வெகு நாட்களுக்கு பிறகாக ஊருக்கு வந்திருக்கிறேன். வெகு நாட்கள் என்பது இரு மாதத்திற்கு மேற்பட்ட காலம். அதுவே பெரிய இடைவெளிதான். பதினேழு வயதில் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியேறினேன். கல்லூரி, வேலை என்று அடுத்ததடுத்து வாழும் ஊர்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஊருமே பிறந்த ஊருடன் எனக்கு உருவாகி இருக்கும் பந்தத்தை மிஞ்ச முடிந்ததில்லை.
வெளியூர்களிலிருந்து வரும்போது பெரும்பாலும் நள்ளிரவில் அல்லது அதிகாலையில் ஊரை அடைவேன். ஒவ்வொரு முறையும் இந்த ஊரின் காற்றுக்கு இருக்கும் பிரத்யேக வாசனையை உணர்கிறேன். ஒரு பருவத்தில் நெல்வயலின் இளஞ்சூட்டு வாசனை, இன்னொரு பருவத்தில் நீர் பாய்ந்த களிமண், மற்றுமொரு பருவத்தில் வெடித்துப்பிளந்த வயல்வெளிகளின் வறண்ட மணம்- பருவத்திற்கேற்றபடி வாசனையை வைத்திருக்கிறது இந்த ஊரும் மண்ணும். நினைவு தெரிந்தபிறகு அம்மாவை பிரிந்திருந்த சில நாட்களுக்குப் பிறகாக சந்தித்த போது ஓடிச்சென்று அணைக்கையில் உணர்ந்த வாசனை இன்னமும் நாசியில் ஒட்டியிருக்கிறது. அந்த அம்மாவின் வாசனை தந்த சுகத்திற்கு எந்தவிதத்திலும் குறையாத சுகத்தை ஊர் வாசனை தருகிறது.
பால்யத்தில் விளையாடிய தெருக்களும், சிட்டுக்குருவிகளைத் தேடி அலைந்த தெருக்கிணறுகளும், ஓணானை அடித்த புதர்களும் இப்பொழுது உருமாறியிருக்கின்றன. ஆனாலும் அவை அவற்றிற்குரிய அத்தனை சுவாரசியங்களையும் இன்னமும் சுமந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். முதன்முறையாக வாய்க்காலுக்குள் மூச்சுத்திணறிய இடமும், மைனாக்குஞ்சொன்றை தேடியெடுத்த மரமும், வளர்த்த கிளியொன்றை தின்ற பூனை வாழ்ந்த வீடும் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன.
மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது போதையில் மிரட்டிய மோகன் மாமா இப்பொழுது குடித்துவிட்டு பத்து ரூபாய் பணம் கேட்கிறார். பத்து வயதாக இருந்த போது டம்ளரில் மல்லிகைப்பூவை எடுத்து வந்து விற்கும் ரங்கமாய்யா இன்னமும் அதையேதான் செய்துகொண்டிருக்கிறார். எங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஸ்டெம்பாக நின்ற பயன்படாத பைப் அங்கேயதான் இருக்கிறது. நரிக்குறவர்களுடன் சேர்ந்து கொக்கு தேடியலைந்த வேப்பமரங்கள் வளர்ந்துகொண்டேயிருக்கின்றன.
ஊர் அப்படியேதான் இருக்கிறது. நான் தான் மாறியிருக்கிறேன். கொங்குத்தமிழ் நாக்கை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறது. ஊர்நடப்பு பேசும் மனிதர்களின் உறவை இழந்திருக்கிறேன். போடா வாடா என்றழைத்த நண்பர்கள் வெவ்வேறு திசைகளில் பறந்துவிட்டார்கள். ஊருக்குள் பெரும்பாலான முகங்கள் புதிதாக இருக்கின்றன. பத்தில் ஒரு முகம் கூட தெரிந்த முகமாக இல்லை. எதிர்படும் எந்த முகமும் புன்னகைப்பதில்லை. இந்த ஊருக்கு நான் அந்நியமாகிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் ஊர் எனக்கு அந்நியமாகப் போவதில்லை.
இந்த ஊர்தான் என் பிஞ்சுப்பாதங்களை ஏந்தியிருக்கிறது. முட்களும் கற்களும் கிழித்த போது இளைப்பாறியது இந்த மரங்களின் அடியில்தான். ரஜினி படம் பார்க்க வேண்டும் என புரண்டது இந்த மண்ணில்தான். என் முதுகை பதம் பார்க்க அப்பாவின் கைகளுக்கு முறுக்கேறிய குச்சியைக் கொடுத்தது இந்தச் செடிகள்தான். சைக்கிள் ஓட்டி விழுந்ததும், காதலிக்கத் துவங்கியதும் இந்த ஊரில்தான். கபடி விளையாடியதும், காலாற நடந்ததும் இங்குதான்.
இந்த ஊரைவிட்டு வெளியேறியபோது என்னிலிருந்து களங்கமின்மை வெளியேறியிருந்தது. இந்த ஊர் கற்றுக் கொடுத்திருந்த பால்யத்தின் வெகுளித்தன்மையை வாழ்க்கை என்ற பெயரில் மற்ற ஊர்கள் பிடுங்கிக் கொண்டன. இப்பொழுது எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் என்னால் பொய்களைச் சொல்ல முடியும். அடுத்தவனை ஏய்க்க முடியும். கடுங்கோபத்தில் ஒருவனை முகங்சுருங்கச் செய்ய முடியும். இதில் எதையுமே என் முதல் பதினேழு வருடங்களைக் கழித்த இந்த ஊரில் செய்ததாக ஞாபகமில்லை. அத்தகைய ஒரு ‘என்னை’த்தான் இந்த ஊருக்கு வரும் ஒவ்வொரு பயணத்திலும் தேடிக் கொண்டிருக்கிறேன். அவனைக் காணவில்லை. அவன் இறந்திருக்கக் கூடும். ஆனால் ஏதாவது ஒரு மரத்திற்கடியிலோ வயல்வெளியிலோ அவன் சுற்றிக் கொண்டிருப்பான் என நம்பித் தேடுகிறேன்.
