Jul 6, 2008

ஒரு தும்பி அலைந்து கொண்டிருக்கிறது

உயிர் எழுத்து ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது.

ஹைதராபாத்தில் எனது அலுவலகம் நகர எல்லைக்கு வெளிப்புறமாக மாற்றப்பட்டதில் இருந்து மாதத் துவக்கத்தில் வரும் முதல் இதழாக உயிர் எழுத்து இருந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மதிய நேரத்தில் வரும் தபாலை கையொப்பமிட்டு வாங்கியவுடன் அலுவலகத்தில் அவசரஅவசரமாக கவிதைகளை ஒரு புரட்டு புரட்டுவது என்பது தூக்கத்தில் இருப்பவன் சூடாக மசால் டீ குடித்து தெளிவாவது போல.

உயிர் எழுத்தில் கதை, கட்டுரைகளுக்கு இணையாக கவிதைகளுக்கு இடம் இருந்து வந்திருக்கிறது. இதுவரை வந்திருக்கும் இதழ்களை மொத்தமாக பார்க்கும் போது ஒவ்வொரு இதழிலும் பத்துக்கும் குறையாத கவிஞர்களும், சராசரியாக இருபதுக்கும் அதிகமான கவிதைகளும் இடம் பெறுகின்றன. இதுவ‌ரை அறிய‌ப்ப‌டாத‌ த‌மிழின் இள‌ம் க‌விஞ‌ர்க‌ளுக்கு உயிர் எழுத்து அமைத்துக் கொடுத்திருக்கும் இட‌ம் முக்கிய‌மானது.

சுதிர் செந்திலிட‌ம் ஒரு முறை ய‌தேச்சையாக‌ ஒரே இத‌ழில் ப‌த்துக் க‌விஞ‌ர்க‌ள் இட‌ம் பெறுவ‌து என்ப‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌விஞ‌ன் க‌வ‌ன‌ம் பெறாம‌ல் போவ‌த‌ற்கான‌ வாய்ப்பாக அமைந்துவிடலாம் என்றேன். அத‌ற்கு அவ‌ர் உயிர் எழுத்து பிரசுரம் ஆகும் கவிதைகளுக்கு ம‌திப்பெண் இடுவ‌தை விரும்ப‌வில்லை. இன்றைய‌ சூழ‌லில் க‌விஞ‌ன் இய‌ங்குவ‌த‌ற்கான‌ 'பிளாட்பார்ம்' தேவைப்ப‌டுகிறது. அதை உயிர் எழுத்து அமைத்துத் த‌ரும் என்றார்.

அந்த‌ப் ப‌தில் என‌க்கு அப்பொழுது திருப்திய‌ளிக்க‌வில்லை. வேறொரு ந‌ண்ப‌ர் பிறிதொரு ச‌ம‌ய‌த்தில் ஐம்ப‌து க‌விதைக‌ளுக்குள்ளும் ந‌ல்ல‌ க‌விதையும் ந‌ல்ல‌ க‌விஞ‌னும் அடையாள‌ம் காண‌ப்ப‌டுவார்க‌ள் என்றார். இது ஏற்றுக் கொள்ள வேண்டியதான கூற்று. இந்த‌க் கூற்றினை முன்ன‌வ‌ரின் கூற்றோடு பொருத்திக் கொள்ள‌ முடிகிற‌து.

இன்றைய‌ த‌மிழ்க் க‌விதையில்- மேற்கொள்ளப்படும் ப‌ரீட்சார்த்த‌ முய‌ற்சிக‌ளுக்கும், கவிஞனின் தொட‌ர்ச்சியான‌ இய‌க்க‌த்திற்கும் இட‌ம் தேவைப்ப‌டுகிற‌து. ஆனால் தமிழில் இந்தவிதமான முயற்சிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

வேறு எந்த‌ ஊட‌கத்திலும்- நான் குறிப்பாக‌ சொல்ல‌ விரும்புவ‌து இணைய‌ ஊட‌கம்,க‌விதை வ‌ருவ‌தை விட‌வும், இத‌ழ்க‌ளில்- இல‌க்கிய‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இத‌ழ்க‌ளில் அச்சு வ‌டிவ‌த்தில் த‌ன‌து க‌விதை வெளியாவ‌து க‌விஞ‌னுக்கு உற்சாக‌மூட்ட‌க் கூடிய‌தாக‌ இருக்கிற‌து. இந்த‌ உற்சாக‌த்தை, வெகுவான கவிஞர்களுக்கு, வெளியாகியிருக்கும் உயிர் எழுத்தின் ப‌ன்னிரெண்டு இத‌ழ்க‌ளும் அளித்து வ‌ந்திருக்கின்ற‌ன.

