Jun 20, 2012

மின்னல் கதைகள்- கடிதங்கள்


அன்புள்ள மணிகண்டன்,

உங்களுடைய தூங்கான் (எ) சொக்கநாதன் கதையை வாசித்தேன். தூங்கி வழியும் ஒருவனின் வாழ்க்கைப் போக்கைப் பற்றின கதையில் கந்தசாமி வாத்தியார் வந்து நொந்து சென்று பிறகு அவனைத் தொடையில் கிள்ளி எழுப்ப ஒரு சிறுவன் நியமிக்கப்படும் இடம் வரை கதை சுவாரசியத்தைப் பெறுகிறது. மேலும் கல்யாணத்திற்குப் பிறகான குழந்தை பெற்ற தகவல் "வேறு எபிசோடு" என்று சொல்லிய இடத்தில் சிறிய புன்னகையுடன் எண்ண ஓட்டம் தனக்கேயான இயல்புடன் அதற்கான இடத்தினை கப்பென்று பிடித்துக்கொண்டுவிடும்.

ஆனால் அவன் நோயினால் அகப்பட்ட பின் கதை தனக்கான தடத்தை விட்டு விலக ஆரம்பித்தது கவனிக்கப்படவேண்டியது. இதுதான் கதையின் முக்கியமான இடம் என்று நினைக்கிறேன். அதி சுவாரஸ்யம் அடைந்து இதுவரையில் ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் பயணித்த கதை வாசகனை உள்ளிழுக்க ஆரம்பிக்கிறது. மேலும் இறுதி பத்தி அதற்கு முன்னர் வரை அவன் சலனமில்லாமல் படித்ததை அவனுடைய புருவம் சுருங்க சிந்தனைக்கு உள்ளாக்குகிறது. சொக்கநாதன் இறக்கவில்லை என்பதை உறுதிபடுத்தக்கூடிய இடத்தில் விவேகம் பேச வேண்டும் என சொல்ல வருகிறது. அதற்கு முந்தைய பத்திகளுக்கும் இதற்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டதே கதையில் தேக்க நிலையில்லாமல் இருப்பதற்கு செய்துவிட்டது. முழுவதும் ஒரு பயணம் இறுதியில் ஒரு முரண் தன்மையற்ற இணைப்பு.

அவனது முழுமையான புற அக தோற்றத்தைப் பற்றின தகவல்களை கதையின் மூல மத்திய பத்திகளில் தெரிவித்ததிலிருந்து சொக்கநாதன் பணத்தின் மேல் ஈடுபாடற்றவன் என்பது தெளிவு. எனவே அவனது இடையூறுகளிலிருந்து மற்றவர்களை விடுவிக்க அவன் விரக்தி ஏற்பட்டு தற்கொலை என்கிற முடிவை எடுத்ததாகத் தெரியவில்லை. அவன் பைக்கை எடுத்ததே அவனுக்கு கிடைக்காத சுதந்திரத்தை சிறிதேனும் அனுபவிக்கவே. அதே போல வண்டி ஓட்டும்போது தூங்கி வழிந்து வண்டியை ரயில்வே ட்ராக்கில் விட்டுவிட்டதாக ஒரு சந்தேகம் வந்தாலும் , ஒரு வட்டத்தில் அடைபட்ட போது அவன் உணர்ந்த மன நிலையில் அந்த தூங்கும் வியாதியிலிருந்து குணமடைந்ததை அவன் மனம் அவனுக்குரிய வெளிப்புறத்தை அணுக துடிக்கிறது என்பதனால் இந்த முடிவையும் சொல்ல முடியாது. இத்தகைய விரிவுபடுத்துதலை வாசகனிடத்தில் படைப்பானது அப்படைப்பாளியின் சாயலின்றி அளிக்கிறது.

ஒரு வகையில் வசனங்கள் தேவையற்ற காட்சிப்படமாகவும்  இக்கதையை சொல்லலாம். இதற்கு முன்னர் நீங்கள் எழுதிய "அசைவுறாக் காலம்" , "மழையில் முளைத்த காமம்" போன்ற கதைகளும் முழுமையான விரிவாகத்துக்குரியதே. வாசகன் அடைய வேண்டிய தேர்ந்த இடத்துக்கு இத்தகைய படைப்புகள் முதல் உதாரணம்.
                                                       
அன்புடன்,
சிவகுரு.
                                                                   ***

அன்புள்ள சிவகுரு,

வணக்கம்.

இந்தக் கதை இத்தனை விரிவான கடிதத்திற்கு தகுதியானதா என்று கூட சந்தேகமாக இருக்கிறது என்றாலும் உங்களின் மின்னஞ்சல் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. கதைகளை எனது எழுத்துப்பயிற்சிக்கான கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். சுவாரசியம் மட்டுமே அதில் அடிப்படையாக இருக்கட்டும் என்பதை நான் விரும்பியே செய்கிறேன்.

இது போன்ற விரிவான மின்னஞ்சல்களைத் தவிர்த்து ஒரு வரி அல்லது இருவரிகளில் நிறைய மின்னஞ்சல்களை மின்னல்கதைகள் பெற்றுத்தருகின்றன.

“இப்போ என்ன சொல்ல வர்ற? முழுமையா சொல்லு” “தீரன் சின்னமலையை வம்பிக்கிழுப்பதை நிறுத்திக் கொள். விளைவுகள் விபரீதமாக இருக்கும்” “கதை அருமை. தொடர்ந்து எழுதுங்க” என்பதெல்லாம் சில உதாரணங்கள்.

இந்த மின்னஞ்சல்கள் நான் எதிர்பார்த்ததைவிடவும் கதைகள் வேறொரு திசையில் வேறொரு வாசகர்களை நோக்கி நகர்கிறது என்பதை உணர்த்துகிறது.

தொடர்ந்து வாசியுங்கள்.

உணவு விடுதிகளில் எழுதி வைத்திருப்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது - குறைகளை என்னிடமும் நிறைகளை நண்பர்களிடமும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்