Jul 23, 2009

சுந்தர ராமசாமி - நிராகரிக்க முடியாத ஆளுமை


சு.ரா வை நான் ஒரு முறை கூட நேரில் சந்தித்ததில்லை. ஆனால் பசுவய்யாவின் 107 கவிதைகள் தொகுப்பும் அந்தக் கவிதைகளும், கவிதை வாசகனான எனக்கு மிக முக்கியமானவை.

நவீன தமிழ்க் கவிதையின் சூட்சுமங்களை புதிய வாசகனாகயிருந்த போது நான் இந்தத் தொகுப்பில் இருந்தே கண்டறியத் துவங்கினேன். ஆசுவாசமும் பதட்டமும் ஒரு சேர பற்றிக் கொள்ள வைக்கும் இக்கவிதை தொகுப்பை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

ஏற்கனவே கவிதை உலகம் அறிமுகமானவனுக்கு பசுவய்யாவின் கவிதைகள் கொண்டு வரும் மனத் திறப்புகளும், வாசக மனதில் அவை உருவாக்கும் அந்தர வெளியும் கவிதானுபவத்தின் உச்சகட்டம்.

சு.ரா வின் கவிதைகள், நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திற்கான கவிதை வடிவத்தை கொண்டிருக்கவில்லை. அவர் எழுதிய கவிதை வடிவத்தில் இருந்து இன்றைய கவிதை பெருமளவில் உருமாறியிருக்கிறது. இந்த வடிவ உருமாற்றம் பிச்சமூர்த்தி, ஆத்மாநாம், நகுலன் போன்ற தமிழின் பெரும்பாலான முன்னோடிக் கவிஞர்களுக்கும் பொருந்தும். வடிவ உருமாற்றம் என்றைக்குமே கவிதையின் சிக்கலாக இருந்ததில்லை. அது படைப்பிலக்கியத்தின் இயல்பு.

ஆனால் முன்னோடிகளின் கவிதைகளினுள்ளாக பொதிந்து கிடக்கும் ஒளி என்றைக்கும் அப்படியேதான் இருக்கின்றன.

தமிழ் கவிதை, இன்றைய வடிவத்தை அடைய முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாகவே பயணித்திருக்கிறது. சு.ரா தன் கவிதைகளின் மூலம் நவீன கவிதை உலகத்தின் பெரும் வெளிக்கான பாதைக்கு சிறு வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார். அந்த வெளிச்சம் நிராகரிக்க முடியாத வெளிச்சம். மறுத்து ஒதுக்க முடியாத வெளிச்சம்.

சு.ரா. வையும் அவரது எழுத்தையும் தமிழில் ஒதுக்கிவிட்டு ஒருவன் இலக்கியம் பேச முடியாது. சு.ரா வை இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் கூட கவிதை வாசகனொருவன் அவரது கவிதை மொழியின் வாயிலாக சந்திப்பான்.

நவீன தமிழ் இலக்கியம் பற்றியும், உலக இலக்கியத்தை தமிழ்ச் சூழலில் வைத்து பேசும் போதும், சு.ரா வை- அவரது எழுத்தை மையமாக வைத்து எந்த இலக்கியவாதியும் நிராகரிக்க முடியாது. சு.ரா.வின் எழுத்துக்களை வாசித்துவிட்டு, அவற்றை நிராகரிக்கும் போது கூட அந்த எழுத்தின் நிழல் தன் மேல் சாய்வதை அவன் உணரலாம்.

கவிஞர் சுகுமாரன் முன்பொரு முறை சொன்னார், படைப்பாளியையும் படைப்பையும் நிராகரிக்கிறார்கள் ஆனால் அந்தப் படைப்பும், படைப்பாளியும் எப்பொழுதுமே இருக்கிறார்கள். சு.ரா வையும் ஜே.ஜே. சில குறிப்புகளையும் அன்றிலிருந்து 'சிலர்' நிராகரிக்கிறார்கள். ஆனால் சு.ராவும் ஜே.ஜே. வும் இன்றும் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

===
சு.ரா. வின் இரண்டு கவிதைகள். 1973 ஆம் ஆண்டு வெளிவந்த ஞானரதத்தில் வந்த கவிதைகள் இவை.

(1)
தெருப் பாராக்காரருக்கு

எல்லாம் அறிந்திருந்தும்
ஏதும் அறியாதவர் போல்
இன்றும் விடாதுவிசிலூதி
ஜன்னலோரம் என் முகம் காண
மல்லுக்கு நிற்பதேன்?

(2)

சில நாய்கள்
வேளை கெட்ட வேளைகளில் உறங்கும்.

சில நாய்கள்
ஃப்ளுக்ஃ கெனக் கக்கி
அக் கக்கலை
அதி சுவாரஸ்யமாய் நக்கித் தின்னும்.

சில நாய்கள்
புட்டிப் புண் ஈக்கள் லபக்காக்க
முக்கி முதுகு வளைத்தும்
வாய்க்கு எட்டாது நகர்ந்தோடும்
புட்டியின் ஜாலம் புரியாது சரியும்.

சில நாய்கள்
இருந்த இருப்பில்
கத்தத் தொடங்கி
நிறுத்தத் தெரியாமல்
அக்கத்தலில் மாட்டிக் கொண்டு சுழலும்.

கொடும் வெயிலில்
சில நாய்கள்
பெண் துவாரம் தேடி அலைந்து
ஏமாந்து
பள்ளிச் சிறுமிகளை விரட்டும்.

இவ்வாறு
இவ்வாறு
இவ்வுலகில்
நான் கண்ட நாய்களின் சீலங்கள்
வாலுக்கு ஒரு விதம்.

என்றாலும்
உண்ணும் உணவில் குறுக்கிட்டால்
பட்டெனப் பிடுங்குவதில்
இவையெல்லாம்
நாய்கள்.

27 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

சாருவை உங்களுக்கு ஆகாது என்றால் எப்போதும் அவர் எழுதுவதற்கு எதிராக எழுதுகிறேன் பேர்வழி என்று அசட்டுதனமாக உளறிகொண்டிருக்க வேண்டாம் மணிகண்டன்.

சுராவையும், அவரது எழுத்தையும் நிராகரித்துவிட்டு தமிழிலக்கியம் பேசமுடியாது என்பதை விட பைத்தியகாரத்தனம் எதுவுமில்லை. அப்படியென்றால் சுராவுக்கு முன்பாக பாரதியும், புதுமைபித்தனும் என்னத்தை பிடுங்கினான்கள் என்ற கேள்வி எழும்.

சுரா உங்களுக்கு கடவுளாக இருக்கலாம். பலருக்கு அவர் சாத்தான். பல இலக்கிய விதைகள் வேர் விட்டபோதே அமிலத்தை ஊற்றி அழித்தவர். இனியாவது பின்புலம் தெரியாமல் உளறிகொட்ட வேண்டாம்.

சுராவின் பிள்ளைகெடுத்தாள்விளை சிறுகதையை வாசித்திருக்கிறீர்களா? ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான சுராவின் சாதீய வன்முறை அப்பட்டமாக அம்பலமானது அந்த கதையில்.

சாருவுக்கு கவுண்டர் பாயிண்ட் என்று சொல்லிகொண்டு தவறான ஒருவரை ஆளாளுக்கு தூக்கி கொண்டாட வேண்டாம்.

Anonymous said...

சாருவை உங்களுக்கு ஆகாது என்றால் எப்போதும் அவர் எழுதுவதற்கு எதிராக எழுதுகிறேன் பேர்வழி என்று அசட்டுதனமாக உளறிகொண்டிருக்க வேண்டாம் மணிகண்டன்.

சுராவையும், அவரது எழுத்தையும் நிராகரித்துவிட்டு தமிழிலக்கியம் பேசமுடியாது என்பதை விட பைத்தியகாரத்தனம் எதுவுமில்லை. அப்படியென்றால் சுராவுக்கு முன்பாக பாரதியும், புதுமைபித்தனும் என்னத்தை பிடுங்கினான்கள் என்ற கேள்வி எழும்.

சுரா உங்களுக்கு கடவுளாக இருக்கலாம். பலருக்கு அவர் சாத்தான். பல இலக்கிய விதைகள் வேர் விட்டபோதே அமிலத்தை ஊற்றி அழித்தவர். இனியாவது பின்புலம் தெரியாமல் உளறிகொட்ட வேண்டாம்.

சுராவின் பிள்ளைகெடுத்தாள்விளை சிறுகதையை வாசித்திருக்கிறீர்களா? ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான சுராவின் சாதீய வன்முறை அப்பட்டமாக அம்பலமானது அந்த கதையில்.

சாருவுக்கு கவுண்டர் பாயிண்ட் என்று சொல்லிகொண்டு தவறான ஒருவரை ஆளாளுக்கு தூக்கி கொண்டாட வேண்டாம்.

Vaa.Manikandan said...

உங்களுக்கு சற்று பொறுத்துக் கூட பதில் எழுதி இருக்கலாம். ஆனால் எழுதி விடுகிறேனே.

1) சாருவை எனக்கு ஆகாது என்று எப்பொழுதுமே சொன்னதில்லை. 'எப்போதும்' அவர் எழுதுவதற்கு எதிராக எழுதிக் கொண்டிருக்க வேண்டுமானால் தினம் ஒரு பதிவாவது நான் எழுதியிருக்க வேண்டும்.

2)தமிழ் இலக்கியம் பேசும் போது பாரதியும், புதுமைப்பித்தனும் இருக்க மாட்டார்கள் என்று நான் சொன்னதாக ஞாபகமில்லை. அவர்களோடு சு.ரா வும் இருப்பார்.

