நவீனத்துவ கவிதைகளைப் பற்றி பேசுகிறவர்கள் சில கவிதைகளை கொண்டாடுகிறார்கள் சிலவற்றை கவிதையே இல்லை என்று நிராகரித்துவிடுகிறார்கள். அப்படியானால் கவிதைக்கும் கவிதையின்மைக்கும் இடையில் என்ன வித்தியாசம்?
ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. அடிப்படையான விஷயங்கள் என இரண்டைக் குறிப்பிடலாம்.
- உண்மைத் தன்மை
- அப்பட்டம்
"அன்பே!
உனக்காக
பெளர்ணமி நிலவை
என்
தோளில் சுமந்து வருவேன்"
நிலவை அவனால் எந்தக் காலத்திலும் தோளில் சுமக்க முடியப் போவதில்லை. முடியும் என்று சொல்வது வடிகட்டின பொய். தொலைந்து போகட்டும். காதலின் வலிமையால் இது சாத்தியம் என்று ஏற்றுக் கொண்டாலும் கூட இது 'அப்பட்டமாக' இருக்கிறது. நல்ல கவிதைகளை வாசித்துப் பழகிய மனம் அப்பட்டமான கவிதைகளை எளிதில் தாண்டி வந்துவிடும்.
அப்படியானால் ஒரு கவிதையில் எந்த விஷயத்தையும் நேரடியாக சொல்லக் கூடாதா? சொல்லலாம். சொல்ல முடியும். சமீப காலத்தில் நேரடியான, எளிமையான கவிதைகள் பற்றி நிறையப் பேசுகிறார்கள். சிலாகிக்கிறார்கள். நேரடித்தன்மை என்பது வெளிப்படையாகச் சொல்வதுதான்.
நேரடியான/எளிமையான கவிதைக்கும், அப்பட்டமான கவிதைக்கும் சிறு வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்திற்குத்தான் 'கவித்துவம்(Poetic)' என்று பெயர்.
***
எங்கேயும் நீரில்லை
நீர் வாசம் நாசி எட்டவேயில்லை
ஒரு துளி
ஒரேயொரு துளி நீர் போதும்
சுண்டி எறியும் ஒரு துளி நீர்
சிற்றெறும்பு பெறும் மாமழை.
பூமா ஈஸ்வரமூர்த்தியின் இந்தக் கவிதை அவரது சமீபத்திய "நீள் தினம்" என்ற தொகுப்பில் இருக்கிறது.(காலச்சுவடு வெளியீடு).
இந்தக் கவிதை நேரடியான, எளிய கவிதை. எங்கேயும் நீர் இல்லை. நீர்வாசமே இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவுகிறது. யாராவது ஒரு துளி நீரை சுண்டிவிட்டால் கூட போதும். ஒரு சிற்றெறும்புக்கு அது மாமழையாகிவிடும். இவ்வளவுதான் கவிதை.
இந்தக் கவிதை வாசகனை குறைந்தபட்சம் எப்படி யோசிக்கச் செய்யக் கூடும்?
நகர்ப்புறத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை விட்டுவிடலாம். அது பற்றாக்குறையே அல்ல. ஏதோ ஒருவிதத்தில் வாழ்வதற்கு தேவையான மிகக் குறைந்தபட்ச அளவிலான நீரை அங்கு பெற்றுவிட முடியும். கடைசிபட்சத்தில் காசு கொடுத்தாவது ஒரு 'டேங்க்' தண்ணீரை வாங்கிவிடும் வாய்ப்புகள் உண்டு.
ஆனால் கிராமங்களில் நிலவும் வறட்சி மிகக் கொடூரமானது. நதிகளும், குளங்களும் வற்றிப் போன, நிலத்தடி நீருக்கு வழியில்லாத ஒரு கிராமத்தின் துன்பம் படிந்த சாயல் இந்தக் கவிதையில் நிழலாடுகிறது. வேளாண்மைக்கு நீர் இல்லை; விலங்குகளும் மனிதர்களும் குடிப்பதற்கு நீர் இல்லை. காய்ந்து பள்ளங்களாக வெடித்துக் கிடக்கும் பூமியில் வெக்கை தன் கோரத்தை நிகழ்த்திக் காட்டுகிறது. வறட்சியின் கொடூரம் மனிதர்களின் முகத்தில் பிரதிபலிக்கிறது. இதை எதையுமே கவிதை அப்பட்டமாக சுட்டுவதில்லை.
சிற்றெறும்பு என்னும் சின்னஞ்சிறு உயிருக்குக் கூட நீர் இல்லை என்னும் ஒரு வரி வறட்சியின் மொத்த உருவத்தையும் காட்டிவிடுகிறது.
இந்தக் கவிதையில் மனிதர்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை, பிற எந்த உயிரும் கவனம் பெறவில்லை. எறும்புகளுக்காக துளி நீரை சுண்டி எறிய மட்டும் சொல்கிறது கவிதை. கவிஞன் தனக்குள் இருக்கும் பரிதாபத்தை காட்டுவதில்லை, மாற்றிப்போடுவோம் வாருங்கள் என வாசகர்களை பார்த்து ஆவேச அழைப்பு விடுப்பதில்லை, தன் கதறலை கவிதையில் பதிவு செய்வதில்லை.
ஒரு விஷயத்தை எளிமையான சில வரிகளில் சொல்லிவிட்டு கவிஞன் நகர்ந்துவிடுகிறான். பிற எல்லாவற்றையும் வாசகன் யோசிக்கத் துவங்குகிறான். வாசகனை பிரமிக்கச் செய்யும் கவிதை அனுபவத்தை கவிதைக்குள் ஒளித்து வைத்திருக்கும் இந்தத் தன்மைதான் கவித்துவத்தின் பிரதானமான கூறு. அதைத்தான் நல்ல வாசகன் எதிர்பார்க்கிறான்.
பூமா ஈஸ்வரமூர்த்தியின் மற்றொரு கவிதை:
1 எதிர் சப்தங்கள்:
சார், இந்த எளிமையான விளக்கங்கள் என்னை போன்ற ஆரம்பகட்ட வாசர்களுககு வரப்பிரசாதம்.
நன்றி, தொடர்ந்து எழுதுங்கள்.
Post a Comment