Oct 9, 2012

இஞ்ஜினியரிங் முடித்த கோமாளிகள்



வேமாண்டம்பாளையமாக இருந்தாலும் சரி மேலப்பட்டியாக இருந்தாலும் சரி நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவனை பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வி "நீ இன்னும் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகலையா?". 

ஏதாவது ஒரு நிறுவனத்தில் அந்த மாணவன் வேலை வாங்கியிருந்தால் தப்பித்தான். இல்லையென்றால் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கேட்டே அவனை சாகடித்துவிடுவார்கள். கேள்வியில் இருக்கும் தொனிதான் மிகக் கொடூரமானது. ஏற்கனவே வேலை வாங்கிய யாராவது ஒரு மாணவனை சுட்டிக் காட்டுவார்கள். வேலை வாங்கிய அவன் அறிவாளி அல்லது படிப்பாளி என்றும் "நீ ஏன் இன்னும் இப்படியே இருக்கிறாய்" என்ற அர்த்தத்தை கொண்டுவந்துவிடுவார்கள்.

கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு பெறவில்லை என்பது மாணவர்களின் குறை மட்டும் இல்லை. விருப்பமே இல்லாதவன் என்றாலும் அவன் பொறியியல் கல்விதான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் பெற்றோரில் ஆரம்பித்து, கணக்குவழக்கில்லாமல் கல்லூரிகளைத் துவக்க அனுமதியளித்த அரசுகள், தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில், தரமே இல்லாத கல்லூரிகள், தகுதியே இல்லாத ஆசிரியர்கள் என சகலரும் அடக்கம்.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பாக பி.ஈ படிப்பது பெருங்கனவாக இருந்த காலம். நல்ல மதிப்பெண், நுழைவுத்தேர்வு என்று அத்தனை தடைகளையும் தாண்டிச்செல்பவன் அந்தக் கனவை அடைய முடிந்தது. பிறகு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நூறாகி, இருநூறாகி, முந்நூறையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. நுழைவுத்தேர்வு எழுதுபவர்கள் எல்லாம் 'ஸீட்' வாங்கிவிட முடியும் என்ற ஒரு காலம் உருவானது. அப்படியிருந்தும் ஏகப்பட்ட கல்லூரிகள் காற்று வாங்கிக் கொண்டும் ஈயை ஓட்டிக்கொண்டும் இருந்ததால் ப்ளஸ் டூ முடித்தாலே வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கத் துவங்கின கல்லூரிகள்.

இலட்சக்கணக்கில் 'இஞ்சினியர்' டிகிரி வாங்கியவர்கள் உருவாகத் துவங்கினார்கள். மின்சாரம் என்பதை வரையறுக்கத் தெரியாத எலெக்டிரிக்கல் விஞ்ஞானிகளும், செயற்கைக்கோள் என்ன செய்யும் என்பதைத் சொல்ல முடியாத கம்யூனிகேஷன் அறிவாளிகளும் பெருகினார்கள். அப்படியிருந்தும் பணப்பசி தீராத பொறியியல் கல்லூரிகள் எம்.ஈ ஸீட்களை உருவாக்கின.  தங்களைப்பார்த்து கேள்வி கேட்கும் கொசுக்களிடமிருந்து தப்பிக்க மாணவர்கள் ஒரு உபாயத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். "ஹையர் ஸ்டடீஸ் செய்யப்போறேன்" என்று சொல்லிவிடுகிறார்கள். 

பி.ஈ முடித்துவிட்டு வேலைகிடைக்காதவர்கள் அல்லது வேலை வாங்க முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக எம்.ஈ க்கள் அமைந்தன. எம்.ஈ முடித்த பெரும்பாலானோர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஆனார்கள்.  

இத்தகைய பேராசிரியர்கள் பாடம் நடத்தி, ப்ளஸ்-டூவில் 'ஜஸ்ட் பாஸ்' ஆனவர்கள் பாடம் படித்து தமிழக பொறியியல் கல்வியின் தரத்தை கொடி ஏற்றினார்கள். கல்லூரிகளில் ஆய்வகங்கள் இல்லை, நூலகம் இல்லை என்பதெல்லாம் பழைய குற்றச்சாட்டுக்கள். இப்பொழுதெல்லாம் பல கல்லூரிகளில் கட்டடங்களே இல்லை என்பதுதான் நிதர்சனம். 