3)சு.ரா வை கடவுள், சாத்தான் என்ற பிம்பத்திற்குள் அடைக்கவில்லை. அவரது படைப்புகள் எனக்கு மிக முக்கியமானவை. சு.ரா வை அவரது எழுத்தின் மூலமாக மறுக்க முடியாது என்பது என்கிறேன்.

4) பிள்ளை கெடுத்தாள் விளை பற்றிய என் கருத்தை அந்தச் சமயத்திலேயே நான் பதிவு செய்திருக்கிறேன்( அந்தச் சம்யத்தில் என்னிடமிருந்த இலக்கிய முதிர்ச்சியின்மை தெரியும் ரீதியில்)

Anonymous said...

1) சரி மாதத்திற்கு ஒரு பதிவாவது எழுதுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் சாரு அளவுக்கு உயர இன்னும் ஒரு முப்பது வருடமாவது பயணிக்க வேண்டும். எனவே சாரு பற்றி நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் அது காரணமேயின்றி நிராகரிக்கப்படும். இது உங்கள் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

2) பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் சுராவையும் சேர்க்கும் அபாண்டப்பணியை தான் காசு கண்ணன் செய்துவருகிறார். நீங்களும் அவருக்கு அனுமார் போல உதவ நினைக்கிறீர்கள் என்ற சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் போலியான ஒன்றை தூக்கி நிஜங்களின் பக்கத்தில் வைத்தால் நிஜம் சுட்டுவிடும்.

3) சுராவின் படைப்புகள் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அது தமிழிலக்கியத்திற்கே முக்கியமானது என்று நீங்கள் பொதுமைப்படுத்துவது அயோக்கியத்தனம் இன்றி வேறில்லை. 90களுக்கு பிறகான தலித் இலக்கிய எழுச்சியை நீர்த்துபோக செய்யும் முயற்சிகளில் சுராவும் அவரது வழிதோன்றல்களும் எந்தளவுக்கு தீவிரமாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதை சிற்றிலக்கிய பத்திரிகை ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

4) அக்கதை பற்றிய உங்கள் கருத்தினை வாசிக்க ஆசைபடுகிறேன். சுட்டி கொடுத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.


கடைசியாக,

காலச்சுவடு பதிப்பகத்தில் ஒரு புத்தகம் எழுத உங்களுக்கு ஆசையிருப்பின் இவ்வளவு மெனக்கெட தேவையில்லை. காசு கண்ணனுக்கு போன் அடித்து சுரா வாழ்க என்று கோஷமிட்டாலே போதும். சந்தேகம் இருக்கிறது என்றால் ஜெயமோகனை ஆலோசிக்கவும்.

Anonymous said...

1) சரி மாதத்திற்கு ஒரு பதிவாவது எழுதுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் சாரு அளவுக்கு உயர இன்னும் ஒரு முப்பது வருடமாவது பயணிக்க வேண்டும். எனவே சாரு பற்றி நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் அது காரணமேயின்றி நிராகரிக்கப்படும். இது உங்கள் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

2) பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் சுராவையும் சேர்க்கும் அபாண்டப்பணியை தான் காசு கண்ணன் செய்துவருகிறார். நீங்களும் அவருக்கு அனுமார் போல உதவ நினைக்கிறீர்கள் என்ற சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் போலியான ஒன்றை தூக்கி நிஜங்களின் பக்கத்தில் வைத்தால் நிஜம் சுட்டுவிடும்.

3) சுராவின் படைப்புகள் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அது தமிழிலக்கியத்திற்கே முக்கியமானது என்று நீங்கள் பொதுமைப்படுத்துவது அயோக்கியத்தனம் இன்றி வேறில்லை. 90களுக்கு பிறகான தலித் இலக்கிய எழுச்சியை நீர்த்துபோக செய்யும் முயற்சிகளில் சுராவும் அவரது வழிதோன்றல்களும் எந்தளவுக்கு தீவிரமாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதை சிற்றிலக்கிய பத்திரிகை ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

4) அக்கதை பற்றிய உங்கள் கருத்தினை வாசிக்க ஆசைபடுகிறேன். சுட்டி கொடுத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.


கடைசியாக,

காலச்சுவடு பதிப்பகத்தில் ஒரு புத்தகம் எழுத உங்களுக்கு ஆசையிருப்பின் இவ்வளவு மெனக்கெட தேவையில்லை. காசு கண்ணனுக்கு போன் அடித்து சுரா வாழ்க என்று கோஷமிட்டாலே போதும். சந்தேகம் இருக்கிறது என்றால் ஜெயமோகனை ஆலோசிக்கவும்.

Pot"tea" kadai said...

ஹா ஹா ஹா

Pot"tea" kadai said...

