Oct 5, 2012

இண்டர்நெட் என்னும் காலந்தின்னி



சேலத்தில் 'மலைகள்' இணைய இதழ் சார்பில் சிபிச்செல்வன் கவிதைப்பட்டறை ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறார். பட்டறைக்காக சில தயாரிப்புகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியான சிற்றிதழ்களில் உள்ள கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்த போது நிலாரசிகனின் "காலந்தின்னியின் கனவிலாடும் கண்கள்" கவிதை Poetic Engineering என்பது பற்றிய உரையாடலுக்குத் தேவையான முக்கியமான கூறுகளை கொண்டிருப்பதாகத் தோன்றியது. வெயில்நதியின் முதல் இதழில் வெளியான கவிதை இது. 

கவிதை இதுதான்.

கண்ணாடிகளாலான வீட்டின் பின்புறம்
தன் நீண்ட கூந்தலை விரித்து
கால்கள் நீட்டி அமர்ந்திருக்கிறாள்
காலந்தின்னி.
முதலில் நம் சொற்களை தின்பதும்
பின் நமது காலத்தை தின்பதும்
அவள் வழக்கம்.
கனமற்ற நீர் 
கற்பாறையினை துளைப்பதை 
தன் வசீகரக்கண்களால் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
வெண்மதி தொலைந்த இரவொன்றில் 
எட்டுக்கண்கள் அவள் வீட்டினுள் நுழைந்தன.
சற்று நேரத்தில்
யாரும் புகாத அவ்வீட்டின் 
கதவுகளை மெல்ல திறந்துகொண்டு
வெளியேறுகிறது காலம்.
காலந்தின்னியை கொஞ்சம் கொஞ்சமாய்
புசித்துக்கொண்டு.

கண்ணாடியாலான வீட்டில் காலந்தின்னி அமர்ந்திருக்கிறாள். அவளது உருவம் பற்றிய சிறுகுறிப்பு கவிதையில் இருக்கிறது. கால்களை நீட்டி கூந்தலை விரித்து அமர்ந்திருக்கிறாள் காலந்தின்னி. இக்குறிப்பு ஒரு கிழவியை ஞாபகப்படுத்தலாம் அல்லது நம் பாட்டியை நினைவுபடுத்தலாம் அல்லது ஒரு மோகினிப் பிசாசைக் கூட ஞாபகமூட்டக்கூடும்.

காலந்தின்னிக்கு ஒரு வழக்கம். அது நம்மிலிருந்து வெளியேறும் சொற்ளை தின்றுவிடுகிறது. காலந்தின்னி சொற்களை மட்டுமில்லை- காலத்தையும் தின்கிறது. அப்படியானால் காலந்தின்னியும் காலமும் ஒன்றில்லை.  சரி, இரண்டும் வெவ்வேறானதாகவே இருக்கட்டும். காலந்தின்னியால் சொற்களைத் தின்ன முடியுமா? ஏன் முடியாது? ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சொற்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தச் சொற்கள் தனக்கான எந்தத்தடயத்தை விட்டுவைத்திருக்கின்றன? அந்தச் சொற்கள் எங்கு கரைந்து போயின?  நம் காலந்தின்னி இலட்சக்கணக்கான சொற்களையும் தின்று செரிக்கிறது.

கண்ணாடிவீட்டிற்குள் அமர்ந்திருக்கும் அந்தக் காலந்தின்னி "கனமற்ற நீர் கற்பாறையினை துளைப்பதை" பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதை ஒரு பூடகமான வரியாக எடுத்துக் கொள்ளலாம். கனமற்ற நீர் என்பது என்ன? கற்பாறை என்பது என்ன? கற்பாறையை துளைக்கும் கனமற்ற நீரை காலந்தின்னி எதற்கு பார்க்கிறாள்? காலந்தின்னிக்கும் இந்தக் காட்சிக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கணத்தில் "இதைத்தான் இந்தக் கவிதை குறிப்பிடுகிறது" என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் கவித்துவமான காட்சி வசீகரிக்கிறது. 

இப்பொழுது காலந்தின்னியின் வீட்டிற்குள் யாரோ நுழைகிறார்கள். அதுவரை அந்த வீட்டிற்குள் இருந்த காலம்,  காலந்தின்னியை புசித்துக் கொண்டே வெளியேறுகிறது. கடைசி வரியில் கவனிக்கலாம். இதுவரை காலந்தின்னியால் தின்னப்பட்டுக்க் கொண்டிருந்த காலம் இப்பொழுது காலந்தின்னியைத் தின்னத்துவங்குகிறது.

