ஒருவர் வாய்தா வாங்குகிறார் என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சியின் சார்பில் போராட்டம் நடத்துகிறோம் என்னும் கூத்தை எல்லாம் பார்ப்பதற்கான வாய்ப்பு தமிழக மக்களுக்குத்தான் கிடைக்கும்.
சு.முத்துச்சாமி நூற்றுக்கணக்கான பேருந்துகளில் பல்லாயிரக்கணக்கானோரை அழைத்துச் சென்று திமுகவில் ஐக்கியமானதும், கோவையில் செம்மொழி மாநாடு முடிந்த பிறகும் கொங்கு மண்டலத்தில் அதிமுக ஆட்டம் காண்கிறது என்பதான எண்ணம்தான் ஜெ.விசுவாசிகளுக்கும் கூட வந்து விட்டிருந்தது.
ஆனால் கொங்குப் பகுதியில் அதிமுகவின் செல்வாக்கு தனிப்பட்ட மனிதரைச் சார்ந்து இருந்ததில்லை என்றே பழைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. வெள்ளகோவில் துரை.ராமசாமி சுயேட்சையாக நின்றால் கூட அடுத்த வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வார் என்று சொன்னவர்கள் உண்டு. கட்சிகள் மாறிய துரை ராமசாமியை காலம் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டது.
கொங்கு மண்டலம் என்பது ஜெயலலிதாவுக்கு விசுவாசமானதோ இல்லையோ, இரட்டை இலை என்ற சின்னத்துக்கு விசுவாசமானதாகவே இருந்திருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பாக வயலோரம் அமர்ந்திருந்த தண்ணிவாக்கியிடம்( வாய்க்காலில் வரும் தண்ணீரை வயல்களுக்கு சரியான விகிதத்தில் பிரித்து பாய்ச்சுபவர். நெல் அறுவடை முடிந்த பிறகு ஏக்கருக்கு இத்தனை பொதி என்று வயல்காரர்கள் இவருக்கு நெல் கொடுப்பார்கள்) "ஜெயலலிதாவுக்கா ஓட்டுப் போடப் போறீங்க?" என்ற போது ஒரு வசவுச் சொல்லை உதிர்த்துவிட்டு அவளுக்கு எதுக்கு போடப் போறேன்? நான் ரெட்டலைக்குத்தான் போடுவேன்" என்றார். இன்றைக்கும் இத்தகைய விசுவாசமானவர்களைப் பார்க்க முடிகிறது.
கோவை செம்மொழி மாநாட்டுக்குப் பிறகாக ஒருவாறான மிதப்புடன் இருந்த திமுக விசுவாசிகளின் தலையில் இடியை இறக்கிய, அதிமுகவின் போராட்டத்துக்கு கூடிய கூட்டம் நிச்சயம் திமுகவின் தலைமை வரைக்கும் ஒரு அதிர்வை உண்டாக்கியிருக்கிறது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகான கலைஞரின் அறிக்கைகளில் பதட்டம் இருந்ததாகவே என் சிற்றறிவுக்குப் படுகிறது.
கூடும் கூட்டம் அத்தனையும் வாக்குககளாக மாறப்போவதில்லை என்றாலும் ஆளும்கட்சிக்கு எதிராக திரளும் கூட்டம் அதிகார வர்க்கத்தை கலக்கமடையச் செய்வது இயல்பானதுதான். ஆனால் அதற்காக தன் பலத்தை எல்லாம் திரட்டி சிறுதாவூர் சீமாட்டிக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் வாய்தா ராணிக்கு எதிராக ஊர் ஊருக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியும் தன்னை நிரூபிப்பது என்பது ஒரு பெரிய கட்சிக்கு அழகில்லை.
==========
அடவி என்ற இலக்கிய இதழை தில்லை முரளி நடத்தி வருகிறார். ஒவ்வொரு இதழின் உள்ளடக்கமும் வடிவமைப்பும் நேர்த்தியாக வந்திருக்கிறது. இலக்கியம்,சமகால நுண்ணரசியல், திரை, படைப்பியல் என்ற தளங்களில் அடவி அழுத்தமாக தடம் பதிக்கிறது. அடவி போன்ற சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவது இலக்கியச் சூழலுக்கு ஆரோக்கியமானது.
தனது தரத்தை அடவி தொடர்ந்து பேணவும், வெற்றிகரமாக வெளிவரவும் வாழ்த்துகிறேன்.
இதழைப் பெறவிரும்பும் வாசகர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தில்லைமுரளி,
12சி, செங்கம் சாலை,
திருவண்ணாமலை-606 601.
அலைபேசி-99948 80005
தொலைபேசி-04175-300460
===
தில்லாலங்கடி படத்தை பார்த்து தொலைத்துவிட்டேன். மசாலா படத்துக்கான பெரும் ரசிகனாக இருந்தாலும் இப்படியொரு மொக்கையான கதாநாயகனும் கதாநாயகியும் நடித்திருக்கும் இந்தப் படத்தை பார்த்திருக்க வேண்டியதில்லை. ஜெயம் ரவியும், தமன்னாவும் நடிக்கிறேன் பேர்வழி என்று முகத்தை அஷ்டகோணலாக்குகிறார்கள். தமன்னா தனது முதல்படத்தில் இருந்து நடிப்பில் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்கிறார். இவர்தான் தமிழின் முன்னணி நடிகை. ம்ம்ம்..
இந்த மாதிரியான மசாலாப்படங்களில் ரவி தேஜா படு அசால்ட்டாக ஜெயித்துவிடுகிறார். தெலுங்கில் ரவி ஜெயிக்கிறார் என்றால் அது அவரது சாமர்த்தியம். தமிழில் ஜெயம் ரவியை கதாநாயகனாக்குவதற்கு முன்னால் அவரது தந்தையும், அண்ணனும் யோசிக்க மாட்டார்களா? காக்கைக்கும் தன் குஞ்சு...
===
ஏன் நிறைய எழுதுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால் ஒரே பதில்தான் தெரிகிறது. எழுதுகிறேன் என்று என்னையே நான் சொறிந்து கொண்டிருப்பது நான் எழுதியதை வாசிப்பவர்கள் மீதான வன்முறை அல்லவா?
ஒருவன் எழுதுவதால் தமிழ்ச்சமூகத்தில் எந்தச் சலனமும் நிகழ்வதில்லை. அவன் அமைதியாக இருப்பதனால் இந்தச் சமூகம் எதையும் இழப்பதில்லை. ஆனாலும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். தன் இருப்பை தெரிவிக்கவோ அல்லது வேறு எதற்காகவோ.
3 எதிர் சப்தங்கள்:
இடுகை முற்றுப் பெறவில்லை.. :-(
ஏன் இப்படி..??(கடைசிப் பகுதி..!!)
முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன்
http://ujiladevi.blogspot.com/
kadaisi varigalai naanum aamothikkiraen!! :)
Post a Comment