Sep 3, 2012

இளம் மனைவி1971 ஆம் ஆண்டு நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அது முக்கியமில்லை. அந்த வருடம் குமுதத்தில் தொடராக வெளிவந்த ’அனிதா- இளம் மனைவி’ நாவலின் நாயகி அனிதாவை நான் காதலித்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் முக்கியம். அனிதாவும் அவளது வயதான கணவன் ஷர்மாவும் டெல்லியில் இருந்தார்கள். அப்படித்தான் சுஜாதா எழுதியிருப்பார். அந்தச் சமயத்தில் சுஜாதாவும் டெல்லியில்தான் இருந்தார். ஆனால் எனக்கு கோயமுத்தூர்தான் வாய்த்திருந்தது. பி.எஸ்.சி கெமிஸ்ட்ரியை முடித்துவிட்டு டெல்லி சென்று விட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் நான் அரியர்ஸ் வைத்துவிடுவேன் என்று பல பேராசிரியர்கள் என் தலையிலோ அல்லது அவரவர் தலைகளிலோ அடித்து சத்தியம் செய்தார்கள். அந்த அளவிற்கு அனிதா மீதான காதல் பொங்கி பிரவாகம் எடுத்து என்னை புரட்டி போட்டிருந்தது.

ஷர்மா என்ற கிழவனை திருமணம் செய்து கொண்டு தன் வாழ்க்கையை தொலைத்துவிட்டாள் என்று அவளின் மீது பரிதாபம் கொண்டிருந்தேன். அதுவும் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். பரிதாபத்தையும் மீறித்தான் அவளை காதலித்தேன். நாவலின் முதல் பத்தியிலேயே அனிதாவின் கணவன் இறந்துவிடுகிறான் என்பதால் அவளை திருமணம் செய்து கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நம்பத் துவங்கியிருந்தேன். அந்தக் காலத்தில் விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்பது புரட்சியாக பார்க்கப்பட்டது. நான் புரட்சியாளனாகவே இருக்க விரும்பினேன்.

நாவலின் முதல் மூன்று பத்திகள் வரைக்கும் மிக சந்தோஷமாக இருந்தது. மூன்று வாரங்களில் காதல் இத்தனை வலுபெற்றுவிடும் என்பதை உணர்வது வசந்தத்தை உண்டாக்கியிருந்தது. நான்காவது பத்திதான் குழப்பமடையச் செய்வதாக இருந்தது. தனது பழைய காதலைப் பற்றி வழக்கறிஞர் கணேஷிடம் விவரிக்கும் அனிதா மயக்கமடைந்துவிடுவாள். மயக்கத்தில் இருக்கும் அவளை அவன் தூக்கிச் செல்லும் காட்சி என்னை கலவரப்படுத்தியிருந்தது. ஷர்மாவின் முதல் மனைவியின் மகளான மோனிகாவைத்தான் கணேஷ் காதலிப்பான் என்று நம்பியிருந்த என் நினைப்பில் சுஜாதா ஒரு கூடை கருங்கல்லை கொட்டியிருந்தார். அடுத்த குமுதம் வெளியாகும் வரைக்கும் என்னை நானே கொடூரமாக வருத்திக் கொண்டேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது அடுத்த வாரம் நடந்தது. கொட்டப்பட்ட கற்களுக்குள் சுஜாதாவும் கணேஷூம் சேர்ந்து டைனமட்டை பற்ற வைத்தார்கள்.

”கணேஷ், அந்தக் கதவை சாத்துங்கள்” என்று அனிதா சொன்னபோது எதுவும் தெரியாத அப்பாவியாக ஜன்னல் கதவை மூடினான் என் பங்காளி. ”அதில்லை. அறைக்கதவு” என்று சொன்னதோடு அவள் நிறுத்தியிருக்கலாம். ம்ஹும். அவளே தொடர்ந்தாள் ”கணேஷ், அந்த விளக்குகளை அணையுங்கள். எல்லா விளக்குகளையும்” என்று எனக்குள் பெட்ரோலை ஊற்றினாள் அனிதா. அவள் ஊற்றிய பெட்ரோலுக்குள் தீக்குச்சியை உரசி அசால்ட்டாக வீசிய கணேஷ் அனிதாவுக்கு முழுமையாக உடன்பட்டான்.

இதன் பிறகுதான் நான் பைத்தியமாகியிருந்தேன். அனிதாவை அடைவது என்பது மட்டுமில்லாமல் கணேஷை ஒழிப்பதும் ஒரு குறிக்கோளாகியிருந்தது. 

என்னுடைய ரூம்மேட் சதீஷ் ”நீ அனிதாவின் மீது பைத்தியகாரனாகத் திரிகிறாய்” என நேரடியாக குற்றம் சாட்டினான். "மச்சான் குமுதம் அதிகமா விக்கணும்ன்னு இந்த நாவலை பப்ளிஷ் பண்ணுறாங்க, தான் பாப்புலர் ஆகணும்ன்னு சுஜாதா எழுதிட்டு இருக்காரு. இது டோட்டல் ஃபிக்‌ஷன். ரொம்ப குழப்பிக்காதே, உருப்படற வழியை பாரு” என்ற போது அருகில் இருந்த பூந்தொட்டியை அவனது தலையில் உடைக்க வேண்டும் என்ற ஆத்திரம் பொங்கியது. ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் அடக்கிக் கொண்டேன். 

அடுத்த இரண்டு வாரங்களில் இறுதித் தேர்வை எழுதி முடித்திருந்தேன். முக்கியமான தேர்வுதான் என்றாலும் நாவல் வாசிப்பதை நிறுத்தவில்லை. அனிதாவை யாரோ கொல்ல முயற்சிப்பது திகிலூட்டினாலும் கணேஷையும் யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது நிம்மதியாக இருந்தது. கணேஷை தீர்க்க வேண்டும் என்ற எனது வேலை சுலபமாகிவிடக் கூடும் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால் கணேஷ் ஹீரோவாகவே இருந்தான். தன் மீது நிகழ்த்தப்படும் கொலை முயற்சிகளை முறியடித்ததுடன் அனிதாவின் கணவனை கொன்றவன் குறித்தான துப்புகளை மிக வேகமாக கண்டறிந்து கொண்டிருந்தான். இந்தக் காலகட்டங்களில்தான் அவன் அனிதாவோடு இன்னமும் நெருக்கமாகியிருந்தான்.

தேர்வுகளில் பாஸாகிவிடக் கூடும் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது. உடனடியாக டெல்லி சென்றுவிட வேண்டும் என்று விரும்பினேன். அப்பொழுது டெல்லியில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்த புதுப்பாளையம் சுப்பிரமணியத்துடன் ட்ரங்க் காலில் பேசியபோது கிளம்பி வரச் சொன்னார். தமிழ்நாடு பவனில் மேனேஜர் வேலை காலியாக இருப்பதாகவும் டிகிரி வரும் வரைக்கும் அதில் இருக்கலாம் என்று உற்சாகமூட்டினார். மாதம் நூற்றிப்பத்து ரூபாய் கொடுத்துவிடுவார்கள் தங்குமிடமும் இலவசம். மனசுக்குள் பட்டாம்பூச்சிகள் கும்மியடித்தன.

அடுத்த வெள்ளிக்கிழமையே ட்ரெயின் ஏறினேன். அம்மாதான் பீறிட்டு அழுதார். அப்பாவுக்கும் அதிகமாக பேச முடியவில்லை ஆனால் நான் அப்படியில்லை. அனிதாவின் கற்பனை முகத்தை நினைத்துக் கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தேன். எட்டு வார குமுதத்தையும் திரும்ப திரும்ப வாசிப்பதுதான் ட்ரெயினில் பொழுதுபோக்காக இருந்தது. 

டெல்லியின் பனியும், பாஷையும், உணவும் இரண்டு வாரங்களுக்கு திணறடித்துவிட்டது. கடும் காய்ச்சலும் சளியும் படுத்தி எடுத்தது. என்னை ஊருக்கு அனுப்பி வைக்கும் முடிவுக்கு சுப்ரமணியம் வந்திருந்தார். ஒரு முறை ஊருக்குச் சென்றுவிட்டால் திரும்ப அனுப்ப மாட்டார்கள் என்று தெரியும்.தெரிந்த கடவுளை எல்லாம் அழைத்துக் கொண்டேன். ஏதோ ஒரு கடவுள் காப்பாற்றிவிட்டார். அவர் உருவில் வந்த டாக்டர் குத்திய ஊசி அடுத்த நாள் என்னை எழுப்பிவிட்டது. அவசரமாக வெளியில் சென்று குமுதத்தை தேடினேன். உயிரைக் காப்பாற்றிய கடவுள் காதலை சோதித்துவிட்டார். குமுதம் விற்கும் ஒரு கடையைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. சுப்பிரமணியத்திற்கு வாசிக்கும் பழக்கம் எதுவும் இல்லை. “தெரியாது” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார். படுபாவி.

தமிழ் சஞ்சிகைகள் விற்கும் கடையை கண்டுபிடிக்க ஒரு வாரம் ஆனது. அதோடு சுஜாதா இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துவிட்டேன். அனிதா பற்றிய விவரங்களை அவரிடம்தான் கேட்க முடியும் என்பதால் அவரது வீட்டுக்கு நேரடியாகச் சென்றிருந்தேன். இன்னும் மூன்று வாரங்களில் கதை முடியப் போகிறது என்பதை மட்டும்தான் சொன்னார். அதற்கு மேல் அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. மனுஷன் சரியான கல்லுளிமங்கன் என்று நினைத்துக் கொண்டு வெளியேறத் தயாரானேன். அனிதாவுக்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டால் எந்த விபரீதத்திற்கும் நான் தயார் என்று சொன்னபோது அவரது கண்களில் மிரட்சியை பார்க்க முடிந்தது.

இந்த காலகட்டத்தில் மோனிகா-கணேஷ் காதல், ஷர்மாவின் காரியதரிசி பாஸ்கரின் கொலை போன்ற நிகழ்வுகள் அரங்கேறியிருந்தன. நான் அனிதாவின் வீட்டை டெல்லியில் தேடிக் கொண்டிருந்தேன். பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் இடம்பெறும் ஷாத்ரா வீட்டில்தான் அனிதா இருப்பாள் என்று உள்மனம் சொன்னது. கணேஷ் அந்த வீட்டைக் கண்டுபிடிக்கும் அதே டெக்னிக்கைத்தான் நானும் பயன்படுத்தினேன். வீட்டை விற்றுக் கொடுத்த சுந்தர் ஏஜன்ஸியில் வீட்டின் முகவரியை பெற்றுவிட்டேன். அடுத்த அத்தியாயம் வெளியாவதற்குள் அனிதாவை கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால் தமிழ்நாடு பவன் வேலை கழுத்தை நெறுக்கியது. இரவு வெகுநேரம்  ஹோட்டலில் இருக்க வேண்டியதாயிற்று. அந்த ஞாயிற்றுக்கிழமைதான் வெறித்தனமாக தேடினேன். வெற்றியும் கிடைத்துவிட்டது. அந்த வீட்டில் பஹதூர் என்ற மனிதன் மட்டும் இருந்தான். 

“அனிதா கிதர் நஹிஹே” என்ற எனது அரைகுறை ஹிந்திக்கு “சலோ மதராஸிவாலா” என்று விரட்டினான். அனிதா இந்த வீட்டில்தான் தங்கி இருக்கிறாள். ஆனால் இப்பொழுது இல்லை. எங்கோ வெளியே போயிருப்பாள் போலிருக்கிறது. பதின்மூன்றாவது அத்தியாயத்தில் அனிதாவின் முன்னிலையில் கணேஷூக்கும் ஒரு முதியவனுக்கும் சண்டை நடந்த போது அந்த முதியவன் அனிதாவின் கணவன் ஷர்மாதான் என்று யூகிக்க முடியவில்லை. அந்த வீட்டிலிருந்துதான் கணேஷிடம் இருந்தும் போலீஸிடம் இருந்தும் முதியவன் தப்பித்துச் செல்கிறான் என்று வாசித்த போது அனிதாவை மிக நெருங்கியிருக்கிறேன் என்ற நம்பிக்கை வந்தது.

ஆனால் போலீஸும், கொலைகளும், தப்பித்தல்களும் சர்வசாதாரணமாக நடக்கும் அனிதாவின் வாழ்க்கையில் ஒரு நிரந்தர வேலை கூட இல்லாத என்னால் எதுவும் செய்ய முடியாது என்று பயமும் உண்டாகியிருந்தது. மீண்டும் சுஜாதாவிடம் சென்றேன். அவரிடம் என் காதலைச் விவரிக்கையில் புன்னகைத்தார். அனிதா உனக்குத்தான் என்று அவர் சொன்னபோது மிக உற்சாகமானேன். 