இந்தக் கவிதையை வேறு ஏதேனும் Real life Event ஒன்றுடன் பொருத்தி வாசிக்க விரும்புகிறேன்.   



இந்த ஒட்டுமொத்தக் கவிதையையும் "சாட்டிங்" என்ற விர்ச்சுவல் உலகத்தோடு இணைத்துப்பார்க்க முடிகிறது. காலந்தின்னி என்பது டைம்பாஸ். 'டைம்பாஸ்' என்ற பெயரில் Chat செய்கிறோம். நம் காலத்தையும், வீணான சொற்களையும் 'டைம்பாஸ்' தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறது. கனமற்ற நீர்- எதிர்பக்கத்திலிருந்து வரக்கூடிய காதல்,அன்பு, பிரியம், காமம் என்ற கனமற்ற நீர், நமது மனம் என்னும் கற்பாறையினை துளைத்துக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் இதுவரை யாரும் புகாத அந்தரங்கமான வீட்டிற்குள் யாரோ நுழைகிறார்கள். அவர்களுக்கு நமது பாஸ்வேர்ட் கிடைத்திருக்கலாம் அல்லது நமது சாட்டிங் ஹிஸ்டரியை திறந்திருக்கலாம். இப்பொழுது நம் அந்தரங்கம் தொலைகிறது.  "சாட்டிங்"கை குறைத்துக் கொள்கிறோம் அல்லது குறைத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறோம். இதுவரை அந்த விர்ச்சுவல் உலகத்திற்குள் சிக்கிக்கிடந்த நமது காலம் வெளியேறுகிறது. வெளியேறும் காலம் 'டைம்பாஸ்' என்னும் காலந்தின்னியைத் தின்னத்துவங்குகிறது. இப்படி புரிந்துகொள்ளலாம்- 'டைம் பாஸ்' என்ற வெட்டி பொழுதுபோக்கை உருப்படியான சில காரியங்களைச் செய்யக் கூடிய 'காலம்' தின்னத்துவங்குகிறது. அதாவது கவிஞனோ அல்லது வேறு யாரோ விர்ச்சுவல் உலகத்திலிருந்து வெளியேறுவதைக் கவிதை சுட்டுகிறது.

இது என்னுடைய புரிதல் மட்டுமே. இந்தக் கவிதையை வேறு எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளும் அத்தனை சுதந்திரமும் வாசகனுக்கு இருக்கிறது. எதனால் இந்தக் கவிதை விர்ச்சுவல் உலகத்தை வாசகனுக்கு ஞாபகப்படுத்துகிறது என்பதிலிருந்து Poetic Engineering குறித்தான உரையாடலை ஆரம்பிக்க முடியும் என நம்புகிறேன். 

5 எதிர் சப்தங்கள்:

Unknown said...

கவிதையை வெயில்நதி இதழிலேயே படித்திருந்தேன்,
/வெண்மதி தொலைந்த இரவொன்றில்
எட்டுக்கண்கள் அவள் வீட்டினுள் நுழைந்தன./ பெருமூச்சுவிடச் செய்த கவிதை :-)

கவிதையை Real life Eventடன் பொருத்திக் காட்டியது பிரமிப்பை ஏற்படுத்துகிறது நண்பா!!!

Seeni said...

ungal kootrum unmaithaan ....

nalla pakirvu!

பொன். வாசுதேவன் said...

‘வெயில் நதி‘யில் வாசித்த போதேகவிதை மிகவும் பிடித்திருந்தது. உங்களது பார்வை வேறொரு கோணத்தில் கவிதையை புரிதலுக்குள்ளாகக்குகிறது. கவிதை எப்போதுமே வாசிப்பவனின் அனுபவமும், புரிதலும் சார்ந்தது என்பதை மீண்டும் உணர்கிறேன். நன்றி மணி.

பொன். வாசுதேவன் said...

மணி, உங்க விமர்சனப் பகிர்வை படிப்பதற்கு முன்பாக, இந்தக் கவிதையை ‘வெயில் நதி‘யில் இக்கவிதையை வாசிக்கின்ற போது..

/கனமற்ற நீர்
கற்பாறையினை துளைப்பதை/

என்ற இந்த வரிகள்.. பாறைகளுக்குள்ளிருந்து மெல்ல கசிந்து வருகின்ற சுனை நீரை எனக்குள்ளாக காட்சிப்படுத்தியது.

Vaa.Manikandan said...

நன்றி ஆறுமுகம், சீனி,வாசு.

வாசு,

நீங்கள் சொல்வது சரிதான். வாசகனின் அனுபவம் சார்ந்து கவிதை தனக்கான சிறகுகளை விரிக்கிறது.