ஆளுமையின் மதிப்பீடுகள்ன்னு ஒரு பொஸ்தகம் 450ரூ. எழவு ஆறாங்க்ளாஸ்
செய்யுள் பகுதியில ஆசிரியர் முன்னுரை அல்லது ஆசிரியர் குறிப்பு வரும்ல அதைப்போலவே 500 பக்கங்களுக்கு அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தமிழின் தலைசிறந்த பொஸ்தகம்னு ஒரு டாபர் "ஒரு புளியமரத்தின் கதை" 10 பக்கத்துக்கு மேல் போகமுடியல. அது என்ன எழவு ஆளுமையோ என்னால ஏத்துக்கவே முடியல நிராகரிச்சிகினே தான் இருக்கோம்.

பிகு: பத்தொன்பது மணி நேரவிமான பயனத்தில் எஸ் ராவின் நெடுங்குருதி வாசித்து முடிக்கப்பட்டது.

Vaa.Manikandan said...

இனி எழுதுவதாக இருப்பின், நீங்கள் தைரியமாக பெயர் சொல்லியே எழுதுங்கள். ஒன்றும் தவறில்லை.

நான் சாரு பற்றி இந்தக் கட்டுரையில் என்ன சொல்லியிருக்கிறேன் என்று கொஞ்சம் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?

பாரதி, புதுமைபித்தன் வரிசையில் கண்ணன் மட்டுமில்லை சார், மனுஷ்ய புத்திரனும் சு.ரா வை வைக்கிறார்.

//நவீனத் தமிழ் உரைநடையின் பிரதான போக்குகள் பாரதி, புதுமைப்பித்தன், மெளனி, நகுலன், லா.சா.ராமாமிருதம், பிரமிள், சுஜாதா, சுந்தர ராமசாமி, சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை வரலாற்று ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் நிறுவ முடியும். //

3)சு.ரா வின் கவிதைகள் தமிழ் இலக்கியத்திற்கே முக்கியமானது என்பது அயோக்கியத் தனம் என்றால், அப்படியே அ.தனத்தை தொடர்கிறேன்.


கடைசியாக,
காலச்சுவடில் நான் புத்தகம் போட ஆசைப்படுவதாக இருப்பின் எப்பொழுதோ அவர்களை அணுகியிருக்கலாம். இந்த 'ஜால்ரா'த் தனத்தை வைத்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை :)

Anonymous said...

//பாரதி, புதுமைபித்தன் வரிசையில் கண்ணன் மட்டுமில்லை சார், மனுஷ்ய புத்திரனும் சு.ரா வை வைக்கிறார்.//

மனுஷ்யபுத்திரனுக்குக் தமிழிலக்கிய படைப்பாளிகள் வரிசையை நிர்ணயிக்கும் உரிமையை யார் அய்யா கொடுத்தது? நீங்கள் புத்தகம் போட களம் அமைத்து கொடுத்ததால் ம.புத்திரன் சொல்வது எல்லாவற்றையுமே மறுபேச்சின்றி ஒப்புகொள்ளுங்கள். அதற்காக இருபத்தைந்து வருடமாக வாசிப்பை சுவாசிப்பாக மேற்கொண்டு வரும் என்னைபோன்ற தீவிர தமிழிலக்கிய வாசகர்கள் என்ன மயிற்றுக்கு ஏற்றுக் கொள்ளவேண்டும்.

எனக்கு பிளாக்கர் ஐடி இல்லை. கீற்றில் நிறைய வாசகர் கடிதம் எழுதியிருக்கிறேன். என் பெயர் மணியரசன். நீங்கள் விரும்பினால் தொலைபேசியில் இப்பிரச்சினை குறித்து விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

