Sep 4, 2012

வலிநேற்றும் ஒரு முறை பைக்கில் இருந்து விழுந்துவிட்டேன். விழ வைக்கப்பட்டேன். 

இருசக்கர வாகனங்களில் சைலன்சரை நீக்கிவிட்டு "உர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்ற பயங்கர சத்தத்துடன் பைக் ஓட்டும் கதாநாயகர்களை பெங்களூர் சாலைகளில் சர்வ சாதாரணமாக பார்க்கலாம். வேகம் குறையாமல் 'வீலிங்' செய்து தங்கள் பிரதாபங்களைக் காட்டிவிட்டு போகும் கசங்கிய டீ-சர்ட், கிழிந்த ஜீன்ஸ், ப்ளீச்சிங் செய்த சுருட்டை முடியுடன் வரும் அத்தகைய ஒரு பயில்வான்தான் நேற்று எனக்கு வில்லனாகிவிட்டார். அவர் என்னை நோக்கி வந்த வேகத்தை பார்த்து பதறியதில் ப்ரேக் அடித்தேன்.

என் ஸ்பெண்டர் ப்ளஸ் வண்டிக்கு என்னை கீழே தள்ளிப்பார்ப்பதில் இருக்கும் சந்தோஷம் அலாதியானது. கீழே கிடந்த மணலை சாக்காக காட்டி இன்னொரு முறை தள்ளிவிட்டது. ஆனால் ஒவ்வொரு முறை நான் கீழே விழும் போது பல்லிளிக்கும் பைக்கிற்கு மட்டும் சிறு கீறல் கூட விழுவதில்லை. மொத்தக் கீறலையும் நான் தான் வாங்கிக் கொள்கிறேன்.

விழும் போது அம்மா என்றேனா அல்லது அப்பா என்றேனா என்று சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் 'முடிந்தேன்' என்று நினைத்தது ஞாபகம் இருக்கிறது. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பதால் நான் நினைத்தது நடக்கவில்லை. எழுந்துவிட்டேன். வலது உள்ளங்கை முழுவதும் தக்காளி ஜூஸ். கை முட்டியிலும் சிவப்பு ரோடு ஓடியிருந்தது. பல காலமாக வைத்திருந்த ஜீன்ஸ் பேண்ட் கிழிந்து காலும் அங்கங்கு ரத்த வாந்தி எடுத்திருந்தது. முழுமையாக எழுந்து நின்ற பிறகு "நீதான் வேகமாக வந்தாய்" என்று கன்னடத்தில் சொன்னான். எரிச்சலில் சில பல "கேன" சொற்களை உதிர்த்தேன். அவனுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. சுற்றிலும் பத்து பதினைந்து பேர்கள் நின்றார்கள். நின்றார்கள் என்றால் "நின்றார்கள்". அவ்வளவுதான். அவர்களுக்கு நல்ல வேடிக்கை காட்டிய திருப்தியில் பைக்கை எடுத்துக் கொண்டு வந்தேன்.

பக்கத்தில் இருந்த மருந்துக்கடைக்காரர் ஏகப்பட்ட கட்டுக்களை போட்டு விட்டார். கட்டுக்களுக்குள்தான் நான் இருந்தேன். நூறு ரூபாய்க்கு அத்தனை கட்டுகள். ரொம்ப "சீப்". வீட்டுக் கதவைத் திறந்து என்னைப் பார்த்தவுடன் அம்மா தன் தலையில் கை வைத்துக் கொண்டார். 'சம்பவத்தை' விளக்கிவிட்டு படுக்கையில் படுத்ததுதான் தெரியும் எழுந்து பார்த்தால் ஜன்னலுக்கு வெளியே இருள் சூழ்ந்திருந்தது. இரவா பகலா என்று புரிந்து கொள்ள முடியாத குழப்பம். என்னைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். ஏரோப்ளேன் குப்புற விழுந்துவிட்ட களை அவர்கள் முகத்தில் ஜொலித்தது. எழுந்து சாப்பிடச் சொன்னார்கள். இரண்டு தோசைகளை விழுங்கும் வரை காத்திருந்தவர்கள் மெதுவாக ஆரம்பித்தார்கள்.

"இரவு இரண்டு மணி வரைக்கும் கதை எழுதுகிறேன், கட்டுரை எழுதுகிறேன் என்று தூக்கம் கெடுவதால் வந்த வினை" என்று அம்மா ஆரம்பித்து வைக்க வரிசைகட்டி தீட்டினார்கள். "இரவு நேரத்தில் தூங்காமல் பகலில் தூங்குவதாகவும், பைக் ஓட்டும் போது கண்டதையெல்லாம் நினைத்துக் கொண்டு ஓட்டுவதாகவும்" காரணங்களை அடுக்கினார்கள். ஒவ்வொருவரையும் சமாளிப்பது பெரும்பாடாகிவிட்டது. தவறு என் மீது இல்லை என்பதை நிரூபிக்க மென்று தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று. அப்படியும் யாரும் நம்பியதாகத் தெரியவில்லை.

