இன்றைக்கு
கவிதையின் விமர்சனம் என்பது மிகச் சிக்கலானதாயிருக்கிறது. விமர்சனம் என்பது
கவிதைக்கும் வாசகனுக்குமான உறவு என்பதை விட விமர்சகனுக்கும் கவிஞனுக்குமான உறவின்
அளவுகோலாகிவிடும் துக்கங்களை எதிர்கொண்டிருக்கிறோம். சமூக ஊடகங்களின்
ஆக்கிரமிப்பிற்கு பிறகு கவிதை என்ற பெயரில் முன்வைக்கப்படும் தட்டையான அல்லது
கவித்துவமற்ற வரிகளை கொண்டாட வேண்டும் அல்லது மெளனமாக
இருக்க வேண்டும் என்ற நிர்பந்தங்கள் வாசகனுக்கு உருவாகிவிடுகிறது. கவிதையின் மீதான
எந்த எதிர்மறையான விமர்சனத்தையும் பல கவிஞர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை
என்றே உணர்கிறேன். கவிதையில் ஒரு குறை சுட்டிக் காட்டப்படும் போது அந்தக் குறையைத்
தவிர்த்து வேறு அம்சங்களை பேசலாம் என்று கவிஞன் விரும்பினால்-வாசகன் அதற்கு
ஒத்துப் போகக்கூடும். ஆனால் விமர்சகன் கவிதையின் பலங்களை விடவும் பலவீனங்களையே
குறிப்பிட விரும்புகிறான். அதுவே கவிதைக்கான நல்ல சூழலாக இருக்கும்.
ஒரு மழைக்கால
இரவில் எஸ்.செந்தில்குமாரின் ‘முன் சென்ற காலத்தின் சுவை’ கவிதைகளை வாசிக்கத்துவங்குகிறேன். இந்நகரத்தில் பெய்யும் மழை இந்த நகரத்தைப்
போலவே கருணையில்லாதது. அமிலத்தை தன்னுள் புதைத்திருக்கும் மழையில் நனைவதை யாரும்
பொருட்படுத்துவதில்லை. மழையை அசட்டை செய்து அவமானப்படுத்தும் இந்தக்
கூட்டத்திமிடமிருந்து தப்பிக்க மழை இரவில் பெய்து கொண்டிருக்கிறது. கூரைகளைத்
தட்டித் தட்டி தான் வைத்திருக்கும் ஆயிரமாயிரம் கதைகளை நம்மிடையே பகிர்ந்து கொள்ள
முயற்சிக்கும் மழையைப் போலவே எஸ்.செந்தில்குமார் நமக்குச் சொல்ல ஓராயிரம் கதைகளை
வைத்திருக்கிறார். எஸ்.செந்தில்குமாரின் கவிதைகள் கதைசொல்லியின் கவிதைகள்.புனைவுகளை கவித்துவத்தின் உச்சங்களுடன் கவிதைகளில் நிறுவுவதில் செந்தில்
தனித்துவம் மிக்கவராகத் தெரிகிறார்.
இவரின்
கவிதைகளில் சொற்களை இடம் மாற்றியமைத்தல், வரிகளுடனான விளையாட்டு,
திருகல் என்ற
மொழியியல் சார்ந்த முயற்சிகள் அதிகமில்லை. புதிர்களை கவிதைக்குள் வைத்திருத்தல், புரியாத தன்மை என்ற அறிவு சார்ந்த
தூண்டுதல்களும் இல்லை. ஆனால் தனது கதை சொல்லும் பாங்கின் காரணமாகவும், இயல்பான வெளிப்பாட்டு முறையின் காரணமாகவும்
இந்தக் கவிதைகள் செந்திலின் கட்டுப்பாட்டிற்குள் வாசகனை நகர்த்துகின்றன.
தொகுப்பில்
இடம்பெற்றுள்ள ”முன் சென்ற காலத்தின் சுவை” கவிதையை ஒரு உதாரணமாகச் சொல்ல முடியும்.
