Jan 31, 2012

உரையாடல்கள்


கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவிதை குறித்து பேசியும்,எழுதியும் வரும் நவீன கவிஞர்கள் இருபத்தைந்து பேர்கள் கலந்து கொண்ட உரையாடல் மதுரையில் நடைபெற்றிருக்கிறது. என்னால் கலந்துகொள்ள முடியாத வருத்தம் இருப்பினும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்ததாக நண்பர்கள் தெரிவித்தார்கள். 

இலக்கிய உரையாடல்களே படைப்பு மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.உரையாடல்கள் படைப்புகளில் உடனடி தாக்கத்தை உண்டாக்கக்கூடியவை இல்லை.அதன் விளைவுகள் மெதுவானவை அதே சமயம் ஆழமானவை.உரையாடல்களிலிருந்து குறைந்தபட்சம் ஓரிரு கருத்துக்களாவது படைப்பாளியின் ஆழ்மனதில் பதிகிறது. இதன் பிறகாக அவன் உருவாக்கக்கூடிய படைப்புகளில் அவன் மனதில் பதிந்திருக்கும் இந்தக் கருத்துக்களின் விளைவை உணர முடியும்.இந்த விளைவு படைப்பு மொழி, உள்ளடக்கம்,வெளிப்பாட்டு முறை என ஏதேனும் ஒரு பரிமாணத்தில் வெளிப்படலாம்.இந்த விளைவுகள்தான் படைப்புகளின் திசையை மாற்றியமைக்கின்றன.இலக்கிய உரையாடல்கள் படைப்பாளிகளுக்கும் படைப்பு மொழிக்கும் இன்றியமையாதவை.வாசிப்பின் தாக்கத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது சரியான உரையாடலின் தாக்கம். 

தனக்கு உரையாடல்கள் எதுவும் தேவையில்லை என்றோ அல்லது எந்த உரையாடலிலும் தனது கருத்துக்களே இலக்கிய உலகின் உச்சபட்ச தீர்ப்புகள் என்றோ நினைக்கக் கூடிய படைப்பாளியின் படைப்புகள் அந்தப்புள்ளியோடு தேங்கிப் போகின்றன எனத் தோன்றுகிறது.

சமகாலத்தில் உற்சாகமாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்கள் தங்களுக்குள் நடத்திய உரையாடல் தமிழ்க் கவிதை மொழியில் நிச்சயம் சிறு சலனத்தை உருவாக்கும் என நம்பலாம். படைப்பாளிகள் மட்டுமே கலந்துகொண்ட குற்றாலம் பட்டறை போன்றவை இன்னமும் இலக்கிய வட்டாரத்தில் குறிப்பிடப்படுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. மதுரையில் நிகழ்வை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
                                                           ****
மிக அதிசயமாக வரக்கூடிய தபால்கள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, அலைபேசி அழைப்புகள் என எல்லாவற்றையும் விட ஒற்றைத் தபால் சுமந்து வரக்கூடிய சந்தோஷம் அளவற்றது. அப்படியொரு சந்தோஷத்தை மேட்டூரிலிருந்து ஆசைத்தம்பி என்ற பெயரில் வந்திருந்த தபால் அளித்தது. கண்ணாடியில் நகரும் வெயில் தொகுப்பினை வாசித்துவிட்டு அதிலிருந்த முகவரிக்கு கடிதம் எழுதியிருந்தார். தொகுப்பில் இருக்கக் கூடிய முகவரி என் கிராமத்து இல்லத்தின் முகவரி. அந்த முகவரிக்குத்தான் கடிதம் வந்திருந்தது. பதினைந்து நாட்களாக யாரும் இல்லாத வீட்டின் உட்புறத்தில் சாலையின் தூசிகளை சுமந்து கிடந்த கடிதத்தை பிரித்து வாசித்த சந்தோஷம் இன்னமும் தொண்டைக்குக் கீழாக குளிர்ந்து கொண்டிருக்கிறது.

கடிதத்தை முடிக்கும்  பத்தியில் நான் ஏன் கவிதை,கவிதை விமர்சனம் தவிர வேறு எதுவும் முயற்சிப்பதில்லை என்று வினவியிருந்தார்.கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இனிமேல்தான் அதற்கான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.

5 எதிர் சப்தங்கள்:

Unknown said...

பதினைந்து நாட்களாக யாரும் இல்லாத வீட்டின் உட்புறத்தில் சாலையின் தூசிகளை சுமந்து கிடந்த கடிதத்தை பிரித்து வாசித்த சந்தோஷம் இன்னமும் தொண்டைக்குக் கீழாக குளிர்ந்து கொண்டிருக்கிறது.
:)))

இராஜராஜேஸ்வரி said...

இலக்கிய உரையாடல்களே படைப்பு மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

அருமையான உரையாடல், மனம் இனித்த கடிதப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

ஜீவ கரிகாலன் said...

//மிக அதிசயமாக வரக்கூடிய தபால்கள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, அலைபேசி அழைப்புகள் என எல்லாவற்றையும் விட ஒற்றைத் தபால் சுமந்து வரக்கூடிய சந்தோஷம் அளவற்றது//மறுக்க முடியாத உண்மை ....

யியற்கை said...

கண்டிப்பாக. உரையாடல்கள் குறித்த தங்களின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன், காரணம் சமீபத்தில் தங்களுடனான என் உரையாடலில் உரையாடலின் விலைமதிப்பற்ற அனுபவத்தை உணர்ந்தேன், அந்தக் கேள்விக்கான தங்களின் பதட்டமும் அவசியமானதே.

திண்டுக்கல் தனபாலன் said...

உரையாடல்கள் குறித்த தங்களின் உண்மையை கருத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !