Nov 23, 2009

தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட சில வார்த்தைகள்


வெள்ளிக்கிழமை இரவில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு கிளம்புவதற்காக வீட்டை பூட்டும் சமயத்தில் மின்சாரத்தடை வந்து விட்டது. நான் அதிகமாக சகுனங்கள் பார்ப்பதில்லை என்றாலும் மின்சாரம் வரும் வரை பொறுத்திருக்கலாம் என்று அமர்ந்து கொண்டேன். மின்சாரம் வந்து மீண்டும் போனது. ஒரு முறையல்ல. மூன்று முறை. அடுத்து அப்பாவுடன் போனில் பேசினேன். "சென்னைக்கு இந்த வாரம் கண்டிப்பாக போகணுமா? ஊருக்கு வந்திருக்கலாம் இல்ல"என்றார். கிளம்பும் போது இவரும் ஏன் தடை சொல்கிறார் என டென்ஷன் அதிகமானது.

அடுத்ததாக பெங்களூர் மடிவாலா போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பாக சென்னை செல்லும் பேருந்துக்காக முக்கால் மணி நேரம் காக்க வேண்டியிருந்தது. சென்னை செல்லும் பேருந்துகள் ஓரிரண்டு வந்தாலும் அமர இடம் இல்லை. ஒரு கர்நாடக போக்குவரத்துக் கழக வண்டியில் டிரைவர் தனக்கு பின்னால் இருக்கும் கேபினில் அமர்ந்து கொள்ள விருப்பமா என்றார்? அதில் அமர்ந்தால் உறக்கம் இருக்காது; என்றாலும், இரவின் சாலையை சோடியம் வெளிச்சத்தில் வேடிக்கை பார்ப்பது சுகம் என்பதாலும், இதை விட்டால் பேருந்து கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயத்தாலும் சம்மதித்தேன். அங்கிருந்து ஒசூர் வரும் வரைக்கும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் கேபினில் அமர வைத்துக் கொள்ள இன்னொரு ஆளை டிரைவர் தேடினார். என்னிடம் வாங்கிக் கொண்ட இருநூற்றைம்பது ரூபாய்க்கு டிக்கெட் தரவில்லை.

கேபினில் இரண்டு பேர் அமர்ந்தால், சாலையில் எதிர்படும் வாகன வெளிச்சத்தையும் மீறி ஒரு வேளை தூக்கம் வந்தால், சாய்ந்து கொள்ளக் கூட முடியாது என்பதால் ஒவ்வொரு நிறுத்தத்திலும் வேறொரு ஆள் கேபினுக்கு பங்காளி ஆகிவிடக் கூடாது என்று உள்மனம் படபடத்தது. மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்த சமயம். பேருந்துக்காக காத்திருக்கும் கூட்டம் குறையும் நேரம் அது. உள் மன ஆசை பூர்த்தி செய்யப்பட்டது; நான் மட்டுமே கேபினை ஆக்கிரமிக்கலாம் என்றானது. அத்திபள்ளி தாண்டியவுடன் இருநூற்று ஏழு ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார். அது அத்திபள்ளியிலிருந்து சென்னைக்கான தொகை. கொடுத்த தொகையில் மீதம் டிரைவரின் பாக்கெட்டுக்கு.

இதற்குள் டிரைவர் இரண்டு மூன்று கொட்டாவிகளை விட்டிருந்தார். இப்பொழுது உயிர் மீதான கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது, விபத்து நிகழ்ந்தால் முதல் பலி டிரைவராக இருக்கலாம், இரண்டாவது நிச்சயம் நான் தான். இப்பொழுது தூங்க வேண்டும் என்ற எண்ணம் போய்விட்டிருந்தது. சாலையை ரஸிக்க வேண்டும் என்ற எண்ணமும் கலைந்திருந்தது. டிரைவர் முகத்தை மட்டும் வெறித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் அவர் தூங்காமல் ஓட்டலாம் என்பதால், "ஏன் சார் இந்த பஸ்ஸில் கண்டக்டர் இல்லை?' என்று வாயைத் திறந்தேன்.

"உஷ்ஷ்" என்று சைகை செய்தார். கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேச வேண்டாம் என்கிறாரா அல்லது தன் தூக்கம் கெட்டுவிடும் என்பதால் அமைதியாக இருக்கச் சொல்கிறாரா என்ற குழப்பம் புதிதாகச் சேர்ந்து கொண்டது.

