Apr 3, 2012

தேரி கவிதையுரையாடல்: சிவந்த மண்ணில் சிதறியவை


பிப்ரவரி 18 ஆம் நாள் தூத்துக்குடிக்கு அருகாமையில் கவிதை உரையாடல் நிகழ்வை 361 டிகிரி மற்றும் அகநாழிகை சிற்றிதழ்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்தன. அம்மாவட்டத்தில் புதுக்கோட்டை என்னும் சிற்றூரிலுள்ள ஒரு தோப்பில் இருபதுக்கும் மேற்பட்ட கவிஞர்களும், கவிதை சார்ந்து இயங்குபவர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. வாசகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிருஷ்ணகுமார் தொடங்கி சமயவேல், கோணங்கி உள்ளிட்ட சென்ற தலைமுறைகளின் படைப்பாளர்கள் வரை பங்கேற்று நவீன கவிதை சார்ந்து உரையாடினார்கள். 

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சில நண்பர்கள் முந்தைய இரவிலேயே வந்திருந்தார்கள். பிறர் அதிகாலையிலிருந்து தேரித் தோட்டத்தில் கூடத் துவங்கினார்கள். ஆறரை மணியிலிருந்து நெல்லிக்காயை கடித்தும், வேம்பின் கிளைகளை முறித்தும், மயில் இறகை சேகரித்துக் கொண்டும் நீர்த்தொட்டியில் குளிக்கத்துவங்கியவர்கள் தோட்டத்தின் பெரும் நிசப்தத்தை சிரிப்பின் அதிர்வுகளால் சலனமூட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள். கதிர்பாரதி, கார்த்திகை பாண்டியன், நேசமித்ரன், கறுத்தடையான் முதலானோரை இந்த நிகழ்வில் முதன்முதலாக சந்திக்க முடிந்தது. 

பங்கேற்பாளர்களுக்கான மூன்று வேளை உணவையும் தோப்பிலேயே தயார் செய்து கொண்டிருந்தார்கள். காலை சிற்றுண்டிக்கு பிறகாக பத்தரை மணியளவில் தோட்டத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் கட்டுரை வாசிப்பு நிகழ்ந்தது. மேடைxபார்வையாளர் என்ற மரபு விலக்கப்பட்டு ஒவ்வொருவரும் பங்கேற்பாளர்கள் என்பதான ஏற்பாடு அழைப்பிதழ் வடிவமைப்பிலிருந்து, பந்தலில் இருக்கைகள் இடமமைவு வரை கவனம் கொள்ளப்பட்டிருந்ததாகத் தோன்றியது. வாசிக்கப்பட்ட கட்டுரைகளும், அவை சார்ந்த உரையாடல்களும், சமகால கவிதையின் போக்கு பற்றிய விவாதங்களும் நிகழ்வினை செழுமைப்படுத்தின. யவனிகா ஸ்ரீராமின் கட்டுரை வாசிப்பிற்கு பிறகாக கறுத்தடையானின் ‘ஊட்டு’, கணேசகுமாரனின் ‘புகைப்படங்கள் நிரம்பிய அறை’, றியாஸ் குரானாவின் ‘நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு’, மண்குதிரையின் ‘புதிய அறையின் சித்திரம், மயூ மனோவின் ‘நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திராத மழை’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் குறித்தான கட்டுரைகளை முறையே வா.மணிகண்டன், லிபி ஆரண்யா, செல்மா ப்ரியதர்ஷன், அகச்சேரன், ஆத்மார்த்தி ஆகியோர் வாசித்தனர். 

உரையாடலில் இளவேனிலின் நேர்மையான குறுக்கீடுகளும், வழமையான இலக்கிய நிகழ்வுகள் பற்றிய இளஞ்சேரலின் கருத்தும் நிகழ்வில் முக்கியமானவையாக தோன்றின. கவிதையை விட்டு உரையாடல் வேறு தளத்தை நோக்கி நகர்ந்த போதெல்லாம் லக்ஷ்மி மணிவண்ணன் சரியான திசை நோக்கி நகர்த்தும் பணியைச் செய்தார். என்னளவில் அவரின் செயல்பாடு இந்த நிகழ்வின் செறிவுத்தன்மைக்கான அடிப்படைக் காரணி. பா.ராஜா, வேல்கண்ணன், பத்மபாரதி, ந.பெரியசாமி முதலான நண்பர்கள் அதிகமும் பேசாமல் நிகழ்வினை கவனித்துக் கொண்டிருந்தார்கள். காலை அமர்விற்கு பிறகு மதிய உணவிற்காக மேசையின் முன்பாக அமர்ந்திருந்த கணத்தில் முடிவுற்றிருந்த அமர்வானது முழுமையானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்ததென உணர முடிந்தது. 

