் என சூரியனைப் பார்க்காத சபிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் சிறகுகளை மொத்தமாக கத்தரித்துவிட்ட இந்த மாதவன்களுக்குதான் குடிசைவாசிகள் வேப்பங்காய்.

நேற்று நான்கு குடிசைவாசிகள் ஓடிக் கொண்டிருக்கும் சாக்கடையின் இரண்டு புறமும் மண்ணைக் கொட்டியிருந்தார்கள். நடுவில் தண்ணீர் குளம் போலத் தேங்கியிருந்தது. நான்கு பேரும் சேர்ந்து சாக்கடைத் தண்ணீரை வாளிகளில் மொண்டு வெளியே கொட்டிக் கொண்டிருந்தார்கள். நாற்றம் குமட்டிக் கொண்டிருந்தது. எதையோ தேடுகிறார்கள் என்று தெரிந்தது. அநேகமாக தங்க ஆபரணமாகவோ அல்லது சாவியாகவோ இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு சாக்கடைத் தண்ணீருக்குள் புழங்குவது பெரிய சிரமமாகத் தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கஷ்டப்பட்டார்கள். தண்ணீர் தீர்வதாகத் தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகாக தண்ணீர் தீர்ந்திருந்தது. துழாவ ஆரம்பித்தார்கள். 

நான்கைந்து மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அந்தச் சாக்கடைத் தண்ணீருக்குள் மீன்கள் இருக்கும் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்த மீன்களைப் பிடித்து பக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்கள். சாக்கடையின் இருபுறமும் கொட்டியிருந்த மண் மேட்டைத் சமன் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். அப்பொழுதான் அவர்கள் தேடியது வெறும் மீன்களை மட்டும்தான் என்று புரிந்து கொண்டேன். மொத்தமாக கிடைத்த ஐந்து மீன்களும் இரண்டு அல்லது மூன்று கிலோ தேறும். இந்த மூன்று கிலோ மீனுக்காக நான்கு ஆடவர்கள் சாக்கடைத் தண்ணீருடன் இரண்டு மணி நேரமாக மல்லுக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இத்தனை நாற்றத்தையும் மீறி, நோய்களைப் பற்றிய பயம் எதுவும் இல்லாமல், இடுப்பு நோக நீரைக் காலி செய்து வெறும் மூன்று கிலோ மீன்களுடன் திருப்திபட்டுக் கொள்ளும் இவர்களைத்தான் உழைக்காதவர்கள் என்கிறார்கள். இவர்களைத்தான் சோம்பேறிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களைத்தான் வெறுத்து ஒதுக்கிறார்கள் லே-அவுட் வாசிகள். 

நேற்று மாலை நேரத்தில் அதே சி.ஐ.ஏ ஏஜெண்ட் அழைத்தார். “வீட்டில் தண்ணீர் வரவில்லை. இரண்டு குடம் தண்ணீரை சுமப்பதற்குள் இடுப்பு முறிந்துவிட்டது” என்று பேச்சுவாக்கில் சொன்னார். அதோடு நிறுத்தியிருக்கலாம் “செருப்பு கூட்டுக்கு பூட்டு வாங்கிட்டீங்களா?” என்றார். “வாங்கவில்லை என்றால் நீங்கள் காவலுக்கு வருகிறீர்களா?” என்று நாக்கு வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. அவரது நல்ல நேரம் போலிருக்கிறது. என் நாக்கில் டெண்ட் அடித்திருக்கும் சனி டீ குடிக்க போய்விட்டார். கேட்காமல் நிறுத்திக் கொண்டேன்.

5 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...

:)

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன சொன்னாலும் காவலுக்கு உரைக்காது...

காட்டான் said...

யதார்த்தம்.. !
நன்றி.. ;-)

semmalai akash said...

எனக்கு ஒரு சந்தேகம், இவ்ளோ நேரம் போராடி சாக்கடை நீரில் இருந்து ஐந்துகிலோ மீன் எடுத்தார்கள் சரி, கிருமிகள் மட்டுமே இருக்கும் சாக்கடை மீனை சாப்பிட்டால் நோய் வராதா???????


அருமையான பகிர்வு.

srinivasan said...

அடுத்தவர்கள் சூழ்நிலையில் இருந்து பார்த்தால்தான் நிலைமையை உணரமுடியும் !!!