கவிதையின் தேவை என்ன?
அவசியமான கேள்விதான். இந்த கேள்விக்கு நிறைய எதிர்கேள்விகளை கேட்கலாம்.
- அமத்தாவும் ஆயாவும் சேகரித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான விடுகதைகளுக்கான தேவை என்ன?
- சூடோகூ என்ற புதிர்களின் அவசியம் என்ன?
- குறுக்கெழுத்துப்போட்டிகள் உங்களுக்கு தருவதென்ன?
- கதைகளை எதற்காக படிக்க வேண்டும்?
இதில் எந்த ஒரு கேள்விக்காவது பதில் தெரியும் என்றால் அதே பதிலை “கவிதை எதற்கு தேவை” என்ற கேள்விக்கு பதிலாக்கிக் கொள்ளலாம்.
வாசிப்பின்பத்தைத்(Reading Pleasure)தவிர வேறெதையும் கவிதை தருவதில்லை. ஆனால் சரியான முறையில் கவிதையை வாசிப்பதால் கிடைக்கும் வாசிப்பின்பம் மற்ற எந்த இலக்கிய வடிவத்திலும்(கதை, நாவல், கட்டுரை) கிடைக்கும் இன்பத்தை விடவும் ஒரு படி மேல் என்பதை வேண்டுமானால் உறுதியாகச் சொல்லிவிட முடியும். அதே சமயம் புரிந்துகொள்ளாமல் கைவிட்டுவிட்டால் கவிதை ‘பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லாதது’. கவிதைக்கான பில்ட் அப்பை இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
***
கவிதை வாசகனுக்கு தரும் அனுபவத்தை இரண்டு வகையாக பிரித்துவிட முடியும்.
1) கவிதையில் கவிஞனின் அனுபவத்தை அப்படியே புரிந்து கொள்வது- (Core experience)
கவிதையில் மரம் என்றிருந்தால் அது மரம் மட்டுமே. மலர் என்றிருந்தால் அது மலரை மட்டும் குறிக்கும். வாசகன் தன்னை அதிகம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
2) கவிதையின் அனுபவத்தை வாசகன் தன் அனுபவத்தோடு சேர்த்து புரிந்து கொள்வது- (Reader's space)
இது கவிதை வாசித்தலில் இரண்டாவது படி. கவிஞன் மலர் என்று குறிப்பிடுவதை மலர் என்று மட்டும் புரிந்து கொள்வதில்லை. மலர் மலரையும் குறிக்கலாம், பெண்ணையும் குறிக்கலாம், குழந்தையையும் குறிக்கலாம், மென்மையையும் குறிக்கலாம் அல்லது வேறெதையும் குறிக்கலாம்.
இந்த புரிதல் வாசகனின் அனுபவம் சார்ந்தது. உதாரணமாக ”விழுந்துவிட்டேன்” என்ற ஒற்றைச் சொல்லை நீங்கள், நான் மற்றும் நம் நண்பர் ஆகியோர் ஒரே நேரத்தில் வாசிக்கிறோம். நான் முந்தாநாள் பைக்கிலிருந்து கீழே விழுந்ததை நினைத்துக் கொள்ளக் கூடும். நீங்கள் சென்ற வருடம் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடும். நமது நண்பர் யாரோ ஒருவன் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டதை யோசிக்கக் கூடும்.
ஒரே சொல்தான்- ஆனால் வாசிப்பவரின் அனுபவம் மற்றும் அந்தக் கணத்தில் அவரது மனநிலையை பொறுத்து சொல் வெவ்வேறு பரிணாமத்தை அடைகிறது.
வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு பரிணாமத்தை ஒரே கவிதை கொடுக்க வேண்டுமானால் கவிதையில் ஒரு சூட்சுமம் இருக்கும். கவிஞன் தான் சொல்ல விரும்புவதை ’இதுதான்’ என்று Explicit ஆக சொல்லாமல் விட்டுவிடுவது. இந்தத் தன்மை நவீன கவிதையில் மிக முக்கியமானது. Explicit ஆகச் சொல்லிவிடும்போது கவிஞன் எதை நினைத்து எழுதுகிறானோ அதையேதான் வாசகனும் புரிந்து கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறான். அப்படியில்லாத பட்சத்தில் வாசகன் தன் அனுபவத்திலிருந்து வேறொரு கோணத்தில் அந்தக் கவிதையை புரிந்து கொள்ள முடியும்.
வாசகன் யோசிப்பதற்காக கவிதைக்குள் உருவாகும் இத்தகைய இடம் வாசக தளம் (Reader's space)ஆகிவிடுகிறது.
****
மலைச்சாமியின் கைகள்
தாழ் பழுதடைந்த
என் அறைக்குள் நுழைந்த
நள்ளிரவுக் காற்று
இருளில் நெளிந்துகொண்டிருந்த தண்ணீர்க் குடுவையை
நிலை இழக்கச் செய்தது
கலைந்து விழித்தேன்
அனிச்சயாக எழுந்த என் கைகளைப் பார்த்தேன்
மலைச்சாமியின் கைகளாக இருந்தன
மயிர் அடர்ந்திருந்த மார்பும் அவனுடையதாக
தோள்களும் அப்படியே
நான் யாரென் உறுதிசெய்ய முடியாத நிலையில்
பதற்றம் நீடிக்கிறது.
இந்தக் கவிதை மண்குதிரையின் ”புதிய அறையின் சித்திரம்” என்ற தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. (காலச்சுவடு வெளியீடு)
அறைக்கதவின் தாழ்ப்பாள் பழுதடைந்திருக்கிறது. அதனால் கதவு சாத்தப்படவில்லை. அறைக்குள் தண்ணீர் குடுவை இருக்கிறது. நள்ளிரவில் அறைக்குள் புகுந்த காற்றினால் குடுவையின் நீர் சலனமுறுகிறது- இது கவிதை உருவாக்கும் காட்சி.
இந்தச் சலனத்தினால் கவிஞன் விழித்து தனது கைகளை பார்க்கிறான். அது மலைச்சாமியின் கைகளாக இருக்கிறது. மார்பும் தோளும் கூட மலைச்சாமியினுடையதாக இருக்கின்றன. கவிஞன் குழப்பமடைகிறான்.
இது கவிதையின் நேரடி புரிதல்.
இந்தக் கவிதையை வேறு எப்படியெல்லாம் புரிந்து கொள்ளலாம்?
1) கவிஞன் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறான். மலைச்சாமி சகோதரனாக, நண்பனாக ஏதேனும் ஒருவிதத்தில் கவிஞனுக்கு நெருக்கமானவன். விழிப்பிற்கு முன்பாக மலைச்சாமியை கவிஞன் தனது கனவில் நினைத்திருக்கக் கூடும். தூக்கக் கலக்கத்தில் கவிஞனின் கைகளும் மார்பும் தோளும் மலைச்சாமியை நினைவுபடுத்துகின்றன
2) மலைச்சாமியும் கவிஞனோடு தூங்கிக் கொண்டிருக்கிறான். தூக்கக் கலக்கத்தில் மலைச்சாமியின் கைகளை, மார்பை, தோள்களை தடவிக் கொண்டு அவற்றை தன்னுடையதாக கவிஞன் நினைத்துக் கொள்கிறன்.
3) மலைச்சாமியும் கவிஞனும் வேறில்லை. இரண்டு பேரும் ஒருவரே.
4) இவை எதுவுமே இல்லாமல் நீங்கள் ஒன்றை கற்பனை செய்கிறீர்களா? சூப்பர். அதுவும் சாத்தியம்.
இப்பொழுது நம் புரிதலில் இருந்து கற்பனைக் குதிரை ஒரு கதையை நோக்கி ஓடித் துவங்குகிறது.
இது கவிதை வாசித்தலின் இரண்டாவது படியை(Reader's space) புரிந்து கொள்ளும் முயற்சி. இப்போதைக்கு இந்த யோசனைகளில் கவித்துவமான(Poetic) புரிதல் எதுவும் தேவையில்லை. லாஜிக்கலாக கவிதையை புரிந்து கொள்வோம். பிறகு கவித்துவத்தை கண்டெடுக்க முயற்சிக்கலாம்.
குறிப்பு:
ஏதேனும் குறிப்பிட்ட கவிதைகளைப் பற்றி விவாதிக்க விரும்பினால் மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி.
2 எதிர் சப்தங்கள்:
நல்ல-கவிதை-அலசல்...
நன்றி… தொடர வாழ்த்துக்கள்... (TM 1)
நன்றி தனபாலன்.
Post a Comment