கவிதை ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொருவிதமான பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. "இதுதான் கவிதை" என்று எவ்விதமான தீர்க்கமான முடிவுக்கும் கவிதை வாசகனாலும் கவிதையின் விமர்சகனாலும் வர முடிவதில்லை. கவிதையின் இந்த நீர்மைத்தன்மைதான் மற்ற எந்த இலக்கிய வடிவத்திலிருந்தும் அதனை தனித்துவமாக்கிக்காட்டுவதாக தோன்றுகிறது. கவிதை, கவிஞனின் அபத்தங்களின் வழியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் முழுமையாக நம்புகிறேன். அபத்தங்களின் கோர்வைதான் கவிதைக்கான எல்லையை யாராலும் நிர்ணயிக்க முடியாததாக மாற்றுகிறது. அபத்தத்தை உதறிவிட்டு அடுத்தவர்கள் தன்னை கவனிக்கத் துவங்குகிறார்கள் என்பதனை கவிஞன் உணரும் போதும், அவன் அடுத்தவர்களின் கவனத்தை யாசிக்கும் போதும் கவிதை பொலிவிழக்கத்துவங்குகிறது.
சமீபகாலத்தில் எதிர்கொண்ட ஈழத்து கவிஞர்களின் கவிதை தொகுப்புகளை ஒருசேர வாசிக்கும் போது நீர்மைத்தன்மைxஅபத்தம் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்காமல் இருக்க முடியவில்லை. தற்கால ஈழத்தின் கவிதைகளை குறிப்பிட்ட வரையறைக்குள்- அதன் வடிவம், உள்ளடக்கம், கவிதை மொழி என குறிப்பிட்ட அம்சங்களின் மூலமாக தொகுக்க முடியுமா என்று முயற்சித்தால் இயலாது என்றே தோன்றுகிறது. தமிழின் பெரும்பான்மையான தற்கால கவிதைகளை குறிப்பிட்ட சில அம்சங்களின் மூலமாக தொகுக்க முடிவதில் இருக்கும் அதே சிக்கல்கள்தான் தற்கால ஈழக்கவிதைகளை தொகுப்பதிலும். மிகச் சமீபமாக வாசித்த அனார், தீபச்செல்வன், தமிழ்நதி, ரிஷான்செரீப், மாதுமை, அலறி, ஆகர்ஷியா, ஃபஹீமாஜஹான் என சில கவிஞர்களின் கவிதைகளில் இருந்தே இந்த முடிவுக்கு வர முடிந்திருக்கிறது. இவர்கள் மட்டுமே ஈழக்கவிஞர்கள் இல்லையென்றாலும் இவர்களை நிராகரித்துவிட்டு தற்கால புலம்பெயர் அல்லது ஈழக்கவிதைகளைப் பற்றி பேச முடியும் என்று தோன்றவில்லை. மேற்சொன்ன கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேர வாசித்தாலும் கவிதைகளை தொகுத்து கட்டுரையாக்குவாக்க அல்லது ஒப்பீட்டு விமர்சனமாக செய்ய முயலும் போது நேர்த்தியாக முடிக்க முடியும் என்று தோன்றவில்லை.
ஈழத்தின் மூத்த கவிஞர்களை சு.வில்வரத்தினம், வ.ஐ.ச.ஜெயபாலன், புஷ்பராஜன், சிவரமணி, சேரன், திருமாவளவன், செழியன் என்ற வரிசையில் மனதில் புரட்டினால் போர்ச்சூழல் குறித்தான கவிதைகளையே இந்த படைப்பாளிகளின் முக்கியமான கவிதைகள் என்று என்னால் சொல்ல முடிகிறது. ஆனால் தற்கால ஈழக கவிஞர்களின் முக்கியமான கவிதைகள் என்று எனக்குப்படுவதை தொகுத்தால் போர்ச்சூழல் தாண்டிய கவிதைகளையும் காண முடிகிறது. விதிவிலக்காக தீபச்செல்வனின் முக்கியமான கவிதைகள் பெரும்பாலும் போர்ச்சூழல் சார்ந்த கவிதைகளாகத்தான் இருக்கின்றன.