கிணற்றில்
மிதக்கும் வேப்பம்பூக்களைப்
பார்த்துக்
கொண்டிருக்கிறாள் அம்மங்கை
வழக்கமாக
மின்சாரம்
தடைபடும் நேரம் நெருங்குகிறது
அப்பொழுது
கடந்துபோகையில்
அவன்
கட்டியணைத்து முத்தமிடுகிறான்
எந்த மறுப்பும்
இன்றி முத்தத்தை
ஏற்றுக்
கொள்கிறாள்
நரையின் நிழல்
படர்ந்திருக்கும்
அம்முத்தம்
தடைபட்ட
மின்சாரம் வந்ததும்
நிறம் மாறிடத்
தொடங்குகிறது
கிணற்றில் காறி
உமிழ்கிறாள்
அம்முத்தத்தை
பூக்களோடு
பூக்களாய் மிதக்கிறது
காலம் தன்னைக்
கடந்து சென்ற வேதனையில்.
முதிர்வெய்திய
நிகழ்காலத்திற்கும் முத்தம் பெற்றுக்கொண்ட கடந்துபோன இளம்பருவ காலத்திற்கும்
இடைப்பட்ட நீண்ட காலம்,
மின்சாரம்
தடைபடும் கணநேரத்தில் சித்திரமாக வந்து போகிறது இந்தக் கவிதையில். கொஞ்சம் காதல், கொஞ்சம் சலிப்பு, கொஞ்சம் துக்கம் என புரளும் இக்கவிதையின்
உருவாக்கம் நேர்கோட்டில் அமைந்திருக்கிறது. இந்த நேர்கோட்டு கவிதை உருவாக்கம்
செந்தில்குமாரின் பெரும்பாலான கவிதைகளை சிக்கலற்றதாக்குகிறது. சிக்கலற்ற கவிதைகள்
மட்டுமே சிறந்த கவிதைகள் என்பதில்லை வாதம்- ஆனால் சமகாலத்தில் கவிதைகள் எளிமையை
நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. எளிமைப்படுத்தலில் ஒரு அபாயமும்
இருக்கிறது. மிதமிஞ்சிய எளிமையாக்கம் எவ்வித கவித்துவமும் இல்லாத வெற்று வரிகளை உருவாக்கிவிடக்கூடும். இத்தொகுப்பு அந்த அபாயத்தை அனாயசமாகத்
தாண்டியிருக்கிறது.
கவிதைக்கும்
வாசகனுக்கும் இடைப்பட்ட இடைவெளி பெரும்பாலும் வாசகனை சலிப்படையச் செய்து அவனை
கவிதையை விட்டு விலகிவிடச் செய்கிறது. கவிதையை வாசிக்கும் போது கவிதையை உள்வாங்க
முடியாத போதும் அல்லது கவிதையின் மகத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியாத போதும் வாசகன்
அடுத்த கவிதைக்கு நகர்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமகாலத்தில் கவிதைகள்
என நம் முன் வைக்கப்படும் மொன்னையான, டெம்ப்ளேட் கவிதைகளின் கசகசப்புகளுக்குள்ளாக ஆசுவாசம் அளிப்பவையாக
இத்தொகுப்பின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. கவிதைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க
வேண்டும் என்ற பதட்டம் கவிஞனுக்கு இல்லை- கவிதையாகிவிட வேண்டிய ’உடனடி அவசரம்’ கவிதைக்கும் இல்லை. இந்த அவசரமின்மை/நிதானம் தொகுப்பு முழுக்க இருக்கிறது. அது
"அறுவடைக் காலத்தில்/மஞ்சள் பறவை தாமதமாக வந்திறங்கலாம்" என்ற வரிகள் தரும் காட்சிக்கு இணையானது. அவசரமின்மைதான் காரணமாக இருக்கும் என்று
அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லையென்றாலும் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள்
மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்றன.
