Aug 19, 2009

ஸ்வைன் ஃப்ளூ: மீடியாக்க‌ளின் கொண்டாட்ட‌ம்

இன்றுவரையிலும்(ஆகஸ்ட் 13,2009) 20 பேர் வரை பன்றிக்காய்ச்சலுக்கு இந்தியாவில் மரணித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னமும் கூட அதிகமாகலாம். ஆனால் இந்திய மனதில் ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பீதியும், கலவரமும் இறப்பு எண்ணிக்கையோடு விகிதாச்சாரப்படுத்தும் போது பன்மடங்கு குரூரமானது.

பன்றிக் காய்ச்சல் பரவும் வேகத்தை விட பன்மடங்கு வேகமாக அது குறித்தான பீதி மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. எல்லாப் புகழும் மீடியாவுக்கே. மொத்தமாகச் சொன்னால் இந்திய மீடியா, அதில் குறிப்பாக வட இந்திய மீடியாக்கள் பயத்தை பரப்புகின்றன‌. தங்களுக்கென எந்தவித பொறுப்புணர்ச்சியுமற்ற வணிகம் மற்றும் பரபரப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் நுகர்வு கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக இவர்க‌ள் செயல்படுகிறார்கள்.

அரசின் ஊடகங்கள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்து இந்நோய் குறித்தான தகவலைப் பரப்புவதற்கு முன்பாகவே, தனியார் தொலைக்காட்சி சானல்கள் குதியாட்டம் போட ஆரம்பித்துவிட்டன. ப்ளாஷ் நியூஸ்கள், நீயுஸ் ரூம் விவாதங்கள் போன்றவற்றோடு பெரும் வெள்ளத்தில் நகரங்கள் அடித்துச் செல்லப்படும் போது பதறியபடி செய்தி கொடுக்கும் ஆங்கில திரைப்பட நடிகர்களின் முகபாவத்தோடு இந்தியச் செய்தியாளர்கள் மருத்துவமனைகளின் முன்பாக மைக்களோடு தோன்றினார்கள்.

பன்றிக்காய்ச்சல் தடுக்க முடியாத அளவில் பரவுவதாகவும், தாக்குபவர்கள் உடனடியாக இறந்து போவது உறுதி என்ற ரீதியிலும் பொது ஜன மனதில் அவநம்பிக்கையை விதைத்துவிட்டார்கள்.

சளி பிடித்த‌வ‌ர்க‌ள் எல்லோரும் பேயடித்தது போல அலறியபடி ம‌ருத்துவ‌ம‌னைக்குச் செல்ல‌த் துவங்கியிருக்கிறார்க‌ள். ஊட‌க‌ங்க‌ள் இந்த அச்சத்தில் மேலும் எண்ணெய் ஊற்ற‌த் துவ‌ங்கியிருக்கின்ற‌ன. ம‌காராஷ்டிராவிலும், புனேயிலும், இன்ன பிற ஊர்களிலும் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லை ப்ளாஷ் செய்தியில் ஓட‌ விடுகிறார்க‌ள். மருத்துவமனையின் கூச்சல் பின்புறத்தில் கேட்க ஆங்கிலம் பேசும் குமரி ஒருத்தி மாஸ்க் அணிந்து வீட்டின் வரவேற்பறையில் இருந்து நம்மை பயமூட்டுகிறாள். இந்த திகிலூட்டும் படியான பயம் நம் மனதிற்கு ஒரு போதையை தருகிறது. அது மும்பையில் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலானாலும் சரி, அடித்துச் செல்லும் சுனாமியாக இருந்தாலும் சரி. நமக்கு அந்த திகிலுடன் கூடிய செய்தி தேவைப்படுகிறது. நமக்கு வெகு அருகில் இருக்கும் ஆபத்தை ரசிக்கப் பழகியிருக்கிறோம். இந்த ரசனையை செய்தி நிறுவனங்கள் காசாக்குகின்றன. இந்த காசாக்கும் வித்தை இப்பொழுது பன்றிக்காய்ச்சலில் டேரா போட்டிருக்கிறது.

