Jul 9, 2008

சில உதவாக்கரை குறிப்புகள்

இந்தக் கட்டுரையை எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை என்பது பழைய ஸ்டைலாக இருக்கிறது. சொல்வதற்கான சில விஷயங்கள் தொண்டைக்குழி வரை அடைத்துக் கிடக்கலாம். அதே சமயத்தில் எதைச் சொல்லப் போகிறோம் எந்த வரிசையில் சொல்லப் போகிறோம் என்று தெரியாத சமயங்களில் இந்த பழைய வரியோடு ஆரம்பிக்கலாம். நானே குழப்பமாக இருக்கும் போது நான் சொல்வதை கேட்கும் தண்டனை இந்தக் கட்டுரையின் முற்றுப்புள்ளி வரை நகர்பவருக்கு கிடைப்பதை நினைத்தால் இதோடு நிறுத்திக் கொள்வது உத்தமம்.
___

இந்த‌ பினாங் ந‌க‌ர‌த்திற்கு வ‌ந்து ஒரு மாத‌ம் ஆகிற‌து. ஒரு ப‌ட்டாம் பூச்சியொன்று த‌னித்து ப‌ற‌ந்து கொண்டிருக்கும் போது அத‌ற்கென்று சோக‌ம் இருக்கும் என்ப‌தை நினைத்திருப்பேனா என்று தெரிய‌வில்லை. இந்த‌ பினாங் ந‌க‌ர‌த்தின் நெருக்க‌டியில்லாத‌ போக்குவ‌ர‌த்தும், அக‌ண்ட‌ சாலைக‌ளும் ஒரு வ‌ன‌த்தையொத்திருக்கின்ற‌ன‌. ஒரு ம‌ழை பெய்து கொண்டிருக்கும் இர‌வில், இருப‌த்தேழு வ‌ருட‌ங்க‌ளில் முத‌ன் முறையாக நான் அவ‌ச‌ர‌ வாழ்விய‌ல் முறைக்கு இய‌ந்திர‌மாக‌ மாறியிருப்ப‌தை உண‌ர‌ முடிகிற‌து. எந்த‌த் திக்குமில்லாம‌ல் காற்றில் அலைவுறும் ப‌ட்டாம்பூச்சியாக‌ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு சுய‌ ப‌ச்சாதாப‌ம்.

காட்டுமன்னார் கோவிலில் இன்று ந‌ட‌க்கும் த‌ன் அண்ண‌னின் திரும‌ண‌த்திற்கு போக‌ முடியாம‌ல் ஒரு நாள் விடுப்பில் சென்று பினாங் நகரில் அழுது கொண்டிருக்கும் ராஜ‌ப்பாவை நினைத்து கொஞ்ச‌ம் ப‌ரிதாப‌ம் கொள்கிறேன். அவ‌ர‌து நிலையை எந்த‌வித‌த்திலும் மாற்றிவிட‌ முடியாம‌ல் நானாக‌ என்னை ம‌னிதாபிமான‌ம் மிக்க‌வ‌னாக‌ க‌ருதிக் கொள்ளும் பாசாங்கு.

அலுவ‌ல‌க‌ம் முடித்து வ‌ரும் போது ஒரு பெரும் பாறை த‌லை மீது அழுந்திக் கொண்டிருக்கிற‌து.நாளை மேற்கொள்ள வேண்டிய பணிகளின் சுமை. இது ஒரு போதையை ஒத்திருப்ப‌தாக‌ நினைத்து என்னை ஆறுத‌ல் ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும். இல்லையென்றால் இது என்னை எப்ப‌டி வேண்டுமானாலும் த‌க‌ர்த்துவிட‌ முடியும்.

இப்ப‌டி பாசாங்குக‌ளாலும் போலி பாவ‌னைக‌ளாலும் என்னைச் சுற்றிலும் வ‌லை பின்னிக் கொண்டிருக்கிறேன். இந்த‌ச் சில‌ந்தி வ‌லையின் பின்ன‌ல் மிக‌ வேக‌மாக‌ இருக்கிற‌து. நான் என்னை சிக்க‌ வைத்துக் கொள்ளாம‌ல் ந‌க‌ர்ந்து கொண்டேயிருக்க‌ வேண்டும்.
____

ப‌டைப்பாளி என்ற‌ சொல் குறித்தான‌ விவாத‌ம் ஒன்று தொட‌ங்கிய‌து. ந‌ம‌க்கு தெரியாத‌ வ‌ய‌தில் புக‌ழ் மீதான‌ ஆசையில் எழுத‌ ஆர‌ம்பித்து அந்த‌ புக‌ழின் போதையில் எழுதிக் கொண்டிருக்கிறோம். எந்தவிதமான‌ எழுத்தையும் வாசிப்ப‌த‌ற்காக‌ ஒருவன் இருந்து கொண்டிருப்பான். நூறு ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கினால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ எழுத்து என்ற‌ எதுவுமே இருக்க‌ முடியாது. ஒரு த‌னி ம‌னித‌ன் வேண்டுமானால் ஒரு எழுத்தை முற்றாக‌ நிராக‌ரித்திருக்க‌லாம். அருகில் இருப்ப‌வ‌ன் அதே எழுத்தை கொண்டாடிக் கொண்டிருப்பான்.

இந்த‌க் கொண்டாட்ட‌த்தின் ம‌ய‌க்க‌ம் உருவாக்கும் பாசாங்கு "ப‌டைப்பாளி".
தோலுரித்துப் பார்த்தால் ஒன்றுமில்லாத‌ பிம்ப‌ம் அது.

த‌ன் காலில் இருந்து உதிரும் ம‌க‌ர‌ந்த‌த் தூளின் மீதான எந்த‌வித‌மான‌ க‌வ‌ன‌மும் இல்லாத‌ ப‌ட்டாம்பூச்சியாக‌ இருப்ப‌வ‌னை ம‌ட்டுமே ப‌டைப்பாளி என‌லாம். த‌ன் படைப்புகளின் மீதும் தன் பெயரின் மீதும் க‌வன‌த்தை க‌ட்ட‌மைக்க‌ எத்த‌னை வித‌மான‌ அர‌சிய‌ல் நிக‌ழ்த்த‌ வேண்டியிருக்கிற‌து.
__

உயிர் எழுத்து, ஜூலை இத‌ழில் வ‌ந்த‌ க‌ட்டுரை(ஒரு தும்பி அலைந்து கொண்டிருக்கிற‌து) குறித்தான இர‌ண்டு முக்கிய‌மான‌ எதிர்வினைக‌ள் ஒன்று க‌லாப்ரியாவிட‌மிருந்தும் ம‌ற்றொன்று பாவ‌ண்ண‌னிட‌ம் இருந்தும்.

மிக‌ வெறுமையான‌ ம‌ன‌தோடு திரியும் க‌ண‌த்தில் வ‌ந்த‌ இர‌ண்டு எதிர்வினைக‌ளும் த‌மிழின் முக்கியமான‌ ப‌டைப்பாளுமைக‌ளிட‌ம் இருந்து வ‌ந்திருக்கிற‌து. பாவ‌ண்ண‌னுக்கு அனுப்பிய‌ ப‌திலில் "காலை நேர‌ ஏறுவெயிலில் அலைந்து வ‌ந்த‌வ‌னுக்கு க‌ம்ம‌ங்கூழ் கிடைத்த‌து போன்றிருக்கிற‌து" என்று அனுப்பினேன். ப‌ழமையான‌ உவ‌மைதான் என்றாலும் ச‌ரியாக‌ பொருந்துகிற‌து.
__

இந்த‌ நாட்க‌ளில் ச‌மூக‌ம் சார்ந்து ப‌தினாறு வ‌ய‌க‌ளில் எழும் கோப‌ம், வெறி போன்ற‌ உண‌ர்வுக‌ளும், சுய‌ம் சார்ந்து எழும் அதீத‌ காம‌ம், குரூர‌ம் போன்ற‌ உண‌ர்வுக‌ளும் ம‌ழுங்கி மென்ப‌ற்றுத‌லுக்காக‌ ம‌ன‌ம் திரிந்து கொண்டிருக்கிற‌து. வீட்டில் பெண்பார்ப்ப‌தாக‌ச் சொல்கிறார்க‌ள்.
____

4 எதிர் சப்தங்கள்:

நாமக்கல் சிபி said...

ஸ்ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!

நாமக்கல் சிபி said...

//"காலை நேர‌ ஏறுவெயிலில் அலைந்து வ‌ந்த‌வ‌னுக்கு க‌ம்ம‌ங்கூழ் கிடைத்த‌து போன்றிருக்கிற‌து//

சரியான உவமைதான்!

உமது மகிழ்ச்சியை/உணர்வுகளை புரிந்துகொள்ளமுடிகிறது!

நாமக்கல் சிபி said...

//நானே குழப்பமாக இருக்கும் போது நான் சொல்வதை கேட்கும் தண்டனை இந்தக் கட்டுரையின் முற்றுப்புள்ளி வரை நகர்பவருக்கு கிடைப்பதை நினைத்தால் இதோடு நிறுத்திக் கொள்வது உத்தமம்//

முதல் பத்தியிலெயே முடித்து வைத்து விடுகிறீரே!

நாமக்கல் சிபி said...

அதெல்லாம் சரி! தமிழில் ஒரு பதிவு போடுங்க!