Feb 28, 2011

'வறண்ட மணல்வெளிகளில் குமிழி இடும்' சுதீர் செந்திலின் கவிதைகள்


சுதீர் செந்தில் தனது கவிதைகளை மூன்று தொகுப்புகளாக வெளியிட்டிருந்தாலும் அவரது கவிதைகளைத் தொகுப்பாக இப்பொழுதுதான் வாசிக்கிறேன். உதிரிகளாக சில கவிதைகள் ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருக்கின்றன. ஆனால் உதிரிக் கவிதைகள் ஒரு கவிஞரை நமக்கு காட்டுகிறதே தவிர கவிதாளுமையை உணர்த்துவதில்லை என்பது என் அனுமானம்.

வாசகன் பல சமயங்களில் தன் மனநிலைக்கு ஏற்ப கவிதையை புரிந்துகொள்கிறான் அல்லது கவிதையிலிருந்து தனக்கான மனநிலையைப் பெறுகிறான். வாசகனாக கவிதை வாசிப்பிற்கு இரண்டு மனநிலைகள் மிகச் சாதகமானவை என நினைக்கிறேன். ஒன்று எந்தச் சஞ்சலமுமற்ற அமைதி; இரண்டாவது அமைதிப்படுத்தவே முடியாத கொதிநிலை- இந்தக் கொதிநிலை உற்சாகத்தின் துள்ளலாகவோ அல்லது துக்கத்தின் நடுக்கமாகவோ இருக்கலாம்.

அமைதியான மனநிலையில் வாசிக்கும் போது நல்ல கவிதை வாசகனின் ஆழ்மனதைச் சீண்டுகிறது. இந்தச் சீண்டலை எல்லாக் கவிதைகளாலும் நிகழ்த்த முடிவதில்லை. வாசகனுக்கு மிக இணக்கமான கவிதைகளாலேயே இந்த சாந்தமான மனநிலையில் சீண்டலை நிகழ்த்த முடிகிறது. ஒவ்வொரு கவிதைச் சீண்டலிலும் ஒரு அதிர்வினை மனம் உணர்கிறது. சில அற்புதமான கவிதைகள் ஒட்டுமொத்த மனதின் அமைதியையும் சீர்குலைத்துப் போடுகிறது. அப்பொழுது அந்தக் கவிதையைக் கொண்டாடத் துவங்குகிறான் வாசகன். மனநிலையில் சீண்டலை நிகழ்த்தாத கவிதைகளை வாசகனால் மிக எளிதாகத் தாண்டிச் சென்றுவிட முடிகிறது.

கொதிநிலையில் கவிதை வாசிப்பு என்பது இன்னொரு அற்புதத் தருணம். துன்பம் அல்லது மகிழ்ச்சி என்ற நிலையில் நிகழ்த்தப்படும் ஒரு துண்டிப்பாக கவிதை வாசித்தல் அமைகிறது. இந்த வாசிப்பிலும் வாசகனுக்கு நெருக்கமான கவிதையால் மட்டுமே அவனது மனப்போக்கில் துண்டிப்பை நிகழ்த்த முடியும். துண்டிப்பை நிகழ்த்தாத மற்ற கவிதைகளை நிராகரித்துச் செல்கிறான்.

சுதீர் செந்திலின் கவிதைகளை நண்பனின் மரணத்தை நோக்கி பயணித்த ஒரு இரவுப் பேருந்தின் நீண்ட பயணத்தில் வாசிக்கத் துவங்கினேன்.துக்கமும் நண்பனின் நினைவுகளும் தூங்கவிடாத அந்த இரவில் சுதீரின் கவிதைகள் மரணத்தின் கவிதைகளாக ஆக்கிரமிக்கத் துவங்கின.

மரணம் மிக எளிமையான நிகழ்வு. இருப்புக்கும் இல்லாமைக்கும் இடைப்பட்ட சிறு கணம். ஆனால் இந்த எளிய கணத்தைத்தான் சமூகம், உறவுகள், பிரியங்கள், சடங்குகள் என்ற புனைவுகளால் மிகுந்த சிக்கலானதாக்கி வைத்திருக்கிறோம். இந்தச் சிக்கல்கள் மிகப் புதிரான படிமங்களாகிவிட்டன. இனி எந்தக் காலத்திலும் விடை காண முடியாத முடிச்சுகளால் மரணம் மூடிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த புனைவுகளின் முடிச்சுகளை அவிழ்க்கவே மரணத்தின் கவிஞன் முயன்று கொண்டிருக்கிறான். சுதீர் செந்திலையும் மரணத்தினை விசாரணை செய்யும் கவிஞனாகவே பார்க்கிறேன்.

சுதீர் செந்திலிடம், மரணத்தின் கவிதைகளில் கடவுள் தனக்கான இடத்தை தொடர்ந்து யாசித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் கவிதைகளில் கடவுளையும் மரணத்தையும் இருப்பு,இல்லாமை என்பதன் குறியீடுகளாக ஒப்பிடலாம். ஆனால் இந்த ஒப்பீடுகள் மிகப் பழமையானவையாகத் தோன்றுகின்றன. மனோதத்துவவியலின் ஒரு பிரிவில் கனவுகளில் நாம் எதிர்கொள்ளும் மரணங்களும் தற்கொலைகளும் இனம்புரியாத பயம் என்கிறார்கள். எனக்கு கவிதைகள் என்பவை கனவுகளின் இன்னொரு வடிவம். நவீன வாழ்வு உருவாக்கும் நெருக்கடிகளும், கசகசப்புகளும் கவிஞனுக்குள்ளாக இருக்கும் மனிதனை பிழிந்து கொண்டிருக்கின்றன. அந்த மனிதனுக்கு ஆசுவாசமான கனவுகளாக கவிதைகள் இருக்கின்றன என நம்புகிறேன்.

கவிதைகளைக் கனவாக உருவகம் செய்துகொள்ளும் நான், கவிதைகளை கனவுகளைப் போலவே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். சுதீர் செந்திலின் கவிதைகள் பேசும் மரணத்தை பயத்திற்கு ஒப்பிட்டே வாசிக்க விரும்புகிறேன். பயங்களிலிருந்து விடுதலை தரக்கூடிய வஸ்துதானே கடவுளாக அவதாரம் பெறுகிறது. இந்த பயமும் இந்த நம்பிக்கையும்தான் கடவுளையும் மரணத்தையும் இணைக்கும் புள்ளியாக இவரது கவிதைகளில் இருக்கிறது.

"ஒருவேளை
நீங்கள் மரணத்தை எதிர்கொள்ள விரும்பவில்லையெனில்
கடவுளைக் கொல்வதிலிருந்து
உங்கள் குற்றச் செயல்களை மீண்டும் தொடங்குங்கள்" என்று ஒரு கவிதையில் இருக்கிறது.

"பின்பொரு நாளில்
மரணமற்ற உலகத்தில்
கடவுள் இல்லாமல் போவான்" என்பது இன்னொரு கவிதையில்

"அங்கு மரணம் தற்கொலை செய்து கொண்டு
கடவுளாகிவிட்டால்" என பிறிதொரு கவிதை.

மேற்சொன்ன கவிதை வரிகளில் மரணமும் கடவுளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இந்த வாழ்வின் அழுத்தங்களும், இயலாமைகளும் தரக்கூடிய பயங்கள் இந்தக் கவிதைகளை உருவாக்குகின்றன. இந்த பயங்களிலிருந்து விடுபடுவதற்கான காரணியாக கடவுள் என்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்த விடுபடுதலில் விருப்பமில்லாதவனாக, விடுபடலை நிராகரிப்பவனாக இந்தக் கவிஞன் இருக்கிறான். இந்த நிராகரிப்பே கடவுளின் மீதான எள்ளலாக வடிவம் பெறுகின்றன.
ஒரு கவிதையை நேரடியாக அதன் அர்த்தத்தோடு வாசிப்பது மட்டுமே நல்ல வாசிப்பனுவத்தை தந்துவிடும் போது எதற்காக கவிதைகளை ஆராய வேண்டும் என்று சமயங்களில் தோன்றியதுண்டு. எந்த வித பரிசோதனையும் செய்யாமல் கவிதை அளிக்கக் கூடிய நேரடி அர்த்தத்தை நம் வாழ்வியல் அனுபவங்களோடு நேரடியாக பொருத்திவிடலாம்.

ஆனால் அனுபவ வறட்சியின் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. தகவல் தொடர்பியலின் அசுர வேக நீட்சியால் உங்களுக்கும் எனக்கும் இன்னொரு மூன்றாமவருக்கும் கிடைக்கும் அனுபவங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. அவை தட்டையானவையும் கூட. இந்த சொற்பமான அனுபவங்களை மட்டுமே வைத்துக் கொண்டு கவிதையின் பரிமாணங்களை முழுமையாக உள்வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில்லை.இந்த அனுபவ வறட்சி நம்மை கவிதையின் உலகத்திலிருந்து அந்நியமாக்கிவிடலாம். இந்த அபாயங்களிலிருந்து என்னையும் கவிதையோடு எனக்கிருக்கும் சிநேகத்தையும் சிதிலமடையாமல் வைத்துக் கொள்ள கவிதையோடான பரீட்சைகள் தேவைப்படுகின்றன. இந்த புதிர் விளையாட்டுகள் வாதைதான். ஆனால் குடுவை சாராயத்தில் கிடைக்கும் அந்தரமான வாதை இது.