இனி என்னதான் பயப்பட்டாலும் விபத்து நிகழுமெனில் தப்பிக்க வாய்ப்பில்லை. எனவே தைரியமாக இருப்பது என்று முடிவெடுக்க கொஞ்சம் நேரம் பிடித்தது. அந்த கொஞ்ச நேரத்திற்கு பிறகு கேபினில் காலை நீட்டி படுத்துக் கொண்டேன்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சிங்காரச் சென்னையில் இறக்கி விட்டுவிட்டார்கள். கோயம்பேட்டிலிருந்து எம்.எம்.டி.ஏ, க்குச் செல்ல வேண்டும். நகரப் பேருந்தில், அருகில் அமர்ந்து இருந்தவரிடம் இடம் வந்தால் சொல்லச் சொன்னேன். பிரமாதமாய் தலையாட்டினார். உதயம் தியேட்டர் வந்த பிறகு "எம்.எம்.டி.ஏ ல இறங்கலியா" என்றார். இரண்டு மூன்று நிறுத்தங்களை தாண்டி வந்தததை உணர்ந்தேன். நான்கைந்து கெட்ட வார்த்தைகள் தொண்டையை அடைத்தது.

அடுத்த போணி ஷேர் ஆட்டோக்காரன், ஆட்டோவில் ஏற்கனவே மூன்று பேர் இருந்தார்கள்.

"இன்னா சார், எம்.எம்.டி.ஏ வா? இந்தாண்ட வா",

"பிப்ட்டி ருப்பீஸ் ஆவும்"

"ஏங்க அடுத்த ரெண்டு ஸ்டாப்த்தானே"

"அதுக்குன்னு... ராத்திரில சும்மா கொண்டி வுடுவாங்களா"

"சரிங்க, நான் பஸ்ல போய்க்கிறேன்"

"ங்கோத்தா, அப்புறம் ஆட்டோல ஏன் ஏறுன? சாவு கிராக்கி". இப்பொழுதும் நான்கைந்து வார்த்தைகள் என் தொண்டையை அடைத்தது.

கறுவிக் கொண்டே பஸ் பிடித்து எம்.எம்.டி.ஏ போய்ச் சேர்ந்தேன்.

பகலை எப்படியோ சமாளித்துவிட்டேன்.

இரவில் நண்பர்களை(இணைப்பு1(நர்சிம்), இணைப்பு2(தாமிரா), இணைப்பு3(மோகன்) சந்தித்துவிட்டு, வடபழனியில் சாப்பிட்டும் ஆகிவிட்டது. இப்பொழுது நடந்தே எம்.எம்.டி.ஏ போய்விடலாம் என்று முடிவு செய்து நடக்கத் துவங்கினேன்.

வடபழனி சிக்னலுக்கு அருகில் இருக்கும் பழைய டி.சி.எஸ் கட்டடத்தில் இப்பொழுது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் என்ற பெயர் இருக்கிறது. அந்த இடத்தில் வெளிச்சம் குறைவு. வேக வேகமாக பவுடரும், லிப்ஸ்டிக்குமாய், சிவப்பு நைலான் புடவை மினுமினுக்க ஒருத்தி நடந்து வந்தாள். பெண்தானா என்றும் கணிக்க முடியவில்லை, நொடிப்பொழுதில் என்னைத் தாண்டி, அருகில் இருந்த புதருக்குள் மறைந்தாள். இயல்புக்கு மாறான விஷயம் நிகழ்ந்தால் சிலர் நகர்ந்துவிடலாம் அல்லது நின்று கவனிக்கலாம். நான் இரண்டாவது கட்சி.

அவளைப் பின் தொடர்ந்து வந்த ஜீன்ஸ்ஸூம், டீ சர்ட்டும் அணிந்த ஒரு வாலிபன் என் முகத்தை தெளிவாக பார்த்துவிட்டு புதரை நோக்கி நகர்ந்தான். ஒரு வினாடி புதருக்குள் நுழையாமல் தாமதித்தவன், சாலையில் வழக்கமாக நடப்பது போல 'பாவ்லா' செய்தான். அருகில் போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்ததை அவன் கவனித்திருக்க வேண்டும். அவர்களும் இவன் செயலை கவனித்துத்தான் ஜீப்பை ஒதுக்கியிருக்க வேண்டும். அவனைப் பிடித்து ஜீப்பில் அமர வைத்துவிட்டு இரண்டு காவலர்கள் புதருக்குள் நுழைந்தார்கள். அவள் தப்பித்து விட்டாள்.

நேராக ஜீப்பில் அமர்ந்திருந்த இளைஞனிடம் வந்தார்கள், கீழே இறங்கிய இளைஞன், பகவான் சத்தியமாக நல்லவன் என நிரூபிக்க முயன்றான். அடிக்க வேண்டாம் என்றும் கெஞ்சினான்.

சொட்டைத்தலை போலீஸ்காரர் எஸ்.ஐ ஆக இருக்க வேண்டும். அவரின் உயரத்தில் பாதியளவுக்கு லத்தி வைத்திருந்தார். ஜீன்ஸ் இளைஞன் மீது நான்கு அடிகளை இடியென இறக்கினார். அவன் அங்கிருந்து ஓட வேண்டும் என்று உத்தரவிட்டார். தன் வாழ்நாளின் அதிக பட்ச வேகம் அவனுக்கு இன்று 'கால்'கூடியிருக்கலாம்.

