Sep 7, 2011

குழந்தை அழுது கொண்டிருக்கிறது


நீங்கள் பெங்களூர் வந்திருக்கிறீர்களா? சுஜாதா பாரத் எலெக்ட்ரானிக்ஸில் பணிபுரிந்த காலத்தில் நீங்கள் வந்திருப்பதாக குறிப்பிட்டால் அதை "செல்லாது செல்லாது" என்று சொல்லிவிடலாம். சாலையோர மரங்களை எல்லாம் மேம்பாலம் கட்டுகிறேன் என்றும், மெட்ரோ ரயில் கொண்டு வருகிறேன் என்றும் வெட்டிய பிறகு, ஒசூர் தாண்டியவுடன் ஐ.டி நிறுவனங்கள் கண்ணாடிக்கட்டிடங்களாக முளைத்த பிறகு, ஃபோரம்,மந்த்ரி மால் என்று திரும்பின பக்கமெல்லாம் பெரும் வணிகவளாகங்கள் வந்த பிறகு நீங்கள் பெங்களூர் வந்திருந்தால் சொல்லுங்கள். அப்படியான ஒரு அசந்தர்ப்பத்தில்தான் தன் பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு கட்டியவளையும் துணைக்கழைத்துக் கொண்டு ஒரு மே மாத ஞாயிற்றுக்கிழமையில் ரகு இந்த திரு ஊரில் இறங்கினான். பெங்களூரில் மே மாதத்தில் கூட குளிரடிக்கும் என்று சொல்லி அவனை உசுப்பேற்றியவர்கள் இன்று கிடைத்தால் சுண்ணாம்புக் கால்வாயில் குப்புற படுக்க வைத்துவிடுவான். 

ரகு வந்து இறங்கிய சமயத்தில் கிருஷ்ணராஜபுரம் தொடரூர்தி நிலையம் வெந்து கொண்டிருந்தது. இரவிலாவது தணியுமா என்று தெரியாமலேயே ஆட்டோ பிடித்தான். "தமிழ் கொத்தா?நாக்கு கன்னடா கொத்தில்லா" என்ற போது "இங்க அத்தினி பேருக்கும் தமிழ் தெர்யும் சார்,பரவால்ல தமிழ்லயே பேசுங்க" என்றார் ஆட்டோக்காரர். அது அவனை நக்கல் அடிப்பது போல் இருந்தது என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த இடத்தில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். பற்களே தெரியாமல் ஒரு சிரிப்பு, நேருக்கு நேராக பார்க்காமல் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடிப்பது போலவோ, மீட்டரை போடுவது போலவோ வேறு எதையோ செய்து கொண்டே ஒரு வாக்கியத்தை உதிர்ப்பது- இப்படியாக நீங்கள் பலவற்றையும் கோர்த்து அந்த 'சிச்சுவேஷனை' மனக்கண்ணில் கொண்டு வந்துவிடலாம். இதெல்லாம் யோசிக்க முடியாது என்று நினைத்தால் "ஆட்டோக்காரர் நக்கலடித்தார்" என்று நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ரகு பெங்களூர் வந்த கதை ஓரமாக கிடக்கட்டும்.அவர்கள் வந்து சேர்ந்த வாரத்திலிருந்தே பெங்களூரிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் அவன் மட்டும் பேருந்து பிடித்து சொந்த ஊருக்கு போக வேண்டிய கட்டாயம் வந்தது. அலுவலக நண்பர்கள் யாரையாவது பிடித்து அவர்களின் வாகனத்தில் அலுவலகத்திலிருந்து மடிவாலா போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்துவிடுவான். மடிவாலாவில் வெள்ளிக்கிழமை மாலை தொலைதூர பேருந்து பிடிப்பது என்பது வானம் ஏறி வைகுந்தம் பிடிப்பது போல்தான். வைகுந்தம் ஏறி அமர முடியாவிட்டாலும் கூட பேப்பரை விரித்து நடைபாதையில் அமர்ந்து கொள்வதுண்டு. டிக்கெட் தர வரும் கண்டக்டர் பெருமான் 'அடுத்த பஸ்ஸில் வரலாம்ல' 'ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க' என ஏதாவது சொல்வார் ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டிருக்க முடியுமா? டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நூற்று நாற்பத்தியேழாவது முறையாக 'போக்கிரி' அல்லது 'சிவகாசி'யை பார்க்க ஆரம்பித்துவிடுவான்.சேலம் செல்லும் பேருந்துகளில் இந்தப் படங்களை மட்டுமே திரும்பத் திரும்ப போடுகிறார்கள். கண்டக்டர் டிரைவருக்கு இந்த படங்கள் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் அந்த சிடிக்கள் மட்டுமே தட்டுபடாமல் அவர்கள் வைத்திருக்கும் புராதன சிடி ப்ளேயரில் ஓடும் போலிருக்கிறது. 

