Aug 6, 2012

வயசு



“ஹலோ”

“சேஷாத்ரி இருக்காருங்களா?”

“ஆமா...பேசறேன்..நீங்க?”

“ஸ்டேஷன்ல இருந்து பேசறோம். உங்க பையன் பாலாஜியை இங்க வெச்சிருக்கோம் வந்து கூட்டிட்டு போங்க”

“எந்த ஸ்டேஷன்? எதுக்கு சார்”

“எஸ்.ஐ நேர்ல பேசணும்ன்னு சொல்லுறாரு வாங்க சார்”

“சார் நாங்க நல்ல ஃபேமிலி”

“அதை இங்க வந்து சொல்லுங்க சார்”

“ஹலோ...சார்...சார்”

                                                              ***

“என்னங்க ஆச்சு?”

”உம்பையனை போலீஸ் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு போய்ட்டாங்களாம்”

“என்ன சொல்லுறீங்க? என்ன ஆச்சு”

“ஒப்பாரி வைக்காத...அக்கம்பக்கத்துல இது தெரிஞ்சா நான் தொங்கிடுவேன்”
                            
                                                             ***

“சார் பாலாஜி”

“உங்க பையனா? உக்காருங்க எஸ்.ஐ வருவாரு”

“என்ன சார் ஜட்டியோட உக்கார வெச்சிருக்கீங்க”

“வேற எப்படி உக்கார வைப்பாங்க”

“சார் அவன் +2 படிக்கிறான்...டென்த்ல டிஸ்ட்ரிக்ட் ரேங்க்”

“ம்ம்ம்”

“என்ன பிரச்சினை பண்ணினான் சார்”

”எஸ்.ஐ. கிட்ட பேசுங்க”

“ஐயா... அந்தப் பையனோட அப்பா”

“நீங்கதானா? உக்காருங்க”

“சார் நான் ரெவின்யூ டிபார்ட்மெண்ட்ல இருக்கேன். தாசில்தார் ஆபிஸ்ல க்ளார்க்”

“ம்ம்ம்”

”அவன் ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கான்..டென்த் மேத்ஸ் செண்டம் சார்”

“தெரியும். அதான் ஃஎப்.ஐ.ஆர் கூட போடலை”

“என்ன பிரச்சினை சார்”

“ப்ராத்தல்”

“என்ன சார் சொல்லுறீங்க”

“பொய்யா சொல்லுறேன் அவனையே கேளுங்க”

“308...பையனை கூப்பிடுய்யா”

“இப்படிப்பட்ட பையன் எனக்கு வேண்டாம் நீங்களே கொன்னு போடுங்க”

“சார்..இங்க அடிக்காதீங்க வீட்ல போய் என்னமோ பண்ணுங்க”

“இல்லப்பா...நான் அந்த ரோட்ல போயிட்டு இருந்தேன்..ஜீப்ல வந்தவங்க என்னை பிடிச்சுட்டு வந்துட்டாங்க”

“டேய் பொய் சொன்னேன்னா நடக்கறதே வேற. பொண்னு கூட ரூம்ல இருந்தான்...தூக்கிட்டு வந்துட்டோம்..படிக்கிற பையன்னு சும்மா வார்ன் பண்ணி விட்டுடலாம்ன்னு கேஸ் கூட போடலை”

“எந்தப் பொண்ணு சார்?”

“ஏன்? நீங்க அவளை பார்க்கணுமா கெளம்புங்க சார்”

“ஒழுங்கா படிக்கிற வேலையை பார்க்கச் சொல்லுங்க”

                                                         ***

”ஏண்டா இந்த வயசுல”

“சத்தியமா இல்லப்பா...நம்புங்க”

“திரும்பத் திரும்ப பொய் சொல்லாத...உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா மனசு ஒடிஞ்சு போயிடுவா”

“ப்ளீஸ்ப்பா சொல்லிடாதீங்க”

”எம்பையன் பதினேழு வயசுல யாரோ ஒரு பொம்பளைய தேடிப்போனான்னு யோசிக்கக் கூட சங்கடமா இருக்கு”

”எப்படி இனி உம் முகத்தை பார்க்கிறதுன்னே தெரியல...”

.....

”பாலாஜீ...டேய் டேய்”
                             
                                                       ***

”சேஷாத்ரி பையன் பைக்ல இருந்து கீழே விழுந்துட்டானாம்”

“எப்படி இருக்கானாம்”

“கொஞ்சம் சீரியஸ்..கேகேஎஸ் ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க”

“என்னாச்சாம்?”