இத்தகைய தரத்தை உணர்ந்து கொண்ட நிறுவனங்கள் தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகள் என்றாலே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடத்துவங்கின. தேர்ந்தெடுத்த சில கல்லூரிகளில் மட்டும் 'கேம்பஸ் இண்டர்வியூ'க்களை நடத்துகின்றன. பொறியியல் படிப்பை முடிப்பவர்களில் சில சதவீதத்தினரே நல்ல வேலையை வாங்குகிறார்கள். வேலை கிடைக்காத பொறியாளர்கள் சான்றிதழ்களை தூக்கிக் கொண்டு பெங்களூர் சாலைகளிலும், சென்னை சாலைகளிலும் அலையத் துவங்குகிறார்கள்.

மூன்றாம்தர நிறுவனங்கள் வேலை கிடைக்காத பாவப்பட்ட பொறியாளர்களை பகடை காய்களாக்கத் துவங்கின. ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக கூட சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு எங்கள் நிறுவனத்தில் கட்டாயம் பணி புரிய வேண்டும் என்ற பிணைப்பத்திரங்களில் கையெழுத்து வாங்குகிறார்கள். பொறியியல் கல்வி முடித்தால் இருபதாயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற மாணவனின் கனவில் மண்ணை அள்ளிக் கொட்டிய இந்தச் சமூகம் அவன் மீது மிக அதிகமான அழுத்தத்தையும் கொடுக்கிறது. அவனோடு படித்தவன் பல ஆயிரங்களில் சம்பளம் பெறுவதாகவும் இவன் ஐந்தாயிரம் சம்பளத்தில் நகரங்களில் கஷ்டப்படுவதாகவும் ஒரு  பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இவர்களை இஞ்ஜினியரிங் முடித்த கோமாளிகளாக சித்தரிக்கிறார்கள்.

இளம் வயதில் உருவாக்கப்படும் இத்தகைய மன அழுத்தம் "பணமே பிரதானம்" என்ற எண்ணத்தை பெரும்பாலானோர்களின் மனதில் விதைக்கிறது. நல்ல சம்பளம், ப்ராண்ட் வேல்யூ உள்ள நிறுவனம், வெளிநாட்டுப்பயணம் என்பன குறிக்கோள்கள் என்ற நிலையிலிருந்து அவை பித்து நிலையாக உருமாறுகின்றன. சில வருடங்கள் இவை உருவாக்கும் மன உளைச்சல் ஒருவனுக்கு வாழ்நாள் முழுமைக்குமான மனச்சிதைவை உருவாக்குவதற்கான அடிப்படையாகின்றன. இந்த இடத்தில் தொடங்குகிறது அவனுக்கும் சமூகத்திற்குமான சிக்கல்கள்.

(பேசுவோம்)

16 எதிர் சப்தங்கள்:

வே.நடனசபாபதி said...

சிலருக்கு தங்கள் கருத்து வேம்பாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலையை சரியாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

Anonymous said...

நல்ல பதிவு!

மாணவர்களின் மனநிலை, பெற்றோர் உறவினரின் நெருக்குதல், சமூகத்தின் பார்வை என ..,
இன்றைய யதார்த்த உண்மை நிலையை பதிந்து உள்ளீர்கள்!
Thank you!

Hope it may help some one..,
IT ENGG JOBS! படித்துவிட்டு வேலையின்றி அவதிப்படுகிறீர்களா?http://dmk-kalaignar.blogspot.com/2012/10/it-engg-jobs.html

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கும் உண்மைகள்... அவர்கள் மட்டும் காரணம் அல்ல...

அமுதா கிருஷ்ணா said...

பெற்றோர்கள் முதலில் திருந்த வேண்டும். இந்த படிப்பை தவிர மற்ற படிப்புகளும் இருக்கின்றன என்பதை உணர்வதே இல்லை. என் இரண்டு பையன்களையும் இந்த படிப்பில் சேர்க்காததால் என் சுற்றத்தார் என் மகன்கள் என்னவோ மக்குகள் போலவும், நான் பணம் மிச்ச படுத்தவே இந்த கோர்சில் சேர்க்காதது போலவும் பேசுகிறார்கள். எனக்கு என் மகன்களின் விருப்பமே முதலில்.

