May 7, 2008

ஊட்டி நித்யா க‌விதை அர‌ங்கு - 1

மார்ச் 25 ஆம் நாள் ஜெயமோகன் அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. உதகையில் மே 1,2,3 தேதிகளில் நடக்கும் நித்யா கவிதை அரங்கில் என்னைக் கலந்து கொள்ளச் சொல்லி. என் பெயரை கவிஞர் சுகுமாரன் பரிந்துரைத்திருக்கிறார்.

அந்தச் சமயத்திலிருந்தே ஒரு விதமான உற்சாக மனநிலைக்கு ஆளானேன். பெங்களூரு சென்று அங்கிருந்து ஊட்டி செல்வதென முடிவு செய்து கொண்டேன். மைசூர் வரை நன்றாக இருக்கும் சாலை, முதுமலைக்குப் பிறகாக இடுப்பை முறித்துவிடுகிறது. என் கெட்ட நேரம் சாதாரண அரசுப் பேருந்தில் சக்கரத்திற்கு மேலாக ஒரு மேடுடன் இருக்கும் கடைசிக்கு முந்தைய வரிசை இருக்கை.

கலந்து கொள்ளும் நண்பர்கள் யாருமே எனக்கு முன்னதாக அறிமுகம் இல்லையாகையால் சிறு தயக்கத்துடனேயே இருந்தேன். ஊட்டியில் குளிர் இருந்தது. ஹைதராபாத்தில் தோலை அரிக்கும் வெயிலில் இருந்தவனுக்கு அந்த குளிர் அதிகம்தான். ஊட்டியின் குளிரைப் பொருட்படுத்தாமல் காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் குளிர் நீரை முகத்தில் அறைந்துவிட்டேன். என்னையும் அறியாமல் முகம் வீங்கிவிட்டது. First Impression is the last impression அல்லவா? இப்படியே அனைவரும் வரும் வரை பெருத்த முகமுடன் இருந்தால் "மணிகண்டன் என்றவுடன் 'வீங்கிய முகமுடையவன்" என்ற எண்ணம் பிறருக்கு வந்துவிடும் என்று வருத்தமடையத் துவங்கிவிட்டேன்.

கெ.பி.வினோத் ஊட்டியில் முதலில் அறிமுகமானார். சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர். 'நீங்க வருவீங்கன்னு ஜெ.மோ சொன்னார்' என்று தொடங்கி பல நாட்களாகத் தெரிந்தவர் போல பழக ஆரம்பித்துவிட்டார். கூட்டம் நடக்கும் போது இவர் எதுவும் பேசவில்லை.

வீரான்குட்டி, பிந்து கிருஷ்ணன், பி.ராமன், பி.பி.ராமச்சந்திரன்(இவர் ஹரிதகம்.காம் என்னும் முக்கியமான மலையாள இணையத்தளத்தை நடத்தி வ‌ருகிறார்)உள்ளிட்ட‌ ம‌லையாள‌க் க‌விஞ‌ர்க‌ளும், மோக‌ன‌ர‌ங்க‌னும் அதிகாலையிலேயே க‌ண்ணில் ப‌ட‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள்.

மோக‌ன‌ர‌ங்க‌ன் காலையில் க‌ட்ட‌ன்சாயா குடித்த‌வுட‌ன் சிக‌ரெட் குடிப்ப‌த‌ற்காக‌ வெளியே அழைத்துச் சென்றார். "சிக‌ரெட் குடிக்க‌ மாட்டீங்க‌ இல்லையா?" என்று எப்ப‌டிக் க‌ண்டுபிடித்தார் என்று தெரிய‌வில்லை. இத‌ற்கு என்ன‌ பி.ஹெச்.டி செய்ய‌ வேண்டுமா என்ன?. முந்தைய கவிதை அரங்குகள், குற்றாலம் நிகழ்வுகள், பழைய கூட்டத்தின் சர்ச்சை போன்று ஒரு மேலோட்டமான பார்வையை எனக்கு கொடுத்தார்.

பின்ன‌ர் காலைச் சிற்றுண்டி. ம‌ணி(நிர்மால்யா என்ற‌ பெய‌ரில் இவ‌ர‌து மொழிபெய‌ர்ப்பை ப‌ற்றி ப‌ல‌ரும் அறிந்திருக்க‌க் கூடும்)தான் உண‌வு, உறைவிட‌ வ‌ச‌திக‌ளின் முழுப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். அவ்வ‌ப்பொழுது சூடாக‌ வ‌ந்து இற‌ங்கும் உண‌வு, டீ, நொறுக்குத் தீனி, இர‌வில் அத்த‌னை பேருக்கும் த‌லா இர‌ண்டு க‌ம்ப‌ளிக‌ள் என்று பிர‌மாதப் ப‌டுத்தியிருந்தார். அந்த‌ ப‌ருப்பு வ‌டைக்கு ஒரு ஓ போடுவேன்.

