ஜீவா தன் வாழ்நாளில் எந்தப் பாடல்வரியை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று நினைத்தாரோ இப்பொழுது அதே வரிகள் அவரைச் சுற்றி ரீங்காரமிடுகின்றன. அதை ரீங்காரமிடுதல் என்று சொல்ல முடியாது எமிரி ஷீட் வைத்து தேய்க்கப்பட்ட உடலில் டெட்டாலையோ அல்லது சாவ்லானையோ நீர் கலவாமல் ஊற்றுவது போன்ற எரிச்சல். டிவியில் அல்லது எஃப்.எம்மில் தெரியாத்தனமாக இந்தப்பாடல் சப்தம் கேட்டால் ஒரு கணம் நடுங்கி அனிச்சையாக மாற்றிவிடுவார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த வரிகளுக்கு அதே வீரியம் இருக்கும் என அவர் நினைக்கவில்லை. தற்பொழுது பத்திரிக்கைகளிலும், டிவிக்களிலும் அந்த வரியை எதிர்கொள்ளும் போதெல்லாம் யாருமே இல்லாத ஒரு பாலைவனத்திற்கு போய்விட வேண்டும் என பதறிக் கொண்டிருக்கிறார்.
***
அது 1981 அல்லது 1982 ஆம் ஆண்டு. ஜீவா என்கிற ஜீவானந்தம் ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தான். வெட்டையம்பாளையத்திலிருந்து தினமும் கல்லூரிக்கு போய்வர வேலுமயில் பேருந்து உதவிக் கொண்டிருந்தது. ஹாஸ்டலில் இருப்பதை விடவும் இது செளகரியம். பஸ்ஸில் போய் வருவதில் செலவும் அலைச்சலும் அதிகம்தான் ஆனால் சாப்பாட்டுக்கு பிரச்சினையில்லை. மதியத்திற்கு தக்காளி சாதமோ புளி சாதமோ டப்பாவில் எடுத்துக் கொள்ளலாம்.
தனம் எல்லீஸ்பேட்டையில் ஏறுவாள். நெடிய உருவம். பெரும்பாலும் தலையைக் குனிந்து கொண்டு அடுத்தவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பாள். அவள் வெள்ளாளர் கல்லூரியில் பி.எஸ்.ஸி கணிதம். எல்லீஸ்பேட்டையிலிருந்து வேறு எந்தப் பெண்ணும் வெள்ளாளர் கல்லூரிக்கு வரவில்லை. இந்தக் கல்லூரிக்கு மட்டுமில்லை எந்தக் கல்லூரிக்குமே போகவில்லை. போக அனுமதிக்கப்படவில்லை என்பது சரியாக பொருந்தும். "நம்ம சாதிக்கு எல்லாம் காலேஜ் படிப்பு தேவையில்லை" என்று தனத்தையும் கூட அவளது தாத்தா தடுத்தார். ஆனால் தாழ்த்தப்பட்டவருக்கான கல்லூரி ஸ்காலர்ஷிப் அவளது அத்தனை செலவுகளையும் சமாளித்துக் கொண்டது.
ஜீவா முதலிலேயே பஸ்ஸில் ஏறிவிடுவதால் அவனுக்கு பெரும்பாலும் உட்காருவதற்கு இடம் கிடைத்துவிடும். தனம் அனேக நாட்களில் நின்று கொண்டுதான் வருவாள். ஆனால் எல்லீஸ்பேட்டையிலிருந்து கல்லூரிக்கு அதிகபட்சம் அரை மணி நேரம்தான் ஆகும் என்பதால் அவளுக்கு இது பெரிய சிரமம் இல்லை.