(2)

ஒரு வாச‌க‌னாக‌, வாசிக்கும் போது என‌க்குள் அதிர்ச்சியையோ, ச‌ந்தோஷ‌த்தையோ, துக்க‌த்தையோ,கேவ‌ல் அல்ல‌து விசும்ப‌லையோ அது எதுவாக‌ இருப்பினும் அதை ச‌ற்றே ஆழ‌மாக‌ உண்டாக்கிய‌ சில‌ க‌விதைக‌ளை ம‌றுவாசிப்பு செய்து கொள்வ‌து இக்கட்டுரையின் நோக்க‌மாக‌ இருக்கிற‌து.

க‌விதையில் அங்கததத்தை கொண்டுவ‌ருவ‌து என்ப‌தை ச‌ற்று க‌டின‌மான‌ அம்சமாக‌ உணர்கிறேன். க‌விதையில் துக்க‌த்தை, த‌ன் துயர‌த்தை, புல‌ம்ப‌லை சொல்வ‌து சுல‌ப‌மான‌து. அந்தச் சுலபத்தில் ச‌ற்று சிக்க‌ல் என்ப‌து "நாவ‌ல்டி" எனப்ப‌டும் உண்மைத்த‌ன்மையோடு க‌விதையை வெளிப்ப‌டுத்துவ‌து.இந்த‌ Novelty இல்லாத‌தால்தான் பெரும்பாலான‌ துக்க‌த்தைப் பாடும் க‌விதைக‌ள் வ‌ற‌ட்சித் த‌ன்மையுடைய‌தாக‌ இருக்கின்ற‌ன.

தமிழ் மனம் மிகைப்படுத்துதலில் துவண்டு கொண்டிருக்கும் மனம். தன் எந்தவிதமான‌ உணர்ச்சியை வெளிப்படுத்தவும் மிகைப்படுத்தும் நடிப்பினை நாடிச் செல்கிறது. இந்த நடிப்பு படைப்புகளில் வெளிப்படும் போது அதன் மொத்தச் சாயத்தையும் நுட்பமான வாசகன் வெளுக்கச் செய்து நிராகரிப்பான்.

அங்க‌தத்தில் ந‌டிப்ப‌த‌ற்கான‌ அவ‌சிய‌ம் அதிக‌ம் இல்லாம‌ல் இருப்ப‌தால் அவை சிறப்பாக‌ வெளிப்ப‌டுவ‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ள் அதிக‌ம்.ஆனால் எதை அங்க‌தமாக‌ச் சொல்ல‌ப் போகிறோம் என்ப‌தும், சொல்ல‌ப்ப‌டும் முறையை தேர்ந்தெடுப்பதிலும் சிர‌மம் இருக்கிற‌து.

இசையின் "கிரீட‌ங்க‌ளை ம‌ட்டும் தாங்கும் த‌லைக்கார‌ன்" (ஜூலை 2007) மேலோட்ட‌மாக‌ அங்க‌த‌ம் தொனிக்கும் க‌விதை என்றாலும், வ‌லிய‌ அதிகார‌ மைய‌த்தை த‌க‌ர்க்கப்ப‌த‌ற்கான‌ கேள்வியை த‌ன்னுள் கொண்டிருக்கும் க‌விதையாக, ச‌ராச‌ரி ம‌னித‌ வாழ்வின் அப‌த்த‌த்தை ப‌ற்றி பேசும் கவிதையாக இருக்கிறது. நுண்ணதிகாரங்கள் நம் நகங்களுக்குள் ஊசியைச் செலுத்திக் கொண்டேயிருக்கின்றன. அதிகாரப் புகை சூழ்ந்திருக்கும் இவர்களின் பாவனைகளையும் ஆட்ட‌ங்களையும் ஒவ்வொருவரும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த‌ ஆட்ட‌த்தை, அதிகாரத்தை அப்ப‌ட்ட‌மாக‌ பேசும் க‌விதை இது.

க.ஜான‌கிராம‌ன் தன் க‌விதைக‌ளில் இய‌ல்பாக‌ அங்க‌த‌த்தை சொல்லிச் செல்லும் க‌விஞ‌ர். அவ‌ரின் "விளையாட்டு"(ஜூலை 2007) க‌விதையை எதிர்பாராத மழை பெய்த ஞாயிற்றுக் கிழமையின் மாலையில் ஒரு பூங்காவில் ப‌டித்துவிட்டு கொஞ்ச‌ நேர‌ம் த‌னியாக‌ சிரித்துக் கொண்டிருந்தேன்.

ராணிதில‌க்கின் க‌விதைக‌ள், இய‌ல்பான‌ காட்சிய‌மைப்பினூடாக‌வோ அல்ல‌து கூற்றுக‌ளினூடாக‌வோ சென்று வாசகனுக்குள் பெரும் திடுக்கிட‌லை உருவாக்கக் கூடிய‌வை. த‌மிழின் வ‌ச‌ன‌க‌விதைகளில் அவ‌ர் செய்து பார்க்கும் சோத‌னை முய‌ற்சிக‌ளின் மீது என‌க்கு பெரும் ஈர்ப்பு இருக்கிற‌து. "ஒரு செடியிட‌ம் ம‌ன்றாடுதல்"(ஜூலை,2007) க‌விதையில் நான் பெற்ற திடுக்கிடச் செய்யும் வாசிப்ப‌னுப‌வ‌ம் ம‌ற‌க்க‌விய‌லாத‌தாக‌ இருக்கிற‌து.

தொட‌ர்ச்சியாக‌ க‌விதை,சிறுக‌தை என‌ இய‌ங்கிக் கொண்டிருக்கும் எஸ்.செந்தில்குமாரின் க‌விதைக‌ளில் இருக்கும் கதையம்சத்தில் என‌க்கு விருப்பம் அதிகம்.

சாமிக‌ளுக்கு வ‌ண‌க்க‌ம். க‌தையில் க‌விதையிருக்க‌லாமா? க‌விதையில் க‌தை இருக்க‌லாமா? என்னும் ச‌ண்டைக்குள் என்னை இழுத்து மிதிக்க‌ வேண்டாம். இது என‌க்கு பிடித்திருக்கிற‌து.

அக்டோப‌ர் 2007 இத‌ழில் வெளியான‌ இவரது "ஒரு ப‌ழ‌த்தைப் போல‌" க‌விதை, சூரிய‌னை ப‌ற‌வை கொத்தி எடுத்துச் சென்றுவிடும் க‌விதை.

இது போன்ற வினோத காட்சிய‌மைப்புக‌ளை விசுவல் மீடியா எனப்படும் காட்சி ஊடகங்களில் இன்றைய தேதிதகளில் காண முடிகிறது. கவித்துவமான காட்சியமைப்புகளை அமைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு தொடர்ந்து நெருக்குதலை உண்டாக்கிக் கொண்டேயிருக்கிறது. படைப்புகளில் முயன்று பார்க்கப்பட்ட மேஜிகல் ரியலிசம், சர்ரியலிசம் போன்ற‌ பல்வேறு உத்திகளும் அழகியல் இயக்கங்களும் தற்போது காட்சி ஊடகங்களிலும் தங்களை நிர்மாணித்துக் கொள்கின்றன.

செந்தில்குமாரின் இந்தக் கவிதை வாசகனை குழப்பச் செய்வதில்லை. மாறாக எளிமையான‌ தன்வ‌டிவ‌மைப்பில் ஒரு குறுங்கதையை கொண்டு வருகிறது. இந்த நேர்த்தி இந்த‌க் க‌விதைக்கான‌ த‌னி இட‌த்தை உறுதிப்ப‌டுத்துகிற‌து.

மார்ச் 2008 இத‌ழில் வெளியான‌ க‌.அம்ச‌ப்பிரியாவின் "நூல‌க‌ ஆணைக் குழுவின் முத‌ல் ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் க‌விஞ‌ன்" என்ற‌ க‌விதையும் அத‌ன் வ‌டிவ‌மைப்பில் க‌விஞ‌ன் முய‌ன்றிருக்கும் வித்தியாச‌த்திற்காக‌ என‌க்குப் பிடித்திருக்கிற‌து.

