”சைபர் சாத்தான்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பு மின் நூலாக மாற்றப் பட்டிருக்கிறது. பின்வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தளத்தின் வலதுபுறமாக இருக்கும் புத்தகத்தின் படம் மீது ‘க்ளிக்’ செய்தும் தரவிறக்கம் செய்யலாம்.
சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்தான இந்தக் கட்டுரைகள் 2009 ஆம் ஆண்டு புத்தகமாக ”சைபர் சாத்தான்கள்” பெயரில் உயிர்மை வெளியீடாக வந்தது.
கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது ஒரு ‘ப்ரொஜக்ட்’ வேலைக்காக சைபர் க்ரைம் குறித்தான தகவல்களைச் சேகரிக்கத் துவங்கியிருந்தேன். இவை முதலில் அந்திமழை.காம் என்ற தளத்தில் தொடராக வந்தது. எதிர்பாராத மனிதர்களிடம் இருந்து வந்த மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளும் இதனை புத்தகமாக்கும் தைரியத்தை தந்தது.
கட்டுரைகள் எழுதப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகாகவே நூலாக்கம் பெற்றது. அதாவது இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. எழுதப்பட்ட போது இவை அதிகமான உழைப்பைக் கோரின. நான் பணியாற்றிய நிறுவனத்தில்- (அதுதான் கல்லூரிப் படிப்பை முடித்து பணியில் சேர்ந்த முதல் வருடம்) ஜனவரி-மார்ச் மாத காலங்களில் அந்த ஆண்டில் ஊழியர்கள் செயல்பட்ட விதத்தின் அடிப்படையில் ஊதிய மாற்றம் செய்வார்கள். எனக்கு அந்த ஆண்டு மிக மிகக் குறைவான ஊதிய உயர்வை அளித்தார்கள். அதற்கு எனது மேலாளர் சொன்ன காரணம் “சைபர் கிரைம் பற்றிய புத்தகத்திற்காக அலுவலக நேரத்தை நீ பயன்படுத்திக் கொண்டதான புகார் இருக்கிறது”.
இந்தப் புத்தகத்தால் பொருளாதார ரீதியாக எனக்கு ஒற்றை ரூபாய் கூட கிடைக்கவில்லை. ஆனால் நான் அந்தப் பலனை எப்பொழுதும் எதிர்பார்க்கவில்லை.
கோயமுத்தூரிலும், சேலத்திலும் தலா ஒரு கல்லூரியில் சைபர் க்ரைம் பற்றிய வகுப்பு எடுத்தது இந்த நூலுக்கான அங்கீகாரம் என்று நினைத்திருந்தேன். சில மாதங்கள் கழித்து சிங்கப்பூரில் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் Elective Module ஆக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கிடைத்த தகவலே எனது உழைப்பிற்கான உச்சபட்ச மகிழ்ச்சி.
மற்றபடி இந்தப்புத்தகம் இதுவரையிலும் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்ற தகவல்கள் என்னிடம் இல்லை.
கணினியுலகில் ஒரு விதி இருக்கிறது. எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் ஆயுள் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்தான். இந்த புத்தகம் எப்பொழுது காலாவதியாகும் என்று தெரியாது. ஆனால் அடிப்படைகள் அப்படியேதான் இருக்கும் என நம்புகிறேன்.
புத்தகமாக வெளியிட்டிருந்த உயிர்மை பதிப்பகத்திற்கு நன்றி.
புத்தகத்தை வாசித்துவிட்டு ஓரிரு வார்த்தைகள் சொல்லிச் செல்லுங்கள். எனக்கு அது ஊக்கமாக அமையும்.
நன்றி.
அன்புடன்,
வா.மணிகண்டன்.
3 எதிர் சப்தங்கள்:
சைபர் சாத்தான்கள் புத்தகம் முன்னர் வாசித்தேன். நன்றாக உள்ளது தமிழக எழுத்துக்கள் பலவும் சமூகவியல் பற்றிய கட்டுரைகளில் சற்று வித்தியாசமாகஇருக்கின்றது.
இதுவரை படித்ததில்லை ! டவுன்லோட் செய்கிறேன் ! நன்றி !
மிகுந்த உழைப்பில் இந்த கட்டுரை/புத்தகம் உருவாகி இருக்கிறது. வாழ்த்துக்கள்
Post a Comment