Jul 5, 2008

கவிஞர் சுகுமாரன்

தமிழகத்தில் கவிதைகள் வாசிப்பவர்கள் எண்ணிக்கை என்னவாயிருக்கும்? எந்தப் பாகுபாடும் வேண்டாம். தினப்பத்திரிக்கையின் பெட்டிக்குள் வரும் மூன்று வரிகளில் தொடங்கி, நான் உச்சகட்டம் என்று கொண்டாடும் நவீன கவிதைகள் வரை. தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் முயன்று பார்க்கும் வடிவம் கவிதையாக இருக்கிறது.

எனக்கு கவிதை மீது எப்படி ஈடுபாடு வந்தது என்று நண்பர் ஒருவர் கேட்டார். இந்த வினா பொது இடத்தில் எந்த முக்கியத்துவமும் அற்றது. ஆனால் பதிவு செய்வதால் எந்த இழப்பும் வரப்போவதில்லை. எம்.டெக் பிராஜக்ட் விஷயமாக சென்னை வந்திருந்த போது சனி,ஞாயிறுகளில் அதுவரை நான் எழுதி வைத்திருந்தவற்றை கவிதைகள் என்ற நினைப்பில் தூக்கிக் கொண்டு யாரையாவது பார்க்கப் போவது என்பதை ஒரு பணியாக வைத்திருந்தேன்.

அறிவுமதி,பா.விஜய்,விவேகா,சினேகன் என்ற திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் இருந்த பட்டியல் அது. மயிலாப்பூரில் குளம் அருகில் அலைந்து கொண்டிருந்த போது, தமிழச்சியின்(அப்பொழுது தங்கபாண்டியன் என்று அவர் எழுதவில்லை) "எஞ்சோட்டுப் பெண்" மதிப்புரை விழாவில் மனுஷ்ய புத்திரன் அவர்களை சந்தித்தேன். அடுத்த வாரம் வீட்டிற்கு வருவதாக முகவரி வாங்கிக் கொண்டேன். அடுத்த ஞாயிறன்று அவர் இல்லத்திற்கு சென்ற போது அவர் பொதுவாக விசாரித்துவிட்டு என்ன கவிதைகள் படித்திருக்கிறீர்கள் என்றார். சிற்பியின் "சர்ப்பயாகம்", "கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்", "இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல" என்று பெருமையாகச் சொன்னேன்.

எந்த எதிர்வினையுமின்றி எனக்கு மூன்று கவிதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். "நவீன தமிழ்க் கவிதை அறிமுகம்","பசுவய்யாவின் 107 கவிதைகள்" மற்றும் சுகுமாரனின் "கோடைகாலக் குறிப்புகள்".

நவீன தமிழ்க் கவிதை அறிமுகம் புத்தகத்தில் ஒவ்வொரு கவிதையும் ஏதாவது விதத்தில் தாக்கத்தை உண்டாக்குவதாக இருந்தன. அந்தக் கவிதைகளின் வரிகளை என்னால் வரி பிசகாமல் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுகுமாரனின் "சாகத்தவறிய மறுநாள்" கவிதையை வாசித்த போது உருவான பதட்டத்தையும், துக்கத்தையும், வெற்றிடத்தையும் இன்னும் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகும் துல்லியமாக நினைவு கூற முடியும்.

அதே இரவில் கோடைகாலக் குறிப்புகளை வாசித்து முடிக்க முடிந்தது. இதுவரை நான் எழுதியவைகளை நிராகரிக்க வேண்டியதன் அவசியமும், நான் பயணிக்க வேண்டிய தொலைவும் தென்பட்ட இரவு அது.

"கண்ணாடியில் நகரும் வெயில்" முன்னுரையில் என் கவிதைக்கான தடத்தை பதித்து வைத்திருப்பவர்களாக சுகுமாரன், மனுஷ்ய புத்திரன், ஆத்மாநாமை குறிப்பிட்டிருக்கிறேன்.
_____

சுகுமாரனின் கவிதைகள் ஒரு மையத்தை வைத்து சுழல்வதாக இருக்கின்றன. அவை கவித்துவத்துவத்துக்காக எந்த பாசாங்கும் இல்லாதவை. மொழியமைப்பில் சுகுமாரன் செய்து பார்த்திருக்கும் பரிசோதனை முயற்சிகளும் அதில் அடைந்திருக்கும் வெற்றியும் அவருக்குப் பின் வந்த பல கவிஞர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்திருக்கிறது.

ஒரே சொல்லை திரும்ப திரும்ப வெவ்வேறு வடிவமைப்பில் பதிவு செய்து தன் கவிதைக்கான பொருளை அழுந்தச் சொல்லும் சுகுமாரனின் தனித்த வடிவம் கவிதையில் நெகிழ்ந்து இருக்கக் கூடிய இசைத்தன்மையை உண்டாக்குவதை கவனிக்க முடியும். இறுக்கமான கவிதைகளை உடைப்பதில் வெற்றியடைந்த தமிழ்க் கவிஞர்களில் சுகுமாரன் முக்கியமானவர்.

கவிதைகளில் அவர் தொட்டு பார்த்திருக்கும் தளங்களும், கையாண்டிருக்கும் படிமங்களும் குறிப்பிடத்தக்கவை. "யூக்கலிப்டஸ் மரங்களுக்குப் பின்னால் அறுபட்ட தலை" என சூரியனை குறிப்பிடுவது மிகச் சிறந்த உதாரணம்.

கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக(சிறு இடைவெளிகள் தவிர்த்து)தமிழ் இலக்கிய வெளியில் கவிதை, கட்டுரை என்ற தளங்களில் சுகுமாரன் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

நீண்டகாலமாக இயங்கிவரும் படைப்பாளியின் படைப்புகளில் இயல்பாக இருக்கக் கூடிய மாற்றத்தை இவரது கவிதைகளில் புரிந்து கொள்ள முடியும். வன்முறை, சுயம் சார்ந்த துக்கம், தவிப்பு, கோபம் போன்றவற்றால் ஆகியிருந்த சுகுமாரனின் தொடக்க கால கவிதைகள் இன்று அடைந்திருக்கும் கனிவான தன்மை வரைக்கும் தான் பயணம் செய்த தடத்தில் தொடர்ந்து தன்னை உருமாற்றி வந்திருக்கின்றன.

இது கவிதையின் பயணமாக இல்லாமல் படைப்பாளியின் வயது,ஆளுமை சார்ந்த பயணமாகவும் இருக்கிறது. பூமியை வாசிக்கும் சிறுமி தொகுப்பினை முழுமையாக வாசிக்கும் வாசகனால் இந்த இடைவெளியில் பயணம் செய்ய முடியும்.
__

சுகுமாரன் அவர்களை முதன் முதலில் சந்தித்தது ஊட்டி நித்யா கவிதையரங்கில். அதற்கு முன்னதாக தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் எனது கவிதைகள் குறித்தான அவரது வெளிப்படையான விமர்சனங்கள் எனக்கு மிக முக்கியமானவை. நித்யா கவிதையரங்கில் எனது சில கவிதைகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. அரங்கிற்கு வெளியே சுகுமாரன் ஒரு சிகரெட்டை உறிஞ்சியவாறே எனது கருத்தைக் கேட்டார். "இருபத்தாறு வயதிலேயே விமர்சனம் வரக்கூடாது என்று நினைத்தால் நான் எத்தனை நாளானாலும் கவிஞனாக‌ முடியாது" என்றேன். அது கொஞ்சம் நானாகவே ஆறுதல் படுத்திக் கொள்வதற்கான வார்த்தைகள். அப்பொழுது எனது கவிதைகள் பற்றி சுகுமாரன் முன் வைத்த கருத்துக்கள் மிக ஆழமானவை. அவற்றை நித்யா கவிதை அரங்கு பற்றிய பதிவுகளில் பதிவு செய்கிறேன்.
___

சுகுமாரனின் "பூமியை வாசிக்கும் சிறுமி"க்கு "சிற்பி" விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
---

சுகுமாரன் கவிதைகள்:http://pesalaam.blogspot.com/2008/05/blog-post_11.html
http://www.andhimazhai.com/news/viewmore.php?id=3176

3 எதிர் சப்தங்கள்:

வேளராசி said...

கவிதைகள் பற்றி சுகுமாரன் முன் வைத்த கருத்துக்கள் மிக ஆழமானவை. அவற்றை நித்யா கவிதை அரங்கு பற்றிய பதிவுகளில் பதிவு செய்கிறேன்.....
எதிர்பார்க்கிறேன்

தமிழ்நதி said...

கவிஞர் சுகுமாரனது கவிதைகளை நானும் மிக விரும்பி வாசிப்பதுண்டு. 'பூமியை வாசிக்கும் சிறுமி'யை சில நாட்கள் கையில் கொண்டு திரிந்தேன். பிறகு மனதில் பதிந்தது. அவர் எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய ஆதர்சம்.

anujanya said...

மணி,

நல்ல பதிவு. சுகுமாரன் எல்லாக் கவிஞர்களுக்கும் ஒரு ஆதர்ச நாயகன். மேலும் இத்தகைய பதிவு எழுதுங்கள். நன்றி.

அனுஜன்யா