வாச‌க‌னை க‌விதைக்குள் வ‌ர‌ச் செய்ய‌ கைக்கொள்ள‌ வேண்டிய‌ பிர‌ய‌த்த‌னத்தை க‌விஞ‌ன் மேற்கொள்ள‌ வேண்டிய‌தில்லை என்ற‌ கூற்றில் என‌க்கு ஒப்புத‌லில்லை. ந‌ல்ல‌ க‌விதை தானே எழுதிக்கொள்ளும் என்பதான 'பழைய சரக்கிற்கும்' இத‌ற்கும் பெரிய‌ வித்தியாச‌மில்லை. வாசகனை தன் கவிதைக்குள் கொண்டு வரும் பொறுப்பு கவிஞனுக்கே உரித்தானது என்பேன்.

அந்த வகையில் கவிஞர்கள் கவிதையின் வடிமைப்பு உத்திகளில் உருவாக்கும் மாற்றங்களில் வாசகனை கவிதைக்குள் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

(3)

க‌ட‌வுளை எந்த‌ வ‌டிவ‌த்திலும் க‌விதைக்குள் பொருத்திவிடுவ‌து க‌விதையை ப‌டிப்ப‌த‌ற்கு உற்சாக‌மாக‌ இருக்கிற‌து. க‌ட‌வுள் மது அருந்துவதிலிருந்து, க‌ஞ்சா போதையில் சாலையோர‌ம் வீழ்ந்து கிட‌ப்ப‌து வ‌ரை க‌ட‌வுளின் சாமானிய‌ முக‌ங்க‌ள் ச‌லிப்பு உண்டாக்காத‌வை. அவை நம்மை ஈர்க்க கூடிய முகங்களாக இருக்கின்றன. நம் படிமங்களை, மனத் தொன்மங்களை சிதைத்து கடவுளை நம்மோடு உலவச் செய்வதில் கவிஞனுக்கு கிடைக்கும் திருப்தி வேறொரு வடிவத்தில் வாசகனுக்கும் கிடைக்கிறது.

மார்ச்'2008 இத‌ழில் கோசின்ரா, தூர‌ன் குணா க‌ட‌வுளை வைத்து எழுதியிருந்த‌ க‌விதைக‌ள் குறிப்பிட‌ப் ப‌ட‌ வேண்டிய‌வை. குறிப்பாக கோசின்ராவின் க‌ட‌வுளை கல்லால் அடித்துக் "கொல்வ‌த‌ற்கான‌ ஆணை".

ஜனவரி'2008 இதழில் ஆதவன் தீட்சண்யா எழுதியிருந்த "அப்ரூவராகிய கடவுளும் அபயமளித்த நந்தனும்" என்ற கவிதையில் கடவுள் இடம்பெறுகிறார். முந்தைய கவிதைகளில் இருந்து வித்தியாசமான தளத்தில் இக்கவிதையில் கடவுள் இருக்கிறார்.

மார்ச்'2008 பொன்.இள‌வேனில் எழுதிய "இன்றைய‌ கிழ‌மை" க‌விதை சோப்பு குமிழியொன்றை ஒத்திருக்கிறது. இந்தக் கவிதை த‌ன‌து பாதத்தை எந்த தளத்தின் மீதும் ஊன்றவில்லை. அது மிதந்து கொண்டிருக்கிறது. கவிதையின் பொருள் பற்றிய கவனம் எனக்கு இல்லை. கவிதை கொண்டிருக்கும் அந்த‌ர‌த்த‌ன்மை அளிக்கும் வாசிகப்ப‌னுப‌வமே அத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம்.

அக்டோபர் 2007 இத‌ழில் வெளியான‌ த‌யாநிதியின் "நீரிழிவு மைய‌ப் ப‌க‌ற்பொழுதின் காட்சிக‌ள்" காட்சிக‌ளை எவ்வித‌மான‌ த‌ன்முனைப்பும் இல்லாம‌ல் இலாவ‌க‌மாக‌ வெளிப்ப‌டுத்திக் கொண்டிருந்த‌து‍ ‍- க‌டைசி நான்கு வ‌ரிக‌ள் வ‌ரை. க‌டைசி நான்கு வ‌ரிக‌ளில் அமைந்துவிட்ட‌ ஒரு வித‌ நாட‌கீய‌த்த‌ன்மை, க‌விதையை கீழே எறிந்த‌ பிர‌மையை உருவாக்கிய‌து.