மணிகண்டன்,

நல்ல பதிவு. இது சாருவின் சமீபத்திய பதிவுக்கான பதிலாக நீங்கள் குறிப்பிடாவிட்டாலும் நான் அவ்வாறே எடுத்துக் கொள்கிறேன். சாருவின் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' நபர்களின் மீதான காழ்ப்புணாச்சி பல சமயங்களில் பீதியூட்டுகிறது. அதைப்படிக்கும் போது சாரு மீது எனக்கு எழுந்த அருவெறுப்பு சொல்லில் அடங்காது. எப்படி சாரு நவீன தமிழ் இலக்கியத்தில் நிராகரிக்க முடியாத ஆளுமையோ, சு.ரா.வும் அவ்வாறே. அவர்களின் இலக்கிய மதிப்பை காலம் தீர்மானிக்கும். தனி நபர்கள் வசைமாரிகளின் மூலமும் புகழாரங்களின் மூலமும் இதை தீர்மானித்துவிட முடியாது. சு.ரா.வை அவருடைய படைப்புகளின் மீதான பார்வையோடு மாத்திரம் அணுகாமல் ஏன் நிறுவனம்,வாரிசு சார்ந்த பார்வையோடே அணுகுகிறார்கள் என்று புரியவில்லை. (அதிலுள்ள அரசியலையும் நான் மறுக்கவில்லை. அதையே பிரதானப்படுத்துவது அவசியமா என்பதுதான் நான் கேட்க விரும்புவது). எப்போதும் politically correct ஆக எழுத விரும்புகிற ஜாக்கிரதையுணர்சசியோடு எழுதினாலும் அவருடைய புனைவுகள் மற்றும் சில கட்டுரைகள் சார்ந்தும் சு.ராவின் இலக்கிய பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. இதை சாரு போன்றவர்களின் உளறல்கள் மூலம் நிராகரித்துவிட முடியாது. (டிக்கெட் எடுத்துதர வில்லை என்பதற்காக எல்லாம் ஒருவரை நிராகரிக்க முடியும் என்றால் தமிழில் -சாரு உட்பட - யாருமே தேற மாட்டார்கள். (தனிநபரையும் அவருடைய படைப்புகளையும் சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டும் என்பது ஒரு அளவில்தான் சரி என்பது என் தாழ்மையான கருத்து).

நகுலன் பள்ளி, சு.ரர். பள்ளி என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார் சாரு. இருக்கலாம். ஆனால் அதற்காக பள்ளி மாணவர்கள் போலவே எதிர்பள்ளி மாணவர்கள் மீது சேறு இறைத்து விளையாடுவது சிறுபிள்ளைத்தனம்.

(அவசரத்தில் எழுதுவது. தேவையாயின் நிதானமாக பிறகு எழுதுகிறேன்).

Anonymous said...

சுரேஷ்கண்ணன், உங்கள் அறிவுஜீவி பிம்பத்தை கட்டமைக்க பிரம்மாண்டமாக ஆனால் படு அபத்தமாக முயற்சிக்கிறீர்கள்.

நவீன தமிழிலக்கியத்தில் சாரு என்று சாருவிடம் சொல்லி பாருங்கள். செருப்பால் அடிப்பார். நவீன இலக்கியத்துக்கு சாவு மணி அடிக்கும் முதல் ஆளு சாரு.

சுராவின் படைப்புகளை முன்வைத்து மதிப்பிட வேண்டுமானால் ஒரு நுட்பமான வாசகன் அவரை மிக சுலபமாக நிராகரித்துவிட்டு போய்விடுவான். அதிர்ஷ்டவசமாக ஒரு பதிப்பகத்தின் முதலாளி என்ற அடிப்படையிலேயே அவர் தமிழிலக்கிய வட்டாரத்தில் இடம்பிடிக்கிறார்.

அரைகுறையாக படித்துவிட்டு எது நவீனத்துவம், எது பின்நவீனத்துவம், யார் முக்கியமானவர் என்பதையெல்லாம் நீங்களே தீர்மானித்து தீர்ப்பு எழுதாதீர்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பில் பத்துக்கு ஒரு பங்கு கூட சுராவின் காலச்சுவடு கும்பல் செய்ததில்லை என்பதே நிதர்சனம்.

மணியரசு

Vaa.Manikandan said...

மணியரசன்,

என்ன இப்படி கிளம்பிட்டீங்க?

நான் தனிப்பட்ட முறையில் சாருவை தாக்கவோ அல்லது சு.ரா வை உயர்த்தவோ இந்தக் கட்டுரை எழுதவில்லை. சு.ரா வின் 'படைப்புகள்' முக்கியமானவை.

அதுதான் சொல்ல வருவது. ம.பு சொல்கிறார் என்பதை நான் மறுபேச்சின்றி ஒப்புக் கொள்வதாக அர்த்தம் இல்லை.எனக்கும் இன்னும் பல வாசகர்களுக்கும் அந்தக் கருத்து ஏற்புடையதே.

நீங்கள் சு.ரா வின் படைப்பை, ஆக்கத்தை முன்னிறுத்தி அவரை மறுப்பதாக இருப்பின் இனி பதிலிடுகிறேன். இல்லையெனில் நன்றி.

பொட்டீக்கடை, குமுதம் விகடனைக் கூட நீங்கள் டவுன்பஸ்ஸில் படித்து விட முடியும்.

நன்றி சுரேஷ் கண்ணன்.

Anonymous said...

//நீங்கள் சு.ரா வின் படைப்பை, ஆக்கத்தை முன்னிறுத்தி அவரை மறுப்பதாக இருப்பின் இனி பதிலிடுகிறேன். இல்லையெனில் நன்றி.//

வா.மணிகண்டன், இப்பதிவிலேயே நீங்கள் தந்திருக்கும் இரு கவிதைகளை வைத்தே கூட சுராவை சுலபமாக மதிப்பிட இயலும்.