பெங்களூரில் கண்ணில்படுபவர்கள் ஒன்று சாப்ட்வேர் ஆளாக இருக்கிறார்கள் அல்லது கூலி வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்கள், மத்தியதர வாழ்க்கை வாழ்பவர்கள் என பல தரப்பும் இல்லாமலே ஆகிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தொலைதூர அரசு பேருந்துகளில் இடம் பிடிப்பதில் கூட இந்த பன்னாட்டு நிறுவனங்களில் கூலி பெறுபவர்களுக்கும்,  பெங்களூரில் கட்டிட வேலையோ காய்கறிக்கடை வேலையோ செய்து கூலி பெறுபவர்களுக்கும்தான் போராட்டம் நடக்கும். முதல் வகைக் கூலிகளில் இன்னொரு பிரிவு உண்டு, ஆன்லைனில் ஆம்னி பேருந்தில் டிக்கெட் பதிவு செய்து அலுங்காமல் குலுங்கி குலுங்கி பயணிப்பவர்கள். வாராவாரம் பயணிக்கும் ரகு ஒவ்வொரு வாரமும் ஆம்னியில் டிக்கெட் போட்டால் பதினெட்டு சதவீதத்தில் 'பெர்செனல்' லோன் வாங்கித்தான் சோறு தின்ன வேண்டி இருக்கும் என்பதால் அவனுக்கு அரசு பேருந்துகளே சரணம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏதோ காரணத்திற்காக வியாழக்கிழமையே ஊருக்கு கிளம்பினான். வெள்ளிக்கிழமையை தவிர்த்து வேறு எந்த நாளாக இருந்தாலும் டீலக்ஸ் பேருந்திலும் கூட கூப்பிட்டு ஏற்றிக் கொள்வார்கள். அத்தனை காலியாக இருக்கும். ரகு மடிவாலா சிக்னலில் நின்று கொண்டிருந்த போது டீலக்ஸ் பஸ் நின்றது. நடத்துனர் சேலத்துக்கு இருநூறு ரூபாய்கள் என்க, இவன் நூறுதான் என்று சொல்ல கடைசியில் நூற்றி இருபத்தைந்தில் பேரம் முடிந்தது. 

அது திருச்சி செல்லும் பேருந்து. மொத்தமாக இருபது பேர்கள் மட்டுமே இருந்தார்கள். அதிசயமாக கருப்பு வெள்ளை பாடல்களை டிவிடியில் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். 

ரகு ஏறும் போதிலிருந்தே ஒரு குழந்தை அழத் துவங்கியிருந்தது. அதற்கு பத்து மாதங்கள் இருக்கலாம். அதனை பெற்றவர்கள் அதன் அழுகையை நிறுத்த கடும் பிரயத்தனங்களை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. எலெக்ட்ரானிக் சிட்டியைத் தாண்டுவதற்குள்ளாக வீறிடத் துவங்கியது. அதன் அழுகை நிற்காது போலிருந்தது. ரகு சிறுகுழந்தையாக இருக்கும் போது ஒரு முறை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் வலிப்பு வந்துவிட்டதாகவும் கையில் சாவி கொடுத்தும் நிற்காமல் அழுது கொண்டிருந்ததாகவும் பிறகு பொன்காளியம்மன் திருநீறை நெற்றியில் பூசிய பிறகுதான் வலிப்பு நின்றதாக குறைந்து முந்நூறு முறையாவது அம்மா சொல்லியிருக்கிறார். அப்படி இந்தக் குழந்தைக்கும் வலிப்பு வந்துவிடுமோ என்பதைவிடவும் அதை தான் பார்க்க வேண்டியிருக்குமே என்ற பயமே ரகுவை அதிகம் பதறச் செய்தது. ஏதாவது பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போது அந்த இடத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவது உத்தமமான செயல். அதைத்தான் ரகு எப்பொழுதுமே செய்வான். 'ஏன் அங்கிருந்தும் நீ எதுவும் செய்யவில்லை' என்று யாராலும் கேட்க முடியாது அப்படியே கேட்டாலும் 'நான் அந்த இடத்திலேயே இல்லை' என்று சொல்லி நல்லவனாகிவிடலாம். எப்படியாவது குழந்தையின் சத்தம் எனக்கு கேட்காதவாறு ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று எத்தனித்தான்.

ஒரு பெரியவர் "டிவியை நிறுத்துங்கள்" என்றதற்கு கண்டக்டர் "அதெல்லாம் முடியாது சார்...டிப்போல பன்னிரெண்டு மணி வரைக்கும் ஓட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.பெரியவரோடு இன்னும் இரண்டு பேர்கள் சேர்ந்து கொள்ள குழந்தையின் அழுகையைவிட சண்டைச் சத்தம் அதிகமானது. ஒரு வழியாக ஓட்டுநர் தலையிட்டு டிவியை நிறுத்தியபோது சிவாஜி கணேசன் பத்மினியை நெருங்கும் சமயத்தில் புள்ளியாகி இருவரும் காணாமல் போயினர். 

அப்பொழுதும் குழந்தை அழுகையை நிறுத்தியிருக்கவில்லை. இன்னும் அழுகைச் சத்தம் அதிகமானது. இப்பொழுது ரகுவிற்கிருந்த பதட்டம் மற்றவர்களிடமும் உருவாகியிருக்கும் போலிருந்தது. 'ஏன் சார் குழந்தை அழுகிறது?''பசிக்குமோ என்னமோ' 'தட்டிக் கொடுத்துப்பாருங்க; அப்படியே தூங்கிடும்' என்று அந்த தம்பதியினரை நெருக்கத் துவங்கினார்கள். அந்த நெருக்கடிகளுக்கு முதலில் பதில் சொன்ன அவர்கள் பின்னர் அதீத பதட்டமிக்கவர்களாக என்ன செய்வதென்றே தெரியாமல் நடுங்கினார்கள். செல்போனில் யாருடனோ பேச முயன்றான். அநேகமாக அந்த முயற்சி தோல்வியடைந்திருக்கக்கூடும். 

குழந்தையின் அழுகையைவிடவும் மழை தூறிக்கொண்டிருக்கும் அந்த இரவில் அவனைச் சுற்றி எழும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான திராணியில்லாமல் போனதே அவனை இன்னமும் பதட்டமடையச் செய்திருக்க வேண்டும். அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு அவனை பேருந்துக்குள்ளேயே நடக்கச் சொன்னாள். அவன் ஏதோ சாக்குபோக்கு சொன்னான். மீண்டும் ஒரு முறை அவள் சொன்னாள் அல்லது சொல்ல முயன்றாள். அப்பொழுது அடி விழும் சத்தம் கேட்டது. ரகு எதுவுமே தெரியாதவன் போல திரும்பிக் கொண்டான்.

இப்பொழுது ரகுவிடம் திருநீறு எதுவும் இல்லை ஆனால் பொன் காளியம்மனை வேண்டிக் கொள்ள முடியும்- கொண்டான். ஆனால் அவன் ஓசூருக்கு அருகே ஆனேக்கல்லில் ஆம்னி பஸ்ஸில் இருந்து வேண்டிக் கொண்டது சிவகிரியில் இருக்கும் பொன்காளியம்மனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை போலிருக்கிறது. அதனால் பொ.கா.அம்மன் குழந்தையின் அழுகையை நிறுத்தவில்லை.

அத்திப்பள்ளியை நெருங்கிய போது அவர்கள் பேருந்தை விட்டு இறங்கிவிடுவதாக கண்டக்டரிடம் சொன்னார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஓசூர் வழியாகச் சென்றால் அத்திப்பள்ளிதான் நுழைவாயில்."வெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது ஓசூரிலாவது இறங்குங்கள்" என்றார் நடத்துனர். அவர்கள் கேட்பதாக இல்லை. எல்லோரும் குழந்தையை பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த பெண்ணின் வேதனையைப் பற்றி எந்த கவலையும் படாமல் தனது நெருக்கடிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவளை அறைந்தவனை ரகு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நல்ல போதையில் இருப்பது போலிருந்தது. அவன் எப்படியோ போகட்டும் குழந்தை அழுகையை நிறுத்தினால் போதும் என்று ஆரம்பப்புள்ளிக்கே வந்துவிட்டான்.

"இல்ல சார், இங்க இருந்து ஆட்டோ புடிச்சு திரும்ப போய்டறோம்" என்றான். ரகுவுக்கு ஏதாவது பேச வேண்டும் என்றிருந்தது ஆனால் எது தடுத்தது என்று தெரியவில்லை. அவர்கள் இறங்கிய பிறகு பேருந்துக்குள் பதட்டம் வடியத்துவங்கியது. மீண்டும் சிவாஜியும் பத்மினியும் புள்ளியிலிருந்து வந்து பாடினார்கள். ஊரில் அவனுக்குத் தெரிந்த சில கடவுள்களை வேண்டிக் கொண்டே ரகு தூங்கிவிட்டான். சேலம் பேருந்து நிலையத்தில் இறங்கியவன் அத்தனை பதட்டத்திலிருந்து எப்படி சில மணித்துளிகளில் உறங்க முடிந்தது என்று அவனது மனிதாபிமானத்தை நிறுத்தி கேள்வி கேட்கத் துவங்கினான்.மனிதாபிமானம் மெளனமாக நின்று கொண்டிருந்தது. இனி அதனோடு பேசி பலனில்லை என்பதால் ஈரோட்டுக்கு பேருந்தை பிடித்து மீண்டும் தூங்கிவிட்டான்.

சனிக்கிழமைக் காலையில் காபி கொடுக்க ரகுவை அவனது அம்மா எழுப்பினார். எழுந்தவுடன் பல் துலக்காமல் ஃபேஸ்புக்கில் தனது கடைசி ஸ்டேட்டஸ் மெசேஜூக்கு எத்தனை லைக்குகளும் கமெண்ட்களும் வந்திருக்கின்றன என்று தேடிக் கொண்டிருந்தான். அம்மா அவனைத் திட்டத்துவங்கினார் அப்பொழுது அம்மாவை திசை திருப்ப வேண்டிய கட்டாயம் அவனுக்கு. செய்தி படிப்பதாகச் சொன்னால் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார். அவன் ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டராகிவிடுவான் என்று அவனது நாற்பது வயதுக்கு அப்புறமும் அவனின் அம்மா நம்புவார் போலிருக்கிறது. உள்ளூர் செய்திகளை வாசிக்க  தினத்தந்தியின் பெங்களூர் பதிப்பை இணையத்தில் வாசிக்க ஆரம்பித்தான்.

அத்திப்பளிக்கு அருகில் சாலையோர முட்புதருக்குள் பத்து மாதஆண் குழந்தை பிணம் ஒன்று கிடைத்ததாகவும் மழையில் நனைந்திருந்த அதன் முகத்தை எறும்புகள் அரித்திருந்ததால் அடையாளம்...என்று செய்தி தொடர்ந்து கொண்டிருந்தது. விரல்கள் நடுங்கத் துவங்கின. தலையை வலிப்பது போலிருந்தது. மனைவியை அடித்தான் என்பதற்காக குழந்தையையும் புதரில் எறிவான் என்று அர்த்தமில்லை என்று ரகு தன்னை  தேற்றிக் கொண்டான். ஒரு வேளை குழந்தை இறந்து போய் எறிந்திருக்கலாம் என்றும் தோன்றியது. அப்படி இருக்காது-குழந்தை இறந்தே போயிருந்தாலும் கூட புதரில் எறிய மனம் வந்திருக்காது என்றும் நம்பினான். அவனைப்போலவே நீங்களும் அந்த அழுத குழந்தையை முன்வைத்து அதுவாகத்தான் இருக்குமோ என்று தர்க்கத்தில் இறங்கக் கூடும்.

ரகு குழந்தையை முன்வைத்து தர்க்கம் செய்யாமல் நிறுத்திக் கொண்டான். அந்தக் குழந்தையோ அல்லது வேறு எந்தக் குழந்தையோ, பத்து மாதக் குழந்தை புதருக்குள் எறும்பு தின்னக் கிடந்தது என்பதைத் தெரிந்த பிறகு எப்படி தூங்க முடியும் என்று மீண்டும் அவன் மனிதாபிமானத்தை கேள்விகேட்கத் துவங்கியிருந்தான்.

7 எதிர் சப்தங்கள்:

த. முத்துகிருஷ்ணன் said...

அதிர்ச்சியான முடிவு, உங்கள் அதிர்ச்சியை எங்களிடம் ஏற்றி விட்டீர்கள்...

Marimuthu Murugan said...

பெங்களூருவைப் பற்றிய அறிமுகம் நன்றாக இருந்தது. நான் முதன் முதலில் (2005) இங்கே வந்த ஞாபகம் வந்தது.

//எழுந்தவுடன் பல் துலக்காமல் ஃபேஸ்புக்கில் தனது கடைசி ஸ்டேட்டஸ் மெசேஜூக்கு எத்தனை லைக்குகளும் கமெண்ட்களும் வந்திருக்கின்றன என்று தேடிக் கொண்டிருந்தான். // :)))))

குறையொன்றுமில்லை. said...

பெங்களூரு பற்றி விலா வாரியா சொல்லி இருக்கீங்க.அதிர்ச்சியான முடிவுதான். அதையும் நல்லா சொல்லி இருக்கீங்க.

ஜீவ கரிகாலன் said...

paarattugal ... nalla padaippu

Anonymous said...

super

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்கும்போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html

செம்மலர் செல்வன் said...

அருமை !