இரத்தத்திற்குள்ளும், துப்பாக்கி ரவைகளின் பயணத்தினூடாகவும் வாழும் கவிஞனின் பதிவுகள் அவை. மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் தீபச்செல்வனின் கவிதைகள் ஈழத்தின் துக்கங்களுக்கும் அந்த நிலம் எதிர்கொண்ட குரூரங்களுக்கும் சாட்சியாகி இருப்பவை. இரத்தத்தின் ஈரப்பசைகளையே இவரின் பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. அந்த நிலத்தின் வேதனையும் பலிகளும் நிறைந்த நாட்களில் அவற்றை அந்த மண்ணிலிருந்தே பதிவு செய்தவை தீபச்செல்வனின் கவிதைகள். இந்தக் கவிதைகள் வாசிப்பவனின் மயிர்க்கால்களைச் சில்லிடச் செய்கின்றன என்பதே அதன் பலம். 'சில்லிடச் செய்தல்' மட்டுமே கவிதையின் அடையாளமாக இருப்பதில்லை. கவிதையின் உண்மைத் தன்மை அந்த கவிதைக்கான அடையாளமாகிறது. தீபச்செல்வனின் கவிதைகளில் இருக்கும் தனித்துவமாக இதை குறிப்பிடுவேன். இந்த தனித்துவத்திற்காக ஈழத்தின் தற்கால கவிஞர்களின் பிரதிநிதியாக தீபச்செல்வனின் கவிதைகளை கவனிக்க முடிகிறது.
பின்வரும் ஒரு கவிதையை வாசித்துவிட்டு தீபச்செல்வனின் பிற கவிதைகளை வாசிப்பது பொருத்தமாக இருக்கும்.
"எருக்கலை பூக்களை சூடியபடி எனது காதலி
குழிகளில் இருந்து எழும்பி வருகிறாள்
எருக்கலை மரத்தின் வேர்களில்
சகோதரனோ முகத்தை பரவியிருக்கிறான்
குழந்தைகளோ எருக்கலை இலைகளை வாசிக்கின்றனர்
மண்ணுக்கடியில் அவர்கள் இருக்கிறார்கள் என்று
பிதட்டுகின்றன குழந்தையாகிய தாயின் வார்த்தைகள்"
கவிதை தரும் பதட்டம் விரல்களை நடுங்கச் செய்கிறது. எருக்கம் பூச்செடியை என் கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எதிர்கொள்கிறேன். இதுவரை அதன் வெண்மை படர்ந்த இலைகளும் ஊதாநிறம் விரவிய வெண்மலர்களும் தவிர்த்து வேறந்த விதத்திலும் அது கவனத்தைக் கோரியதில்லை. இந்தக் கவிதையை வாசித்த தினத்திலிருந்து எருக்கம் செடி உள்ளூர அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அதிர்வினை எழுத்துக்களாலும் வார்த்தைகளாலும் மட்டுமே விவரிக்க முடியும் என்று தோன்றவில்லை. வெம்மையில் தழைத்து நிற்கும் எருக்கம் கோடைக்கும் வறட்சிக்குமான குறியீடு. இங்கு எருக்கம்செடி மரணத்தின் குறியீடாகிறது. அந்த மரணம் வெம்மையில் நிகழும் மரணம். இம்மரணங்க்கள் அதீத பீதி மிகுந்தவை.வெம்மையையும் பீதியையும் கவிதை குறிப்புணர்த்துகிறது. கவிதையை வாசித்துச்செல்பவன் 'குழந்தையாகிய தாயின்' என்ற சொல்லில் தேங்கி விடக் கூடும். அவள் ஏன் குழந்தையாகிறாள் என்பதற்கான விடை தேவைப்படுகிறது. எந்த அதிர்ச்சியையும் தாங்கி மீண்டு வருபவள்தானே தமிழ்ப்பெண். அப்படித்தான் இங்கு காலம்காலமாக படிமமாக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய மனவலிமை கொண்ட பெண்ணை குழந்தையாக்கிய அதிர்ச்சி எத்தகையது என்பதான வினாக்களில் மனது சுற்றி வருகிறது. இந்த வினாவுக்கான பதில் முந்தைய வரிகளில் இருக்கிறது. அத்தனை உறவுகளையும் மரணத்திற்கு தாரை வார்த்துவிட்டு பிதற்றிக் கொண்டிருக்கிறாள் தாய்.