(2)
நிலம் அதிர்கிறது
மரங்களும் உயிரினங்களும்
பின்னோக்கிச் செல்கின்றன
புழுதி கொதித்து
வெளியெங்கும் படர்கிறது
இரை சிக்காமல்
நழுவிக் கொண்டே இருக்கிறது.

டிஸ்கவரி சேனலில் வரும் காட்சிதான் மேலே சொல்லியிருக்கும் இந்த வரிகள். வன வேட்டைக் காட்சியை கவிஞர் மிக தத்ரூபமான வரிகளாக்கியிருக்கிறார்.

இப்பொழுதெல்லாம் ஒரு கவிஞனோ அல்லது கதாசிரியனோ வரிகளாக்கும் காட்சிகளை மூன்று வினாடிகளில் 'விஷூவல்' ஆக்கிக் கொண்டிருக்கிறது மீடியா உலகம். "நிர்வாணத்தை மறைக்க நினைத்தவன் ஆடைகளற்ற காலவெளியில் நீந்திச் செல்கிறான்" என்று கவிஞன் உருவாக்கும் சர்ரியலிஸக் காட்சியை வி-டிவியிலோ, எம்-டிவியிலோ இரண்டு வினாடிகளில் காட்டி முடித்துவிடுகிறார்கள்.

இந்த வனவேட்டைக் காட்சியில் இது எதிர்மறையாக நிகழ்ந்திருக்கிறது. அதாவது அரை மணி நேர 'விஷூவல்' வேட்டைக் காட்சியை இந்த நான்குவரிகளில் இருந்து வாசகன் தன் மனக்கண்ணில் தொடங்க முடிகிறது.

இந்த வரிகள் இருக்கும் இடம் பெற்றிருக்கும் கவிதை வன வேட்டை குறித்தானது இல்லை. "பசிமிகுந்த உயிரைப் போலவோ/காமம்கொண்ட மிருகம் போலவோ/விரைந்து கொண்டு இருக்கிறது/அந்த உடல்" என்பது இதற்கு முந்தைய வரிகள். இந்த வரிகளைப் படித்துவிட்டு முன் சொன்ன வரிகளைப் படிக்கும் போது வேட்டைக் காட்சி நேரடியாக நினைவுக்கு வருவதில்லை. வேறு எதுவாகவோ இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இந்தக் கவிதை "மரணம்/அத்தனை ருசியாக இருக்கின்றது" என்று முடிகிறது. இப்பொழுது "விரைந்து கொண்டிருக்கும் உடல்", "வேட்டைக் காட்சி", "மரணத்தின் சுவை" பற்றிய குறிப்பு மூன்று குறிப்புகளையும் கோர்த்து வேறொரு அனுபவத்தைப் பெறலாம். அது முழுமையான வனவேட்டை.

இதே கவிதையில் இடம்பெறும் பின்வரும் வரிகள்-

"அந்தச் சுனையில்
தேன் ஊறுகிறது
பட்டாம்பூச்சிகள் சுற்றுகின்றன
எறும்புகளும்
இன்னும் பிற உயிரினங்களும்
சுவைத்துச் சரிகின்றன
மயக்கத்தில்
அளவுக்கு மீறிக் குடித்த
ஆண் எழும்புகிறான்"

ஏற்கனவே கோர்த்து வைத்திருந்த மூன்று குறிப்புகளோடு "ஆண் எழும்புகிறான்" என்ற குறிப்பை இணைக்கும் போது காமம் அல்லது உடலியல் எனக்கு உடனடியாக நினைவில் தோன்றுகிறது. ஆனால் பட்டாம்பூச்சிகள், எறும்புகள் என்ற குறிப்புகள் வேறு எதையோ எல்லாம் யோசிக்கச் செய்து கிறுகிறுக்க வைக்கின்றன. இப்படியான கிறுகிறுப்புகளை மிகச் சுவாரசியமாக இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் உருவாக்குகிறார் சுதீர் செந்தில்.

(3)

நமக்கு அந்தரங்க வாழ்வு சார்ந்த அனுபவம் என்று கிடைப்பது பெரும்பாலும் உறவுகளில் உருவாகும் சிக்கல்களும், வன்மங்களும், குரோதங்களும், துக்கங்களும், சில சமயங்களில் கசியும் பிரியங்களுமாகவே இருக்கின்றன. சுதீரின் பெரும்பாலான கவிதைகள் இந்த அந்தரங்கத்தின் வழியாகவே பயணிக்கின்றன.

புளிப்பின் சுவைபோலவும்
தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும்
கோப்பை மதுவில்
வழியும் கசப்பைப் போலவும்
இந்த இரவு சுடர்கிறது.

கவிதைகளில் அந்தரங்க வெளிப்பாடு என்பது இதுவரைக்கும் சுதீர் செந்திலின் பலமாகவே இருந்திருக்கிறது. ஆனால் சுதீரின் மூன்று தொகுப்புகளையும் ஒரு சேர வாசிக்கும் போது அந்தரங்கத்தின் சில கவிதைகளில் 'Saturation Point' ஐ தொட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. தமிழ் கவிதைகளில் பெரும்பாலும் இவற்றையே வேறு வடிவங்களில் நாம் தொடர்ந்து எதிர்கொள்ளும் சலிப்பின் காரணமாகவும் இருக்கக் கூடும். உதாரணமாக 'மெளனத்தில் மிதக்கும் வாதை' என்ற கவிதையைச் சொல்ல முடியும். "இதழ்களில் இருந்து விழும் சொற்களைச் சேகரிக்கத் தவறிவிட்டேன்" என்ற வரியை குறிப்பாகச் சொல்லலாம். இந்த வரிகள் சாதாரணமான அதே சமயம் உயிர்ப்பில்லாத கவிதை வரிகள். சுதீரின் அந்தரங்கம் குறித்தான சில கவிதைகளில் இந்த வலுவின்மையை எதிர்கொள்கிறோம்.
கவிதைகளை வாசிக்கும் போது அதன் வடிவத்தில் ஒரு 'கட்டமைப்பை' எதிர்பார்த்தே வாசிக்கப் பழகிவிட்டது மனம். கவிதையைச் சுற்றிச் சிதறிக்கிடக்கும் உதிரிச் சொற்களை நீக்கியிருக்க வேண்டும் என உள்ளூர விரும்புகிறேன். 'யாருடைய இரவெனத் தெரியவில்லை' தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் இந்த 'விரும்பும்' கட்டமைப்பில் இல்லை.இதை எதிர்மறையான விமர்சனமாக என்னால் குறிப்பிட முடியாது. இந்தப் போக்கு முக்கியமானதாகத் தெரிகிறது. கவிதை மொழியின் இன்னொரு பாதையில் இந்தக் கவிதைகள் அலைந்து கொண்டிருக்கின்றன. இறுகக்கட்டாமல் இளகி ஓடும் தன்மையை இந்தக் கவிதைகளில் காணமுடிகிறது.இவ்வாறான இளகலான கவிதைகளில் கவிஞன் சற்று கவனம் தப்பினாலும் கவித்துவமற்ற சொற்களாக கவிதை தேங்கிவிடும். இந்த அபாயத்தை பெரும்பாலான தனது கவிதைகளில் வெற்றிகரமாக தாண்டி வந்திருக்கிறார். இதற்கு உதாரணமாக "வாகன ஓட்டியின் சில குறிப்புகள்" கவிதையைக் குறிப்பிடலாம். செறிவூட்டப்பட்ட சொற்கள் எதுவும் இல்லாமல் நேரடியான வரிகளில் எழுதப்பட்டிருக்கும் கவிதை இது.

நாம் கடந்து வந்த நினைவுகளில் பெரும்பாலானவை நிலையற்ற பிம்பங்களாக கலைந்து கொண்டிருக்கின்றன. நீர்மையாக்கப்பட்ட இந்த அனுபவங்களை பிறிதொரு சமயத்தில் யோசித்துப் பார்க்கும் போது அவை வெறும் புனைவாகத் தோன்றுகிறது. இந்தப் புனைவுகள் எந்த அர்த்தமுமற்றவையாகவும் சில சமயங்களில் அமைந்துவிடுவதுண்டு. வாசகனின் மனநிலைக்கு ஏற்ப புனைவுத் தன்மையுடைய கவிதைகளை எந்த விதமான அர்த்தப்படுத்தலும் இல்லாமல் புனைவாக மட்டுமே வாசித்துவிட்டு அடுத்த கவிதைக்குச் செல்லலாம். 'நீர் நிலை' என்ற கவிதை முதன்முறை வாசிப்பில் எனக்கு இந்த அனுபவத்தையே தந்தது.