ஜெய‌மோக‌ன் த‌ன் குடும்ப‌த்தோடு வ‌ந்து சேர்ந்தார். பிற‌கு ஒவ்வொருவ‌ராக‌ வ‌ர‌ ஆர‌ம்பித்த‌தும் நாராய‌ண‌ குருகுல‌ம் க‌ளை க‌ட்ட‌த் துவ‌ங்கிய‌து.
தேவ‌த‌ச்ச‌ன், சுகுமார‌ன், எம்.யுவ‌ன், மகுடேஸ்வ‌ர‌ன், ராஜ‌ சுந்த‌ர‌ராஜ‌ன், மோக‌ன‌ர‌ங்க‌ன் ம‌ற்றும் வா.ம‌ணிக‌ண்ட‌ன் ஆகியோர் த‌மிழ் க‌விஞ‌ர்க‌ள்.

பி.ராம‌ன், பி.பி.ராம‌ச்சந்திர‌ன், செபாஸ்டின், எஸ்.ஜோச‌ப், வீரான்குட்டி, அன்வ‌ர் அலி, பிந்து கிருஷ்ண‌ன், விஷ்ணுபிர‌சாத் ஆகியோர் ம‌லையாள‌க் க‌விஞ‌ர்க‌ள். க‌ல்ப‌ற்றா நாராய‌ண‌ன் ச‌ற்று தாம‌தமாக‌ கூட்ட‌த்தில் க‌லந்து கொண்டார்.

பிரார்த்தனை அறையின் தரையில் மெத்தை போன்ற விரிப்பு வட்ட வடிவத்தில் போடப்பட்டிருந்தது. பெரும்பாலான மலையாளக்கவிஞர்கள் அறையின் இடது புறமாகவும், தமிழ்க் கவிஞர்கள் வலது புறமாகவும் அமர்ந்திருந்தனர். பார்வையாளர்களாகக் கலந்து கொண்டிருந்த பலரும் பின்புறமாக நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

கூட்ட‌த்தில் ஜெய‌மோக‌னை 'ஹெட் மாஸ்ட‌ர்' என்றார்க‌ள். கூட்டத்தின் துவக்கத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவ‌ரையும் த‌மிழ், ம‌லையாள‌ம் என‌ இரு மொழிக‌ளில் கூட்ட‌த்தின‌ருக்கு அறிமுக‌ப்ப‌டுத்தினார். அதுமட்டுமின்றி தமிழில் பேசப்படுவதை மலையாளத்திலும், மலையாளத்தில் பேசப்படுவதை தமிழிலும் தொடர்ச்சியாக சலிப்பில்லாமல் மொழிமாற்றம் செய்து கொண்டேயும் அவ்வப்பொழுது தனது கருத்துக்களையும் முன் வைத்துக் கொண்டுமிருந்தார். அவர் மொழிமாற்றம் செய்து கொண்டிருக்கும் போது இடையில் யாராவது பேசினால் அது தன்னை அதிகம் கத்தச் செய்து ஆற்றலை வீணடிக்கும் என்று சொல்லி அமைதிப்படுத்தினார்.

ம‌குடேஸ்வ‌ர‌ன், நாஞ்சில் நாடன், எம்.கோபாலகிருஷ்ணன்(சூத்ரதாரி), ராஜ சுந்தரராஜன் ஆகியோர் கூட்ட‌ம் துவ‌ங்கும் போது காரில் வ‌ந்து கொண்டிருப்ப‌தாக‌த் த‌க‌வல் வ‌ந்த‌து. த‌மிழினி வ‌ச‌ந்த‌குமாரும் அவ‌ர்க‌ளோடு இருப்ப‌தால் அவ‌ர் ஒவ்வொரு இட‌மாக‌ நிறுத்தி மெதுவாக‌த்தான் வ‌ந்து சேர்வார்க‌ள் என்று சொன்னார்க‌ள். ஆனால் விரைவாக‌வே வ‌ந்து சேர்ந்துவிட்டார்க‌ள்.