என்னை உற்றுப்பார்த்தததில் என் சகுனங்களின் பலன்கள் அவனுக்கு ஒட்டிவிட்டதோ என்ற பச்சாதாபம் கூட அவன் மேலாக ஓரிரு கணங்கள் வந்தது.

அந்த எஸ்.ஐ. தன் பார்வையை சுழற்றினார். அருகில் நான் மட்டுமே இருந்தேன். நான் நல்லவன் என நிருபிக்க நடந்த நிகழ்வின் சுவடை அறியாதவனாய், "ஸார், எம் எம் டி ஏ எப்படி போகணும்" என்றேன்.

"ஷேர் ஆட்டோ எடுத்துக்குங்க" என்று சொல்லிவிட்டு திரும்பி, அந்த இளைஞன் போன திசையை பார்த்து சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்தார். அவை காலையிலிருந்து என் தொண்டையை அடைத்திருந்த நான்கு கெட்ட வார்த்தைகள்.

நன்றி: உயிரோசை

15 எதிர் சப்தங்கள்:

சென்ஷி said...

:)

நர்சிம் பதிவுலயே உங்க வார்த்தைகளை ரசிச்சேன். இப்ப உங்க பதிவுலயும் நேரடியான இடி..

கலக்குறீங்க தலைவரே!

Anonymous said...

apadiye antha 4 vaarthum solidunga konjam aarutala irukum

Kumky said...

ஆயிரம் என்ன பல்லாயிரமிருந்தாலும் நீங்க அந்த படத்தை போட்டிருக்ககூடாது.
அசிரத்தையாக படிக்க ஆரம்பித்து பின்னர் உஷாராகி நிகழ்வுகளின் கோர்வையுடன் உள்வாங்கி யோசித்து மீண்டும் வாசித்து மூச்சு வாங்க மேலே போட்டுள்ள படத்தை பார்த்தால்.....தொண்டை அடைக்கிறது.

நிகழ்காலத்தில்... said...

பல சமயங்களில் நம் பொறுமை இப்படித்தான் பரிசோதிக்கப்படுகிறது,

கசப்பான அனுபவங்களையும் இயல்பாக எதிர்கொண்டமைக்கு வாழ்த்துகள் நண்பரே

Kumky said...

மன்னிக்கவும்..

துக்கம் தொண்டையை அடைக்கிறது.

Vaa.Manikandan said...

நன்றி சென்ஷி.

கும்க்கி, ஏன் துக்கம் தொண்டையை அடைக்கிறது? இந்த கட்டுரைக்கு அந்தப்படம் முக்கியமானதாக இருக்கும் என்று கருதினேன்.

நன்றி நிகழ்காலத்தில்.

அனானி, அந்த வார்த்தைகள் சென்சார் செய்யப்பட்டுவிட்ட வார்த்தைகள் :)

thiyaa said...

கலக்கல்

Anonymous said...

பெங்களூர் டூ சென்னைக்கு இடையிலேயே இவ்வளவு போராட்டமா? தாங்கமுடியல.

sathishsangkavi.blogspot.com said...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம்........

அனுபவமே வாழ்க்கை..... என்ன மணி சரியா?

பூங்குன்றன்.வே said...

மிக அருமை !!!

Vaa.Manikandan said...

நன்றி தியாவின் பேனா,பூங்குன்றன்.

சங்கவி, எனக்கு சரி என்றுதான் படுகிறது.

திருமதி ஜெயசீலன்,இத்தகைய தினசரி போராட்டங்கள் என்பது நம்மைச் சார்ந்தது.

நான் சில நாட்களுக்கு முன்பாகவே, தொடரூர்தியிலோ, சொகுசுப் பேருந்திலோ பதிவு செய்திருக்கலாம், இறங்கியவுடன் கோயம்பேட்டில் இருந்தே ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்திருக்கலாம், வட பழனியிலிருந்து நடக்காமல் பேருந்தில் சென்றிருக்கலாம் அல்லது அவள் என்னைக் கடப்பதை கண்டுகொள்ளாமல் நடந்திருக்கலாம்.

சுவாரசிய அனுபவங்கள் சில மட்டுமே தானாக நிகழ்பவை. மற்றவை நம் தேடலிலும், நம் பார்வையின் மூலமாகவும் அடையக்கூடியவை.

நான் தேடுகிறேன். அதற்காக என்னை வருத்திக் கொள்ளவும் தயங்குவதில்லை.

கலகலப்ரியா said...

superb..!

A Simple Man said...

you should have walked from CMBT to MMDA in the morning.It is shorter than vadapalani to MMDA and early morning walk is good for health also.

Nathanjagk said...

Excellent! I liked the open-tap-flow of irony in your writing. I've more than 4 words to admire you, of course, they stuck in my throat!

பாலகுமார் said...

அருமையான கட்டுரை.