Jan 17, 2007

சென்னைப் புத்தகக் கண்காட்சி

2006 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல இயலாமல் ஹைதராபாத்தில் சிக்கிக் கொண்டேன். இந்த ஆண்டு எப்படியும் சென்றுவிட வேண்டுமென ஒரு மாதம் முன்பாகவே முடிவு செய்திருந்ததால் தடையெதுவும் வரவில்லை. வெள்ளிக்கிழமை(12.01.2007 ) காலை கவிஞர் மனுஷ்ய புத்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து அங்கிருந்து செல்வதாக முடிவு செய்திருந்தேன். மதியம் இரண்டரை மணிக்குத்தான் கண்காட்சி ஆரம்பம் என்பதனால் அவரோடு பேசிக் கொண்டிருந்த சமயம் தற்போது மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளாராக உருவெடுத்து வரும் மனோஜ் வந்தார். (இவரின் "புனைவின் நிழல்" என்ற நூல் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. பதினைந்து கதைகள்தான். நல்ல சிறுகதை படிக்க விரும்பினால் துணிந்து வாங்கலாம்.) பின்னர் மனோஜ் அவர்களோடு இருசக்கர வாகனத்தில் செல்வதாக ஏற்பாடு. 2005 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை மனதில் நிறுத்தி சென்றால், இந்த முறை முழுவதுமாக மாறிக் கிடந்தது. துளி தூசி இல்லை. விலாசமான வண்டி நிறுத்துமிடம் என மிக அற்புதமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். மொளகா பஜ்ஜி சாப்பிட தனி இடம்.ம்ம்ம்... பப்பாசியைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் வாங்கலாம். காசு மட்டும் இருந்தால் போதும் போலிருக்கிறது. நானூறுக்கும் அதிகமான கடைகளில் குறைந்த பட்சம், கடைக்கு ஒரு புத்தகமாவது நம் ரசனைக்குத் தேறிவிடும். விலைதான் எகிறிக் கிடக்கிறது. பதிப்பாளர்களுக்கும் தெரிகிறது. காலம் பழையதாக இல்லை. என்ன விலை வைத்தாலும் வாங்கும் வாசகன் வாங்குவான் என்று. வாங்குபவன் வாங்கத்தான் செய்கிறான்.

முதல்வரின் ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை பெரிதாக்கி வைத்திருக்கிறார்கள். கலைஞரின் அறிவுக் கூடமும். விகடன், குமுதம், நக்கீரன் போன்ற கடைகளில் எல்லாம் கூட்டம் ஈ மொய்ப்பதைவிட அதிகமாக இருக்கிறது. உயிர்மை, காலச்சுவடு, புதிய பார்வை போன்ற கடைகளில் இலக்கிய வாசகர்கள். பதிப்புத் துறையில் வித்தியாசமாக செய்து கொண்டிருக்கும் கிழக்குப் பதிப்பகத்தார் டீ-சர்ட் சகிதம் கலக்கிக் கொண்டிருந்தார்கள்.

புக்-பாயிண்ட், ஹிந்து போன்ற ஆங்கிலக் கடைகளும் உண்டு. காவ்யா, சந்தியா, குமரன், மணிமேகலை, நர்மதா போன்று பதிப்புத் துறையில் முத்திரை பதித்து வருகின்ற பதிப்பகங்களுக்கும் வாசகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. Brand name வேண்டும் போலிருக்கிறது. சில கடைகள் அடித்து நொறுக்கும் கூட்டத்திலும் அமைதியாக இருப்பதனை பார்க்க முடிகிறது. ஆன்மிகம் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது, இஸ்லாமிய பதிப்பகங்கள் கணிசமாக கண்ணில் பட, ராமகிருஷ்ண மடம், நித்தியானந்த சுவாமிகளின் மடம் போன்றவையும் கூட்டத்தை அள்ளியெடுக்கின்றன.

பெரியாருக்கெனவும் தனி கடை உண்டு. அது தவிர அடையாளம், ஞனியின் தினம் ஒரு தேர்தல் போன்றவையும் குறிப்பிடப் பட வேண்டும்.

எழுத்தாளருக்கென இருக்கும் பெயர் மிக முக்கியம். வைரமுத்து, பாலகுமாரன், சுஜாதா, எஸ்.ரா, ஜெயமோகன், சாரு எல்லாம் ஹாட்லிஸ்ட்.
கவிதைக்கென ஒரு கூட்டமே இருக்கிறது. சந்தோஷமாக இருந்தது. முதலில் பெயர் எடுத்துவிட்டு, பின்னர் புத்தகம் போட வேண்டும். இல்லை என்றால் கஷ்டம்தான்.

மூன்று நாட்களை கழித்தேன். மிக மகிழ்ச்சியான தருணம். பொங்கலன்று, பொங்கலோடு சேர்த்து விருந்தும் படைத்தார்கள். அறிவியல் அரங்கம், இரத்ததானம் என அடி பின்னி எடுக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் 2005 ஆம் ஆண்டு நான் பார்த்த கூட்டம் இல்லை என்று தோன்றுகிறது. ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம். அண்ணாசாலையோடு ஒப்பிட்டால் கீழ்ப்பாக்கம் ஒதுக்குப் புறம்தானே?

நிறைய பேரை முதன் முதலாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்காகவாவது வருடம் தவறாமல் வர வேண்டும் போலிருக்கிறது.

நானாக ஒரு பதினைந்து புத்தகங்களை வாங்கினேன். நான் மிக மதிக்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் "நீ படிக்க வேண்டிய புத்தகங்கள்" என பத்து புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்தார். என் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் அது.

தமிழின் வாசகர் கூட்டம் நம் தலைமுறையில் அழியாது என உறுதியாகச் சொல்லலாம். "என் முதல் சம்பளம்" என்று சொல்லி புத்தகம் வாங்கிய வாசகர் ஒருவர் சாரு நிவேதிதாவையே கலங்க வைத்தார். இலக்கிய உலகம் சு.ராவிற்கென செலுத்திய அஞ்சலி முறையை கலாய்த்த மனிதர் சாரு என்பதை நினைவில் நிறுத்துக.

சாரு சொன்ன ஒரு வாக்கியம்தான் நம்ப முடியவில்லை. "பத்தாயிரம் எடுத்து வந்தேன். மூணாயிரத்துக்குத்தான் தேறுச்சு" என்றார். எனக்கு குழப்பமாகிவிட்டது. அவர் ரேஞ்ச்க்கு இல்லையா? இல்ல பிலிம் காட்டுறாரா என. எனக்கு ஐம்பதாயிரம் இருந்தால் கூட புத்தகங்கள் வாங்க முடியும்.

3 எதிர் சப்தங்கள்:

தமிழ்நதி said...

நல்ல விரிவான பதிவு. சாரு நிவேதிதா ஐரோப்பாவிற்குச் சென்றுள்ளதாகக் கதையைக் கிளப்பி விட்டது யார் என்று தெரியவில்லை.
"ஐம்பதாயிரம் இருந்தால்கூட புத்தகம் வாங்கமுடியும் எனக்கு" அது சரி... நீங்களும் எனது வகைதானா? கடந்த ஆண்டைவிடக் கூட்டம் குறைவென்று கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் போன மூன்று நாட்களில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.

Sivabalan said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்..

நேரில் சென்ற அனுபவத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்!

நன்றி

கோபிநாத் said...

வணக்கம் மணி..

அருமையான பதிவு...புத்தகக் கண்காட்சியை பார்த்த உணர்வு
sharjah வந்ததுல ஏற்பட்ட இழப்புல புத்தகக் கண்காட்சியும் ஓன்னு.

\\நான் மிக மதிக்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் \\

அருமையான மனிதர்... நானும் அவரை புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன்..

\\"என் முதல் சம்பளம்" என்று சொல்லி புத்தகம் வாங்கிய வாசகர் ஒருவர் சாரு நிவேதிதாவையே கலங்க வைத்தார். \\

நேரம் கிடைத்தால் அதைப் பற்றி எழுதுங்கள்..

அப்புறம்...உங்களுக்கு கிடைத்த, படித்த புத்தங்களைப் பற்றி கண்டிப்பாக பதிவிடுங்கள்.