Jan 11, 2007

ஒரு கவிதை

பூக்களை ரஸிக்கும்
அவள்
கண்களின் மீதமர்ந்து
நிறங்களைத் தூவியது
வண்ணத்துப் பூச்சி.

மெல்லச் சிறகசைத்து
அவள் விழிகளை
சிறகுகளில்
சுமந்து சுற்றத் துவங்கியது.

விழிகளுக்குள் படிந்தன
ஒவ்வொரு பூவின்
வண்ணமும்.

கோபம் வரும்
அவள் கணவனுக்கு
மூன்று வழிகள் இருந்தன

பூக்களை அழிப்பது
விழிகளைத் தொலைப்பது
அல்லது
வண்ணத்துப் பூச்சியைக் கொல்வது

விழிகள் திரும்பவும் பொருந்திய கணம்
பிளாஸ்டிக் பொம்மையாய்
சுவற்றில் ஒட்டியது
பூச்சி.

இறகுகளின் துகள்களும்
பூவின் வாசமும் படிந்த
இமைகளோடு

எழுந்து போனாள்.

2 எதிர் சப்தங்கள்:

Anitha Jayakumar said...

பூச்சி பொம்மையாய் மாறிவிட்டாலும் பூக்களின் வாசம் மட்டும் இயலாமைகளை மீறி நெடு நாட்கள் நிலைத்திருக்கும் என்றே தோன்றுகிறது.

-ganeshkj said...

கவிதை மனதைத் தொட்டது. "கோபம் வரும் கணவன்மார்களால்" விரயமான பெண்களின் திறமைகள் / கனவுகள் எத்தனை என்று யோசிக்க வைத்தது.