Sep 12, 2012

தேவதைகளின் ஒற்றை ரோஜா



வழக்கமாக அலுவலகம் செல்லும் சாலையை தவிர்த்து வேறு சாலையில் போகும் போதே விதி என்னைப் பார்த்து பல்லிளித்திருக்கக் கூடும். இந்த புதிய சாலையில் அதிகமான வாகனப் போக்குவரத்து இல்லை. வழியில் பெரும் ஏரி ஒன்றைக் கடக்க வேண்டியிருந்தது. பொய்த்துபோன பருவமழையின் காரணமாக ஏரி வற்றியிருந்தாலும் பசுமையாக இருக்கிறது. அவ்வப்போது சில பைக்குகளும் சில கார்களும் கடந்து சென்றன. நாற்பதைத் தாண்டாத என் பைக் முன்னால் இன்னொரு வாகனம். அதுவும் நாற்பதைத் தாண்டாத மற்றுமொரு பைக். தும்பைப்பூ நிறத்தில் வெண்ணிற சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் போய்க் கொண்டிருந்தாள். ஹெல்மெட்டுக்குள்ளிருந்து வெளியேறிய கற்றை முடி காற்றில் அலைந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் வேகம் எடுத்தால் அவள் முகத்தை பார்த்துவிட முடியும். ஆனால் வேகத்தை அதிகரிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்த போது அலைபேசி சிணுங்கியது. நிம்மதியோடு விளையாடிப் பார்ப்பதில் அலைபேசிக்கு அலாதி இன்பம். சமீபத்தில்தான் நான் பைக்கிலிருந்து விழுந்து வினையாகிப் போனது என்பதால் பைக்கில் போகும் போது பேசுவதில்லை. வண்டியை நிறுத்தினேன். மேனேஜர் அழைத்திருந்தார். தான் அலுவலகம் வந்துவிட்டதாகவும் தன்னுடைய எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துவிட முடியுமா என்றார்? முடியும் என்று சொல்லிவிட்டு பைக்கை முறுக்கியபோது வெண் சுடிதாரை கிட்டத்தட்ட மறந்திருந்தேன். இப்பொழுது அறுபதில் ஓடுகிறது ஹீரோ ஹோண்டா.

ஆடுகளும் நாய்களும் நகரத்தின் உடலெங்கும் படுத்துக் கிடக்கின்றன. பசி தன் கோபத்தைக் கிளறும்போதெல்லாம் நாற்றமெடுக்கும் குப்பையை அள்ளித் தின்கிறது நகரம். எதைத் தின்னவும் தயங்காத நகரம் தன் தாகம் தீர்க்க மனித இரத்தம் பருகவும் தயங்குவதில்லை. கருணையே இல்லாத இந்த நகரத்தில் ஒவ்வொரு நாளும் உழல எனக்கு வாய்க்கப்பட்டிருக்கிறது. இன்று கதறுவதற்கும்.

அடுத்த சில நிமிடங்களில் அதே வெண்சுடிதார் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அவள் அதே வேகத்தில்தான் போய்க்கொண்டிருந்தாள். நான்தான் வேகத்தை அதிகரித்திருக்கிறேன். இந்த முறை முந்திவிட்டேன். அவள் இளம்பெண் மட்டுமில்லை அம்மாவும் கூட. அவளது கால்களுக்கு இடையில் நின்று கொண்டிருந்த யூனிபார்ம் அணிந்த சின்ன தேவதையொன்று அவளிடம் கைநீட்டிக் காட்டியது. ஹெல்மெட் கண்ணாடியைத் தாண்டியும் அவள் சிரித்தது தெரிந்தது.

அடுத்த சிக்னலில் என் அருகில் வந்து நின்றார்கள். அந்தக் குழந்தை இப்பொழுதும் கைநீட்டிப் பேசிக் கொண்டிருந்தது. அது கை நீட்டிய திசையில் பள்ளிக் கூடம். அனேகமாக அந்தக் குழந்தை படிக்கக் கூடிய பள்ளியாக இருக்கும். அதைத் தாண்டி ஒரு ரீசார்ஜ் கடை இருந்தது. கடைக்கு முன்பாக வண்டியை நிறுத்தினேன்