“சேஷாத்ரி கூடத்தான் பைக்ல வந்திருக்கான். யூனிட் டெஸ்ட்ல மார்க் குறைஞ்சுடுச்சுன்னு பேசிட்டு வந்திருக்காங்க எட்டிக் குதிச்சுட்டானாம்..அப்படித்தான் சேஷூ சொன்னாரு”

”ப்ச்ச்”
                                                         ***                         

“சப்பை மேட்டருடா மாமூ. இதுக்கு போய் பைக்ல இருந்து குதிச்சயாடா?”

“இல்ல மச்சி...அப்பா ரொம்ப ஃபீல் பண்ணிட்டாரு...அவருகிட்ட நான் திருந்திட்டேன்னு எப்படி நம்ப வைக்கிறது”

“திருந்திட்டியாடா?”

“ம்ம்ம்ம்....இனிமே சிக்காம சேட்டை செய்யணும்”

9 எதிர் சப்தங்கள்:

Yaathoramani.blogspot.com said...

யதார்த்த நிலையை
மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

Unknown said...

"வயசு" ஆமா வயசு..

rvelkannan said...

வர்ணனை இல்லாத தொனியில் இன்றைய நிலை.

துரோணா said...

பாஸ்.சொல்கிறேன் என்று தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.இந்த கதையை நீங்கள் எழுதியிருக்க வேண்டாம் என்றே எனக்கு தோன்றுகிறது. வயது கோளாறு என்று மிகவும் சுலபமாக எல்லோரும் கடந்துவிடக்கூடிய பிரச்சனையல்ல காமம் குறித்த இன்றைய புரிதலும் அது சார்ந்த உணர்வும்.உலகமயமாதல் அதன் தொடர்ச்சியாக மதிப்பீடுகளின் வீழ்ச்சி பின்னர் எதிர்காலம் குறித்த அந்தர கட்டமைப்புகள் என நீளும் இன்றைய வாழ்க்கை நிலையில் இளம் வயதினர் (குறிப்பாக மாணவர்கள்) அடையும் மன அழுத்தத்தை எந்த வார்த்தையில் சொல்வதென்றே எனக்கே தெரியவில்லை.கல்லூரி வந்தும்கூட மாடு மாதிரி புத்தகங்களையும் சொரணையின்மையையும் தூக்கி கொண்டு திரியத்தான் நாங்கள் விதிக்கப்பட்டிருக்கிறோம் எனும்போது இதிலொரு திரியை நீங்கள் படைப்பாக வேண்டுமென்றால் அது எவ்வளவு ஆழமானதாகயிருக்கவேண்டும்? பொது புரிதலை முதன்மை படுத்தும் இவ்வகை கதைகள் நிஜத்திற்கு தேவைப்படும் வெளியையும் கனத்தையும் தடுத்து தட்டையாக்கிவிடுமென எனக்கு தோன்றுகிறது. இது என்னுடைய கருத்து மட்டுமே.பிழையிருந்தால் மன்னிக்கவும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நாட்டில் நடக்கும் உண்மைகள்...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

SNR.தேவதாஸ் said...

இந்த வயசுலே எதுவும் தெரியாது.இரத்தம் சுண்டும் வரை.35 வயசுக்கு மேலே நாம் செய்த தவறுகள் அனைத்தும வரிசையாக வரும் அப்போது நமது மனச்சாட்சி கொடுக்கும் தண்டனைக்கு சாவதே மேல் எனத் தோன்றும்.நாம் என்ன செய்தோமோ அதனை நமது பிள்ளைகள் செய்வார்கள்.அப்போது நமது மனம் படும் பாடுஃ
நான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்.
snr.DeVaDaSs

Uma said...

குழந்தைகள் குழந்தைப்பருவத்தை கடக்கும் வரை கவனிப்பும் அனுசரணையும் தேவை.
உங்கள் பதிவுகளுக்கு எங்கேயிருந்து படங்கள் எடுக்கிறீர்கள்? மிக மிக அருமை

மவ்வுனம் said...

பாலியல் சிக்கலை பற்றி நாம் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும்..

எளிமையாக இருந்தாலும் அழகாக சொல்லியிருக்கிரீர்கள்

Vaa.Manikandan said...

நன்றி ரமணி,ஆறுமுகம்,கண்ணன்,துரோணா,தனபாலன், தேவதாஸ்,உமா, மவ்வுனம்.

துரோணா,

சிக்கல்கள் என்பது கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமில்லை ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டுதானே. கல்லூரி மாணவன் என்ற நிலையிலிருந்து இந்தக் கவிதையை புரிந்து கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

மற்றபடி,இது பொது புரிதலில் இருந்து உருவப்பட்ட கதை இல்லை என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

நன்றி.