செந்திலின்
கவிதைகள் தரும் இன்னொரு அனுபவமாக ‘இடையீட்டு’(in
between) வாசிப்பனுவத்தைச்
சொல்ல முடியும். அது நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் இடையிலானதாகவோ, உருவத்திற்கும் உருவமின்மைகளுக்கும்
இடையிலானதாகவோ,
இருப்புக்கும்
இல்லாமைக்கும் இடையிலானதாகவோ என ஏதேனும் 'இரண்டிற்கு'
இடையிலானதான
கவிதைகள்.
”காய்ந்த துணிகளில் வெயிலின்
வாசம்/வாசத்திலிருந்து சூரியன் சொட்டுச் சொட்டு நீராய்/வடிந்துகொண்டிருக்கிறது” என்ற வரிகள் மிகப் பிடித்திருந்தது. ”கூடடைந்துகொண்டிருக்கும் புறாக்கள்” என்னும் தலைப்பிலான இந்தக் கவிதையில்
உருவமுள்ள சூரியன் உருவமில்லாத நீராக வடிந்து கொண்டிருக்கிறது. கவிதையின் அடுத்த வரிகள் “உலரும் துணிகளில் புறாக்கள்/கூடடைந்து
கொண்டிருக்கின்றன” என்று முடிகின்றன.
காய்ந்து
கொண்டிருக்கும் துணிகளிலிருந்து உதிரும் நீர்த்துளிகளில் சூரியன் தெரிவது
நேரடியாகச் சொல்லப்படாத ஆனால் புரிந்துகொள்ள சிரமமில்லாத காட்சி. இதன் தொடர்ச்சியாக இருக்கும் 'கூடடையும் புறாக்கள்' என்பது எளிதில் பிடிபடாத படிமம். புறாக்கள்
ஏன் துணிகளில் கூடடைய வேண்டும் என்ற வினா எழும் போது- கவிதையில் வரும் புறா, புறாவைத்தான் குறிக்கிறதா என யோசனை
உருவாகிறது. இதைத்தான் ‘இடையீட்டு’ வாசிப்பு அனுபவம் என நினைக்கிறேன். உருவத்திற்கும் உருவமின்மைக்கும் இடையில்
வாசகனுக்குள் உருவாக்கப்படும் சிந்தனையோட்டமும், ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு தடையின்றி கவிதை நகர்வதும், நகரும் கவிதையானது தன்னோடு சேர்த்து வாசகனின்
மனநிலையை இடம் மாற்றுவதும் இந்தத் தொகுப்பில் தொடர்ந்து நிகழ்கிறது.
"இடைப்பட்ட" அனுபவத்தை தரக்கூடிய
கவிதைகள் முதல் வாசிப்பிலேயே புரிந்துகொண்டாலும் கூட இன்னும் சில முறைகள்
மறுவாசிப்பு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். பிரெஞ்ச் விமர்சகர் ரோலண்ட் பார்த்தெஸ் "மறுவாசிப்பை மறுப்பவர்கள் பெரும்பாலும் ஒரே
பிரதியை எல்லா இடத்திலும் வாசிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டது செந்தில் குமாரின்
கவிதைகளுக்கு சரியாக பொருந்தி வருகிறது. இந்தக் கவிதைகளின் பலமாக ஒவ்வொரு
வாசிப்பிலும் அது காட்டும் நுண்ணிய வித்தியாசத்தை குறிப்பிட முடியும்.
”மாலையில் தலை முடியை
அவிழ்த்துச்/சிக்கெடுக்கிறாள் வீடு திரும்பிய மாணவி/முடிகளிலிருந்து உதிர்கின்றன
உதிர்கின்றன/அவ்வளவு ஆண்களின் கண்கள்” என்பது தொகுப்பில் இன்னும் ஒரு கவிதை. வீடு
திரும்பும் மாணவியை ஆண்கள் பார்க்கிறார்கள், பெண்களும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் உதிரும் கண்கள் ஆண்களின் கண்கள்
மட்டுமே- ஆண்களின் கண்களுக்கு தரப்படும் அழுத்தம் கவிதையை வாசிப்பவனை திசை
மாற்றுகிறது. இத்தகைய கவனமான சொற் பயன்பாடுகளை கவிதைகளில் பரவலாகவே உணர முடிகிறது.