அவள் பள்ளிக்கு முன்பாக குழந்தையை இறக்கிவிட்டாள். இரட்டை ஜடை. சின்னப் பொட்டு. ஒற்றை ரோஜாவும். குழந்தை சிரித்தது. தன் ஹெல்மெட்டை கழற்றி ஒரு 'ப்ளையிங் கிஸ்' கொடுத்தாள். பள்ளிக்கு முன்பாக தன் பெற்றோரை விட்டு நகரும் குழந்தைகளின் முகபாவத்தை ரசித்திருக்கிறீர்கள்தானே? அது ஒரு கவிதை. பள்ளி அந்தக் குழந்தையை ஒரு காந்தம் போல உள்ளே இழுத்துக் கொண்டது. அவள் திரும்பும் போது ஹெல்மெட் அணிந்து கொள்ளவில்லை. பள்ளியிலிருந்து சற்று முன்பாக இருந்த 'யூ' டர்னில் வலது பக்கம் திரும்பினாள். அதுவரை அவளை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு மேனேஜரின் மொபைல் நெம்பரை சொல்வதற்காக கடைக்காரரிடம் திரும்பினேன். சில வினாடிகள்தான் இருக்கும். இரு உலோகங்கள் மோதிக் கொள்ளும் சத்தம் கேட்டது. ஒரு அதிர்ச்சிக்கு பிறகாக அந்தத் திசையை பார்த்தபோது வெண்ணிற சுடிதார் அணிந்திருந்தவள் கீழே விழுந்து கிடந்தாள். 

அவளிடம் ஓடுவதற்குள்ளாக இன்னும் இருவர் அவள் அருகில் வந்துவிட்டனர். அவளது முகம் நசுங்கியிருந்தது. சுடிதார் இரத்தத்தில் நனையத் துவங்கியது. தனது வலதுகையை மட்டும் இரண்டு முறை அசைத்தாள். அதற்கு மேல் அவள் அசையவில்லை. அவள் அடங்கியபோது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. நூற்றியெட்டை அழைத்தேன். முடிச்சிட்டிருந்த அவளது துப்பட்டாவை கழற்றி முகத்தின் மீது போட்ட போது இளஞ்சூட்டு இரத்தம் ஆட்காட்டிவிரலில் பட்டது. அவளது அலைபேசியை எடுத்து யாரோ யாருடனோ பேசினார்கள். அனேகமாக கணவனிடம் தகவல் தெரிவிக்கிறார்கள். குழந்தையிடம் சொல்வதற்காக ஒருவன் ஓடியபோது தடுத்து நிறுத்தினேன்.அவன் மறுப்பேதும் சொல்லவில்லை. நின்றுவிட்டான். அடுத்த மூன்று நிமிடங்களில் நூற்றியெட்டு வந்துவிட்டது. இன்னொரு முறை மேனேஜர் அழைத்தார். வீட்டிற்கு போக விரும்புவதாகச் சொன்னேன். அவர் காரணம் எதுவும் கேட்கவில்லை. பைக்கில்  போகும் போதும் அழுது கொண்டிருந்தேன். என் பாதையெங்கும் தேவதைகள் கையசைத்துக் கொண்டிருந்தார்கள். இரட்டை ஜடை. சின்னப்பொட்டு. ஒற்றை ரோஜாவும். 

5 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

நிஜமா? பயங்கரமா இருக்கு :((

மாதேவி said...

மனதை கலக்குகின்றது.

Yaathoramani.blogspot.com said...

மனம் படித்ததும் கலங்கிவிட்டது
இளகிய மனமுடையவர்கள்
இது போன்ற நேரடி நிகழ்வுகளை தாங்குவது கடினமே

bandhu said...

வண்டி ஓட்டும் ஒவ்வொருவரை பார்க்கும்போதும் எனக்கு வரும் nightmare இது. வயற்றை பிசைகிறது.

ஜீவ கரிகாலன் said...

நகரத்தின் கோரப் பிடியில் இது போன்ற இருப்பை குலைக்கும் சம்பவங்கள் மட்டுமே நம் உயிரோடு இருக்கும் மனிதனாக ஞாபகப் படுத்திகிறது. நாம் பிழைப்பதற்காக திரியும் நகரங்களில் நம் நிழலோடு சேர்ந்து பயணிக்கும் விபத்திற்கான சூழல் கொடுமையானது.. :( romba painful