முத‌லில் பி.ராம‌ன் க‌விதைக‌ளை வாசிக்க‌ முடிவான‌போது சில‌ க‌விஞ‌ர்க‌ள் வ‌ந்து சேராத‌தால் பொதுவான சில‌ அம்ச‌ங்க‌ளைக் குறித்து விவாத‌ம் தொட‌ங்கிய‌து. ராம‌னின் இல‌க்கிய‌ப் பய‌ண‌த்தில் உண்டான‌ இடைவெளி, அது குறித்தான‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ற்றிய‌‌ பேச்சின் போது சுகுமார‌ன் வ‌ந்து சேர்ந்தார். சுகுமார‌னும் இதே விதமான‌ இடைவெளியைச் ச‌ந்தித்த‌வ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. சுகுமார‌னின் ப‌த்து வ‌ருட‌ இடைவெளி என்ப‌தில் அவ‌ர் த‌னிம‌னித‌ன் சார்ந்த‌ ப‌டைப்புக‌ளில் இருந்து ச‌மூக‌, அர‌சிய‌ல் சார்ந்த‌ ப‌டைப்புக‌ளுக்கு மாறியிருப்ப‌து குறித்தும், முன்பு இருந்த எதிர்மறை, குற்றச்சாட்டுகள் நீங்கி கவிதையில் கனிவு,நிதானம் முக்கிய இடம் பெற்றிருப்பது குறித்தும் பேச‌ப்ப‌ட்ட‌து.

பி.ராம‌ன் த‌ன‌து க‌விதையில் மொழிய‌னுப‌வ‌ம் இல்லாத‌து குறித்து பேசினார். ஆனால் க‌விதையில் மொழிய‌னுப‌வ‌ம் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌து மோக‌ன‌ர‌ங்க‌னின் க‌ருத்து. இது ப‌ற்றிய‌ விவாத‌த்தின் போது பி.பி.ராம‌ச்ச‌ந்திரன்(பி.ராமன் அல்ல) த‌ன‌து க‌விதைப் ப‌ய‌ண‌த்தில் க‌விதைக‌ளை ம‌ர‌பு, ந‌வீன‌ம் என்று தொட‌ர்ச்சியாக‌ மாற்றி மாற்றி எழுதி பெண்டுல‌ம் போன்று செல்வதையும், இது க‌விதை மீதாக‌ இய‌ல்பாக கவிஞனுக்கு வ‌ர‌க்கூடிய‌ ச‌லிப்பினை த‌விர்த்துவிட‌ உத‌வுவ‌தும் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

க‌விதையில் நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌கு மீண்டு வ‌ந்து ஊக்க‌த்துட‌ன் இய‌ங்கிய‌வ‌ர்க‌ளாக‌ கே.ஜி.ச‌ங்க‌ர‌ப்பிள்ளை, ப‌சுவ‌ய்யா, தேவ‌த‌ச்ச‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளும், மீள‌ முடியாத‌வ‌ர்க‌ளாக‌ ஞான‌க்கூத்த‌ன், ந‌குல‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளும் குறிப்பிட‌ப்ப‌ட்டன.

கவிதையின் வடிவம் பற்றிய பேச்சில் ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் க‌விதையின் வ‌டிவ‌த்தில் மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ள் ப‌ற்றியும் பேச‌ப்ப‌ட்ட‌து.

முத‌ல் அம‌ர்வு பி.ராம‌னின் க‌விதைக‌ள் த‌விர்த்து க‌விதை சார்ந்த‌ பிற‌ விஷ‌ய‌ங்க‌ளையும் (க‌விதையின் வ‌டிவ‌ம், பொய‌டிக் இஞ்சினீய‌ரீங் போன்ற‌) விரிவான‌ முறையில் அல‌சுவ‌தாக‌ அமைந்திருந்த‌தால் கிட்ட‌த்த‌ட்ட‌ மூன்று ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ நிக‌ழ்ந்த‌து.

இந்த‌ விவாத‌த்தில் க‌விதையைப் ப‌ற்றி எழுத‌ப்ப‌ட்ட‌ பெரும்பாலான‌ க‌விதைக‌ள் தோல்விய‌டைவ‌து ப‌ற்றி தேவ‌த‌ச்ச‌ன் பேசிய‌து, ப‌டிம‌ம், மெட்ட‌ப‌ர், அலிக‌ரி போன்ற‌வ‌ற்றையும், முறுக்க‌ப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளைத் தாண்டி நாம் இன்று அடைந்திருக்கும் எளிய‌ க‌விதைக‌ள் குறித்துமான‌ ஜெய‌மோக‌னின் பார்வை, க‌விதைக‌ள் அனுபவ‌ங்க‌ளைச் சொல்வ‌து அல்ல‌து அனுப‌வ‌ம் குறித்தான அபிப்பிராய‌ங்க‌ளைச் சொல்வ‌து என‌ இருவ‌கைக‌ளில் அமைவ‌து ப‌ற்றிய‌ யுவ‌னின் வாத‌ங்க‌ள் போன்ற‌வை மிக‌ முக்கிய‌மான‌ இட‌ங்க‌ளுக்கு விவாத‌த்தை ந‌க‌ர்த்திய‌து.

(தொட‌ர்ந்து எழுதுகிறேன்)

0 எதிர் சப்தங்கள்: