இசையை ஒரு மாலை நேரத்தில் கோயமுத்தூரில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன். அதன் பிறகாக இரண்டு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அதோடு அவரை நானும் என்னை அவரும் மறந்துவிட்டோம். ஆனால் அவருடைய கவிதைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறேன்.
கவிஞனின் கவிதைகளை சில சஞ்சிகைகளிலும், சிற்றிதழ்களிலும் அவ்வப்போது வாசிப்பதை விடவும், தொகுப்பாக வாசிப்பதில் கிடைக்கும் அனுபவம் என்பது ஆசுவாசமானது. தொகுப்பாக்கி தருவதில் கவிஞனுக்கும் ஆசுவாசம் உண்டு. கவிதைகள் தொகுக்கப்படும் கணத்தில் கவிஞன் கவிதைகளை விட்டு வெளியேறி வாசகன் தன் கவிதையோடு இணையும் புள்ளியை ரசிப்பவனாகிறான்.
இசையின் "உறுமீன்களற்ற நதி" தொகுப்பு வெளி வந்து ஓராண்டுக்கும் மேலாக ஆகிறது. கவிதைக்கென ஏதேனும் வரைமுறைகள் இருப்பின் அவைகளை தகர்ப்பதற்கான அல்லது நிராகரிப்பதற்கான சாத்தியங்களை தன் கவித்துவத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் இத்தொகுப்பினை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். முடித்தேன் என்ற சொல் இங்கு நீட்சியுடையது.
கவிதைகள் மனதிற்குள்ளாக உருவாக்கும் வாதைகளையும், அதன் கொதிநிலையையும் விட்டு வெளியேற முடியாத நேரத்தில் அந்தக் கவிதைகளைப் பற்றி எழுதிவிட வேண்டும். அப்பொழுது அது வாசகனின் பார்வையாக இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் தலைப்புகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. பெரும்பான்மையான தலைப்புகள் கவிதைக்கான மொழியில் இல்லை. Mr.சஷ்டிக்கவசம், முன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான் போன்றவை கவிதையின் வாசகனை வேறொரு திசைக்கு நகர்த்துகின்றன.
கவிதைகளின் அமைப்பும், மொழியும் இசைக்கு கச்சிதமாக கை கூடியிருப்பதாகச் சொல்வேன். இவரது கவிதைகளில் இருக்கும் கவிதைக்கான சாத்தியங்கள் தொடர்ச்சியாக வாசகனை கட்டுக்குள் வைக்கின்றன. கவிதைகளில் இருக்கும் சிறுகதைக்கான சுவாரசியமும், கவிதைக்கான வெளியும், அடர் வனத்தின் புதிர்களை விடுவித்தவாறு நிலவின் வெளிச்சத்தோடு நடக்கும் அனுபவத்தை வாசகனுக்குத் தருகின்றன.
இத் தொகுப்பின் கவிதை மொழியில் இருக்கும் அங்கதம் எனக்கு வெகுவாக பிடித்திருக்கிறது.
தூக்கத்திலிருந்த
ராசாதேவி!உன் கார்குழலின் வனப்பினிலே...
என ஏதோ முனகத்
துவங்கயோவ் மூடிட்டு
படுய்யாஎன அதட்டினாள் தேவி.
இந்த வரிகளை தலைப்போடு சேர்க்காமல் படிக்கும் போது ஒரு மெல்லிய புன்னகை எழுகிறது. இதன் "ராசா வேசம் கட்டும் கூத்துக் கலைஞன்: சில குறிப்புகள்" என்ற தலைப்போடு சேர்த்து வாசிக்கும் போது உண்டாகும் அதிர்வுகளும், தலைப்பும் கவிதை வரிகளும் மனதிற்குள் உருவாக்கும் காட்சியமைப்பும், கூத்துக் கலைஞர்களின் துக்கமும் வேறொரு அனுபவத்தைத் தருகின்றன. வெறும் அங்கதம் மட்டுமே கவிதானுபவத்தை தருவதில்லை என்பதை இந்தக் கவிதைகள் வாயிலாக உணர முடிகிறது.