அர‌சின் மெத்த‌ன‌ப் போக்கிற்கு பெருத்த‌ அடி விழுந்திருக்கிற‌து. ஒரு ப‌ன்றிக்காய்ச்ச‌ல் சோத‌னைக்கு 'மட்டுமே' ஐந்தாயிர‌ம் ரூபாய் வ‌ரை அர‌சுக்கு செல‌வு பிடிப்ப‌தாக‌ ஒரு செய்திக் குறிப்பில் இருந்த‌து. நேற்று ம‌ட்டும் சென்னையில் மட்டும் ஆயிர‌ம் பேருக்கு சோத‌னை செய்திருக்கிறார்க‌ள். இதுவரைக்கும் இந்தியா முழுமைக்குமான மொத்த‌ செல‌வு தொகையை க‌ண‌க்கிட்டுக் கொள்ள‌லாம்.

அர‌சு கொஞ்ச‌ம் முன்ன‌தாக‌ செய‌ல்ப‌ட்டிருந்தால், ம‌க்க‌ளிடையே இந்நோய் குறித்தான‌ விழிப்புண‌ர்வை உருவாக்கியிருக்க‌லாம். மக்களின் பதட்டம் கொஞ்சமாவது குறைந்திருக்கும். ஆனால் அரசு ஊடகம் பற்றி நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இன்னமும் விண்டோஸ் பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் மாற்றுவதுதான் பொதிகை சேனலுக்குத் தெரிந்த அதிகபட்ச கிராபிக்ஸ். டிஜிட்டல் டிவி உலகில் தொடர்ந்து இருப்பவர்கள் தினமும் ஒரு முறை பொதிகைச் சேனலுக்கு சென்று வந்தால் வாய்விட்டு சிரிக்கலாம்.

பன்றிக் காய்ச்சல் நோய் வந்த உடனே யாரும் இறப்பதில்லை. மருத்துவமின்றி நோய் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் நுரையீரல் போன்ற சுவாச உறுப்புகள் பாதிக்கப்பட்டு பின்னர்தான் இறக்கிறார்கள். சரியான மருத்துவம் அளிக்கப்படுமானால் ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்களில் பிரச்சினையில்லாமல் நிவாரணம் பெற்றுவிடலாம்.ஆனால் இது போன்ற தகவல்களை எந்தச் செய்தி நிறுவனமும் தெளிவாகச் சொல்வதாகத் தெரியவில்லை.

சளிக்காய்ச்சலோடு மருத்துவமனைக்கு யாராவது வந்து, ஒரு வேளை பன்றிக்காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பரிசோதனைக்கான மாதிரி எடுப்பதைக் கூட ஊடக மனிதர்கள் செய்தியாக்குகிறார்கள். நெல்லையில் 2 பேர், மதுரையில் 3 பேர், கோவையில் ஒருவர் என்று எண்ணிக்கையை கூட்டி ஜென்ம சாபல்யம் அடைகிறார்கள். செய்திச் சேனல்களின் சில்லரைத் தனத்தோடு ஒப்பிட்டால் செய்தித் தாள்கள் தேவலாம் என்றுதான் படுகிறது. ஆனால் அவர்களும் மாஸ்க்களோடு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு முன்னதாக நிற்கும் நீண்ட வரிசை, இறந்தவர்களின் உடல், அவர்களின் அழும் குடும்பத்தார் போன்ற நிழற்படங்களை வெளியிட்டு திருப்திபடுகிறார்கள்.

மெக்ஸிகோ போன்ற நாடுகளில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான பேர்களை கொன்றுவிட்டாலும் இந்நோயின் பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.ப்ளேக், அம்மை போன்ற கொள்ளை நோய்களை இந்த உலகம் ஏற்கனவே முற்றாக நீக்கியிருக்கிறது. இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட சார்ஸ் என்ற நோயின் பெயரை பல பேர்கள் மறந்திருக்கலாம். பன்றிக் காய்ச்சலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதுவரையிலும் ஊடகங்கள் நோய் குறித்தான பயனுள்ள தகவல்களையும், நோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் போன்றவற்றை ஒளிபரப்பலாம். அரசு, மருத்துவமனைகள், மருத்துவர்கள் மெத்தனமாக இருந்தால் அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வருமானால் பாராட்டலாம். இறப்பு குறித்தான செய்திகளை மறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதற்கென பக்குவமான முறையில் தெரிவித்து, மக்களை பயமுறுத்துவதை தவிர்க்கலாம். ஆனால் இவை எல்லாம் மீடியாக்களிடையே தற்போது நிலவி வரும் போட்டியிலும் பொறாமையிலும் சாத்தியமில்லை.

