"தொழிலதிபரின் மகன் கடத்தல்"
இப்படித்தான் தினத்தந்தி பெங்களூர் பதிப்பில் இன்று செய்தி வந்திருந்தது. மூன்றாவது பக்கத்தில் கெளதமின் படத்தோடு. ஆனால் செய்தியில் இருப்பது போல கெளதமின் அப்பா தொழிலதிபர் எல்லாம் இல்லை. சில டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு பட்டன்கள் சப்ளை செய்கிறார். பெரிய வருமானம் என்று சொல்ல முடியாது. ஆனால் கையைக் கடிக்காத தொழில்.
காயத்ரியை திருமணம் செய்து கொண்டு வந்ததிலிருந்து இந்த கே.ஆர்.புரம் வீட்டில்தான் இருவரும் குடியிருக்கிறார்கள். நான்கு வருடங்கள் ஓடி விட்டது. திருமணமான முதல் வருடத்திலேயே கெளதம் பிறந்துவிட்டான். அப்பொழுதெல்லாம் கெளதம் சுட்டியாக இருந்தான். இருந்தான் என்பது கடந்தகாலம். இப்பொழுது இல்லை. அது கெளதமுக்கு இரண்டு வயது பூர்த்தியாகியிருந்த சமயம். அவன் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது முகம் கழுவி வருவதற்காக காயத்ரி குளியலறைக்குள் சென்றிருந்தாள். அடுத்த சில நிமிடங்களில் கெளதம் கதறத்துவங்கினான். முகத்தில் சோப் நுரையுடன் காயத்ரி வெளியே ஓடிவந்தாள். அவள் குளியலறைக்குள் இருந்த போது தொட்டிலில் இருந்து இறங்கியவன் சமையலறையில் இருந்த சுடும் ரசத்தை கவிழ்க்க அது அவனது தொடை முழுவதும் கொட்டிவிட்டது.
கெளதமை தூக்கிக் கொண்டு அவசரமாக மருத்துவமனைக்கு ஓடினாள். அப்பொழுதே கெளதமின் அப்பாவிற்கும் போன் செய்துவிட்டாள். அவர் நேரடியாக மருத்துவமனைக்கு வந்திருந்தார். அது மிகச் சிறிய மருத்துவமனை. இவர்கள் சென்றிருந்த சமயத்தில் மருத்துவர் இல்லை. நர்ஸ் மருத்துவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னாள். அவரின் அறிவுரைப்படி ஒரு ஊசி போட்டு ஏதோ ஆயிண்ட்மெண்ட் தடவினாள். கெளதம் தூங்கிவிட்டான்.
அடுத்த நாள் காலையில் கெளதமின் முகம் வீங்கத் துவங்கியது. மீண்டும் பதறியவர்கள் அவனை வேறொரு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். அடுத்த பத்து நாட்களுக்கு கெளதம் மிகுந்த சிரமப்பட்டுவிட்டான். அந்த நர்ஸ் போட்ட ஊசியால் வந்த வினை என்று மருத்துவமனையில் சொன்னார்கள். ஏதோ நரம்பு பாதித்துவிட்டதாம். உயிருக்கு ஆபத்தில்லை என்ற மருத்துவர்கள் பையனின் பழைய சுறுசுறுப்பையும் அறிவையும் பற்றி எந்த 'கியாரண்டி'யும் தர முடியாது என்று கைவிரித்து விட்டார்கள்.
அப்பொழுதிலிருந்தே கெளதம் மந்தம்தான். யார் கூப்பிட்டாலும் உடனடியாக திரும்பிப்பார்ப்பதில்லை. இன்னமும் பேச்சு முழுமையாக வரவில்லை. விளையாடுவதேயில்லை அப்படியே விளையாடினாலும் சோர்ந்துவிடுகிறான் என மொத்தமாக மாறிவிட்டான். காயத்ரியின் பிரார்த்தனைகள் முழுவதும் கெளதமுக்காகவே இருந்தது. அவள் அழுவதை அவன் அவ்வப்போது பார்த்தாலும் உணர்ந்து கொண்டதில்லை.
இந்த வருடம்தான் கெளதமை பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். அது மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளி. தினமும் வேனில் போய் வருகிறான். மதியம் ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்துவிடுவான். கடந்த வெள்ளிக்கிழமை கெளதம் வீட்டிற்கு திரும்பவில்லை. வேன் டிரைவரிடம் விசாரித்த போது பள்ளியிலிருந்தே வரவில்லை என்றார். பள்ளிக்குச் சென்று விசாரித்த போது அவர்களின் பதிலிலும் எந்த பிரயோஜனமும் இல்லை. அவனாக பள்ளியை விட்டு வெளியேறிவிட்டானா அல்லது யாராவது கடத்திவிட்டார்களா என்று புரியவில்லை. வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையில் இருக்கும் பாதையில் நான்கைந்து முறை தேடிவிட்டார்கள். இதன்பிறகுதான் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். அந்த இன்ஸ்பெக்டர் உடனடியாக விசாரணையில் இறங்கினார். இரண்டு கான்ஸ்டபிள்களை சில இடங்களுக்கு அனுப்பியும் வைத்தார்.
இப்பொழுது கெளதம் காணாமல் போய் இருபத்து நான்கு மணி நேரம் ஆகிவிட்டது. அவனுக்கு பசி வந்தாலும் கூட அழத்தெரியாது என்பதை நினைத்து நினைத்து காயத்ரி அழுது கொண்டிருந்தாள். இதுவரைக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை என்பது போலீஸாரை குழப்பமடையச் செய்தது. கடத்தலாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று யோசிக்கத் துவங்கினார்கள். கெளதமின் அப்பா தனக்கு தொழில்ரீதியான எதிரிகள் இல்லை என்று சொல்லியிருந்ததால் போலீஸார் கடத்தல் இல்லை என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் நிலைக்கு வந்திருந்தார்கள்.