நீர் நிலை

அந்தப் புராணீகன்
வணிகனென்று ஒருவருக்கும் தெரியாது
காற்று வீசாத
நிலவு விலகிய ஒரு பகலில்
சூரியன் சும்மா சுட்டுவிட்டுச் செல்கிறான்

மழைக்காலத்தில்
குளங்கள்
ஏரிகள் நிறைந்து தளும்பியதை

ஆறுகள்
இருகரைகள் நிறைத்தபடி புரண்டு சென்றதை
புராணீகன்
தனது சாமர்த்தியத்தால் வார்த்தைகளாக மாற்றுகின்றான்.

வார்த்தைகள் மந்திர இசையென ஒலிக்கத் துவங்குகிறது
கேட்பவர்கள் மயங்கிச் சரிகின்றனர்
பின்னர் வார்த்தைகள் யாவும்
பொற்காசுகளாய் வணிகனின் கருவூலத்தில் நிறைகிறது

மகிழ்ச்சியில் திளைத்த புராணீகனின் நிலத்தில்
இப்பொழுது நீர்நிலைகள் மாயமாகிவிட்டன
பறவைகள் விலங்கினங்கள்
இல்லா நிலத்தில்
வணிகனின் ஆடைகளை புதைக்கிறான் புராணீகன்

அப்பொழுது
கருவூலத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு
ஆறு பெருகி ஓடத் துவங்கியது.
(4)

ஒப்பிடுதல் என்பதில் ஒப்புதலில்லை என்றாலும், சுதீர் செந்திலின் மூன்றாவது கவிதைத் தொகுப்பான ' யாருடைய இரவெனத் தெரியவில்லை' தொகுப்பினை வாசிக்கும் போது இரண்டாவது தொகுப்பான 'உயிரில் கசியும் மரணம்' குறுக்கிடுகிறது. இரண்டாவது தொகுப்பில் இருந்த புதிய தன்மை மூன்றாவது தொகுப்பில் இல்லையென்றே தோன்றுகிறது. இரண்டாம் தொகுப்பின் நீட்சியாகவே இந்தத் தொகுப்பு இருக்கிறது. சொற்களைப் பற்றிய கவிதைகளையும், சாத்தானைக் குறியீடாக்கும் கவிதைகளையும் தமிழ் கவிதை தாண்டி வந்திருக்கிறது. இந்த வகையான கவிதைகள் ஓரளவு வாசக மனதுக்கு 'பழக்கப்பட்டவையாகிவிட்டன'. இவை இந்தத் தொகுப்பின் குறையாகப் படுகிறது.

சுதீரை சுதீரோடே ஒப்பிடும் போது அவரின் பாடுபொருளில் இருந்த பன்முகத் தன்மை ஒருமுகப்பட்டிருக்கிறது. கவிதை உருவாக்கத்தில் எழும் பதட்டம் இந்தத் தொகுப்பில் இல்லை. கவிதை மொழியில் தனக்கான ஒரு புதிய பிரதேசத்தை கண்டடைந்துவிட்ட உற்சாகம் கவிதைகளில் கொப்புளிக்கிறது.

இந்தக் கவிதைகள் அவருடைய சொற்களில் சொல்ல வேண்டுமானால் "வறண்ட மணல்வெளிகளில் குமிழி இடும்" கவிதைகள்.

(பிப்ரவரி 27,2011 இல் விருத்தாச்சலத்தில் களம்புதிது இலக்கிய அமைப்பு நடத்திய 'கவிதை சந்திப்பு நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

4 எதிர் சப்தங்கள்:

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ்க்குறிஞ்சி இணைய இதழில்வலைப்பூக்கள் பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
தமிழ்குறிஞ்சி

Unknown said...

நல்லா வந்திருக்கு கட்டுரை மணிகண்டன்.

சுதிர் செந்திலை இதுவரை வாசித்ததில்லை. இனிமேல்தான் வாங்கிப் படிக்க வேண்டும்.

குறையொன்றுமில்லை. said...

கட்டுரை நல்லா வந்திருக்கு.வாழ்த்துக்கள்.

Anonymous said...

டேய், சுதிர் செந்திலுக்கு சொம்பா..முதலில் மனுஷ், அடுத்து கா.சு. கண்ணன், அடுத்து இவரா...உமக்கும் மழைபெய்கிறது..