இந்தியாவில் சற்றே வேகமாக பரவத்துவங்கியிருந்தாலும் இன்ன‌மும் கூட‌ ப‌ன்றிக்காய்ச்ச‌லுக்கான‌ ச‌ரியான‌ அறிகுறிகளும் பாதுகாப்பு முறைகளும் பரவலாக எல்லோருக்கும் தெரிந்திருக்க‌வில்லை.

ச‌ளிக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் என்ப‌து கிட்ட‌த்த‌ட்ட‌ அனைத்து வ‌கையான‌ வைர‌ஸ்க‌ளுக்கும் பொதுவான‌து. இவை த‌விர்த்து வாந்தி, வ‌யிற்றுப் போக்கு, உட‌ல்வ‌லி, அச‌தி, த‌லைவ‌லி போன்ற‌வையும் பன்றிக்காய்ச்சல் இருப்போருக்கு சேர்ந்திருக்க‌க் கூடும். ச‌ளிக் காய்ச்ச‌ல் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் பின் சொன்ன‌ தொந்த‌ர‌வுக‌ள் இய‌ல்பான‌வை என்ப‌தால், எந்த‌ வித‌மான‌ அறிகுறிக‌ளெனில் உஷாராக‌ வேண்டும் போன்ற‌ செய்திக‌ளை அரசோ அல்லது தனியாரோ விளம்பரப்படுத்த வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் தடுப்பு முறைகளில் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும், கண், வாய் போன்ற பகுதிகளை கழுவாத கைகளின் மூலம் தொடுவதை தவிர்க்க வேண்டும், தும்மும்போதும் இருமும் போதும் டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது என்பதும் அவற்றை மறுமுறை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது போன்ற சில செயல்களோடுதான் மாஸ்க் போன்ற வஸ்துகளை பயன்படுத்தி இதன் பரவலை கட்டுப்படுத்தலாம்.

சிலர் இலாபம் கொழிப்பதற்காகவோ என்னவோ மாஸ்க் மட்டுமே பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் ஆயுதம் போன்று ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக விற்கப்படும் முக‌வுறைக‌ளை(மாஸ்க்)பெங்க‌ளூரு போன்ற‌ மாந‌க‌ர‌ங்களின் மருந்துக் க‌டைக‌ள் ப‌ன்ம‌ட‌ங்கு இலாப‌ம் வைத்து கொழுக்கின்ற‌ன‌. டெமிப்ளூ போன்ற‌ ம‌ருந்துக‌ள் அர‌சாங்க‌த்தின் மூல‌ம் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டாலும் அவை த‌னியார்க‌ளாலும் ப‌துக்க‌ப்ப‌டுவ‌தாக‌ செய்திக‌ள் வ‌ருகின்ற‌ன‌. வேறு சில‌ர் எங்க‌ளிட‌ம் ஊசி போட்டுக் கொண்டால் ப‌ன்றிக் காய்ச்ச‌ல் வ‌ராது என்று விள‌ம்ப‌ர‌ம் செய்கிறார்க‌ள்.

இந்த‌ ஊசி வியாபாரிக‌ளுக்கும், "பயமுறுத்தும்" ஊட‌க‌ங்க‌ளுக்கும் பெரிய‌ வித்தியாச‌ம் ஒன்றுமில்லை. இர‌ண்டு பேருமே ம‌க்க‌ளின் பீதியில் த‌ங்க‌ளின் வ‌யிறு வ‌ள‌ர்க்கும் அற்ப‌ஜீவிக‌ள். ம‌க்க‌ள் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டும். இந்த‌ ப‌ய‌ம் இன்னும் அதிக‌மாக‌ வேண்டும். ம‌றுநாள் இன்னும் கூட‌ வேண்டும். அப்பொழுதுதான‌ இவ‌ர்க‌ள் பிழைக்க‌ முடியும். எச்சிலையை அண்டிப் பிழைக்கும் நாய்களைப் போல.
நன்றி:உயிரோசை

1 எதிர் சப்தங்கள்:

காரணம் ஆயிரம்™ said...

வதந்தியையும் பீதியையும் ஊடகம் மூலம் பரப்புவதே தேசத்துரோகத்திற்கு இணையான பாவம் என்றெண்ணிய பழைய ஊடகவியலார்கள் எங்கே, இவர்கள் எங்கே...

விளக்கமான பதிவிற்கு நன்றி..

காரணம் ஆயிரம்™