Oct 11, 2012

பொய்யர்கள் சூழ் உலகுதன்னை யாராவது Optimist என்று சொல்லிக்கொண்டால் அவர்களை பார்க்க பாவமாக இருக்கிறது. யோசிப்பவையெல்லாம் நல்லனவாகவும், நேர்மறையானதாகவும் இருக்க வேண்டுமானால் அது எவ்வளவு கடினமானது? வாழ்க்கை அத்தனை எளிமையானதாகவா இருக்கிறது? எப்பொழுது வேண்டுமானாலும் எந்த பிரளயமும் அரங்கேறலாம் என்ற நெருக்கடியான வாழ்முறையில் எல்லாவற்றையும் நல்லதாகவே யோசித்துக் கொண்டிருப்பது இன்னுமொரு நெருக்கடி.

கணேஷ் என்ற நண்பர் அப்படியான ஆப்டிமிஸ்ட். திருநெல்வேலிப்பக்கத்துக்காரர்.  வயது நாற்பதைத் தாண்டியிருக்கும். திருமணம் செய்துகொள்ளவில்லை. பெங்களூரில் ஒரு ப்ளாட் விலைக்கு வாங்கி தனியாக வாழ்கிறார். குடியிருக்கிறார் என்பதை விட வாழ்கிறார் என்பதுதான் சரியாக இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக செலவு செய்வார். அதுவும் தனக்கே தனக்காக. இவரைப் போல எந்த மனிதனுக்கும் வாழ்க்கை அமையாது என்று நினைக்க வைத்துவிடும் கேரக்டர். ஞாயிற்றுக்கிழமை காலையில் போன் அடிக்கும். எடுத்துப் பேசினால் "கூர்க் வந்திருக்கேன். ரம்மியமா இருக்கு. ஒரு ரோஜா செடி கிட்ட நின்னுட்டு இருக்கேன். இயற்கையா நிலத்தில் முளைச்ச செடி. பனியில நனைஞ்சிருக்கு. உங்ககிட்ட சொல்லணும்ன்னு தோணுச்சு" என்பார். 

இன்னொரு நாள் இரவு காதைக் கிழிக்கும் இசையின் பின்ணனி சப்தத்தில் அழைப்பார் "நீங்க பேசறது ஒண்ணுமே கேட்கலை" என்று கத்த வேண்டியிருக்கும். அவருக்கு கேட்கிறதோ இல்லையோ பக்கத்துவீட்டில் இருக்கும் செவிட்டு தாத்தாவுக்கே கேட்கும். "ஒரு நிமிஷம்... வெளியே வர்றேன்" என்று சொல்லிவிட்டு அமைதியான சூழலில் நின்று ஒரு அப்டேட் தருவார். "ஒண்ணுமில்ல நம்ம டீம்ல இருக்காளே நிவேதிதா அவ கூட ஒரு பப்புக்கு வந்தேன். அவளோட ஃப்ரெண்ட்டை பார்த்துட்டா. அவன் கூட பேசிட்டு இருக்கா. கேப்ல உங்களுக்கு போன் பண்ணினேன்" என்று சொல்லிவிட்டு சிரிப்பார். நிவேதிதாவா என்று என் வாயைப் பிளக்க வைப்பதில் அவருக்கு ஒரு சந்தோஷம். நிவேதிதா மராத்தி. சுண்டினால் ரத்தம் தெறிக்கும் நிறம் என்று சொல்வார்களே அதை அவளின் நிறத்தை பார்த்தபிறகுதான் நம்பினேன்.

"நம்ம மேனேஜர் சரியில்லை" என்றால் "நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்" என்பார். "ரிசஸன் வந்துடும் போல" என்றால் "வரவரைக்கும் என்ஜாய்" என்று கடுப்பேற்றுவார். "இந்த ஊரில் வேலையில்லை என்றால் ப்ளாட்டை விற்றுவிட்டு திருநெல்வேலிக்கே போய்டுவேன்" என்று அவர் சொல்வார். அவருக்கு அது ரொம்ப ஈஸி. பசங்களுக்கு ஸ்கூல், பெர்சனல் லோன், ஹவுஸிங் லோன், இ.எம்.ஐ இத்யாதி இத்யாதி என்று எந்தப் பிக்கலும் இல்லை. நமக்கு அப்படியா? நினைத்தாலே தலை சுற்றும். 

சென்றவாரம் அலுவலகத்தில் கடும் வேலை. மென்று துப்பினார்கள். வெள்ளிக்கிழமை வந்த போது சுமந்து கொண்டிருந்த பெரும் பாறாங்கல்லை கீழே இறக்கி வைத்தது போல இருந்தது. சனிக்கிழமை முழுவது கணேஷோடு எங்காவது சுற்ற வேண்டும் என்று விரும்பினேன். அவரிடம் முன்பே சொல்லாமல் சனிக்கிழமை காலையில் அவர் வீட்டிற்கு சென்று அழைத்துக் கொள்ளலாம் என்பது திட்டம். அவர் வெள்ளிக்கிழமை இரவே கூட ஏதாவது ஊருக்கு போய்விட வாய்ப்பிருக்கிறது. அப்படி சென்றிருந்தால் விட்டுவிடலாம் என்றிருந்தேன்.

சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு அவரது ப்ளாட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டில்தான் இருப்பதாக செக்யூரிட்டி சொன்னார். சந்தோஷமாக இருந்தது. வீட்டின் காலிங்பெல்லை அழுத்தாமல் செல்போனில் அழைத்தேன். உடனடியாக எடுத்தார். "உங்க வீட்டிற்குத்தான் வரலாம்ன்னு..." என்று முடிப்பதற்குள் "அட முதலே சொல்லியிருக்கலாம்ல...நான் இப்போ மைசூரில் இருக்கேன்...இப்போ பேலஸ் பார்க்கப் போறேன்" என்றார். குழப்பமாக இருந்தது "சரிங்க இன்னொரு நாள் பார்க்கலாம்" என்று கட் செய்துவிட்டு கதவுக்கு முன்னால் நின்றபோது டி.வி ஓடும் சத்தம் கேட்டது. நிச்சயமாக வீட்டில்தான் இருக்கிறார்.

எதற்காக இந்த மனிதர் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று வருத்தமாக இருந்தது. "அவருடைய சனிக்கிழமையை நான் தின்பதில் அவருக்கு விருப்பமில்லாமல் இருக்கக் கூடும்" என்று ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. திங்கட்கிழமை ஜோசப்பிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவனும் எங்கள் டீம்தான். கணேஷும் அவனும்தான் டீமில் சீனியர்கள். கணேஷ் பற்றி பேச்சு வந்தது. நான் பெரும்பாலும் அலுவலகத்தில் இன்னொருவரைப் பற்றி பேசுவதை தவிர்த்துவிடுவேன். என்னையும் மீறி சனிக்கிழமை கணேஷ் நடந்து கொண்டது பற்றி சொல்லிவிட்டேன். ஜோசப் அதிர்ச்சியாகவில்லை. கணேஷ் பற்றி நிறையச் சொன்னான். இறுதியாக, கணேஷ் depression ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பொய் சொல்வது அவருக்கு ஒரு வடிகால் என்றான்.

நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. சனிக்கிழமை சொன்னது மட்டும்தான் பொய்யா அல்லது இதுவரை சொன்னது அனைத்துமே பொய்யா என்று யோசனை ஓடியது. அதற்கு மேல் கணேஷ் பற்றி பேச விரும்பாமல் பேச்சை மாற்றிக் கொண்டோம்.  மர்பியின் விதி ஞாபகத்திற்கு வந்தது - "ஏதாவது தவறாக நடக்குமானால் அது நிச்சயம் நடக்கும்"(Anything that can go wrong will go wrong).இதை எதிர்மறையான சிந்தனைகளின்(pessimism) அடிப்படையான விதி என்பார்கள். அது சரி என்று தோன்றியது.

5 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

அதிர்ச்சி தரும் பதிவு தான், இதை ஆப்டிமிஸம் பெஸிமிசம் என்ற சிக்கலுக்குள் நுழைப்பது. non-stick panல் சுடும் தோசை போல் ஒட்ட மறுக்கிறது.

Unknown said...

பொய்யர்கள் சூழ் உலகத்தால தான் ஒருவிதத்தில உலகம் இயங்கிக்கிட்டு இருக்கோனு நினைக்கத் தோணும் சம் டைம்..

கத விடாத மாறியே கத விடுறீங்க நண்பா :-)

Anonymous said...

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும்

அக்கார்டிங் டு திருவள்ளுவர், இது ஒரு வடிகால் மாதிரி தெரியல. தண்டனை மாதிரி தெரியுது :)

pravinfeb13 said...

soooooper sir ....

திண்டுக்கல் தனபாலன் said...

பொய் சொல்பவருக்கு " நல்லதொரு " அனுபவம் கிடைக்கவில்லை என்று எண்ணுகிறேன்...