Sep 25, 2012

நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது
திருமணத்திற்கு பிறகு வேறு பெண்ணை பார்க்கக் கூடாது என்ற எனது வைராக்கியம் கடந்த ஒரு மாதமாக சுக்கு இருநூறாகிக் கொண்டிருக்கிறது. நந்தினி எங்களின் எதிர்வீட்டுக்கு குடிவந்த ஒரு மாதமாகத்தான் இது. ”மகாலட்சுமி மாதிரியே இருக்கா” என்று சொன்னால் உங்கள் கற்பனையில் ஒரு அழகிய பெண்ணின் உருவம் தோன்றும் அல்லவா? அந்த உருவத்தை விட சற்று தூக்கலான அழகு நந்தினி. அவளுக்கு திருமணம் ஆகியிருந்தது. கணவன் மனைவி மட்டும்தான் எதிர்வீட்டில் குடியேறியிருக்கிறார்கள். இதுவரை அவளது கணவனை நான் பார்த்தது இல்லை. ஏதோ ஒரு நிறுவனத்தில் நைட் ஷிஃப்ட்டில் இருக்கிறானாம். நான் அலுவலகம் முடித்து வீட்டிற்கு வரும் போது பெரும்பாலும் இரவு ஆகியிருக்கும். அவன் வேலைக்கு கிளம்பியிருப்பான். காலையில் நான் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை அவன் வந்திருக்க மாட்டான். வார விடுமுறைகளிலும் அவனை பார்க்க முடிந்ததில்லை.

ஒவ்வொரு நாளும் காலை ஆறரை மணிக்கு நந்தினி கோலமிடுவதற்கு வெளியே வருவாள். எங்கள் வீட்டிற்கு பேப்பர் போடுபவனும் அதே நேரத்தில் வருவான் என்பதால் அவனை சாக்காக வைத்துக் கொண்டு நான் வாசலுக்கு வந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலும் தலைக்குக் குளித்து ஈரத்தலையில் துண்டு சுற்றியிருப்பாள். காலையில் குளித்து முடித்து கோலம் போடும் கேரக்டர்கள் இனிமேல் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கணக்குப்போட்டிருந்த எனக்கு இன்னொரு இடி. இனிமேல் எதைப்பற்றியும் முன்முடிவு செய்யக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

நான் தினமும் அவளைப்பார்த்தாலும் எனக்குத் தெரிந்து அவள் என்னைப்பார்த்ததில்லை. இது முப்பது வயதுகளில் இருக்கும் திருமணமான ஆண்களின் சாபம். இருபது வயதாகவே இருக்க வேண்டும் அல்லது நாற்பது வயதை அடைந்துவிட வேண்டும். முப்பது வயதில்- அதுவும் திருமணமானவன் என்று தெரிந்தால் எந்தப்பெண்ணும் பார்ப்பதில்லை. அதே சோகம்தான் எனக்கும். ஆனால் எனது இரண்டு வயது மகன் நந்தினியோடு நன்றாக ஒட்டிக் கொண்டானாம். இதைச் சொல்லும் போது என் மனைவியின் முகத்தில் பூரிப்பை பார்க்க வேண்டுமே. காரணம் இல்லாமல் இல்லை- முன்பெல்லாம் தனியாக இவனை வைத்துக் கொண்டு குளிக்கக் கூட முடிவதில்லை என்று புலம்புவாள். இப்பொழுதெல்லாம் நந்தினியிடம் அவனை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கடைக்கு கூட போய்வருகிறாள். புலம்பலை கேட்க வேண்டியதில்லை என்ற சந்தோஷம் எனக்கு.

அவ்வப்பொழுது நந்தினி பற்றிய தகவல்களை என் மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். இந்தச்சமயங்களில் முகத்தை அசுவராசியமாக வைத்திருப்பது மிக முக்கியம். நான் நந்தினியை சைட் அடிப்பது பற்றி என் மனைவிக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதால் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். அதையும் மீறி சில இடங்களில் நான் அதிக ஆர்வம் காட்டிவிடுவது உண்டு. அந்தச் சமயங்களில் என் மனைவி பேச்சை மாற்றி என்னை அவமானப்படுத்தியிருக்கிறாள். அப்படியிருந்தும் தெரிந்து கொண்ட தகவல்களில் சில- நந்தினி சென்னைப் பெண். எம்.சி.ஏ முடித்துவிட்டு கதக் கற்றுக் கொண்டாளாம். கதக் நடனத்தின் சில அம்சங்களைப்பற்றியு என் மனைவிக்குக் கூட சொல்லித்தந்திருக்கிறாள். மூன்று மாதம் ஒரு நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்டாக இருந்தாளாம் பிறகு திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். ரிசப்ஷனிஸ்டாக இருந்தாள் என்று சொல்லும் இடத்தில் நான் மாட்டிக் கொண்டேன். “ஆமாம், இத்தனை அழகான பெண்ணுக்கு பொருத்தமான வேலை” என்று உளறியபோது என் மனைவி முறைத்ததை மரணப்படுக்கையில் கூட மறக்க மாட்டேன் என நினைக்கிறேன்.

எங்கள் வீடு பெலந்தூர் ஏரிக்கு பக்கமாக இருக்கிறது. கார்பொரேஷன் ஏரியாதான். பெங்களூர் செண்ட்ரல் மாலின் இடது புறம் போகும் சாலையில் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் இந்த ஏரி வந்துவிடும். ஏரிக்கரையே கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய ஏரி இது. இந்தச் சாலையின் இருபுறமும் கார்ப்பொரேஷன்காரர்கள் கம்பி வலை அமைத்திருக்கிறார்கள். ஆனால் காலைக்கடன்களை கழிக்கவும், தப்புத்தண்டா செய்வதற்கும் ஏதுவாக வலையை ஆங்காங்கே நம்மவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். இரவு பத்து மணி ஆகிவிட்டால் இந்தச் சாலையில் ஆள் நடமாட்டமே இருக்காது. 

நான் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு கையில் ஒரு புத்தகத்தோடு இந்தச் சாலைக்கு வந்துவிடுவதுண்டு. மனைவியையும் மகனையும் உள்ளே வைத்து பூட்டி சாவியை எடுத்துக்கொள்வேன். திரும்ப வரும் போது தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எழுப்ப வேண்டியதில்லை என்பதால் இந்த ஏற்பாடு. பெலந்தூர் ஏரிச்சாலையில்  காளி கோயில் ஒன்று இருக்கிறது. மிகச் சிறிய கோயில். இங்குதான் நள்ளிரவு தாண்டும் வரை அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். இரவு வீட்டிற்கு திரும்ப ஒரு மணி ஆகிவிடும். இதுவரைக்கும் காலையில் ஏழு அல்லது எட்டு மணி வரைக்கும் தூங்குவது வழக்கம். நந்தினி வந்ததிலிருந்து ஆறு மணிக்கு எழுந்துவிடுவதால் இரவு பன்னிரெண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு திரும்பிவிடுகிறேன். வாசிப்பதற்கான இடமாக கோயிலை தேர்ந்தெடுத்ததற்கு சில காரணங்கள் உண்டு. பேய் பயம் தேவையில்லை, யாராவது தூரத்தில் தெரியும் போது ஒளிந்து கொள்ளலாம், லைட் வெளிச்சம் அளவானதாக இருக்கும்.

இன்று மாலை அலுவலகம் முடிந்து சீக்கிரமாக வீடு திரும்பியிருந்தேன். அது வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தை விட முன்னதாகவே இருந்தது. கதவைத் திறந்த என் மனைவிக்கு ஆச்சரியமும் சந்தோஷமும். நந்தினி அப்பொழுது என் வீட்டில்தான் இருந்தாள். அது எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும். நந்தினிதான் முதலில் சிரித்தாள். அவளுக்கு ஒரு தெத்துப்பல் இருப்பதையும் வலது மேலுதட்டிற்கு மேல் சிறு மச்சம் இருப்பதையும் தெளிவாக கவனிக்க முடிந்த அளவிற்கான அருகாமை அது. நானும் சிரித்து வைத்தேன். “நான் கிளம்புறேன் அக்கா” என்று திரும்பி என் மனைவியிடம் சொன்னாள். ஒரு கணம் மூச்சடைத்து சுதாரித்துக் கொண்டேன். “வர்றேங்க” என்றாள். சிரித்து தலையாட்டினேன். அண்ணா என்று அழைக்காததற்கான சிரிப்பு அது.

வழக்கம் போலவே மனைவியிடம் பேசிவிட்டு நந்தினி பற்றியும் ஓரிரு செய்திகளை கேட்டுக் கொண்டேன். அவளும் மகனும் தூங்கிய போது வீட்டை பூட்டிவிட்டு வெளியேறினேன். நந்தினி வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இன்னும் தூங்கவில்லை போலிருக்கிறது. காற்று குளிர்ச்சியாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒன்பதரை மணிக்கே ஏரிச்சாலை வெறிச்சோடியிருந்தது. கோயிலில் நான் அமரும் இடத்தை சுத்தம் செய்து அமர்ந்தபோது காளியின் முகம் சாந்தமாக இருந்தது. பத்து மணி வரைக்கும் தஞ்சை ப்ரகாஷின் “கரமுண்டார் வூடு” நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். லெஸ்பியன் உறவை அந்தக்காலத்திலேயே தைரியமாக எழுதியிருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த போது ஆளரவம் கேட்டது.

மது அருந்த யாராவது வரக்கூடும் என நினைத்து கோயிலுக்குள் பதுங்கிக் கொண்டேன். ஆனால் குடிப்பவர்கள் போலில்லை. பெண் குரல் கேட்டது. கோயிலில் இருந்த சிறு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த போது ஒரு பெண்ணும் இன்னொரு ஆணும் நடந்து வந்தார்கள். விலை மாதாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்த இடத்தில் அது சாதாரணம்தான். அவர்கள் கோயிலின் ஜன்னலுக்கு மிக அருகில் வந்தார்கள். அந்தப்பெண்ணின் முகம் தூக்கிவாரிப்போட்டது. அது நந்தினிதான். அவன் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு இரவு நேரத்தில் தனது வீட்டிலேயே அத்தனை சுதந்திரமும் இருக்கிறது. பிறகு எதற்காக இங்கே வந்தாள் என்று குழம்பினேன். ஒரு வேளை கணவனாக இருக்குமோ என்றும் சந்தேகம் வந்தது. தெரியவில்லை. ஆனால் கணவனாக இல்லாதபட்சத்தில் அவளை ப்ளாக்மெயில் செய்ய இந்தச் சம்பவம் உதவக்கூடும் என குறுக்குப்புத்தி வேலை செய்தது.

ஒரு புதருக்குள் நுழைந்தார்கள். அவர்களை பின் தொடர்வது நல்லது இல்லை என கோயிலிலேயே இருந்தான். இன்னும் அரை மணி நேரத்தில் இன்னொருவனும் வந்தான். அவனும் புதருக்குள் நுழைந்தான். நாவலில் மனம் லயிக்கவில்லை. அதை மூடி வைத்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. கடைசியில் வந்தவன் பூனையைப் போல புதரை விட்டு வெளியேறினான். பிறகு வெளியே வரும்படி கையாட்டினான். நந்தினியுடன் வந்தவன் அவளை தூக்கி வந்தான். நந்தினி முழு நிர்வாணமாக இருந்தாள். ரோபோ-ஒன் படத்தில் ஷாருக்கான் கரீனா கபூரை தூக்கி வருவது போல நந்தினி கைகால்கள் அசைவற்று கிடந்தாள்.  எனக்கு நடுக்கம் ஆரம்பித்திருந்தது. கால்கள் நிலத்தில் படாததை உணர முடிந்தது. இப்பொழுதும் ஜன்னல் அருகில் வந்தான் நந்தினியின் நிர்வாணமான உடல் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அது பளிங்கு நிலத்தை ஞாபகப்படுத்தியது.

காளிமாதா கோயிலுக்கு எதிரில் புதை சேறு இருக்கிறது. கிட்டத்தட்ட பதினைந்து அடி ஆழம் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். நந்தினியின் உடலோடு பெரும் கல்லை சேர்த்து கட்டினார்கள். இருவருமாக சேர்ந்து தூக்கி வீசினார்கள். அவள் அனேகமாக புதைந்திருக்கக் கூடும். நான் நாவலை கையில் எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு கொலையிலும் செல்போன் சாட்சியமாகிவிடுவதால் பயத்தில் என் செல்போனை அணைத்துவிட்டேன். இப்பொழுது மீண்டும் புதருக்குள் சென்றவர்கள் எதையோ எரித்தார்கள். அவளது உடைகளை எரிக்கிறார்கள் போலிருக்கிறது. நான் மிக வேகமாகவும் அதே நேரத்திலும் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடி வந்தேன். தலை தெறிக்க ஓடுகிறேன் போலிருக்கிறது. தலை அதிர்ந்து கொண்டிருந்தது. வீட்டைத் திறந்த போது மனைவியும் மகனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். என் வாழ்நாளில் முதன்முறையாக நள்ளிரவில் குளித்தேன். தூக்கம் வரவில்லை. கதவைத் திறந்து பால்கனியில் நின்றேன். இப்பொழுதும் நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அவசரமாக தாழிட்டு வந்து இதை உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். ரகசியமாக வைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்.

6 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

// கடந்த ஒரு மாதமாக சுக்கு இருநூறாகிக் கொண்டிருக்கிறது//

//அண்ணா என்று அழைக்காததற்கான சிரிப்பு அது.//

//கதவைத் திறந்த என் மனைவிக்கு ஆச்சரியமும் சந்தோஷமும். நந்தினி அப்பொழுது என் வீட்டில்தான் இருந்தாள். அது எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும்//

நகாசு வேலைகளில் பிரமாதப்படுத்துறீங்க மணிகண்டன். வாழ்த்துக்கள்.

Ravichandran said...

Just visited your blog. awesome! nice story.

pravinfeb13 said...

எதிர்பாராத திருப்பம் ..... சுவாரஸ்யம்.... மிக அருமை சார்...

Unknown said...

thala real story aha

Anonymous said...

கதையில் வரும் இடங்கள் கூட மிக இயல்பாக கதையோடு ஒன்றி போகிறது.. சுவாரசியமான திருப்பம்.. கதை அருமை..

//காலையில் குளித்து முடித்து கோலம் போடும் கேரக்டர்கள் இனிமேல் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கணக்குப்போட்டிருந்த எனக்கு இன்னொரு இடி.// இந்த இடி இன்னும் என்னை தாக்கவில்லை.. பெங்களூருவில்!!

-கார்த்திக்

Vaa.Manikandan said...

நன்றி அனானிமஸ், ரவிச்சந்திரன்.

நன்றி பிரவீண்.

தியாகு நீங்க மற்ற மின்னல்கதைகளையும் வாசிச்சுடுங்க :)

நன்றி கார்த்திக்.என்னையும் தாக்கவில்லை :)