Oct 6, 2012

கர்நாடக முழு அடைப்பும் பற்றி எரிந்த தமிழகமும்தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று கர்நாடகம் முழுவதும் பந்த். பெங்களூரிலிருந்து ஓசூர் செல்லும் சாலை வெறிச்சோடிக்கிடக்கிறது. கடைகளை மூடியிருக்கிறார்கள். பைக்குகளில் கர்நாடக மாநில கொடியை பிடித்துக் கொண்டு செல்லும் இளைஞர்களைக் காண முடிகிறது. சைரன் ஒலியெழுப்பும் போலீஸ் வாகனங்கள் அலறிச் செல்கின்றன. சாலைகளில் தென்படும் போலீஸ் சட்டைகளும், வழக்கத்திற்கு மாறான அமைதியும் திகிலூட்டுகின்றன. 

இந்த வித்தியாசமான சூழல் 1992 ஆம் ஆண்டை நினைவுபடுத்துகிறது. அது ஜெயலலிதா முதன்முறையாக முதல்வர் ஆகியிருந்த சமயம். காவிரிப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தது. சாம்ராஜ் நகர் முதலான எல்லைப் பகுதிகளில் விவசாயம் செய்து கொண்டிருந்த தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். அந்தச் சாலைகளில் பேருந்து, லாரிகள் தடைசெய்யப்பட்டிருந்தன. தனியார் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த தமிழர்கள் பல கிலோமீட்டர்கள் தூரத்திற்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சத்தியமங்கலத்தை நோக்கி நடந்து வந்தார்கள். குழந்தைகளை கையில் தூக்கி வந்தவர்களும் முதியவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். கொடூரமான அந்தக் காட்சி கோபி, சத்தியமங்கலம் பகுதியில் இருந்த இளைஞர்களை உசுப்பியிருந்தது.

இந்தச் சமயத்தில் சோப் ஆயில் ஏற்றிக் கொண்டு வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட லாரியை கோபியில் தடுத்து நிறுத்தினார்கள். அதன் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வண்டியை எப்படியோ மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். லாரியைத் துரத்திக் கொண்டு காவல் நிலையம் சென்ற இளைஞர் படை காவல் துறையினரோடு மோதத்துவங்கியது. தமிழர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்படுவதற்கு அடையாள எதிர்ப்பாக லாரியை எரிக்கப் போவதாகச் சொன்னார்கள். காவல்துறை ஏற்றுக் கொள்ளவில்லை. இளைஞர்களை விரட்டினார்கள். இளைஞர் குழு மத்திய அரசின் சொத்தைச் சேதப்படுத்த வேண்டும் எனக் கிளம்பி டெலிபோன் எக்சேஞ்சை கொளுத்தினார்கள். 

இந்தக் களோபரத்திற்கு இடையில் லாரியை காப்பதற்காகவோ அல்லது மறைத்து வைப்பதற்காகவோ காவல் நிலையத்திலிருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது சில இளைஞர்கள் லாரியைச் சூழ்ந்து கொண்டார்கள். ஓட்டி வந்தவர்களை துரத்திவிட்டுவிட்டு லாரியை கொளுத்திவிட்டார்கள். வானம் முழுவதும் கரும்புகை எழும்பியது.

அப்பொழுது நாங்கள் பள்ளிக்குள் இருந்தோம். பள்ளியின் கேட் பூட்டப்பட்டிருந்தது. பெற்றோர் வந்தால் மட்டுமே மாணவர்களை வெளியே அனுப்ப முடியும் என்று ஆசிரியர்கள் சொல்லிவிட்டார்கள். எங்களையும் யாராவது கொளுத்திவிடுவார்கள் என்று பயந்து கொண்டிருந்தோம். என்னோடு படித்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்கள் வெளியேறுவதற்காக ஒவ்வொரு முறை கேட் திறந்து மூடும் போதும் எனக்கு பயமும் வெறுமையும் சூழத் துவங்கியது. என்னையும் தம்பியையும் அழைத்துப்போக யாராவது வர மாட்டார்களா என்று காத்திருந்தேன்.லாரியின் டயர்கள் வெடிக்கும் சப்தம் திகிலூட்டியது. 

