Jun 19, 2012

ஃபேஸ்புக் புரட்சியாளரும் அர்ச்சனாவும்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஃபேஸ்புக் புரட்சியாளர்கள் என்ற ஒரு பிரிவைச் சேர்க்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வரும் இந்தக் காலகட்டத்தில்தான் நவீனும் ஒரு ஃபேஸ்புக் புரட்சியாளராக உருவெடுத்து வருகிறான். கோக்குமாக்கான ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ஃப்ரொபைலில் போட்டு புரட்சிக்கு வித்திட்டவன் எல்லோரையும் தோழர் என்றழைக்கிறான். ஃபேஸ்புக்கில் அவனையும் மற்றவர்கள் தோழர் என்றுதான் அழைக்கிறார்கள். லெனின், மார்க்ஸ் என்ற பெயர்களை தெரிந்து வைத்திருப்பவன் சேகுவேரா, அம்பேத்கர், பெரியார் என்ற பெயர்களை திரும்பத் திரும்ப எழுதுவதால் அவனை புரட்சியாளன் என்று மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள். 

நவீன் புரட்சியாளனாக மாறுவதற்கு முன்பாகவே சோற்றுக்கும் சொத்துக்கும் வழி செய்திருந்தான். லேரி எலிசனின் இந்திய நிறுவனத்தில் மிகச் சிறந்த அடிமையாக இருப்பதற்கு நவீனுக்கு மாதம் அறுபதாயிரம் சம்பளம் கொடுக்கிறார்கள். புரட்சி நடத்துவதற்கும் குடும்பம் நடத்துவதற்கும் அந்தப்பணம் சரியாக இருப்பதால் சாவகாசமான புரட்சியாளராக நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

சமீபத்தில் அவனை வேறோரு மேலாளரிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதே நிறுவனத்தில்தான் பணி ஆனால் இனிமேல் புது மேலாளரின் அணியில் பணியாற்ற வேண்டுமாம். அந்த மேலாளர் மற்ற அனைத்து மேலாளர்களையும் போலவே ஆரம்பத்தில் குளுகுளு என்று பேசியதால் அவரது அணியில் சேர்வதற்கு சம்மதித்துவிட்டான். ஓரிரு வாரங்களில் அவர் தனது உண்மையான சொரூபத்தை காட்டத் துவங்கினார். கரும்பு ஆலையில் நசுக்கி மண்டை வழியாக இரு ‘ட்யூப்’ போட்டு உறிஞ்சுவது போல நவீனை உறிஞ்சத் துவங்கினார்கள். புரட்சியை காலையில் அரை மணி நேரமும் இரவில் அரை மணி நேரமும் மட்டும் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பகல் இரவு பார்க்காமல் உழைக்கத் துவங்கிய நவீன் நேற்றிரவு ஒரு மணிக்குத்தான் அலுவலகத்தில் வேலையை முடித்தான். இரவு நேரங்களில் விவேக் நகர் வழியாக பைக்கில் போவது அத்தனை உசிதம் இல்லை. பணத்தை பறித்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இப்பொழுதெல்லாம் பைக் ஓட்டும் போது அடுத்து வரப்போவது வலது திருப்பமா அல்லது இடது திருப்பமா என்பதை விடவும் ஃபேஸ்புக்கில் அடுத்த ஸ்டேட்டஸ் என்ன எழுதலாம் என்று யோசிப்பவனாக நவீன் மாறியிருந்தான். அதே ஃபேஸ்புக் நினைப்பில் விவேக் நகருக்குள் வண்டியை நுழைத்திருந்தான். அந்த பகுதியைத் தாண்டிய சாலையில் மரங்கள் மட்டுமே நிறைந்திருந்தன. பயமூட்டும் நிசப்தம் நமது புரட்சியாளனை புரட்டிப் போட்டது. திகிலோடு வேகமாக முறுக்க ஆரம்பித்தான். இரு நூறு மீட்டர்கள் தாண்டி ஒரு ஹோண்டா சிட்டி கார் நின்று கொண்டிருந்தது.

பயம் கொஞ்சம் அதிகமானது. நிற்காமல் போய்விட வேண்டும் என்று நினைத்த போது அந்தக் காரின் முன்புறத்திலிருந்து ஒரு பெண் வந்தாள். தேவதை என்ற சொல்லை கேட்டுக் கேட்டு சலித்துப் போனதால் அதை விட வேறு நல்ல சொல் ஒன்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீல நிறச்சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தாள். சட்டை இடுப்பு வரைக்கும் மட்டுமே இருந்தது. இவளுக்காக பைக்கை நிறுத்தவில்லையென்றால் தான் பிறந்ததே வீணாகப்போய்விடும் என்று அத்தனை பயத்திலும் ‘ஃபீல்’ செய்து ப்ரேக் அடித்தான் என்றால் அவளின் அழகை நீங்களே கணித்துக் கொள்ளலாம். 