மது அருந்துவதற்கு நான் எதிரியில்லை என்றாலும் மது அருந்திவிட்டு இலக்கியம் பேசுவதில் நம்பிக்கையிருப்பதில்லை என்பதால் மதியத்திற்கு பிறகான வடிவமைக்கப்படாத உரையாடலில் கலந்துகொள்ள விரும்பவில்லை. தோட்டத்திற்குள் சில நண்பர்களோடு அமர்ந்திருந்தபோது எங்களின் முன்பாக மதுவின் வாசனையோடு வார்த்தைகள் தெறித்து உதிர்ந்து கொண்டிருந்தன. மதுவிற்கு பிறகான உரையாடலின் இறுதியில் உரையாடியவர்கள் நெகிழ்ந்தும் பிரியம் மிக்கவர்களாகவும் மாறிப்போகிறார்கள் என்ற எண்ணம் மீண்டும் ஒருமுறை உருவாகியது. அதுவரை இருந்த விறைப்பான படைப்பாளிகள் இளகிய மனம் படைத்த குழந்தைகளாக தம் ஈகோவை நொறுக்கிவிட்டு அழக்கூடியவர்களாகவும், பிரிதலின் துன்பத்தை முழுமையாக உணர்ந்தவர்களாகவும் உருவம் பெற்றார்கள்.

இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களில் சிலர் ’தன்னை’ பிரஸ்தாபித்துக்கொள்ள சில உபாயங்களைச் செய்வதுண்டு; இந்த வித்தைகள் உடனிருப்பவர்களையும் எதையாவது செய்யச் சொல்லி தூண்டிவிடக் கூடிய பலம் மிக்கவை. தம்மால் உருவாக்கப்படும் ‘பிரதி’யைத் தவிர நிகழ்த்தப்படும் அத்தனை செப்படி வித்தைகளும் கண நேரத்தில் உடைந்து போகக்கூடிய சோப்புக்குமிழிகளை மட்டுமே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்றாலும்  இத்தகைய பதட்டமான அபாயங்களைத் தாண்டி இலக்கிய நிகழ்வுகள் படைப்பாளியினுள் உருவாக்கும் மாறுதல்கள் பற்றிய யோசனை தோன்றுவதுண்டு. நிகழ்வுகளின் உரையாடல்கள் நம்மைச் சலனப்படுத்தும்பட்சத்தில் அவை ஆழ்மனதில் பதிந்துகொள்கின்றன. பின்னர் உருவாக்கும் எந்தப்படைப்பிலும் ஆழ்மனதில் பதிந்தவற்றின் தாக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. சலனப்படுத்தக் கூடிய கருத்துகள் எண்ணிக்கையின் அளவில் மிகச் சொற்பமானதாக இருப்பினும் அவை முக்கியமானவையாக இருக்கின்றன. தேரிக் கூட்டமும் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையினதாகவே இருந்தது.

நிகழ்விற்கு முன்பாக அலைபேசியில் அழைத்திருந்த நிலாரசிகன் இந்தக் கூட்டம் பங்கேற்பாளர்களின் நினைவில் இருந்து நீண்டகாலத்திற்கு அகலாதபடி சிறப்பானதாக ஏற்பாடு செய்ய விரும்புகிறோம் என்று குறிப்பிட்டார். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று ஊர் திரும்பும் போது தோன்றியது. இரவில் திருப்பூர் செல்வதற்காக ஆட்களில்லாத பேருந்தின் கடைசி இருக்கையில் கால் நீட்டிப்படுத்திருந்தேன் அதிகாலையில் தேரியின் சிவந்த மண் நிகழ்வின் நினைவுகளென இருக்கை முழுவதும் அப்பியிருந்தது. 

ஒரு இலக்கியக் கூடலை நிகழ்த்துவது தேர் இழுப்பதற்குச் சமம் என்றே நம்புகிறேன். சாத்தியப்படுத்திய நிலாரசிகனுக்கும், பொன்.வாசுதேவனுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

வா.மணிகண்டன்.

1 எதிர் சப்தங்கள்:

Php Mute said...

மேடை x பார்வையாளர் இல்லாத ஒரு இலக்கிய கூடல் அதுவும் தோட்டத்தில் நல்ல ஒரு தெரிவு என நினைக்கிறன்!