Dec 8, 2009

ஒரு புத்தகம் ஒரு குழந்தை


ஒரு வாரமாக வலைப்பதிவில் எதுவும் எழுதவில்லை. ஆனால் அதற்கு 'உருப்படியான' காரணம் இருக்கிறது. காரணத்தைச் சொல்வதற்கு முன்பாக ஒரு செய்தி.

இந்த வருடம் உயிர்மை வெளியீடாக "சைபர் சாத்தான்கள்" என்ற புத்தகம் வெளிவருகிறது. எழுதி முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

இந்தக் கட்டுரைகளில் இணையக் குற்றங்களின் பல்வேறு சாத்தியங்கள் விவாதிக்கப்பட்டிருகிறது. பலரும் அறிந்த வைரஸிலிருந்து, ட்ராஜன், ஹேக்கிங், மார்பிங், குழந்தைகள் மீதான் இணைய வன்முறைகள் என்பது வரை சில சுவராசியமான விஷயங்களை எளிமையாக்கியிருக்கிறேன். இருபது கட்டுரைகளுக்கான செய்திகளை தேடி எழுதி முடிக்க நான்கு மாதங்கள் ஆனது.

சென்ற ஆண்டு வெளி வந்திருக்க வேண்டிய புத்தகம். சில காரணங்களால் தாமதமாகிவிட்டது. அந்திமழையில் இந்தக் கட்டுரைகள் தொடராக வந்த போது நிறைய நண்பர்கள் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் கட்டுரைகளைப் பற்றி பேசிய போது மகிழ்ச்சியாகவே இருந்தது.

புத்தகமாக்குவதற்கான முயற்சியில், மூன்று மாதங்களுக்கு முன்பாக கட்டுரைகளை திரும்ப வாசித்த போது ஏகப்பட்ட மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் ஸ்டைலுக்கு கொண்டு வரவும், சில தகவல்களை மாற்றியமைக்கவும் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டேன். வேறொருவராக இருந்தால் இந்த நேரத்தில் இன்னொரு புத்தகமே எழுதியிருப்பார்கள்.

நெட்டில் எடுத்து தமிழாக்கம் செய்வதோவோ அல்லது டவுன்லோட் செயவதாகவோ இல்லாமல் நிறைய உழைப்பை தந்திருக்கிறேன். அதுவரைக்கும் திருப்தி.
----
நவம்பர் 27 இல் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தேன். பேருந்தில் சரியான கூட்டம். படியில் நின்று பயணம் செய்யாதீர் என்ற நோட்டீஸுக்கு கீழாக மூன்று பேர் அமர்ந்து கொண்டோம்.

காலை மூன்று மணிக்கு பவானியை நெருங்கிய போது நேராக மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். ஆறரை மணிக்கு மருத்துவமனை இருந்த கோயமுத்தூருக்குப் போய்ச்சேர்ந்தேன். மூன்று மணி நேர பதட்டத்துக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னார்கள்.

அதுவரை அலைந்திருந்த மனம் அப்பொழுதும் சமநிலையை அடைய இன்னுமொரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டது. மதியம் இரண்டு மணிக்கு குழந்தையை கையில் கொடுத்தார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் கண்களை மூடி சிணுங்கினான்.

அடுத்த ஐந்து நாட்களுக்கு விடுமுறையில் அவனருகில் இருந்தேன. இரவு பகலாக மஹாபாரதத்தை வாசித்தேன். பாரதத்தின் கதாபாத்திரங்கள் கனவுகளில் வந்து போனார்கள். குழந்தையும் அவர்களோடு அவ்வப்பொழுது சேர்ந்து கொண்டான். அவன் உடலை முறுக்குவதும், தானாக சிரிப்பதும் அழுவதுமாக தனக்கென ஒரு உலகை உருவாக்கிக் கொண்டிருந்தான். விக்கல்களும் தும்மல்களும் பயமுறுத்துவதாக இருந்தன.

ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தந்தை ஆகிறான். அந்த புது உறவை உணரும் தருணம் அற்புதமானது. அந்த மனப்பூர்வமான உணர்தலில் மற்ற உணர்ச்சிகள் அடங்கிப்போய் விடுகின்றன.

தந்தையானவனுக்கு அந்தக் கணம் ஒரு தியான நிலை. மற்றவர்களுக்கு அது இன்னுமொரு செய்தி அவ்வளவுதான்.

16 எதிர் சப்தங்கள்:

சென்ஷி said...

//ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தந்தை ஆகிறான். தான் அந்த புது உறவை உணரும் தருணம் அற்புதமானது. அந்த மனப்பூர்வமான உணர்தலில் மற்ற உணர்ச்சிகள் அடங்கிப்போய் விடுகின்றன.

தந்தையானவனுக்கு அந்தக் கணம் ஒரு தியான நிலை. மற்றவர்களுக்கு அது இன்னுமொரு செய்தி அவ்வளவுதான்.//

வாழ்த்துக்கள் மணிகண்டன்... :)

Raju said...

இரண்டு குழந்தைகளும் சிறக்க‌ மனமார்ந்த வாழ்த்துக்கள்.
:-)

Anonymous said...

download writtingnnu yara solreenga

maganai petha magarasa vaazthukal

பெத்தராயுடு said...

congrats.

கதிரவன் said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் மணிகண்டன்

புத்தகத்திற்கும் புத்துயிருக்கும்

Ganesh Gopalasubramanian said...

குட்டி மணி பிறக்கும் போதே படிமம்னு கத்திகிட்டே பிறந்தானா? :)

இளஞ்சிவப்புன்னு உங்க கலர்ல இல்லைன்னு சந்தோஷப்படுகிற மாதிரி தெரியுது. :)

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துகள். குட்டி மணிக்கு என்னுடைய பிரார்த்தனைகள்.

Vaa.Manikandan said...

வாழ்த்திய நண்பர்களுக்கு (சென்ஷி,ராஜீ,பெத்தராயுடு,அனானி,கதிரவன், கணேஷ், நேசமித்திரன், திகழ்) நன்றி.

அனானி, யாரையும் குறிப்பிடவில்லை. உங்களுக்கு என் மேல் அப்படி என்ன கோபம்?

anujanya said...

மகிழ்ச்சியான செய்தி. உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

புது புத்தகத்திற்கும் வாழ்த்துகள் மணி.

அனுஜன்யா

யாத்ரா said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது, வாழ்த்துகள் மணிகண்டன்.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்..!

cheena (சீனா) said...

அன்பின் மணிக்ண்டன்

ஆண் மகவு பிறந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள்

புத்தக் வெளிய்யீட்டிற்கும் நல்வாழ்த்துகள்

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்...........

Vaa.Manikandan said...

நன்றி யூத் அனு.

யாத்ரா,கலகலப்ரியா,சீனா, சங்கவிக்கும் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன.

Marimuthu Murugan said...

உங்கள் 'படைப்பு'களுக்கு வாழ்த்துக்கள்...

CS. Mohan Kumar said...

மணிகண்டன் மிகுந்த சந்தோசம் வாழ்த்துக்கள்