Apr 15, 2010

அவைகளுக்கு கரப்பான்கள் என்று பெயர்



காகிதத்துண்டுகள்
சிதறிக் கிடக்கும்
வெறுமையின் வீட்டில்
கரப்பான்கள் மட்டுமே
அதிகாரம் செலுத்துகின்றன.

மின்விசிறியின்
தீராத சுழலை பார்த்துக் கிடக்கும்
படுக்கையின் சுருங்கிய விரிப்புகளுக்குள்
பதுங்குகின்றன
ஒன்றிரண்டு கரப்பான்கள்.

மெல்லச் சொட்டும்
நீர்க் குழாயில் ஒளிந்து
வெம்மை தணிக்கிறது
ஒரு கரப்பான்.

அழுக்கும் கவிச்சையும் கலந்தேறிய
அட்சய பாத்திரத்தில்
கவிழ்ந்த கரும்படகுகளென
இறந்து மிதங்குகின்றன
மூன்று கரப்பான்கள்

கோடையின் தனிமையில்
மெல்ல
கரப்பான்களோடு வாழப் பழகுகிறேன்
கரப்பான் எச்சம் வீசும்
உள்ளாடையை
தயக்கமின்றி அணிகிறேன்
அவை
பெண்ணின் நிர்வாணமென
அரித்திருந்த காகிதத்தில்
ஒரு கவிதையை முயற்சிக்கிறேன்
கரப்பானின்
இருப்பை பொருட்படுத்தாத
சுயமைதுனங்களை
இயல்பானதாக்குகிறேன்
என்றாலும்-
தீயிட்டு
இறந்த நண்பனை
நினைவூட்டி
நள்ளிரவு கழிப்பறையில்
எதிர்ப்படும் கரப்பானால்
நடுங்கிச் சில்லிடுகின்றன
கைவிரல்கள்.

பதிலுக்கு
மறுநாள் காலை
வெந்நீர் ஊற்றி
ஒன்றை
பொசுக்கிவிட்டு
திருப்தியடைகிறேன்.

5 எதிர் சப்தங்கள்:

Vijayashankar said...

//வெந்நீர் ஊற்றி
ஒன்றை பொசுக்கிவிட்டு//

எப்பா எவ்வளவு கோபம்.

anujanya said...

நல்லா இருக்கு மணி. 'மிதங்குகின்றன' என்னும் பிரயோகம் எனக்குப் புதிது.

அனுஜன்யா

Unknown said...

நல்லா இருக்கு மணிகண்டன்.

VELU.G said...

அருமைங்க

தொடர்ந்து எழுதுங்க

ஆதி said...

எங்கள் அறையில் கரப்பான்கள் நிறைய இருக்கின்றன, உங்களுடைய ஒவ்வொரு பத்தியும் என் அனுபவமாகவே இருந்தது

என்னத்தான் "பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்" என்றெல்லாம் பேசினாலும், கரன்பான்களிடம் சமத்துவதத்தோடு, சமரசத்தோடு கோப இயல்வதில்லை நம்மால், நம் வீட்டில் அதன் ஜீவிதத்துக்கு அனுமதியுமில்லை.. அதன் முட்கால்கள் மீதுண்டாகும் அருவெறுப்பை அதனை கொடூர கொலை செய்யும் அளவுக்கு நம்மை இட்டு சென்றுவிடுகிறது..

//நள்ளிரவு கழிப்பறையில்
எதிர்ப்படும் கரப்பானால்
நடுங்கிச் சில்லிடுகின்றன
கைவிரல்கள்.

பதிலுக்கு
மறுநாள் காலை
வெந்நீர் ஊற்றி
ஒன்றை
பொசுக்கிவிட்டு
திருப்தியடைகிறேன்.//

கரன்பான்கள் வருடத்திற்கு கோடிக்கணக்காக குஞ்சுகளை மகப்பெறுகின்றன, அதனால்தான் அதனை வேறறுத்தல் சமானியமற்றதாய் இருக்கின்றது..

பாராட்டுக்கள் மணிகண்டன்