பதினான்காவது அத்தியாயம் வெளியானது. சென்ற அத்தியாயத்தில் தப்பிச் சென்ற முதியவன்தான் அனிதாவின் கணவன். அனிதாவை அடைய முயன்ற அவரது வேலையாள் கோவிந்தைக் கொன்றுவிட்டு கொலைக் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக இந்த நாவல் முழுவதும் அனிதாவின் கணவன் ஷர்மாதான் இறந்து போனான் என்று நாடகமாடியிருக்கிறான். ஷர்மாவும் அனிதாவும் இணைந்து நிகழ்த்திய நாடகத்திற்கு சுஜாதாவும் உடந்தையாக இருந்திருக்கிறார். ஆனால் அனிதாவிற்கு அவனை பிடிக்கவில்லை. அவன் மீதான பயத்தின் காரணமாகவே அவள் அவனது நடவடிக்கைகளுக்கு ஒத்துக் கொண்டிருக்கிறாள்.

போலீஸிடம் இருந்து தப்பிச் செல்லும் போது நிகழும் விபத்தில் ஷர்மா உண்மையிலேயே இறந்துவிடுகிறான். தனக்கு இனி யாருமே இல்லை என வருத்தமடையும் அனிதாவிடம் “நான் இருக்கிறேன்” என்கிறான் கணேஷ். நாவல் முடிகிறது.

ஆனால் அதன் பிறகுதான் எனது கதை தொடங்குகிறது- இல்லை எனது வாழ்க்கை தொடங்குகிறது. மோனிகா தன் காதலன் கணேஷை அடைந்துவிட எனது உதவியை நாடினாள். அவளுக்கு நான் உதவிய விதம், எங்களின் திட்டங்கள், கணேஷிடமிருந்து அனிதாவை பிரித்தது போன்ற நிகழ்வுகளை யாரோ ஒருவர் நாவலாக எழுத ஏதோ ஒரு இதழில் வெளி வந்தது. சரி அதை விடுங்கள். இப்பொழுது அனிதா எங்கு இருக்கிறாள் என்று உங்களுக்கு தெரிய வேண்டும் இல்லையா? இதோ என்னோடுதான் இருக்கிறாள். என் மனைவியாக. நானும் அவளும்தான் காய்கறி வாங்க மார்கெட் செல்லவிருக்கிறோம். திரும்பி வந்து எங்கள் கதையைச் சொல்கிறேன். நாவலுக்கு உரிய சுவாரசியத்துடன். காத்திருங்கள்.

10 எதிர் சப்தங்கள்:

pravinfeb13 said...

super sir..... very interesting
ஆர்வத்தை அடக்க முடியவில்லை....
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்...
by ur facebook friend pravinkumar

rvelkannan said...

விறுவிறுப்பு க்கு குறைச்சல் இல்லை , ஆனாலும் கடைசி பத்தி படிக்கும் போது "போய்யங்க்க்கா ... போய் வேலையை பாரு " ஆனாலும் நீ ஒரு குட்டி சுஜாதா-ப்பா

Meenamuthu said...

கதைக்குள் கதை! அபூர்வம்!அசத்துகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமாக உள்ளது... தொடர்கிறேன்...

Uma said...

19வயது பையனின் உணர்வை அருமையா பதிவு பண்ணிட்டீங்க.கொஞசம் வித்தியாசமான கதை சொல்லும் முயற்சி. பாராட்டுக்கள்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வித்தியாசமான நல்ல முயற்சி..

ரசிக்கும் படியான நடையில்,நச்சென்று இருக்கிறது..

வாழ்த்துக்கள்..

ILA (a) இளா said...

அட வித்தியசாமான முயற்சிதான். கதை, 1972லிருந்து ஆரம்பிக்குமா?

Indian said...

Probably the best in மின்னல் கதைகள்

Ganesh said...

Very interesting sir..

பாலராஜன்கீதா said...

//கணேஷிடமிருந்து அனிதாவை பிரித்தது போன்ற நிகழ்வுகளை//
அது இருக்கட்டும் - மோனிக்கா கணேஷை அடைந்தாளா இல்லையா என்று எழுதவில்லையே :-)