முதல் வருடத்தில் தனமும் ஜீவாவும் அதிகம் பார்த்துக் கொண்டது கூட இல்லை. இரண்டாவது வருடத்தில் பேருந்தில் நின்று கொண்டிருந்த தனத்தின் புத்தகங்களை தான் வைத்திருப்பதாக வாங்கிக் கொண்டான். தனம் தயங்கினாள். ஆனாலும் கொடுத்துவிட்டாள். அவளது டிபன் பாக்ஸின் சூடு ஜீவாவின் தொடைகளில் இறங்கியது. காற்றில் புத்தகத்தின் முதல் பக்கம் திறந்தபோதுதான் அவளது பெயரை பார்த்தான். தனம் என்பதை மிகுந்த கலைநயத்தோடு எழுதியிருந்தாள். மூன்று எழுத்துக்கள் ஐந்து வண்ணங்களில் எழுதப்பட்டிருந்தது. கீழே இருந்த இரண்டு ஏடுகளையும் தனம் பார்க்காத போது திறந்தான். ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் ஈர்ப்புடையதாக இருந்தன. அப்பொழுதுதான் தனத்தை முதன் முதலாக 'பார்க்க' வேண்டும் என்று பார்த்தான்.
அவளது ஒன்றிரண்டு நெற்றி முடிகள் முகத்தை உரசுவதும் அவள் அவற்றை ஒதுக்குவதும் மீண்டும் அவை விளையாட்டுக் காட்டுவதுமாக தொடர்ந்தன. இத்தனை நாட்கள் இவளை பார்க்காமல் இருந்துவிட்டோமே என நினைத்தான். அதன் பிறகு தினமும் அவளிடம் புத்தகங்களை வாங்கிக் கொள்ள முயற்சித்தான். சில சமயங்களில் வெற்றி கிடைக்கும். புத்தகத்தை வாங்கி வைத்துக் கொள்வதுதான் அவர்களுக்கு இடையேயான அதிகபட்ச பரிச்சயம். புன்னகையோ, பேசுவதோ இல்லை. தனமும் ஜீவாவை பார்ப்பதுண்டு. அவன் வேறு திசைகளில் பார்க்கும் சமயங்களிலும் மற்றும் புத்தகத்தை கொடும்போதும், வாங்கும் போதும் அரைக் கண்களில் பார்ப்பாள்.
தனத்தை தான் காதலிப்பதாக உணர்ந்த போது கல்லூரியின் இறுதியாண்டை அடைந்திருந்தார்கள். அவன் அதற்கு 'காதல்' என்று பெயரிடவில்லை. தன் ஆயுள் வரைக்கும் அவள் தன் சக மனுஷியாக இருக்க வேண்டும் என்ற விரும்பினான். தன்னுடைய நெருங்கிய சில நண்பர்களிடம் மட்டும் தெரிவித்திருந்தான். வீட்டில் நிச்சயம் எதிர்ப்பார்கள் என்பது தெரியும். ஆனால் அவர்களை சமாளிப்பதற்கு முன்பாக தனத்தின் சம்மதத்தை பெற்றுவிட வேண்டும் என்று நினைத்தான். இதுவரைக்கும் அவளிடம் வாய்திறந்து எதையும் சொன்னதில்லை. தனது அத்தனை தைரியத்தையும் திரட்டி கடிதம் எழுதி அவளது புத்தக்த்திற்குள் வைத்துவிட்டான். ஆனால் கல்லூரியை பேருந்து அடைவதற்குள் தைரியம் சிதைந்து போனது. திரும்ப எடுத்துக் கொண்டான்.
வெட்டையம்பாளையத்தில் சித்திரை மாத மாரியம்மன் திருவிழா பிரசித்தம். அதுவும் திருவிழாவின் இறுதி நாளில் நடைபெறும் அக்னிக்கும்ப ஊர்வலத்தை பார்க்க அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள் கூட வருவார்கள். மண்சட்டியில் தவிடு நிரப்பி சில விறகுத் துகள்களை போட்டு கற்பூரத்தால் கொளுத்துவார்கள். வேட்டி மட்டும் அணிந்துகொண்ட ஆடவர்கள் சில வேம்பு இலைகளை கையில் வைத்துக் கொண்டு சட்டியோடு ஊரை வலம் வருவார்கள். சித்திரை மாத வெயில் கால்களை பதம் பார்க்க அக்னிகும்பத்தின் தவிடு எரிய எரிய கைகளில் வெக்கை விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும். ஊரைச் சுற்றிவர கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகும். எந்தக் காரணத்திற்காகவும் கும்பத்தை கீழே வைத்துவிடக் கூடாது அல்லது மற்றவர்கள் யாரும் கும்பத்தை தொட்டுவிடக் கூடாது என்பதில் ஊர் இளவட்டங்கள் உறுதியாக இருப்பார்கள். கும்பம் எடுத்து வருபவர்களின் சிரமத்தை குறைக்கிறேன் பேர்வழி என்று சட்டியை யாராவது தொடப்போனால் முரட்டுத்தனமாக தள்ளிவிட்டுவிடுவார்கள்.
தனது பதினான்காவது வயதிலிருந்து ஜீவா அக்னிக்கும்பம் எடுக்கிறான். அவனுக்கு இது பழக்கமாகியிருந்தது. இந்த வருடம் திருவிழாவுக்கு கல்லூரி நண்பர்கள் சிலரை அழைத்திருந்தான். தனமும் பட்டியலில் உண்டு. இந்த அழைப்பிற்காக அவளிடம் நீண்ட நேரம் பேசினான். ஆனால் அவள் மறுத்தாள். அவளுக்காக இன்னும் சில பெண்களை அவளது கல்லூரியில் இருந்து அழைக்கவிருப்பதாகவும் "அவர்களோடு நீ வந்துவிடு" என்றான். தனம் ஒருவாறு ஒத்துக் கொண்டாள். ஆனால் அவளது வீட்டில் அனுமதி வாங்குவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. கல்லூரிக்குச் செல்வதாக சொல்லிவிட்டு வெட்டையம்பாளையம் வந்தாள்.
ஊரில் கட்டப்பட்டிருந்த குழாய் ரேடியோக்கள் அதிர்ந்து கொண்டிருந்தன. பாடல்கள் காதை அடைத்தன. இடையிடையே "தாய்மார்களும் பெரியோர்களும் உடனடியாக கோயிலுக்கு வரவும்" என்ற கட்டைக்குரல் அழைப்பு ஊரை அலறவைத்துக் கொண்டிருந்தது. ஜீவாவின் கல்லூரி நண்பர்களை வரவேற்ற ஜீவாவின் அம்மா அவர்களின் ஊர்ப்பெயரை கேட்க மறக்கவில்லை. தனம் எல்லீஸ்பேட்டை என்றபோது அவரது முகம் சுருங்கிப் போனது. அவளுக்கு அந்தக் கணத்திலிருந்து வரவேற்பு வேறு மாதிரியாக இருந்தது. தனம் பொறுத்துக் கொண்டாள். ஜீவா தனத்துக்காக வருந்தினான். அவளை அழைக்காமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தான். தனம் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.
"அக்னிக்கும்பம்" தயார் என்று மீண்டும் கட்டைக் குரல் அலறியது. ஜீவா தயாரானான். தனம் முகத்தை ஒரு முறை பார்த்தான். பச்சைத் தாவணியில் சற்று தூக்கலான அழகுடன் தெரிந்தாள். அவனைப் பார்த்து அவள் முதன் முதலாக வெட்கத்தோடு சிரிப்பதாகப் பட்டது. யாரும் பார்த்துவிடும் முன்பாக அவன் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான். அவன் கையில் அக்னிக்கும்பத்தை தம்பிப்பண்டாரம் கொடுத்தார். ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலத்தில் இளவட்டங்கள் உற்சாகத்தோடு சுற்றிக் கொண்டிருந்தார்கள். பிரபாகரனும் அதில் ஒருவன். தனத்தை பார்த்த பிரபாகரன் அருகில் இருந்தவனிடம் ஏதோ கிசுகிசுத்தான். அவள் அருகில் சென்றவர்கள் ஏதோ சொன்னார்கள். தனம் தேம்பியழத் துவங்கினாள். ஜீவாவின் கைகளில் கும்பம் இருந்ததால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் அவனது அத்தனை கவனமும் தனத்தின் மேலிருந்தது. அவள் ஜீவாவை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தாள்.
மல்லங்காட்டுக்காரர் மிகுந்த வெறியோடு சாமியாட்டம் ஆடிக் கொண்டிருந்தார். கும்பம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒதுங்கி அவருக்கு வழிவிட்டார்கள். ஜீவாவை அவர் நெருங்கியபோது அவன் தனத்தை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கணம்தான். மல்லங்காட்டுக்காரர் ஜீவாவின் மீது மோதவிருக்கிறார். பார்த்துக் கொண்டிருந்த தனம் ஓடிவந்து ஜீவாவின் கும்பத்தை பிடித்துவிட்டாள். ஊர்வலம் ஒரு வினாடி ஸ்தம்பித்தது. ஆளாளுக்கு முணுமுணுக்கத் துவங்கினார்கள்.
தனம் பெண் என்பதைவிடவும் அவளது சாதி கூட்டத்தை உறுத்தியது. பிரபாகரனும் இன்னொருவனும் மிக வேகமாக தனத்தை நெருங்கினார்கள். அவள் நகரவேண்டும் என்று கூட நினைத்திருக்க மாட்டாள். அதற்குள்ளாக ஒருவன் தனத்தின் கைகளை பற்றிக் கொள்ள இன்னொருவன் அவளது ஜாக்கெட்டின் முன்புறமாக பிடித்து இழுத்தான். அந்த வேகத்தில் பட்டன்கள் தெறித்து விழுந்தன. ஜாக்கெட்டும் உள்ளாடையும் அவனது கையோடு வந்திருந்தது. சில பெண்கள் வேறுபக்கமாக திரும்பிக் கொண்டார்கள். மற்றவர்கள் "அவளுக்கு வேண்டும்" என்பது போல பார்த்தார்கள்.
தனம் தன் மாராப்பால் உடலை மூடி விடலாம் என்பதைக் கூட உணராமல் பிரக்ஞையற்றவளாக நின்று கொண்டிருந்தாள். அவளது கல்லூரித் தோழிகள் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஜீவா அதிர்ச்சியில் கும்பத்தை கீழே போட்டுவிட்டான். நொறுங்கியது. சில கங்குகள் காலைச் சுட்டது. திடீரென உடைந்து கூக்குரலிட்ட தனம் மிக வேகமாக கோயிலை நோக்கி ஓடினாள். இப்பொழுது உடைந்த குரல் ஆங்காரமாக மாறியிருந்தது. குழாய் ரேடியோவின் சத்தத்தையும் மீறி தனத்தின் குரல் மட்டுமே கேட்டது. சாமி சிலையை பார்த்து நின்றவள் "ஆத்தா" என்றவாறு சூலாயுதம் நோக்கி பாய்ந்தாள். அவளது வேகத்தையும் ஆக்ரோஷத்தையும் மீறி யாராலும் அவளை தடுக்க முடியவில்லை. அவளது இடது மார்பும் வலது வயிறும் கிழிந்து தொங்கியது. இரண்டு துள்ளலுக்கு பிறகாக அடங்கினாள். ஜீவா உறைந்து போயிருந்தான். அடுத்து என்ன செய்ய வேண்டும் ஊர்க்காரர்கள் கூடி பேசத் துவங்கினார்கள். குழாய் ரேடியோக்காரனை பாட்டை நிறுத்தச் சொல்லி யாரோ கத்தினார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவன் வேகமாக ரேடியோ அருகில் ஓடினான். அவன் குழாய் ரேடியோவை நிறுத்துவதற்கு முன்பாக நினைவெல்லாம் நித்யா படத்திலிருந்து "நீதானே எந்தன் பொன் வசந்தம்" கடைசியாக ஒலித்தது. உறைந்து நின்ற ஜீவாவுக்குள் அந்த வரிகள் மட்டும் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தது.
***
[இது ஐம்பதாவது 'மின்னல்கதை'. மின்னல்கதைகளை வாசித்தும், குறைகளை சுட்டிக்காட்டியும், நிறைகளை குறிப்பிட்டு உற்சாகமூட்டியும் தொடர்ந்து எழுதச் செய்யும் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்]
***
[இது ஐம்பதாவது 'மின்னல்கதை'. மின்னல்கதைகளை வாசித்தும், குறைகளை சுட்டிக்காட்டியும், நிறைகளை குறிப்பிட்டு உற்சாகமூட்டியும் தொடர்ந்து எழுதச் செய்யும் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்]
13 எதிர் சப்தங்கள்:
என் நெஞ்சை மெழுகாய் உருக்கி விட்டீர்கள் மணி சார்...
முடியவில்லை மணி சார், எதையோ சுக்கு நூறாக உடைத்தது போல் வலி தருகிறது.
மேலும் உங்களை ஒரு பிராந்தியத்தை மட்டும்(கொங்கு) கதைக் களமாக பெரும்பாலும் சொல்கிறீர்களே என்று விமர்சித்தது உண்டு. மன்னிக்கவும்.
இந்தியா முழுக்க ஒரே நிலம் தான் அது சாதியால் ஆனது...சாதியின் ஆதிக்கத்தில் உள்ள தேசம் இது...11
ரொம்பவும் நொந்து போய்விட்டேன் கதையின் முடிவில். என் வாழ்த்துகள்
கதையின் முடிவில் அதாவது தனம் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை மணி, இருப்பினும் வழமையான வேக விறுவிறுப்பு அட்டகாசம். இப்பொழுதான் முதல் கதை படித்தது போல் இருக்கிறது. நினைவும் இருக்கிறது. அதற்க்குள் 50 ஆ..
விரைவில் புத்தக வடிவில் வருவதற்கு வாழ்த்துகள்
கதைகளில் அடித்து தும்சம் செய்கிறீர்கள் மணி. வாழ்த்துக்கள்.
பாடல்களை படமாக்குவதில் தேர்ந்தவர் என அறியப்பட்ட கவுதம் வாசுதேவ் மேனன்.ஞானியின் இசை இவர்களின் கூட்டணியில் வெளியாகியுள்ள நீதானே என் பொன் வசந்தத்தின் இசை பற்றிய விமர்சனமோ அல்லது கருத்தோ எனக்கு பிடித்த எழுத்தாளனின் பதிப்பில் என்று பதிவை வாசிக்க வந்தால் எனக்கு பிடித்த எழுத்தாளன் என நிரூப்பித்திருக்கிறீர்கள்.யோசனையில் இருக்கும் தீர்வுகளையும் கதையின் வாயிலாக சொல்ல முயற்சிக்கலாமே.
சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஆண்களுக்கானது. குறிப்பாக நீங்கள் குறிப்பிடும் காலத்தில். ஒரு 10 வருடம் முன்பு இருபாலர் கல்லூரியாக மாற்றப் போவதாக பேச்சு வந்தது. பின்னர் என்ன ஆனது எனத் தெரியாது.
சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஆண்கள் கல்லூரி...
நன்றி கரிகாலன்,பிரவீண்,வேல்கண்ணன்,அடலேறு மற்றும் சேக்காளி.
நன்றி சாணக்கியன். தகவல் பிழை. மன்னிக்கவும். ஈரோடு கலைக் கல்லூரி என்று மாற்றிவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
ஈரோடு கலைக் கல்லூரி கூட 1982 ல் ஆண்களுக்கானது தான். 1995க்குப் பிறகு தான் மகளிர்க்கான தனிக் கல்லூரி தொடங்கப்பட்டது. வெள்ளாளர் மகளிர் கல்லூரி மட்டும் தான் உங்க கதையின் காலகட்டத்திற்கு ஒத்து வரும். எல்லீஸ்பேட்டைங்கிறதால கோபி கலைக் கல்லூரின்னும் போட முடியாது :-)
"கொறை சொல்லி பொழப்பு நடத்துறக்குன்னே ஆளுக இருக்கானுக" நு நீங்க சொல்றது காதுல விழுது :)
சாமிகளா...மாற்றிவிட்டேன் :)) நன்றி
கனக்கிறது மனது
சாதியை பற்றி எழுதியது சரி என்றாலும் அந்த பெண் இறப்பதாய் எழுதியது அக்மார்க் தமிழ் சினிமா காட்சியாய் ஆகிப்போனது. தவறு செய்யாதவளுக்கு எதுக்கு அவ்வளவு பெரிய தண்டனை? கற்பு, கருமாந்திரம் இதெல்லாம் வைத்து கொண்டு எதுக்கு அழணும் என தெரியலை.
முடிவு அதிர்ச்சி அளிக்கிறது!
Post a Comment