"குழந்தையின் சோற்றுக்கிண்ணத்தில்
நிரம்பியிருந்தது மரணம்"
என்ற வரிகள் தரும் காட்சிகளை விட்டு நகரமுடியாதபடி இருக்கிறது அதன் ஆழம். எத்தனை குரூரமான மனம் உடையவன் என்றாலும் அவன் குழந்தையிடம் இரக்கக் குணமுடையவனாக இருப்பான் என்பது நம் கற்பிதம். இந்த அடிப்படைதான் அடுத்தவனால் தன் உயிர்போகும் சூழலில் ஒருவன் கடைசியாக பிரயோகப்படுத்தும் சொற்கள் "நான் புள்ளகுட்டிக்காரன்" என்பதாக இருக்கிறது என ஒரு மனோவியல் நூலில் வாசித்தேன். ஆனால் குழந்தைகளும் கூட போர்ச்சூழலில் எந்தவிதமான விதிவிலக்கும் இல்லாமல் கொல்லப்படுகின்றன. ஒரு இனத்தை அழிப்பதற்கு முதலில் அந்த இனத்தின் குழந்தைகளை அழிக்கிறார்கள் அரக்கர்கள். வன்மம் மிகுந்த மனிதர்களின் முகங்கள்தான் இவ்வரிகளில் புதைந்து கிடக்கின்றன. ஒரு நிழற்படமும், சலனப்படமும் தொந்தரவு செய்ய முடியாத ஒரு மனதை இரு வரிகள் தொந்தரவு செய்துவிட முடியும் போலிருக்கிறது.
(2)
கவிதை ஒரு குவியத்தை நோக்கி நகரவேண்டியதில்லை அல்லது அது வேறு எதையும் சுட்ட வேண்டியதில்லை.(Pointless) வன ஓடையின் திசையின்மையைப் போலவே கவிதையும் தன் நகர்தல் பற்றிய பிரக்ஞையின்றி இருக்கலாம். இந்த திசையின்மையையும் நவீன கவிதைகளின் ஒரு கூறாகவே பார்க்கப்படவேண்டும். தீபச்செல்வனின் கவிதைகளுக்குள்ளாக இந்த அம்சம் இருக்கிறது. அதாவது கவிதையின் சில பத்திகள் இந்த திசையின்மையுடன் இருக்கின்றன.ஆனால் ஒரு கவிதை முழுவதையும் வாசிக்கும் போது அந்த அனுபவம் முழுமையாக கிடைக்கிறது என்று சொல்ல முடிவதில்லை.
"வழிநெடுக அழிக்கப்பட்ட
கிராமத்தின் ஊமைத்துயரம்
கொட்டிக்கொண்டே போனது
துயரத்தை மணந்து கிராமமும்
அதைத்தூக்கியபடியும் பறவையும்
அடைபட்டுக் கொண்டிருந்தது"
மேற்சொன்ன கவிதைக்காட்சி "பறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்" என்ற கவிதையில் இருக்கிறது. இக்கவிதையின் பத்திகளும் மேற்குறிப்பிட்ட பத்தியும் கவிதையின் திசையற்ற நகர்தலை காட்சிப்படுத்துகிறது. ஆனால் கவிதையின் தலைப்பும் , ,முழுமையான கவிதையும் இந்தக் கவிதையின் திசையை அடையாளப்படுத்துகின்றன. கவிதையை கோட்பாடுகளின் அடிப்படையில் விமர்சகனுக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் வாசகனாக கோட்பாடுகளை கொஞ்சம் நகர்த்திவிட்டு கவிதையை மட்டுமே வாசிக்க மனம் விரும்புகிறது.
கவிதை மனம் வாய்க்கப்பெற்றவனுக்கு துக்கத்திலும் நடுக்கத்திலும் கவிதையே அவனது கரம் பற்றும் ஆறுதலாக இருக்கக் கூடும் என்பதனை தீபச்செல்வனின் கவிதைகள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நகரம் வெறிச்சோடிய போதும், கிளைமோர் தாக்குதலில் மனிதப் பணியாளர் பலிகொள்ளப்படும்போதும், முக்கிய சாலை பயன்பாட்டிற்கில்லை என பூட்டப்படும் போது, கவிஞன் ஒருவன் கொல்லப்படும் போது இவருக்கும் கவிதையே வேதனையின் வடிகாலாக இருந்திருக்கிறது.
"உடைந்த வானத்தின் கீழாக
நிலவு
தொங்கிக் கொண்டிருந்தது
நட்சத்திரங்கள் பேரிரைச்சலோடு
புழுதியில் விழுந்துகிடந்தன"
எந்தக் கணத்திலும் குண்டுகள் தம் தலைமீது விழக்கூடும் என்ற நிலையில் பதுங்குழியில் இருப்பவன் இயற்கையும் அழகியலையும் சிதைத்துவிடவே விரும்புகிறான் அல்லது குறைந்தபட்சம் அவற்றை உதாசீனப்படுத்துகிறான். அடுத்த கணம் பற்றிய நிச்சயமின்மை அவனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் போது மென்மையான உணர்வுகளுக்கு அவன் இடம் அளிப்பதில்லை. இந்த புரிதலே எனக்கு முந்தைய வரிகளில் உருவாகிறது.
"எனது அறையைச் சூழ்ந்து வந்தன
பல மிருகங்கள்
இரவைக் கடித்து குதறிய
மிருகங்களின் வாயில் கிடந்து
இரவு சீரழிந்தது
நிறுத்தப்பட்ட துப்பாக்கிகளின் முன்பாக
எனது இரவின் பாடல்
விழுந்து சிதறிக் கிடந்தது
இன்னும் எனது காதலி
அறை போய்ச்சேரவில்லை"
ஷெல்களுக்குள்ளும், எறிகணைக்குள்ளும் வாழ்பவனும், களத்தில் ஆயுதம் ஏந்தியவனும் காதலிக்காமல் இருப்பதில்லை. ஆனால் அந்தக் காதல் எளிமையானதில்லை.அதன் சிக்கல்களும் எதிர்கொள்ளும் ஆபத்துக்களும் வெறும் காதலுக்கானது மட்டுமில்லை. அவர்களின் உரிமைக்கும், அந்தரங்கத்திற்கும், உயிருக்கும் ஆனது. இதை மேற்சொன்ன கவிதை வரிகள் துல்லியமான படமாக்குகிறது.
(3)
தீபச்செல்வனின் கவிதைகளில் உரிமை கோரல் இல்லை, தாம் இழந்துவிட்டவைகளுக்காக அடுத்தவர்களின் கருணை கோரல் இல்லை, புலம்பல்கள் இல்லை- ஆனால் கவிதைகளை வாசித்து முடிக்கையில் அவர்கள் இழந்த உரிமைக்காக ஒரு கணம் யோசிக்கிறேன்; அவர்களின் இழப்புகளுக்காக சற்றேனும் விசனப்படுகிறேன்; அவர்களின் துக்கங்களுக்காக சிறிதேனும் புலம்புகிறேன். கவிதைகளில் இருக்கும் துருத்தலின்மையை இவரின் கவிதைகளின் முக்கிய அம்சமாக சொல்லத் தோன்றுகிறது.
"ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி: யாழ் நகரம்"
என்ற கவிதை ஒரு காட்சியை சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிறது. அந்தக் கவிதையில் கவிஞன் வருந்தவில்லை; கோபப்படவில்லை, எந்தவிதமான உணர்ச்சியுமில்லாத செய்தி அறிவிக்கும் வானொலிப்பெட்டியென இருக்கிறது கவிதை. இனந்தெரியாத பிணமும் அதற்கு முந்தைய வரி சுட்டும் உணவகம்- குறிப்பாக கொத்து ரொட்டிக் கடையும் அதன் பிறகான அமைதியும் உருவாக்கும் ஒரு வெளி வாசகனுக்குள்ளாகவும் அமைதியை உருவாக்குகிறது. அது வெறுமையான அமைதி.அந்த அமைதி வாசிப்பவன் யோசிப்பதற்கான பெரும் இடத்தை அளித்துவிடுகிறது. இதுவே வாசகனுக்கும் கவிதைக்குமிடையேயான உறவு. இத்தகைய கவிதை-வாசகன் உறவை தனது ஒவ்வொரு கவிதையிலும் தீபச்செல்வன் உறுதிப்படுத்துகிறார். இதையே தீபச்செல்வனின் முக்கியமான பலமாக நான் கருதுகிறேன்.
"இந்த நகரத்தில் மட்டும்
ஏதோ ஒரு விதத்தில்
மனிதர்கள் தீர்ந்து கொண்டிருக்கிறார்கள்
தங்கள் பிள்ளைகளை
மரணங்களுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு
புதைந்துபோன தாய்மார்களின்
கண்ணீரில் எரிந்த நகரம்
சூடேறிக்கொண்டிருந்தது"
துப்பாக்கிகளுக்கு முன்பாகவும் வேட்டை மிருகங்களின் கோரப்பற்களுக்குமிடையில் காதலும் உறவுகளும் அகப்பட்டுக்கொள்கின்றன. மனிதர்கள் தீர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சொற்பிரயோகம் கவனிக்கப்படத்தக்கது. தீர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறா ர்கள் என்றிருக்க முடியும். அப்படியிருப்பின் அது தரக்கூடிய பொருள் வேறு. தீர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எப்படி தீர்கிறார்கள் என்பதனை ஒரு கேள்வியாக வைத்திருக்கிறது- மர்மமான முறையில் தீர்கிறார்கள். இந்த நகரம்தான் குழந்தைகளை இழந்துவிட்ட தாய்களின் "கண்ணீரில் எரிந்தது". இப்பொழுது சூடேறிக் கொண்டிருக்கிறது. இப்படியான சொற்களின் விளையாட்டை கவிதைகளில் சாவகாசமாக நிகழ்த்துகிறார்.
தீபச்செல்வனின் "பதுங்கு குழியில் பிறந்த குழந்தை" தொகுப்பாகட்டும், தனது வலைத்தளத்தில் அவர் எழுதும் பிற கவிதைகளாகட்டும்- அந்தக் கவிதைகள் சுற்றி வருவது மிகச் சிறிய வட்டமே. போர்ச்சூழலில் இன்னல்படும் மக்கள், தானும் தன் குடும்பமும் எதிர்கொள்ளும் வாதைகள், சண்டையில் உருமாறும் நகரமும் நகரத்தின் அங்கங்களும். இது எல்லா கவிஞனுக்கும் கிடைக்காத அனுபவம். அனுபவத்தை நேரடி சாட்சியாக எந்தவிதமான வெற்று அலங்காரமும் இல்லாமல் பதிவு செய்கிறார் தீபச் செல்வன். இந்த நேர்மையான சாட்சியமே என்னை தீபச்செல்வனை இக்காலத்திய மிக முக்கியமான ஈழக் கவிஞனாக குறிப்பிடச் செய்கிறது.
இவரது பெரும்பாலான கவிதைகள் சொற்களுக்காகவும், நேர்த்திக்காகவும் காத்திருக்காத கவிதைகள். செதுக்கப்படாத சொற்களின் அடுக்குகளாகவே இந்த கவிதைகளை காண்கிறேன். நேர்த்தியின்மையும், சொற்சிக்கனமின்மையும் கவிதையின் பலவீனமாகத் தென்படுகிறது. ஆனால் பாடுபொருளின் கனமும் அது தன்னுள் புதைத்திருக்கும் தீர்க்கவே முடியாத சோகமும் இந்த பலவீனங்களை வீழ்த்திவிடுகிறது. இதுவே தீபச்செல்வனை ஈழத்தின் கவிதை தொடர்ச்சியில் அழுத்தமான இடம்பெறச் செய்கிறது.
(விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10.9.2011 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம்)
நன்றி: உயிர் எழுத்து- நவம்பர்'2011
நன்றி: உயிர் எழுத்து- நவம்பர்'2011
8 எதிர் சப்தங்கள்:
வா மணிகண்டன் அவர்களுக்கு:
தாங்கள் தீபச் செல்வனின் கவிதைகளை முன்வைத்து எழுதிய ஆய்வுக் கட்டுரை சிறப்பு. யதார்த்த கவிதைகளுக்கும் ,
மனித அவலங்களை மனிதநேயத்துடன் சொல்லும் கவிதைகளுக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. கவிதை என்பதில் ஓர் வுயிர்ப்பு இருக்க வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு ஒரு கேள்விக்குறி வாழ்க்கைதான். தமிழகத்தில் பாரம்பரியமாய் இருக்கும் நம்போன்ற தமிழர்கள் இதை உணர்ந்து அவர்களுக்கு அடைக்கலமும் ஆதரவும் தர வேண்டும். மனிதனின் எண்ணங்களில் தீவிரவாதம் மட்டும் தலைதூக்காத வரையில் எந்தநாட்டுக்கு சென்றாலும் அவர்களுக்கு சிறப்பு உண்டு.
நன்றி மணிகண்டன் அவர்களே. பயனுள்ள பகிர்வு.
ஆய்வு என்றுதான் சொல்லவேண்டும்... மிக நுட்பமான வாசிப்பு திறன் உங்களுக்கு... நீங்கள் எடுத்துக்கொண்ட கவிதைகளும், உங்களின் கட்டுரையும் என்னை இன்றிரவு தூங்க விடாது என்று நினைக்கிறேன்... வணக்கங்கள்.
--
அன்பின்
ப. ஜெயசீலன்.
வணக்கம்,
தீபச்செல்வனின் கவிதைகளை வாசிக்கும் அனுபவமும், உங்கள் பதிவின் மூலம் மீட்டப்பட்ட கவிதை வரிகளோடு ஏற்பட்டு அனுபவும் வித்தியாசமானதாக இருக்கின்றன. ஒவ்வொருவரும் கவிதைகளுடன் பொருந்தும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறானவையே, இல்லையா. அவ்வாறே அமைகிறது ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளும், அவை பேசிச் செல்லும் தளம் மற்றும் பொருளும். எல்லா ஈழத்துக் கவிதைத் தொகுப்புக்களையும் நீங்கள் குறிப்பிட்டதுபோலத் தொடர்ந்து வாசித்தால் "நீர்த்துப் போதல் அல்லது அபத்தம்" என்று தோன்றுவது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் இப்படிக் குறிப்பிடுவதுகூட ஒரு வித மேம்போக்கான பார்வையே என்பது எனது கருத்து.
தீபச்செல்வனின் கவிதைகள் குறித்து நல்லதோர் பதிவு. பகிர்வுக்கு நன்றி.
நன்றி கல்யாணசுந்தரம்,ஜெயசீலன்.
@Mayoo Mano
என் கட்டுரையில் இருக்கும் ’நீர்மைத்தன்மை’ வேறு. நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் பொருள் வேறு. நான் குறிப்பிட்டிருக்கும் கவிஞனின் “அபத்தம்” (Madness of poet)வேறு நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் கவிதையின் அபத்தம் வேறு. தயவுசெய்து மீண்டும் வாசிக்கவும்.
சூப்பர் உங்களின் கவிதைகளும் கட்டுரைகளும்
இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் Day 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
தீபச்செல்வனின் கவிதைகள் குறித்த பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே.
கவிதையின் இந்த நீர்மைத்தன்மைதான் மற்ற எந்த இலக்கிய வடிவத்திலிருந்தும் அதனை தனித்துவமாக்கிக்காட்டுவதாக தோன்றுகிறது. கவிதை, கவிஞனின் அபத்தங்களின் வழியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
உண்மைதான்..
பாடுபொருளின் கனமும் அது தன்னுள் புதைத்திருக்கும் தீர்க்கவே முடியாத சோகமும் இந்த பலவீனங்களை வீழ்த்திவிடுகிறது.
பயனுள்ள ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..
Post a Comment