அவள் பெயர் அர்ச்சனாவாம். எலெக்ட்ரானிக் சிட்டி போய்க் கொண்டிருக்கிறாள். இடையில் வண்டி நின்றுவிட்டது. ஹோண்டா சிட்டி கார் சர்வீஸ் நிறுவனத்திற்கு தகவல் சொல்லியிருக்கிறாளாம் அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. வேறு ஏதோதோ சொல்லிக் கொண்டிருந்தாள். நவீனுக்கு கார்களைப் பற்றி எதுவும் தெரியாதென்றாலும் அவள் அமர்ந்திருந்த ஸீட்டில் அமர்ந்து அவள் கை பட்டிருந்த ஸ்டியரிங்கை தடவிப்பார்த்தான். ஹார்ன் அடித்தான். கியரை முன் பின்னாக அசைத்து பார்த்தான். காருக்குள் வீசிய சுகந்தமும் அவள் பயன்படுத்தியிருந்த ஏதோ ஒரு வாசனைத் திரவியமும் கிறங்கடித்தது.

இரவும் தனிமையும் அவனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் புரட்சியாளனை தட்டி எழுப்பிவிடும் போலிருந்தது. சுதாரித்துக் கொண்டவன் ரேடியேட்டரில் தண்ணீரின் அளவை பார்க்க வேண்டும் என்றான். கேட்காமல் இருந்திருக்கலாம். கேட்டு விட்டான்.அவள் காருக்கு வெளியே நின்றவாறு உடல் முழுவதையும் உள்ளே நுழைத்து பாட்டிலில் இருந்த நீரை எடுத்தாள். இந்த வளைதல் நெளிதலில் அவளின் ஆடை இறுகிய போது நவீனுக்கு வியர்க்கத் துவங்கியது. ஒரு மிடறு குடித்துவிட்டு பாட்டிலை அவனிடம் கொடுத்தாள். அவள் தொண்டை வழியாக நீர் இவனுக்குள் சுடுநீராக கொதித்தது. பத்து நிமிடங்கள் நவீன் அந்தக் காரோடும் தனது இளமையோடும் போராடிக் கொண்டிருந்தான்.

அந்த மூன்று பேர்களும் தன்னை ஆரம்பத்திலிருந்தே பார்த்து கொண்டு நிற்கிறார்கள் என்றாள் அர்ச்சனா. ஒரு திசையையும் காட்டினாள். நவீனுக்கு சில்லிட்டது. இந்த இரவில் மூன்று பேர்களா என்றவன் விக்கித்துப் போனான். மெதுவாக திரும்பிப்பார்த்த போது கொஞ்ச தூரத்தில் நின்றிருந்தார்கள். மூன்று பேருமே புகைத்துக் கொண்டிருந்தார்கள். காரை பூட்டி சாவியை எடுத்துக் கொள்ளுங்கள் நான் உங்களை எலெக்ட்ரானிக் சிட்டியில் இறக்கிவிடுகிறேன். இங்கே நிற்பது ஆபத்து என்றான்.

அவள் தயங்கினாள். தான் மட்டும் தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாகவும் உதவிக்கு அழைக்க நண்பர்கள் இல்லை என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். இதை எதற்கு சம்பந்தமில்லாமல் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று நவீன் நினைத்த போது மூவரும் இவர்களை நோக்கி நகர்ந்து வந்தார்கள். நவீன் வெடவெடக்கத் துவங்கினான். தனது ஃபேஸ்புக்கில் பயன்படுத்திக் கொள்ளலாம் என மொபைலில் சில ‘க்ளிக்’குகளை எடுத்தான். அப்பொழுது அவர்கள் கிட்டத்தட்ட இவர்களிடம் வந்துவிட்டார்கள்.

“மே ஐ ஹெல்ப் யூ” என்றான் ஒருவன். அர்ச்சனாதான் பேச ஆரம்பித்தாள். நல்லவர்கள் போலிருக்கிறது என்று நவீன் ஆசுவாசமானான். “யாது ஊரு” என்று மற்றொருவன் நவீனை பார்த்துக் கேட்டான். “கோயமுத்....” என்று நவீன் முடிக்கும் முன்னரே நவீனின் மூக்கு மீது ஓங்கி ஒரு குத்து இறங்கியது. கொஞ்ச நேரம் ‘கிர்ர்ர்’ என்று இருந்தது. கொஞ்ச நேரம் என்பது இரண்டு அல்லது மூன்று வினாடிகள்தான். மூக்கைத் தடவிப்பார்த்தான். வழுவழுவென்றிருந்தது. இரத்தம் வருகிறது. ”ஓடுடா தமிழ்நாட்டு தே...பையா” என்றான். அடுத்து என்ன பேசினாலும் அடி விழக்கூடும் என்பதால் வண்டியை எடுக்க முயற்சித்தான். இன்னொருவன் பொடனி மீது அடித்து பர்ஸ், பைக் சாவி, மொபைல் போனை வாங்கிக் கொண்டான். 

இன்னொரு முறை அவன் கையைத் தூக்கிய போது நவீன் ஓடத் துவங்கியிருந்தான்.