கோபி போலீஸ் ஸ்டேஷன் முன்பாக பெருங்கூட்டம் சேர்ந்திருப்பதாக தலைமையாசிரியர் இன்னொரு ஆசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  கூட்டத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தார்கள். பக்கத்தில் இருந்த கட்டங்களின் மீது நின்றவர்களும் சாலையோரமாக நின்றவர்களும் குண்டடிபட்டு விழத்துவங்கினார்களாம். கூட்டம் சிதறியது. ஆறு அல்லது ஏழு பேர் செத்திருக்க கூடும் என்றார்கள். ஆனால் சரியான எண்ணிக்கை ஞாபகத்தில் இல்லை.

துப்பாக்கிச் சத்தங்களுக்குப் பிறகாக பள்ளி காலியாகியிருந்தது. பெரும்பாலான மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். சொற்ப மாணவர்கள் மட்டும் பள்ளிக்குள் இருந்தோம். என் அம்மாவின் அலுவலகத்தில் பணிபுரிபவர் எங்களை அழைத்துச் செல்வதற்காக வந்தார். பெரிய ஆசுவாசம் அடைந்தேன். இன்னும் வீட்டிற்கு கிளம்பாத நண்பர்களிடம் சந்தோஷத்துடன் விடைபெற்றேன். நானும் என் தம்பியும் அவரது சைக்கிளில் ஏறிக் கொண்டோம். எங்கள் வீட்டிற்கு  போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். துப்பாக்கி குண்டுகளை பார்த்துவிட முடியும் என்று ஆர்வமானேன். ஆனால் அந்தப்பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. எங்களுக்கு அறிமுகமே இல்லாத சந்துகளின் வழியாக சைக்கிள் நகர்ந்து கொண்டிருந்தது. குண்டுகளை பார்க்க முடியாத ஏமாற்றம் எனக்கு. உச்சி வெயிலும், குறுகிய சந்துகளும், எதிர்படும் மேடுகளும் அவரை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கின. அவரது உடம்பில் வழிந்த வியர்வை அவரைக் கட்டிப்பிடித்திருந்த எனது கைகளை நனைத்துக் கொண்டிருந்தது.

பாதைகளில் கிடந்த செருப்புகளும், சிதறிய கற்களும், வீடுகளின் மூடிய கதவுகளும் ஊரை கலைத்து போட்டிருந்தது. எதற்காக இத்தனை கலவரம் என்று தெரியவில்லை. எங்களை அழைத்துச் செல்பவரிடம் கேட்டேன். "கர்நாடகக் காரங்க தண்ணி தர மாட்டேங்குறாங்க" என்றார். என் தம்பி மூன்றாவது படித்துக் கொண்டிருந்தான். "சண்டை போடுறவங்களை எல்லாம் குடத்தை எடுத்துட்டு வரச்சொல்லுங்க, நம்ம தொட்டியில் இருக்கிற தண்ணியை கொடுத்துடலாம்" என்றான். அவர் சைக்கிளை நிறுத்திவிட்டு வெடித்துச் சிரித்தார். அப்பொழுது அவர் சிரித்ததற்கான அர்த்தம் புரியவில்லை. என்றாலும் சிரித்துவைத்தேன். அந்தச் சிரிப்பு அந்தக் கணத்திற்கு தேவையானதாக இருந்தது.

2 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

your touch... as usual enjoyable reading :)))

Jayadev Das said...

தமிழகத்தை ஏன் கேரளா மாதிரி பசுமையாக்க ஒருவரும் நினைப்பதில்லை? அப்படி மாறினால், நமக்கே தேவையான மழை பெய்யுமே?