குழந்தைமையையும், பால்யத்தையும் நான்குசுவருக்குள் கழித்த ஒரு மனிதனுக்கு ஊர் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அத்தகையதொரு மனிதனுக்கு மாநகரத்தின் நெரிசலும், அது உருவாக்கும் திகிலுமே பெரிய திருப்தியைத் தந்துவிடக் கூடும். ஆனால் இளம்பிராயத்தை மண்ணில் கொண்டாடியவனுக்கும், எதிர்படும் பால்யத்தின் ஒவ்வொரு அடையாளத்திலும் சில வினாடிகள் குழந்தைமைக்கு திரும்புவனுக்கும் எப்பொழுதும் சொந்த ஊர் என்பது திரும்பவிரும்பும் கனவாகவே இருக்கும். எனக்கு என் ஊர் என்பது கனவு. தனது பிடிகளுக்குள் என்னை ஏந்திக் கொள்வதற்காக கைகளை ஏந்திக் காத்திருக்கும் கனவு. பணமும் வாழ்க்கையின் தேவைகளும் இந்த கனவுக்குள் ஒருபோதும் நிரந்தரமாக என்னை அனுமதிக்கப்போவதில்லை.
[குறிப்பு: நிழற்படம் கரட்டடிபாளையம். கோபிச்செட்டிபாளையம் இணைய குழுமத்தில் இருந்து எடுக்கப்பட்டது]
[குறிப்பு: நிழற்படம் கரட்டடிபாளையம். கோபிச்செட்டிபாளையம் இணைய குழுமத்தில் இருந்து எடுக்கப்பட்டது]
15 எதிர் சப்தங்கள்:
//அத்தகைய ஒரு ‘என்னை’த்தான் இந்த ஊருக்கு வரும் ஒவ்வொரு பயணத்திலும் தேடிக் கொண்டிருக்கிறேன். அவனைக் காணவில்லை//
நானும் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்..
மனதில் உள்ள நினைவுகளை வரிகளில் படித்தேன்...
ninaivukal suzhala seythathu...
எங்கோ இழுத்துச் சென்றுவிட்டது...
நானும் என் நினைவுகளும் மீண்டும் எங்கோ...!!! :-)
ஏதோ ஒத்த சிந்தனையில் கதை,கட்டுரை வருவதால் தொடர்ந்து வாசித்து வருகிறேன் என்று நினைத்தேன். ஆனால் பால்ய கால வாழ்க்கை கூட ஒத்தே(ஓணான் விரட்டல்,கொக்கு பிடித்தல்) இருந்திருக்கிறது. சொந்த ஊரை விட்டு வெளியே வசிப்பவர்களுக்கு தான் இது போன்ற எண்ணங்கள் தோன்றும் என நினைக்கிறேன்.நீங்களாவது 16(+1) வயதினிலேயே வெளியூர் பார்க்க கிளம்பியிருக்கிறீர்கள். ஆனால் நான் 30ல் தான் கூட்டை விட்டு வெளியே வந்தேன்.
நன்றி தாமோதர் சந்துரு, தனபாலன், சீனி, அகல்விளக்கு, சேக்காளி :)
எல்லோருமே சொந்த ஊரை இழந்துகொண்டிருக்கிறோம் போலிருக்கிறது.
நகர வாழ்வில் நம்மைத் தொலைத்து விட்டது உண்மை. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
thooramdhaan paasaththai adhigarikkum..
//இந்த ஊரைவிட்டு வெளியேறியபோது என்னிலிருந்து களங்கமின்மை வெளியேறியிருந்தது. இந்த ஊர் கற்றுக் கொடுத்திருந்த பால்யத்தின் வெகுளித்தன்மையை வாழ்க்கை என்ற பெயரில் மற்ற ஊர்கள் பிடுங்கிக் கொண்டன. இப்பொழுது எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் என்னால் பொய்களைச் சொல்ல முடியும். அடுத்தவனை ஏய்க்க முடியும். கடுங்கோபத்தில் ஒருவனை முகங்சுருங்கச் செய்ய முடியும். இதில் எதையுமே என் முதல் பதினேழு வருடங்களைக் கழித்த இந்த ஊரில் செய்ததாக ஞாபகமில்லை. அத்தகைய ஒரு ‘என்னை’த்தான் இந்த ஊருக்கு வரும் ஒவ்வொரு பயணத்திலும் தேடிக் கொண்டிருக்கிறேன். அவனைக் காணவில்லை. அவன் இறந்திருக்கக் கூடும். ஆனால் ஏதாவது ஒரு மரத்திற்கடியிலோ வயல்வெளியிலோ அவன் சுற்றிக் கொண்டிருப்பான் என நம்பித் தேடுகிறேன்.//
உண்மைதான். என்ன, நான் என் சொந்த ஊரையே தொலைத்து விட்டேன்.
ஐயோ,, கொங்கு தமிழை தொலைத்துவிடாதீங்க....
Enjoyed, thanks for sharing!!
கலக்கல்யா...
அண்ணே கரட்டடிபாளையமா நீங்க.......
அண்ணே கரட்டடிபாளையமா நீங்க.......
it was good.... you know what? my ambition is to return to my native from city life..
i experienced almost everything you have mentioned
Post a Comment