May 6, 2008

நித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள்.

ஊட்டி நாராயண குருகுலத்தில் ஜெயமோகன் அவர்களால் 'நித்யா கவிதை அரங்கு' நடத்தப்பட்டது. இது ஜெயமோகன் நடத்திய‌ ஒன்பதாவது தமிழ் மலையாளக் கவிதை பரிமாற்ற உரையாடல்.

மே 1,2,3 ஆகிய‌ நாட்க‌ளில் ந‌டைபெற்ற‌ இவ்வ‌ர‌ங்கு குறித்த‌ என‌து பார்வையை விரைவில் ப‌திவு செய்கிறேன்.

அர‌ங்கில் வாசிக்க‌ப்பட்ட‌ த‌மிழ்க் க‌விதைகளை(தேவதச்சன், சுகுமாரன், ராஜ சுந்தரராஜன், எம்.யுவன், க.மோகனரங்கன், மகுடேஸ்வரன், வா.மணிகண்டன்) வ‌லைப்ப‌திவில் இடும் எண்ண‌ம் இருக்கிற‌து. என‌து க‌விதைக‌ள் த‌ற்ச‌ம‌ய‌ம் கைவ‌ச‌ம் இருப்ப‌தால் அவ‌ற்றை முத‌லில் இடுகிறேன். இவை 'கண்ணாடியில் நகரும் வெயில்' தொகுப்பில் உள்ள கவிதைகள்.

1. விரல்களில் உதிரும் சொற்கள்
நிசப்தம் விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன.

2. சுவரில் ஊர்ந்த கதைகள்
தன் நாவுகளால்
என் கண்ணீரையும்
அசைவற்ற விழிகளில்
நிர்வாணத்தின்
நெளிவுகளையும்
பதிவு செய்திருக்கிறது
-இந்தச் சுவர்.
இப்போது
படிமமாக்குகிறது.
சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை.

3. விடைகளற்ற புதிர்கள்
இந்த ரயிலின்
பதினோறாவது பெட்டிக்கு
கீழாக
உடல் கத்தரித்துக் கிடக்கிறான்
பச்சைச் சட்டை அணிந்தவன்.

சிலர் முந்தைய ரயிலில் விழுந்திருக்கலாம் என்றனர்
சிலர் தண்டவாளத்தில் கால் சிக்கியிருக்கும் என்றனர்
சிலர் தற்கொலையாக இருக்கலாம் என்றனர்.

கொஞ்சம் பேர்கள் அவன் மீதும்
மிஞ்சியோர் அவன் குடும்பம் குறித்தும்
பரிதாபப்பட்டார்கள்.

ரயில்வே இழப்பீடு வழங்கக் கூடும் என்ற
சிவப்பு பனியன்காரர்
இந்த வாக்கியங்கள் யாவுமே
விடைகளற்ற புதிர்கள்
என்றபடி
செய்தித்தாளை புரட்டத் துவங்கினார்.

4. வினைல் காதல்
கலாமந்திர் விளம்பரப் பலகையில்
முதுகு காட்டிப் படுத்திருந்தாள் வினைல் பெண்.
இடுப்பில் சிறிய
மடிப்பிருந்தது.

மடிப்பில் ஊர்ந்த
விளக்கொளியின் இருள் எறும்பை
கரங்களை நீட்டித் தொட முயன்றேன்.

கூச்சமாக இருந்தது.

தாங்கிப் பிடித்த
கம்பி வழியாகச் சொன்னேன்.
வெம்மையான நிலம் குறித்துப்பேசும் போது
உன் விரல்களுக்கிடையேயான
பரப்பினை
நினைத்துக் கொள்வேன் என்று.

சிரித்துவிட்டு
மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

குழப்பத்தில்
அவசரமாக நகர்ந்தான்
சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவன்.

5. பிரியம் படிந்த வாக்குமூலம்
இன்று -
குளிக்கும் போதும்
வலது காலின் பெருவிரலில்
ஒரு கல் தடுக்கிய நொடியும்
உன்னை நினைக்கவில்லை.

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு.
----
த‌ழிழுக்கு மொழி மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ ம‌லையாள‌க் க‌விதைகளை(பி.ராமன், செபாஸ்டின், பி.பி.ராமசந்திரன், எஸ்.ஜோசப், அன்வர் அலி, வீரான்குட்டி, பிந்து கிருஷ்ணன், விஷ்ணுபிரசாத், கல்பற்றா நாராயணன்) ஜெய‌மோக‌ன் அவ‌ர்க‌ளின் த‌ள‌த்தில் வாசிக்க‌லாம்.
----
ஓவிய‌ம்: ராஜ‌ன் புதியேட‌ம்

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

எல்லாக் கவிதைகளும் நன்றாக இருந்தாலும், 1, 2 & 4 இந்த கவிதைகள் நல்ல அனுபவம். 'விடைகளற்ற புதிர்கள்' அவ்வளவாகப் புரியவில்லை. மேலுமிருமுறை படித்துப் பார்க்கிறேன். ஐந்தாம் கவிதை ஆரம்ப நிலை கவிஞனின் காதல் கவிதை போல் தோன்றுவது, நான் வேறு எதையோ புரிந்துகொள்ளவில்லை என்பதைக் குறிக்கிறதோ !

மொத்தத்தில் நல்ல அனுபவம்.

ராஜா

Vaa.Manikandan said...

ந‌ன்றி ராஜா.

Anonymous said...

Wanted to share this quote from Freud -
"If his lips are silent, he chatters with his fingertips." - and praise you for a similar thought.