முதல்கவிதையில் மறைப்பொருளாக எதை உணர்த்தவருகிறார் சுரா? உடைத்து உடைத்து எதையாவது எழுதினால் அதெல்லாம் கவிதை என்ற அவலம் தமிழுக்கு மட்டுமே உண்டு.

அந்த கவிதை உங்களுக்கு கொடுத்த அனுபவங்களை, ஈர்ப்பினை கொஞ்சம் விலாவரியாக விளக்க முடியுமா?

இல்லையென்றால், சும்மானாச்சுக்கும் கவிதையை போட்டு நானும் கவிஞன், நானும் வாசகன் என்று ஜீப்பில் ஏறிகொள்கிறீர்களா?

Vaa.Manikandan said...

//எல்லாம் அறிந்திருந்தும்
ஏதும் அறியாதவர் போல்
இன்றும் விடாதுவிசிலூதி
ஜன்னலோரம் என் முகம் காண
மல்லுக்கு நிற்பதேன்?//

சிம்பிள் சார்.

கவிதை படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான அனுபவத்தை கொடுக்கும். ஒவ்வொரு சூழலுக்கும் தக்கவாறு.

எனக்கு இந்தச் சூழலில் இந்த நேரத்தில் என்ன தோன்றுகிறது தெரியுமா? சு.ரா வை நிராகரிக்க முடியாது என்று தெரிந்தும், இல்லை இல்லை அவர் ஒன்றுமே இல்லை என்கிறார்களே அவர்கள்தான் மன பிம்பத்தில் வருகிறார்கள்.

அதை விடுங்க.

உங்களுக்கு பிடித்த சில கவிஞர்கள் யார் என்று சொல்லுங்கள். உங்கள் ரசனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

பிச்சைப்பாத்திரம் said...

மணியரசன்,

நான் எந்த பிம்பத்தையும் கட்டமைக்கவோ எதற்கும் தீர்ப்பெழுதவோ முயலவில்லை. அவரவர்களுடைய கருத்தை வெளிப்படுத்த எல்லோருக்குமே உரிமையிருக்கிறது. உங்களுடைய கருத்து எப்படி உங்களுக்கு முக்கியமாகப்படுகிறதோ அப்படியே எனக்கும். இதை ஆரோக்கியமான உரையாடல்களினால் நிறுவ முயற்சிக்கலாம். அப்போது ஒருவேளை நான் என்னுடைய நிலையை மாற்றிக் கொள்ள நேரிடலாம்.

அதைவிட்டு அரசியல்வாதிகளின் தெருப்பொறுக்கி தொண்டர்கள் மாதிரி யார் மீதும் யாரும் செருப்பெடுத்து அடித்துக் கொள்ள வேண்டாம்.

Anonymous said...

//சிம்பிள் சார்.

கவிதை படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான அனுபவத்தை கொடுக்கும். ஒவ்வொரு சூழலுக்கும் தக்கவாறு.//

இந்த சூழல், அனுபவமென்றெல்லாம் வார்த்தைகளை நிரப்பி வாசகனை மிரளசெய்வதெல்லாம் பழைய தந்திரம் மணிகண்டன். வளரும் கவிஞருக்கு அவசியமில்லாதது.

எனக்கு பிடித்த கவிஞன் பிரமிள். வேறு ஏதாவது தகவல்கள் தேவையா? தொலைபேசியில் விவாதிக்கலாம் என்றேன். பதிலே இல்லையே.

மணி

Anonymous said...

//அதைவிட்டு அரசியல்வாதிகளின் தெருப்பொறுக்கி தொண்டர்கள் மாதிரி யார் மீதும் யாரும் செருப்பெடுத்து அடித்துக் கொள்ள வேண்டாம்.//

சுரேஷ்கண்ணன், இந்த ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் மூலமாக நீங்கள் நிறுவமுயல்வது என்ன? நீங்கள் ஒரு புனிதபிம்பம் என்றா?

அரசியலையும், அரசியல் கட்சிகளின் தெருபொறுக்கி தொண்டர்களையும் தவிர்த்து உங்களால் இங்கே வாழ்ந்துவிட முடியுமா? மேல்தட்டு ஆதிக்கசாதி மனப்பான்மை கொண்டவர் நீங்கள் என்பதை இவ்வார்த்தைகளில் புரிந்துகொண்டேன்.

என் கருத்தை நான் எங்கேயும் நிறுவ முற்படவில்லை. தமிழிலக்கியத்தின் அத்தாரிட்டிகள் என்று வா.ம நிறுவ முயற்சிக்கும் காசு கண்ணன் பாணி முயற்சிகளையே நேர்மையோடு எதிர்க்கிறேன். வா.ம.வுக்கு சுராவை தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட அனுகூலங்களுக்காக பிடித்திருப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் அதை ஒட்டுமொத்த தமிழிலக்கிய உலகுக்கு பொதுமைப்படுத்த மணிகண்டனுக்கு மட்டுமல்ல, எவனுக்குமே உரிமையோ தகுதியோ இல்லை.