ராஜா ச‌ந்திர‌சேக‌ரின் "சுதந்திரம்"(பிப்ர‌வ‌ரி 2008). இங்கு இய‌ல்பான உண்மை ஒன்று க‌விதையின் விர‌ல்க‌ளைப் ப‌ற்றிகொண்டு ம‌ன‌திற்குள் சுற்ற‌ ஆர‌ம்பிக்கிற‌து.

இந்த‌ உல‌கின் பிர‌ம்மாண்ட‌த்தில் இருண்மையோ அல்லது,இருளோ எங்கும் வியாபித்திருக்கிற‌து. ப‌டைப்பாளி என்பவன் விள‌க்கை ஏந்திக் கொண்டு உண்மையைத் தேடி அலைப‌வ‌னாக‌ இருக்கிறான். அவ‌ன் உண்மையை அடையாள‌ம் காண்கிறான் அல்ல‌து இருளின் மீது சிறு வெளிச்ச‌த்தை வீச‌ச் செய்து வாச‌க‌னை உண்மையைக் க‌ண்ட‌றிய‌ச் சொல்கிறான். இக்க‌விதையில் க‌விஞ‌ன் நேர‌டியாக‌ உண்மையைச் சொல்லிவிடுகிறான். மிக‌க் க‌ச்சிதமாக‌ அமைந்த‌ க‌விதை என்று இத‌னைச் சொல்வேன்.

இந்தச் சில கவிதைகளைத் த‌விர்த்து இற‌க்கை ராச‌மைந்த‌னின் "அவ‌ன்",(டிசம்பர் 2007) ய‌வ‌னிகா ஸ்ரீராமின் "இர‌த்த‌ ருசியும் க‌ர‌ப்பான் பூச்சியும்"(டிச‌ம்ப‌ர்'2007), சுதிர் செந்திலின் ம‌ர‌ண‌ம் ப‌ற்றிய‌ ஏழு க‌விதைக‌ளில் ஏழாவ‌து க‌விதை(பிப்ரவரி 2008), ல‌க்ஷ்மி ம‌ணிவ‌ண்ண‌னின் "ஆண் துற‌வி"(பிப்ர‌வ‌ரி 2008), இள‌ங்கோ கிருஷ்ண‌னின் "ஒரு பாறாங்க‌ல்லை நேசிப்ப‌து ப‌ற்றி"(ந‌வ‌ம்ப‌ர் 2007), அனிதாவின் "யாருமற்ற விடியல்" (பிப்ரவரி 2008), எஸ்.தேன்மொழியின் "ப‌ருவ‌ம்"(அக்டோப‌ர் 2007).இவ்வாறு எழுதிக் கொண்டு செல்வ‌து ப‌ட்டிய‌லாகிவிடலாம்.

மிக முக்கியமான கவிதைகள் நிறைய இருக்கின்றன.

எதிர்மறை விமர்சனத்திற்கு உட்படுத்துவதற்கான வாய்ப்புள்ள கவிதைகள் குறித்தான வினா எழும் போது அந்த வகையான கவிதைகள் உயிர் எழுத்தில் இருப்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அவற்றைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, இந்தக் கட்டுரை முதலிலேயே குறிப்பிட்டது போல வாசக மனதில் நிலைத்து நிற்கும் கவிதைகளை பற்றியது.

தேவதச்சன் என்னிடம் ஒரு முறை கேட்டார். உன் கவிதைகளுக்கான உத்வேகமான எதிர்வினைகள் எத்தனை இதுவரை எதிர்கொண்டிருக்கிறாய் என. என்னிடம் பதில் இல்லை. அவரே சொன்னார். கவிதைகள் மெளனமானவை. அவை எதிர்வினைகளை எதிர்பார்ப்பதில்லை. எழுதப்பட்ட நாளிலிருந்து பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து கவிதையின் ஒரு வரியை ஒரு வாசகன் சுட்டிக் காட்டக் கூடும். அதுதான் அந்தக் கவிதையின் வெற்றியாக இருக்கும் என்று.

இந்த வகையான கவிதைகள் உயிர் எழுத்தில் தொடர்ந்து வந்திருக்கின்றன என்பதைச் சொல்ல முடியும்.

(4)

ப‌ன்னிரெண்டு இத‌ழ்க‌ளில் இத்த‌னை க‌விஞ‌ர்க‌ள் ப‌ங்கேற்றிருப்ப‌து மிக முக்கியமான ஒன்று. க‌ல்யாண்ஜி, க‌லாப்ரியா தொட‌ங்கி புதிதாக‌ எழுத‌வ‌ரும் க‌விஞ‌ர்க‌ள் வ‌ரை வெவ்வேறு த‌ள‌ங்க‌ளில் இய‌ங்கும் க‌விஞ‌ர்க‌ளுக்கான‌ இட‌ம் அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

உயிர் எழுத்தின் முக்கியமான செயல்பாடுகளாக இன்றைய‌ க‌விஞ‌னின் ப‌ல்வேறு ம‌ன‌வோட்டங்க‌ளை வாச‌க‌ வ‌ட்ட‌த்தில் முன் வைத்த‌து, சில‌ முக்கிய‌மான‌ மொழிபெய‌ர்ப்புக‌ளை தொட‌ர்ச்சியாக‌ வெளியிட்ட‌து குறிப்பாக‌ ஷ்யாம் சுதாக‌ரின் மலையாள‌க் க‌விதைக‌ள்(ஜ‌ன‌வ‌ரி 2008), த‌மிழின் முக்கிய‌மான‌ ச‌மகால‌ ஆளுமைக‌ள் வ‌ரிசையில் க‌விதையில் த‌ன‌க்கென‌ இட‌ம் ப‌தித்திருக்கும் தேவ‌தேவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் படத்தை முக‌ப்பு அட்டையில் பிர‌சுரித்து ம‌ரியாதை செய்த‌து போன்றவற்றை குறிப்பிட‌ விரும்புகிறேன்.

ப‌டைப்புக‌ள் எவ்வித‌ அடையாள‌ங்க‌ளுக்குள்ளும் வ‌ர‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ற‌ போதிலும் மொத்த‌மான‌ பார்வையில் த‌லித்திய‌ம், பெண்ணியம் போன்ற‌‌ வ‌கைப்பாடுகளில் க‌விதைக‌ள் அமையாத‌து என்பதனை குறையாக‌ச் சொல்ல முடியும்.ஒரு குறிப்பிட்ட‌ இய‌க்க‌த்தை ம‌ட்டுமே மிக‌ உத்வேக‌த்துட‌ன் முன்னெடுக்கும் ப‌ணியை சிற்றித‌ழ்க‌ள் மேற்கொள்ளும் போது, ப‌ர‌வலான் செய‌ல்பாடுக‌ளுக்கும் சில‌ திட்ட‌வ‌ட்ட‌மான‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் இட‌ம் அமைக்க‌ வேண்டிய‌ பொறுப்பு இடைநிலை இத‌ழ்க‌ளுக்கு இருக்கிற‌து.

க‌விதைக‌ள் த‌விர்த்து விக்ர‌மாதித்ய‌ன் ந‌ம்பியின் ஒரு க‌விதை, ஒரு க‌விஞ‌ன், ஒரு உல‌க‌ம் க‌ட்டுரையும் அத‌ற்கான‌ ராஜ‌ மார்த்தாண்ட‌ன், பொதிகைச் சித்த‌ரின் எதிர்வினைக‌ளும் ந‌வீன‌ க‌விதையுல‌கு குறித்தான் முக்கியமான‌ உரையாட‌லுக்கான‌ தொட‌க்க‌ப் புள்ளியாக‌ அமைகின்ற‌ன‌. இது போன்ற‌ க‌விதை குறித்தான‌ உரையாட‌லும், விவாத‌மும் தொட‌ர்ச்சியாக‌ மேற்கொள்ள‌ப்பட‌ வேண்டும். இது த‌மிழ்க் க‌விதையின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌க‌ர்வுக்கு முக்கிய கார‌ணியாக‌ அமையும்.

ஓராண்டில் க‌விதை சார்ந்த‌ இய‌ங்குத‌லில் உயிர் எழுத்து அழுத்த‌மாக‌வே த‌ட‌ம் ப‌தித்திருக்கிற‌து. தொட‌ர்ந்து வ‌லிமையுட‌ன் இய‌ங்கும் என்ற‌ ந‌ம்பிக்கை எழுவ‌தும் இய‌ல்பாகிற‌து.


நன்றி: உயிர் எழுத்து-ஜூலை2008

0 எதிர் சப்தங்கள்: