Sep 10, 2012

எப்படி மனசுக்குள் வந்தாய்



நேற்றிரவு கடும் மழை. செல்வம் அறைக்கு திரும்புவதற்கு பத்து மணியைத் தாண்டிவிட்டது. நாயுடு மெஸ்க்காரர்கள் இவருக்கென எடுத்து வைத்திருந்த புரோட்டாவை உள்ளே தள்ளிவிட்டு வந்து சேர்ந்த போது வழக்கம் போலவே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடந்தது தெரு. இன்றைக்கும்  விசிறிதான் வாய்த்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வந்தவர் ஒரு கணம் அதிர்ச்சியாகி நின்றார். அவரது அறையில் மெழுகுவர்த்தி எரிவது தெளிவாகத் தெரிந்தது. கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டவர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த போது ஒரு பெண் அவரது மேஜையில் அமர்ந்து எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள். அரவம் இல்லாமல் ஜன்னலுக்கு அருகில் சென்றார். அவள் தன்னை பார்த்துவிடக் கூடாது என நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் திரும்பிப்பார்த்துவிட்டாள். அவள் திரும்பிய வேகம் பெரும் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. அவள் கோரமாக இருந்தாள். செல்வத்தின் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

அது சங்கீதாவேதான். கடுங்குரலில் சிரித்தாள். திகிலூட்டக் கூடிய சிரிப்பு. முகமும் விகாரமாக இருந்தது. ஆசிட்டால் கருக்கப்பட்ட முகம் போலவோ அல்லது தீக்காயத் தழும்புகளைப் போலவோ அது பயங்கரமானதாக இருந்தது. கண்களுக்கு மேல் இமைகள் இல்லை. செல்வம் தன் கட்டுப்பாட்டை இழந்து நடுங்கத் துவங்கினார். இந்த இடத்தைவிட்டு தப்பித்து ஓடி விட வேண்டும் என எத்தனித்தார். ஆனால் "உள்ளே வா" எனக் கட்டளைக் குரல் வந்தது. கருங்கல் ஒன்றை பாறையின் மீது அழுந்தத் தேய்ப்பது போலிருந்தது அந்தக் குரல். அது தன் வாழ்நாளில் எதிர்கொள்ளாத மிரட்டல். அந்த மழையிலும் தான் வியர்த்திருப்பதை அவரால் உணர்ந்தார்.

மிகப்பெரிய மனப்போராட்டத்திற்கு பிறகு கதவைத் திறந்தார். கதவுக்கு போட்டிருந்த திரைச்சீலை முகத்தில் அறைந்தது. வீட்டிற்குள் வந்துவிட வேண்டாம் என்ற சமிக்ஞையை அந்தத் திரைச்சீலை செய்வது போலிருந்தது. உள்ளே முழுமையாக தன்னை நுழைத்தபோது மெழுகுவர்த்தி அணைந்திருந்த அறைக்குள் அமைதி நிலவியது. மேஜையில் சங்கீதா இல்லை. அவள் ஒளிந்திருக்கக் கூடும் என மிக மெதுவாக நடந்தார். நெஞ்சுக் கூட்டிற்குள் ஒரு வெற்றிடம் உருவாகியிருந்தது. மேஜை மீது தடவிப்பார்த்த போது மெழுகுவர்த்தியும் இல்லை. 

எப்பொழுதும் மெழுகுவர்த்தி வைக்கும் தகரப்பெட்டியை துழாவினார். பெட்டி இடம் மாறியிருந்தது. மெதுவாக நகர்த்திக் கொண்டிருந்த கையை யாரோ பிடித்தபோது 'ஆ' என்று கத்திவிட்டார். அது மிகவும் மூர்க்கமான பிடி. அந்தக் கைகளிலிருந்த சொரசொரப்பு பயத்தை அதிகமாக்கியது. தன் கைகளை விடுவிக்க முயற்சித்தார். அது அத்தனை சுலபமானதாக இல்லை. மூன்றாவது முறை வேகமாக உதறியதில் கைகள் விடுவிக்கப்பட்டன. இந்த இரவு தன் இறுதியான இரவாக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டு அசையாமல் நின்றிருந்த போது மின்சாரம் வந்தது. கண்கள் கூசின. சில வினாடிகளுக்கு பிறகு ட்யூப்லைட்டின் வெளிச்சம் ஒரு பூனையைப் போல அறைக்குள் பரவியது. அறையில் எந்த மாற்றமும் இல்லை. சங்கீதாவையும் காணவில்லை. செல்வத்தையும் நிசப்தத்தையும் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.

நிசப்தம் பயமூட்டக் கூடியது என்பதால் டிவியை ஆன் செய்தார். சிவாஜி யாரோ ஒரு நடிகையை கட்டிப்பிடித்து உதட்டைச் சுழித்துக் கொண்டிருந்தார். காலையில் சுருட்டி வைக்காமல் சென்றிருந்த படுக்கையில் பேண்ட் சர்ட்டோடு செல்வம் படுத்துக் கொண்டார். சங்கீதா உயிரோடு வந்திருந்தாள் ட்யூப்லைட் வெளிச்சம் அறைக்குள் பரவுவதற்குள் அந்த இடத்தை விட்டு ஓடியிருக்க முடியாது. அப்படியானால் பேயாக வந்திருக்கிறாளா? செல்வம் குழம்பினார். எதற்காக இருபது ஆண்டுகளுக்கு பிறகாக தன்னைத் தேடி வர வேண்டும் என்பது அந்தக்குழப்பத்தில் தொக்கிய முக்கியமான வினா. அவருக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.

செல்வம் தனியாகத்தான் தங்கியிருக்கிறார். அடையாரில் ஐ.ஐ.டியை ஒட்டிப்போகும் சந்தில் ஒரு அறையில் வாடகைக்கு. நாற்பது வயதைத் தொட்டிருக்கும் செல்வம் திருமணமும் செய்துகொள்ளவில்லை. பெற்றவர்கள் போய்ச்சேர்ந்துவிட்டார்கள். உடன்பிறந்தவர்களும் ஆளுக்கொரு திசையில் இருக்கிறார்கள் என்பதால் சித்தன் போக்கு சிவன் போக்குதான். சென்னைக்கு மாற்றலாகி வந்த புதிதில் திருவல்லிக்கேணி மேன்ஷனில்தான் ஒரு மாதம் இருந்தார். ஆனால் அது அவருக்கு பிடித்தமானதாக இல்லை. நடு ராத்திரியில் குளித்துவிட்டு நிர்வாணமாக வரும் மனிதரையும், ஜன்னல்கள் இல்லாத அறைகளில் எழும்பும் ஆண் வாசனையும் அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேன்ஷனைக் காலிசெய்துவிட்டு இந்த அறைக்கு வந்துவிட்டார். அறை என்றால் அறை மட்டும்தான். அதுவே சமையலறை அதுவே படுக்கையறை அதுவே படிக்கும் அறையும். நல்லவேளையாக குளியலறை தனியாக இருக்கிறது.

செல்வம் தனியாக இருப்பதற்கு நூறு காரணங்கள். அதில் ஒன்று காதல் தோல்வி. இப்பொழுது இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பாக. சங்கீதாவை முதன்முதலாக கலைமகள் டைப்ரைட்டிங்க் இன்ஸ்டியூட்டில் பார்த்தார். பார்த்தவுடன் காதல். ஆனால் ஒருதலைக் காதல். அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அடைகாத்திருந்த காதலை அவளிடம் சொல்லும் போது அவளுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. இதற்காக செல்வம் உடைந்துவிடவில்லை. தன் காதலை தெரிவித்த திருப்தியுடன் ஒதுங்கிக் கொண்டார். 

அவளது திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகாக கச்சேரி மேட்டில் அவளைப் பார்த்த போது தனியாக நின்று கொண்டிருந்தாள். இவர்தான் அவளை நெருங்கினார். வெடித்தவள் "உங்களை மிஸ் பண்ணிட்டேன்" என்று சொல்வதற்குள் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் நகர்ந்துவிட்டாள். ஸ்தம்பித்த செல்வம் சுதாரிக்கும் முன்பாகவே கண்பார்வையிலிருந்து மறைந்திருந்தாள். அதன் பிறகு என்ன ஆனாள் என்று செல்வத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் கொலை செய்யப்பட்டதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் வேறு எங்கேயோ வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். அவை எதுவுமே உறுதி செய்யப்படாத கதைகள்தான்.

அதே சங்கீதாதான் இருபது வருடங்களுக்கு பிறகாக செல்வத்தின் அறைக்கு வந்திருக்கிறாள். கொல்லப்பட்ட அவள் இருபது வருடங்கள் அலைந்துவிட்டதாகவும் எதிரிகளை பழிவாங்கிவிட்டு தன்னை அடைய வந்திருப்பதாக செல்வம் நம்புகிறார். தான் கூடிய விரைவில் இறந்துவிடுவோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் செல்வம். தனிமையைவிடவும் மரணம் அத்தனை சிரமமானதில்லை என்பது அவரது சித்தாந்தம்.

அடுத்தநாள் அவரது அறை திறக்கப்படவேயில்லை. யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். வாசல் தெளிக்க வந்த எதிர்வீட்டுப் பெண் இன்னொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தார் "அந்த மனுஷன் நைட்ல திடீர் திடீர்ன்னு கத்துவாரு.யார் போய் தட்டியும் கதவை திறந்ததில்லை. இப்போ எல்லாம் என்ன சத்தம் வந்தாலும் யாரும் கேட்கிறதில்ல. வேலையை விட்டும் துரத்திவிட்டுட்டாங்களாம். நேத்து ராத்திரியும் பயங்கரமா கத்திட்டு இருந்தாரு.  என்ன ஆச்சுன்னு தெரியல. பாவம் பைத்தியம்".

3 எதிர் சப்தங்கள்:

Yaathoramani.blogspot.com said...

இழந்த தூய காதல் இதயத்துக்குள் நீங்காது
இருந்து நிச்சயம் இப்படித்தான் படுத்தும்
சுவாரஸ்யமான அருமையான கதை
தொடர வாழ்த்துக்கள்

Prakash said...

எளிய நடையில் நல்ல அருமையான கதை.... உங்களின் எழுதும் விதம் மிக அருமை அண்ணா.... கீப் இட் அப்....

சசிகலா said...

வலைச்சர அறிமுகத்தின் மூலம் தங்கள் பகிர்வைக் காண வந்தேன் எனையும் பிடித்துக்கொண்டது திகில் நிறைந்த இருள்...
வாழ்த்துகள்.