பெரும்பாலான கவிதைகள் அழுத்தம் இல்லாமல் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. இந்த எளிமைதான் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளின் தனித்துவம் என நினைக்கிறேன். தான் சொல்ல வரும் காட்சியமைப்புகளையும், தன் மனதின் கவித்துவ விரிவுகளையும் அதிக பிரயத்தனம் இல்லாமல் இசையால் வெளிப்படுத்த முடிகிறது.
அதி ஆழமான
பாழ்கிணறு என் தனிமை
ஒரு சொல்லிட்டு
நீ அதை நிரப்பு
பாழ்கிணறு என் தனிமை
ஒரு சொல்லிட்டு
நீ அதை நிரப்பு
இந்தக் கவிதையில் தன் வாசகனுக்காக இசை உருவாக்கும் பெருவெளி பிரம்மாண்டமாக தெரிகிறது.
இங்கு தனிமை என்பது பாழ்கிணறு. பித்து நிலை, நோய்மை, முதுமை போன்றவற்றின் கசந்த பிடிகளுக்குள் சிக்கி சமூகம் ஒதுக்கி வைத்திருக்கும் தனித்த மனிதனொருவனில் கவிதையை வாசிப்பவன் தன்னை பொருத்திக் கொள்ளும் போது தனிமையின் கொடுமையை அதிர்ச்சியுடன் உணர முடிகிறது.
ஒரு ஒற்றைச் சொல் கூட பாழ்கிணறை நிரப்பிவிடும் என்பது, தனிமையில் கசங்கிக் கிடப்பவனுக்கு அந்த ஒற்றைச் சொல்லின் தேவை எத்தனை முக்கியமானது என்பதனை கவிதையில் கொண்டு வருகிறது.
இந்தக் கவிதையை முழுமையாக உள்வாங்க முடியுமெனில் தன்னிலிருந்து இந்தக் கவிதையை உதிர்த்து விட வாசகன் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கலாம்.
கவிதை சொல்லியை கவிதையில் கொண்டு வருவது போன்ற இசையின் சில முயற்சிகள் பழையதாக இருக்கிறது. ஆனால் முன்னோடிகள் பரீட்சித்த இந்த பழைய முயற்சிகளை கவிதையில் தவிர்ப்பது என்பது எந்த ஒரு கவிஞனுக்கும் கடினமானதுதான்.
குறைகளை பற்றி அதிகம் பேசுவது, கவித்துவ சாத்தியங்களை தவிர்ப்பதற்கான முயற்சியாகிவிடலாம் என்பதால் அதை நான் குறையாக சுட்டப் போவதில்லை.
இந்தத் தொகுப்பு சமீபத்திய இளம் கவிஞர்களின் தொகுப்புகளில் முக்கியமானதாக எனக்குப் படுகிறது.
3 எதிர் சப்தங்கள்:
இதனை பற்றி நண்பர் பேராசிரியர் திரு கார்த்திகை பாண்டியன் அவர்களும் எழுதி உள்ளார்கள். வாங்க... இங்கே போய் பாருங்க....
மணி! ரெண்டு நாளா உங்கள பத்திதான் நினைச்சிட்டு இருக்கேன். பதிவுலகில் இப்போ அடிக்கடி பார்க்க முடியுது போலிருக்கே. வாழ்த்துகள்.
போன பதிவு நல்லாயிருந்தது. இன்னும் அந்த வடபழனி டீக்கடை மணி (டீக்கடையில் நின்ற மணி) என் நினைவில் இருக்கிறார்.
சொல்லாடல் பொருளாடலுடன் உங்க தமிழாடல் நன்றாக இருக்கிறது. ரொம்ப பேசறேனோ?
ஒரு சின்ன திருத்தம்...
”தூக்கத்திலிருந்த
ராசாதேவி!உன் கார்குழலின் வனப்பினிலே...
என ஏதோ முனகத்
துவங்கயோவ்”
என இருப்பதை
“தூக்கத்திலிருந்த ராசா
தேவி!உன் கார்குழலின் வனப்பினிலே...
என ஏதோ முனகத்
துவங்க
யோவ்”
என மாற்றிவிடுங்கள்... :)
அப்புறமா ”பேசு”கிறேண்
இசையின் கவிதைகளில் வெளிப்படும் மெல்லிய அங்கதம் எனக்கு பிடிக்கும். எளிமையாக இருக்கும் வரிகள் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தி செல்லும்
Post a Comment