காயத்ரியிடம் விசாரிக்கத் துவங்கினார்கள். அவளுக்கு யார் மீது சந்தேகம் என்ற போது தனது வீட்டு ஓனர் மனைவி மீது என்றாள். "யூ ஆர் வெரி ஹாட் மை டியர்" என்று காயத்ரியின் கணவனுக்கு அவள் ஒருமுறை எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தாளாம். அதை காயத்ரி படித்துவிட்டாள். கெளதமின் அப்பா அவள் அனுப்பியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துவிட்டார். வீட்டு ஓனரின் மனைவியிடம் காயத்ரியே நேரில் கேட்டுவிட்டாள். தனது கணவனுக்கு அனுப்புவதற்கு பதிலாக கை தவறி கெளதமின் அப்பாவுக்கு அனுப்பிவிட்டேன் என்று சொல்லி ஸாரி கேட்டாள். இன்னொரு முறை "எப்பொழுது வருகிறாய்..வெயிட்டிங் ஃபார் யூ" என்று அவளிடமிருந்து கெளதமின் அப்பாவுக்கு மெசேஜ் வந்திருந்தது. ஆனால் இதுபற்றி காயத்ரி இருவரிடமும் எதுவும் கேட்கவில்லை.
காயத்ரியின் இந்தத் தகவலுக்குப் பிறகு ஒரு பெண் கான்ஸ்டபிள் வீட்டு ஓனரின் மனைவியை விசாரிக்கத்துவங்கினார். அவள் தனக்குத் தெரியாது என அழுது புலம்பினாள். கெளதமின் அப்பாவை இன்ஸ்பெக்டர் நேரடியாக விசாரித்தார். 'விசாரணைக்கு'பிறகாக பிறகாக இருவரும் தங்களின் உறவு குறித்து ஒத்துக் கொண்டார்கள். தான் கெளதமைக் கடத்தப்போவதாக கெளதமின் அப்பாவிடம் சொன்னபோது அவர் அது பற்றி கவலைப்படவில்லை என்றாள் வீட்டு ஓனரின் மனைவி. அவள் விளையாட்டுக்குச் சொன்னதாக நினைத்துக் கொண்டதாக கெளதமின் அப்பா சொன்னார். விசாரணை குறித்தான தகவல்கள் காயத்ரிக்கு தெரிய வந்த போது அவள் மயக்கமடைந்துவிட்டாள். அதே சமயத்தில்தான் அருகில் இருக்கும் ஏரியில் ஒரு குழந்தையின் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது. காயத்ரி பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தாள்.
மணி மாலை நான்கரை ஆகியிருந்தது. வீட்டில் யாரும் இல்லை. கொஞ்சம் குழம்பியிருந்தாள். சுதாரித்தபோதுதான் தெரிந்தது அத்தனையும் கனவு என்று. மதியத் தூக்கத்தின் இடையே தான் கனவு கண்டிருப்பதாக உணர்ந்தபோது காயத்ரிக்கு கொஞ்சம் நிம்மதியாகவும் பதட்டமாகவும் இருந்தது. ஏதோ கதையில் படித்த சம்பவம் கனவாக மாறியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். என்றாலும் மனம் அமைதியடையவில்லை. வீட்டு ஓனரின் மனைவி கீழே நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். மாலையில் வீடு திரும்பிய கணவனிடம் "வீட்டை மாற்றிவிடலாமா" என்று கேட்டாள். "கர்ப்பமாக இருக்கும் போது வீடு மாற்றுவது நல்லதில்லை என்பார்கள், குழந்தை பிறந்தவுடன் மாற்றிவிடலாம்" என்றான். எதற்காக மாற்ற வேண்டும் என்று அவனும் கேட்கவில்லை அவளும் காரணத்தைச் சொல்லவில்லை.
7 எதிர் சப்தங்கள்:
ஆஹா, கடைசில சிரிப்பு வந்துடுச்சு பாஸ்.. சந்தோசமான மன நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது கதை.. :-)
நல்ல கதை. ஆனால் ஏன் பெங்களூரை மையமாக வைத்து நிறைய கதை எழுதுகிறீர்கள்?
நன்றி ஆறுமுகம்.
அனானிமஸ்,
எளிமையான காரணம்தான். தற்சமயம் நான் பெங்களூரில் வசிக்கிறேன்.அதுதான் காரணம். சில கதைகள் கொங்குப்பகுதியை மையமாக வைத்தும், ஓரிரு கதைகளை ஹைதரபாத்தை மையமாக வைத்தும் எழுதியிருக்கிறேன்.
நன்றி.
ஆஜர்
மணி,
மின்னல் கதைகள் எல்லா விதமான கதைகளையும் எழுதுவதற்கு ஒரு பயிற்சி என்று நீங்கள் எங்கோ சொல்லியதாக நினைவு. அல்லது என் பிரமை :)
அந்த விதத்தில் சுவாரஸ்யமாக இருக்கின்றன. பலர் தயங்கும் விசயங்களை எழுதியதில் மகிழ்ச்சி என்றாலும் கொஞ்சம் புதிய முயற்சிகளும்
செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
இந்தக் கதை ரொம்பவே போங்கு. நோ பால் என்று சொல்லி ஒரு ஃப்ரீ ஹிட் தரணும் பாஸ் :)
வலைச்சரம் - நன்றி ஹை :)
climax super sir!!! unexpected!!! even i went to deeply into the story!! nice one !!!
Wonderful story thanks
Post a Comment