செந்தில்குமாரின்
கவிதைகள் எளிய மனிதனின் கவித்துவ பார்வையிலிருந்து எழுதப்படும் கவிதைகள்- இவை
அன்றாட வாழ்க்கையில் சாமானியர்கள் எதிர்கொள்ளும் காட்சிகளின் கவித்துவ எழுச்சி. "..எம்பிராய்டரி வேலை செய்யும்/பெண்ணின் கைகளிலிருந்து/உதிர்ந்து
கொண்டிருக்கின்றன/அபூர்வமான சில பூக்கள்" என்பது எஸ்.செந்தில்குமாரின் கவிதைகளுக்கும்
பொருந்திப்போகிறது;
இவரின்
கவிதைகளில் எளிய காட்சிகளிலிருந்து அபூர்வமான கவித்துவ தெறிப்புகள் உதிர்கின்றன.
இந்தக் கவிதைத்
தொகுப்பில் ’போல’ என்ற சொல் விரவிக்கிடக்கிறது. ‘சங்குப்பூவின் வடிவம் போல’ ‘ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர்
பறவைகளைப் போல’
‘காத்திருப்பேன்
இப்போது போல’ என்பன சில உதாரணங்கள். கவிதையில் 'போல' என்பதே துருத்தல்தான். உரைநடையில் ஏதேனும் இரண்டை ஒப்புமைப்படுத்த ’இது அதைப் போல’ எனச் சொல்வது சுலபமானதாகிவிடுகிறது. இந்தச் சுலபமானதை கவிஞன் செய்யத்
தேவையில்லை. இதை செந்தில் குமார் தவிர்த்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம்
என்பது என் அபிப்பிராயம்.
கணிதவியலிலும், இயற்பியலிலும் மூன்றாம் பரிமாணம் என்பது
வரையிலும் சற்று தெளிவு இருக்கிறது. நான்காம் பரிமாணம் என்பது என்னவாக இருக்கும்
என்பது ஒரு போதும் தெளிவாக புரிந்ததில்லை. கணிதத்திலும் தத்துவவியலிலும் இதற்கான
தெளிவான வரையறை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் வெளியையும் காலத்தையும்(Spacetime) இணைப்பது நான்காம் பரிமாணம் என்று ஏதோ ஒரு
குறிப்பினை கல்லூரிக்காலத்தில் படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த பரிமாணங்களுடன்
கவிதையை உறவுபடுத்தினால் கவிதை என்பது நான்கு பரிமாணங்களையும் தாண்டி- வெளியையும், காலத்தையும் தாண்டிய இன்னொரு பரிமாணத்தில்-ஐந்தாவது பரிமாணத்தில் இயங்குகிறது எனலாம். என்னளவில் தொகுப்பின் அனைத்து கவிதைகளையும்
மிகச் சிறந்த கவிதைகள் என்று பொதுமைப்படுத்த முடியாவிட்டாலும் ”முன் சென்ற காலத்தின் சுவை” தொகுப்பின் கவிதைகளை ஐந்தாம் பரிமாணத்தை
புரிந்துகொள்ள உதவும் கவிதைகளாகக் கருதுகிறேன்.
நன்றி: காலச்சுவடு, பிப்ரவரி’2012
4 எதிர் சப்தங்கள்:
ஆகா அருமையான பதிவு
முன் சென்ற காலத்தின் சுவை- கவிதை இயல்பாய் அமைந்துள்ளது.
தேன் சொட்டு மிதக்கிறது தங்கள் பதிவில்.மிக்க நன்றி
நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி !
Post a Comment