அதெல்லாம் இருக்கட்டும். உங்களை போன்ற வீணர்களிடம் விவாதித்து நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை. முட்டைக்கு சவரம் செய்யும் வழக்கமும் எனக்கில்லை. இளம் கவிஞரோடு கொஞ்சம் உரையாடலை நீட்டிக்க வேண்டியிருக்கிறது. தயவுசெய்து வழிவிடுகிறீர்களா?

மணி

Vaa.Manikandan said...

சுரேஷ் கண்ணனை நீங்கள் வீணர் என்பதை என் வலைப்பதிவில் அனுமதித்தற்கு சு.க விடம் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

//இந்த சூழல், அனுபவமென்றெல்லாம் வார்த்தைகளை நிரப்பி வாசகனை மிரளசெய்வதெல்லாம் பழைய தந்திரம் மணிகண்டன். //

இருபத்தைந்து வருடமாக வாசிக்கும் உங்களை எல்லாம் மிரள வைக்க முடியுமா? கவிதையைப் பற்றியும் சொல்லக் கூடாது. கவிஞனைப் பற்றியும் சொல்லக் கூடாது.

சரி நான் எதுவுமே சொல்லவில்லை. எல்லாம் லொலலாயிக்கு...

//வா.ம.வுக்கு சுராவை தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட அனுகூலங்களுக்காக பிடித்திருப்பதில் எந்த தவறுமில்லை.//

இவ்வளவு பேசியும் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாத உங்களிடம் தொலைபேசியில் உரையாடுவதற்கான அவசியமில்லை.

பிச்சைப்பாத்திரம் said...

//நீங்கள் ஒரு புனிதபிம்பம் என்றா? மேல்தட்டு ஆதிக்கசாதி மனப்பான்மை கொண்டவர் நீங்கள் ///

மணியரசன்,

இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக வாசிப்பில் ஈடுபட்டிக் கொண்டிருக்கும், ஒரு மனிதரின் மனப்பான்மையை ஒரு வார்த்தையைக் கொண்டே நிர்ணயிக்கும் உங்களின் இந்த 'சட்டென' புரிதல் திறமை எனக்கு புல்லரிப்பை ஏற்படுத்துகிறது.

//உங்களை போன்ற வீணர்களிடம் விவாதித்து நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை. //

நன்றி. எனக்கும் அப்படியே.

//தயவுசெய்து வழிவிடுகிறீர்களா?//

ஆகா. தாராளமாக. மணிகண்டனை நோக்கி எழுதப்பட்ட என் பதிலில் நுழைந்து பொன்னான கருத்துக்களை பதிந்தவர் நீங்கள் என்பதையும் அதற்கு முன்னால் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

Anonymous said...

//இருபத்தைந்து வருடமாக வாசிக்கும் உங்களை எல்லாம் மிரள வைக்க முடியுமா? கவிதையைப் பற்றியும் சொல்லக் கூடாது. கவிஞனைப் பற்றியும் சொல்லக் கூடாது.//

மணிகண்டன், இதுபோன்ற தொனியில் நான் ஏதாவது சொல்லியிக்கும் பட்சத்தில் அதை சுட்டிக் காட்டுங்கள்.

//சு.ரா. வையும் அவரது எழுத்தையும் தமிழில் ஒதுக்கிவிட்டு ஒருவன் இலக்கியம் பேச முடியாது.//

தான் தோன்றித்தனமான இந்த கருத்தை ஒரு பொதுவெளியில் நீங்கள் உதிர்த்ததற்கான ஆட்சேபத்திணை மட்டுமே தெரிவித்திருக்கிறேன்.

//இவ்வளவு பேசியும் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாத உங்களிடம் தொலைபேசியில் உரையாடுவதற்கான அவசியமில்லை.//

நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கும் பட்சத்தில் என்னை மாற்றி கொண்டிருந்தால் சரியானதாக இருந்திருக்கும். அறியாபிள்ளை மாதிரி நடிக்கிறீர்களா, இல்லை உண்மையிலேயே அப்படியா என்பது புரியவில்லை.

மணி, சுயமாக சில பிம்பங்களின் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள் காலச்சுழற்சியில் ஒருநாள் நம் காலில் மிதிபட்டே சுக்குநூறாக உடையும். அச்சூழல் சித்திரவதையானது. அனுபவித்துப் பாத்திருக்கிறேன். என்னைவிட பதினைந்து, இருபது வயது உங்களுக்கு குறைவாக இருக்கலாம். எனக்கு ஏற்பட்ட மீள்மதிப்பீட்டு சித்திரவதை சூழல் உங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற அக்கறையில் சிறிது நேரம் உங்களோடு உரையாற்றினேன். அப்புறம் உங்கள் பாடு. சுரா பாடு.

மணியரசன்

Anonymous said...

ஜீப்பில் இடம் இருக்கிறதா? :)

சீரியசாக, மணிகண்டன் நீங்கள் மணியரசுடன் விவாதிக்காமல் ஒதுங்கி போவது போல் தெரிகிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மணிகண்டன், எனக்கு உங்களுடைய இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறது.

சுந்தர ராமசாமியின் அத்தனை சிறுகதைகளையும், மூன்று நாவல்களையும், ஏறக்குறைய அத்தனை கட்டுரைகளையும், எல்லாக் கவிதைகளையும் வாசித்திருக்கிறேன் என்ற அடிப்படையிலும், நானும் 20 வருடங்களாக வாசித்து வருகிறேன் என்ற முறையுலும், சுரா ஒரு நிராகரிக்க முடியாத ஆளுமைதான் என்று வழிமொழிகிறேன்.

அவரது கவிதைகள் என்னைக் கவர்ந்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டாவது கவிதைகூட சிறுபத்திரிகைச் சூழல் சண்டை தான் :(

அவர் பிரசுர நிறுவனம் வைத்திருந்ததால்தான் தாக்குப் பிடித்தார் என்பதெல்லாம் காமெடி :) அவர் எப்போது கா.சு. நிறுவனம் ஆரம்பித்தார் என்ற வருடக் கணக்கைப் பார்த்தால்கூட இது எளிதாகத் தெரிந்துவிடும்.

அதற்காக அவரை பாரதி புதுமைப்பித்தன் வரிசையில் வைக்க கண்ணன் செய்யும் முயற்சிகள் எனக்கு ஏற்புடையவையல்ல.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவரது கவிதைகள் என்னைக் கவர்ந்ததில்லை என்று எழுதியிருந்தேன். அதை, அவரது பல கவிதைகள் என்னைக் கவர்ந்ததில்லை என வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அவரது சில கவிதைகள் மிகப் பெரிய மனஎழுச்சியைக் கொடுக்கக்கூடியவை. (நோவெடுத்து சிரமிறங்கும் நேரம் மாதிரியான கவிதைகள்)

Anonymous said...

மணியரசன் வேறு யாரும் இல்லை. சாருதான். எப்படி?

//நீங்கள் சாரு அளவுக்கு உயர இன்னும் ஒரு முப்பது வருடமாவது பயணிக்க வேண்டும்.//

//சந்தேகம் இருக்கிறது என்றால் ஜெயமோகனை ஆலோசிக்கவும்.//

//மனுஷ்யபுத்திரனுக்குக் தமிழிலக்கிய படைப்பாளிகள் வரிசையை நிர்ணயிக்கும் உரிமையை யார் அய்யா கொடுத்தது?//

//எனக்கு பிடித்த கவிஞன் பிரமிள்.//

இதில், //யார் அய்யா கொடுத்தது?// என்ற வரி அவர் எழுதுவதை போல உள்ளது.

//இருபத்தைந்து வருடமாக வாசிப்பை சுவாசிப்பாக மேற்கொண்டு வரும் என்னைபோன்ற தீவிர தமிழிலக்கிய//

அவர்தான் அடிக்கடி இப்படி சொல்வார் ;-)

ஆனா இதப் படிக்கும் போதுதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு...

//நவீன தமிழிலக்கியத்தில் சாரு என்று சாருவிடம் சொல்லி பாருங்கள். செருப்பால் அடிப்பார். நவீன இலக்கியத்துக்கு சாவு மணி அடிக்கும் முதல் ஆளு சாரு.//

நானும் ஒரு தீவிர வாசகன் என்ற முறையில் அவரது எழுத்தை படித்தவன் என்ற அனுபவத்தில் இதை சொல்கிறேன். உண்மை வேறாகவும் இருக்கலாம்.

Pot"tea" kadai said...

மன்னிக்கவும்...எவ்வொரு எழுத்தாளனையும் பேச எனக்கு தகுதியில்லை என்பதினால் இதற்கு முன் பின்னூட்டத்தில் எழுதியதை திரும்பப்பெற்றுக் கொள்கிறேன். நன்றி. நேற்று கொஞ்சம் போதை அதிகம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பொட்டீ, உங்கள் பின்னூட்டம் கலக்கல் - ரசித்தேன் (நான் இப்போதும் போதையில்தான் இருக்கிறேன்) :) :)

sri said...

என்ன தலித் இலக்கிய எழுச்சியா? இதுக்கு எல்லாம் பின்னுட்டம் எழுதறதும் ஒன்னு சாருவோட நாரிபோனத படிக்கறதும் ஒன்னு. தெரியாத தான் கேக்குறேன் இணையம் என்ன இந்த தலித் இல்லகிய ரவுடிகள் ராஜ்யமா ?