அமுதா கிருஷ்ணா said...

மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.தொடரட்டும்.

மதி said...

நிதர்சன உண்மை சரியான அலசல்

நன்றி

விருச்சிகன் said...

சிறப்பான கருத்துக்கள். இன்னும் கொஞ்சம் நாளிலே, இன்ஜினியரிங் முடிச்சுட்டு மளிகை கடை வைக்க வேண்டியதுதான் நடக்கும். பணி தொடர்க

சுந்தரம் சின்னுசாமி said...

அருமையான பதிவு.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| சில வருடங்கள் இவை உருவாக்கும் மன உளைச்சல் ஒருவனுக்கு வாழ்நாள் முழுமைக்குமான மனச்சிதைவை உருவாக்குவதற்கான அடிப்படையாகின்றன. இந்த இடத்தில் தொடங்குகிறது அவனுக்கும் சமூகத்திற்குமான சிக்கல்கள்.||

இத்தகைய மனச்சிதைவுக்குக் காரணமாகக் கூறப்படும் 'பெற்றோர் திணித்தல்' இப்போதெல்லாம் நடப்பது போல் தெரியவில்லை.மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய துறையில்தான் ஈடுபடுகிறார்கள்..

எந்தவித குறிக்கோளும் இல்லாது, படிக்கும் காலத்தில் ஊரைச் சுற்றுபவர்கள்தான் கடைசிப் புகலிடமான கற்பித்தலில் நுழைந்து சமூகத்தையும் நாட்டையும் குட்டிச் சுவராக்குகிறார்கள்..

passerby said...

பெற்றோர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றெல்லாரும் உலகம் எப்படியோ அப்படித்தான் இருப்பார்கள் நம் சமூகத்தில்.

ஒரு சமூகத்தில் தனிமனிதனாக ஒவ்வொருவரும் சிந்திக்கத்தொடங்கினால், அவரவர் தாம் விரும்பும் வாழ்க்கையைத் தேடி மகிழ்ச்சியடைவர்.

ஆனால் நம் சமூகம் தனிமனிதனாக ஒருவனைச் சிந்திப்பதைத் தடுக்க என்னென்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்துவிடுகிறது.

பெற்றோரும் மாணாக்கரும் இப்படிப்பட்ட சமூகத்தின் வக்கிரவாழ்க்கைக்குப் பலியாகின்றார்கள். அவர்களை மட்டும் குறையெப்படி சொல்ல முடியும்?

நம் மதவாழ்க்கை; அதன்வழி வரும் வாழ்க்கைச்சட்டங்கள் இவை சில காரணிகள். பெரியோரைத் தொழு என்று சொல்லும்போது எப்படி அவர்களைத்தட்ட முடியும்?

தன்னிச்சையாக சிந்தித்து முடிவெடுக்க மனோதைரியத்தை சமூகம்தான் தரவேண்டும் பெருவாரியானவர்களுக்கு.

நேர்கோடு said...

//
பி.ஈ முடித்துவிட்டு வேலைகிடைக்காதவர்கள் அல்லது வேலை வாங்க முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக எம்.ஈ க்கள் அமைந்தன. எம்.ஈ முடித்த பெரும்பாலானோர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஆனார்கள்.

உண்மை உண்மை உண்மை

SUNDAR said...

unmaiya sollirukinga.... ennoda life laiyum idha cross panni dhan vandhurukaen......

Anonymous said...

Corect

Anonymous said...

Im also final engg student,correct but,nalla padikanum,kandipa nalla vela kidaikum nalla padicha

Unknown said...

Real Life...

ramanramanujan said...

உண்மை நிலையை உணர்த்தியுலள்ளீர்கள்.பெரும்பாலான தகப்பன்மார்கள், 20000 ரூபாயைவிட குறைந்த சம்பலம் வாங்குவதால் , தாய்மார்கள் கணவனை மதிப்பதில்லை. இந்த நிலையில் வேலை போய்விடுமோ என்ற பயத்தில் பாவம் பையன் மிகவும் மன பாதிக்குள்ளாகிறான். வேலை போய்விட்டால், அந்த்க்குடும்பம் சிதறுகிறது. கொடுமை.