பகலில் உறங்கியதால் இரவில் தூக்கம் வரவில்லை. வலியும் தூங்க விடவில்லை. எதையோ யோசித்துக் கொண்டு படுத்திருந்தேன். கடும் வலியை ஒரு வித இன்பமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று வாசித்திருக்கிறேன். ஆனால் அதற்கு உச்சபட்ச மனவலிமை வேண்டும். எனக்கு கையாலாகாது. அதே மனோவியல் புத்தகத்தில் இருந்த கதை இது.

ஒருவனை அலுவலத்தில் தினமும் பிழிந்து எடுக்கிறார்கள். உச்சபட்சமான வேலைப்பளு. அழுத்தம் எல்லை மீறுவதை அவனால் எந்த விதத்திலும் தடுக்க முடிவதில்லை. ஒரு உபாயம் கண்டுபிடிக்கிறான். மற்றவர்கள் தரும் வலியை மறைத்துக் கொள்ள தனக்குத் தானே வலி கொடுக்க விரும்புகிறான்.

தினமும் அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பாக தனது ஷூவை இறுகக் கட்டிக் கொள்கிறான். இறுக்கம் என்றால் அத்தனை இறுக்கம்- இரத்த ஓட்டம் முழுவதுமாக தடையாகிவிடும்படி. எட்டு முதல் பத்து மணி நேரங்களுக்கு இரத்த ஓட்டம் இல்லாத கால்கள் வீங்கி விடுகின்றன. அதே வலியோடு கடும் வேலைகளைச் செய்கிறான். கால் வலியோடு ஒப்பிடும் போது அலுவலக வேலை ஒன்றுமே இல்லாததாக மாறிவிடுகிறது.  கால் வலி தரும் ஆவேசத்துடனேயே ஒவ்வொரு தினத்தையும் கடக்கிறான். மாலை வீடு திரும்பிய பின் ஷூவைக் கழற்றுகிறான். தடைபட்ட இரத்த ஓட்டம் தொடரும் போது கிடைக்கும் ஆசுவாசமும் இதமும் அலுவலகத்தின் அத்தனை வலிகளையும் மறக்கடித்துவிடுகிறதாம். 

வலி பற்றிய இன்னொரு சுவாரசியமும் ஞாபகம் வருகிறது. சாரு நிவேதிதா அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்த போது ஜெயமோகன் ஒரு நீண்ட குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதன் சாராம்சம் "வலியும் ஆன்மிகம்தான்" என்பது. சாரு ஒரு ரிப்ளை அனுப்பினாராம். "உங்களுக்கு வலியும் ஆன்மிகம் ஆனால் எனக்கு ஆன்மிகமும் வலி" 

                                                                 ***

இதற்கு மேல் என்னால் தட்டச்சு செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இடது கை மணிக்கட்டு கடும் வலியைத் தருகிறது. புண்களின் மீதான கட்டுகளில் இருந்து திரவம் கசிகிறது. வலியாகவும் தெரியவில்லை ஆன்மீகமாகவும் தெரியவில்லை. ஆனால் இது ஒரு அனுபவம். ஆனந்தமும் இல்லாத துக்கமும் இல்லாத அனுபவம். 

8 எதிர் சப்தங்கள்:

rvelkannan said...

மிகவும் ரசித்தேன் மணி . சில்க்-க்கு அப்புறம் இந்த கதை.

rvelkannan said...

அட .. இது கதை இல்லையா?, அனுபவமா சரி ரசிக்கும்படிதான் எழுதி இருக்கிங்க. ஆனாலும் வலிய ஏற்படுத்தி கொண்ட வலி வேண்டாமே. கதை என்று சொன்னதற்கு மன்னிக்கவும்

ILA (a) இளா said...

சீக்கிரம் தேறி வாங்க

Uma said...

கடவுளே! அத்தனை வலியிலும் எப்படி எழுத முடிந்தது? ஓய்வு எடுங்கள். நலமடைய பிரார்த்தனைகள்.வலியையும் புதுஅனுபவமாக்கி பார்க்கும் மனவலிமைக்கு பாராட்டுக்கள்!

ஜீவ கரிகாலன் said...

வலியை சுவாரஸ்யாமான நடையில் எழுதியிருந்தாலும் வாசிக்கும் பொழுது வலிக்கவே செய்கிறது.. சீக்கிரம் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்

Anonymous said...

//இடது கை மணிக்கட்டு கடும் வலியைத் தருகிறது.//

தொடர்ந்து வலி இருந்தால் எலும்பு முறிவாக இருக்கலாம், மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

Raji said...

அச்சச்சோ....! இப்போ எப்படி இருக்கு உங்க உடம்பு?
அப்டேட்டெல்லாம் அப்புறமா பண்ணலாம். முதல்ல நல்லா ரெஸ்ட் எடுங்க.
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!

வெங்கட் said...

விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்!