பதினாறு நாட்கள். விதவிதமான உணவு வகைகள், வித்தியாசமான மதுக் கோப்பைகள், இசை, ஆட்டம், கொண்டாட்டம். ஜெர்மனியின் முனீச் நகரில் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் இந்த "அக்டோபர் ஃபெஸ்ட்" நடைபெறுகிறது. உலகின் பல நாடுகளில் உணவு மற்றும் மதுத் திருவிழா நடந்தாலும் ஜெர்மனியின் இந்த விழா உலகின் செல்வம் படைத்த மதுப் பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. அக்டோபர்ஃபெஸ்ட் நிகழ்வில் விற்பனைக்கு கிடைக்கும் மதுக் குடுவைகள் பிரபலமானவை. இந்தத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் இவற்றை வாங்கி வந்து நான் "அக்டோபர் பெஸ்ட்"க்கு போனேன் தெரியுமா என்று பீட்டர் விடுவது ஐரோப்போவில் சகஜம்.
இந்த மாதிரியான மதுக் கொண்டாட்டங்களில் ஆரம்பகாலத்திலிருந்தே சிலர் வித்தியாசமான முயற்சிகளைச் செய்து அவற்றில் சில முறை வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். அப்படியான ஒரு முயற்சிதான் Poly Drug Use. இது பெரிதாக ஒன்றுமில்லை. கிடைக்கும் சில ஐட்டங்களை "கோக்குமாக்காக" கலந்து அடித்துவிட்டு சாமியாடுவதற்கான முயற்சி.
இந்த முறையில் கோகெயின் மற்றும் ஹெராயினை கலந்து அடித்தால் (இந்த கலவைக்கு ஸ்பீட் பால் என்று பெயர்) இமயமலையின் உச்சிக்கு வள்ளியாம்பாளையத்திலிருந்து டிக்கெட் வாங்கலாம். ஹெராயின், கோகெயின் எல்லாம் தனித்தனியாக உடலுக்குள் சென்றாலே ஆட்களை குப்புற கவிழ்த்துவிடும் என்பதால் கலவையாக கலந்து அடிக்க போகிறோம் என்றால் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இமயமலைக்கு இல்லை- மொத்தமாகவே டிக்கெட் வாங்கி விட வேண்டியதுதான்.
கோகெயின் எடுத்துக் கொள்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. மிக எளிமையான முறை கோகா இலைகளை வாயில் போட்டு மென்றுவிடுவதுதான். நிகரில்லாத போதை வேண்டுமென்றால் இந்த முறை வேலைக்கு ஆகாது. இலைகளில் கொஞ்சம்தான் கோகெயின் இருக்கும். அப்புறம் பெரும்பாலான நாடுகளில் கோகா செடியே வளராது என்பதால் இலைகள் கிடைக்க வாய்ப்பில்லை.
இரண்டாவது முறை உலகப் பிரசித்திபெற்ற மூக்கு வழியாக "உறிஞ்சுதல்" (insufflation). மூக்கு வழியாக உறிஞ்சுவதற்கு முன்பாக செய்யப்படும் ஏற்பாடுகள் நுட்பமான கலை. கோகெயின் பவுடரில் கட்டிகள் எதுவும் இருக்கக் கூடாது. நல்ல சுத்தமான பவுடரை ரூபாய் நோட்டுகள், காலிப் பேனா, சாவி நுனி அல்லது பிரத்தியேகமான ஸ்பூன் போன்றவற்றில் வைத்து உறிஞ்சலாம். இந்தக் கருவிகளை tooters என்கிறார்கள். வேறு மாதிரியாக கோகெயின் பவுடரை கண்ணாடி போன்ற வழுவழுப்பான உறுதியான பரப்பில் பரப்ப வேண்டும். அதன் பிறகு அதன் மீது நேர் கோடுகள் வரைய வேண்டும். இந்தக் கோடுகளை வரையை கூரான கிரெடிட் கார்ட், டிரைவிங் லைசன்ஸ், சிறு கத்தி என்று உபயோகப்படுத்தலாம். சாலமன் பாப்பையா மாதிரி சொன்னால் "அது ஒரு ஆர்ட்ய்யா" இப்படி ஒரு கோட்டின் மூலம் பிரிக்கப்படும் அளவு ஒரு பங்கு(Dose). யாருக்கு எவ்வளவு திறன் இருக்கிறதோ அத்தனை பங்கு உறிஞ்சலாம்.
மூன்றாவது முறை ஊசி. இந்த முறையில் மூளையை அடைவதற்கு வினாடிகள் போதும். இந்த உடனடி மாற்றத்தில் பலர் கட்டுப்படுத்த முடியாமல் வாந்தியெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். முன்னாடி பார்த்தோமே ஹெராயின்+கோகெயின் கலவை(Speed ball or Moon Rock) மிகப் பிரபலம் அதே சமயம் மிக அபாயகரமானது. நிறைய பிரபலங்கள் இந்த கலவையை ஊசி மூலம் செலுத்தி இறந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் இதனால் ஏகப்பட்ட பேர்கள் இறந்திருந்தாலும் பிரபலங்கள் இறந்ததுதான் வெளிச்சத்தில் இருக்கிறது. Chris Farley, John Belushi எல்லாம் இந்த லிஸ்ட்.
அடுத்த முறை புகை மூலம் உறிஞ்சுவது. கண்ணாடி டியூப்கள் இதற்கென்றே உண்டு. வெளிநாட்டு கடைகளில் Stems, Horns, Blasters என்று கேட்டால் கிடைக்கும். இந்த ட்யூப்களில் கோகெயினை எடுத்து மெழுகுவர்த்தி அல்லது சிறுவிளக்கின் மூலம் சூடேற்றுவார்கள். வெளியேறும் புகையை சுவாசிக்க வேண்டும். புகைக்கும் போது கூட கன்னாபிஸ் போன்று வேறு சில போதை பொருட்களுடன் கலந்தும் கோகெயினை புகைக்கிறார்கள்.
கோகெயின் என்பது கோகா தாவரத்திலிருந்து எடுக்கப் படும் பொருள். பெரு, கொலம்பியா போன்ற நாடுகளில் கோகா இலைகள் பழங்காலத்திலிருந்தே பிரபலம். நம்மூர் பெரிசுகள் வெற்றிலையம் மென்று கொண்டிருப்பதைப் போல தென்னமெரிக்க நாடுகளில் கோகா இலைகளை மென்று கொண்டிருப்பதுதான் காலங்காலமாக இருந்தது. சில ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் இந்த இலைகளில் இருந்து கோகெயினை பிரித்தெடுக்க சில நூற்றாண்டுகள் பகீரத பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் முயற்சி அவ்வளவு எளிதில் வெற்றிபெறவில்லை. முதலில் ஆராய்ச்சிக்குத் தேவையான கோகா தாவரங்கள் ஐரோப்பிய நாடுகளில் வளர்வதில்லை. திக்கித் திணறி தாவரத்தை கப்பலில் எடுத்துச் சென்றாலும் கொண்டு செல்லும் போதே அவை வதங்கி இறந்து போயின. இரண்டாவதாக 1800களின் மத்திய காலகட்டம் வரை அந்த அளவுக்கு வேதியியல் அறிவும் வந்து சேர்ந்திருக்கவில்லை. 1859 ஆம் ஆண்டு ஆல்பெர்ட் நீமேன் என்பவர் முதன் முதலாக கோகெயினை பிரித்தெடுத்தார்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் ஒரு கல்லூரி மாணவனுக்கு கோகெயின் கிடைத்திருக்கிறது. "காணாத நாய் கருவாட்டை கண்ட மாதிரி" என்று ஊரில் சொல்வார்கள், அது போல கிடைத்த கோகெயினை விஸ்கியில் கலந்து குடித்திருக்கிறான்.சுத்தமான கோகெயின் வெண்மை நிறத்தில் பவுடரைப் போல இருக்கும். நிறம் என்பது கோகெயினின் சுத்தத்தை பொறுத்தது. வெண்மை, கொஞ்சம் மங்கலான வெண்மை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். கோகெயின், கோகா செடியிலிருந்து கிடைத்தாலும் வெளி மார்கெட்டில் கோகெயின் சல்பேட், Freebase, Crack Cocaine பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது.
இந்த கல்லூரி மாணவனுக்கு கிடைத்த கோகெயினின் தரம் பற்றி எல்லாம் தெரியவில்லை. விஸ்கியில் கலந்த கோகெயினின் அளவு குண்டக்க மண்டக்க அமைந்ததில், ரத்த வாந்தியில் ஆரம்பித்து பல விளைவுகள் அரை மணி நேரத்தில் நடந்திருக்கிறது. அடித்து பிடித்து மருத்துவமனையில் சேர்த்து பையனை பிழைக்க வைத்துவிட்டார்கள். தடைசெய்யப்பட்ட கோகேயின் பெங்களூரில் எப்படிக் கிடைத்தது என்பதை விசாரித்ததில் பையன் பெரிய இடத்து பார்ட்டி என்று தெரியவந்திருக்கிறது. இது ஒன்று போதாதா இந்த நிகழ்வு பற்றிய வேறு தகவல்கள் எதுவும் வெளியில் வராமல் அமுங்கிவிடுவதற்கு.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment