Oct 11, 2006

ஒருத்தியையும் கிஸ் கூட அடிச்சது இல்லை.

"முப்பது வயசு ஆகப் போகுது. இதுவரை ஒருத்திக்கும் கிஸ் கூட கொடுத்ததில்லை. வாழ்க்கையில் வெறுமை வந்துவிட்டது போல உணர்கிறேன்". இப்படி ஒருவர் புலம்பினால் உடனடி நிகழ்வு என்னவாக இருக்கும்? நண்பர் புலம்பியதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கவலைகளும், நிறைவேறும் தருவாயில் இருந்தாலும் கரங்களுக்கு அகப்படாத ஆழ்மன ஆசைகளும் சுவாரசியமானதாக இருக்கின்றன.

"ஒரு அழைப்பிதழைப் போன்று
எங்கும் பரவியுள்ளது வெறுமை" என்று படித்த ஞாபகம்.

காலச்சுவடு பதிப்பத்தின் "அதற்கு மேல் ஒன்றும் இல்லை" என்ற மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகை நூலில் இருந்தது. ரீட்டா டோன் என்ற கவிஞரின் வரிகள் இவை.

ஒவ்வொரு மனமும் ஏதோ ஒன்றினைத் தேடிக் கொண்டே இருப்பதும், அது கிடைக்கும் வரை வெறுமை விரவிக் கிடப்பதுமாக இருப்பதும் இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.

******************
நூலில் இருந்த சில கவிதைகள் ஏதேனும் ஒரு விதத்தில் என்னைப் பாதிப்பதாக இருந்தன. ஐந்து கவிதைகள் உங்களின் பார்வைக்கும்.

*****************
தோழி ஒருவர் சொன்னார். புதிதாக சென்னையில் வந்திருக்கும் பண்பலை வரிசையில் வரும் 'ரகசியமாய்' என்ற நிகழ்ச்சி குறித்து. அதில் ஒருவன் பேசுகிறான். அவனின் காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயமாகிவிடுகிறது. அரசியல் செல்வாக்கு மிக்க அவளது தந்தையை எதிர்த்து அவனால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அவர்களுக்கு இது பெரிய பாதிப்பில்லை. இருவரும் சேர்ந்து இப்பொழுது திரையரங்கில் இருக்கிறார்கள். நாளை இவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறான். அவளின் கணவனுக்கும், இவனின் மனைவிக்கும் தெரியாமல் இவர்கள் சேர்ந்து வாழப் போகிறார்கள்.

எத்தகைய பெரிய விஷயத்தையும், மிக எளிதாக மறைத்துவிடலாம் என்று துளிர்த்துக் கிடக்கும் மனிதனின் நம்பிக்கை ஆச்சரியமானது.
ஏதாவது ஒரு சிறிய வினா பெரும் சிக்கலின் முடிச்சை அவிழ்த்துவிடக் கூடும் என்பது பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஒவ்வொரு கணமும், எதிர்ப்படும் ஒவ்வொருவரையும் ஏமாற்றிவிடலாம் என நம்பித் திரிகிறான்.

மீன்

குழந்தை
என்னிடம் கேட்டது:

மீன் உடம்புக்குள்
ஈரமாக இருக்குமா?

இல்லை
என்றேன் நான்.

அப்படியென்றால்
வேறு எப்படி இருக்கும்?

சிவப்பாகவும் இளஞ்சிவப்பாயும்
காலை நேரத்துக் கல்லறை போலக்
குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன்.

குழந்தை
மறுபடியும் கேட்டது:

உனக்கு எப்படித் தெரியும்
அது இறந்து போனாலன்றி.


மூலம் : பிரெய்ன் டர்னர்
தமிழில்: எஸ்.பாபு

****************
காரின் கண்ணாடி

பின்புறம் காட்டும் கார்க் கண்ணாடியில்
சட்டென்று ப்யுவாயி தேவாலயத்தின் பெரும்பகுதியைக் கண்டேன்
பெரிய பொருள்கள் சிறியவற்றில் குடியிருக்கின்றன
ஒரு நொடிப் பொழுதேனும்


மூலம்: ஆடம் ஜாகாஜேவ்ஸ்கி (போலிஷ்)
தமிழில்: பசுவய்யா.


இக்கவிதையின் அழகியலும், புதைந்திருக்கும் பேருண்மையும் சட்டென கவனத்தைக் கோருவதாக இருக்கிறது.

*************
தப்பித்தல் ஒரு கலை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக நிலைமை எப்படி இருந்திருக்கும் எனத் தெரியவில்லை. இன்றைய சூழலில் Escapsism என்பது தவறே இல்லை. தொடர்ச்சியாக பொறுப்புகளும் சுமைகளும் அடுத்தவனின் தலை/தோள் மீது கடத்தப் படல் வேண்டும். நாளை பிரச்சினை என்று வந்தால் விரலினை அவனை நோக்கி நீட்டிக் கொள்ளலாம். பாராட்டெனில் உடன் நின்று சிரித்துக் கொள்ளலாம். பொறுப்பை சிறிது கணம் தானும் சுமந்திருக்கிறேன் என்ற அடிப்படையில்.

புதிய மனைவி

மூன்றாம் நாள் அவள் சமையலறையில் புகுந்தாள்
தன் கைகளைக் கழுவிக் கொண்டாள்.
கஞ்சி தயாரித்தாள்
தன் மாமியாரின் ருசி பற்றி ஏதும் அறியாத நிலையில்
நாத்தியிடம் ருசி பார்க்கச் சொன்னாள்.


மூலம்: வாங் சியன்
தமிழில்: வெ. ஸ்ரீராம்.


இக்கவிதைக்கு மேற்சொன்ன விளக்கம் மட்டுமே விளக்கம் அன்று. இக்கவிதை தப்பித்தலை மட்டும் பேசவில்லை. என் பார்வையில் தப்பித்தல் என்பது இக்கவிதையின் கருவாக, பூதாகரமாகத் தெரிகிறது. அவ்வளவே.

****************
நகரவாசி

நகரவாசி நான்
வினோதமான விதத்தில்
இயற்கையைத் தொலைத்தேன்

மனிதர்களுடனேயே
சாலையோர மரங்களும்
பஸ் ஏறக் காத்திருப்பது போன்ற ஒரு சாலை
அப்படி ஒரு மரத்தின் பின்னால்
நானும் கடைசியாக

பஸ் வந்த போது
அறிவாளி நான்
அந்த மரம் ஏறிக் கொண்ட பிறகு
ஏறிக் கொள்ளலாம் என
நின்று கொண்டிருந்தேன்
அப்போதுதான் எனக்குத் தெரிந்தது
மரம் பஸ்ஸில் ஏறாது என.

மரத்தைப் பின்னால் விட்டு விட்டு
பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொள்கிறேன்.

நகரவாசி நான்
இப்படித்தான் இயற்கையிலிருந்து பிரிந்து போகிறேன்.

பஸ்ஸில் அமர்ந்திருக்கும் எனக்கு
சாலையின் இருபுறமும்
வழிநெடுக
மரங்கள் வேண்டும் என்ற ஆசை.

என் அறையில்
மாட்டி வைத்திருக்கிறேன் நான்
அடர்ந்த காடு ஒன்றின் சித்திரத்தை.


மூலம்: வினோத் குமார் சுக்லா
தமிழில்: ராதிகா ராணி.****************
கவிதைகள் பற்றிப் பேசத் 'தகுதி' இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அந்தத் தகுதி எனக்கு இருப்பதாக அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

இந்தக் கவிதையை நான் எழுதியது போலவே உணர்வதால், கவிதை பற்றிப் பேச எனக்கும் தகுதியிருக்கிறது.

என் கவிதைகளை கவிதைகள்
என்று யார் சொன்னது?
என் கவிதைகள் கவிதைகள்
அல்ல.
என் கவிதைகள்
கவிதைகள் அல்ல
என்று தெரிந்துவிட்டதனால்
நாம் இருவரும் சேர்ந்து
பேசத் தொடங்கலாம்

கவிதைகள் பற்றி.


மூலம்: ரியோக்கன்
தமிழில்: யுவன் சந்திரசேகர்.


******************

நானும்தான் அப்படியே இருக்கிறேன் என நண்பருக்கு ஆறுதல் சொன்னேன். சரி வாருங்கள். நாம் இருவரும் கவிதை பற்றி பேசத் தொடங்கலாம்.

8 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

நல்ல கவிதைகள்.

யார் அந்த நண்ப‌ர்? ;)

Vaa.Manikandan said...

நன்றி பொது மனிதன்.

எல்லாம் நம்ம நண்ப‌ர்தான். :)

Anonymous said...

I feel that you would have given a better title than what you have given now. the tiltle is irrelavent to content and some one may avoid reading this. i don't know why you tend to give this kind of title? I am expecting good posts(this is good post) with good title.

Senthil.

Vaa.Manikandan said...

நிச்சயமாக செந்தில்.

நானும் இதை உண‌ர்ந்தேன்.

கொஞ்சம் வ‌ருத்தமாகத்தான் இருக்கிறது. ச‌ரி தவறில் இருந்துதானே பாடம் கற்க முடியும் என்று தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. தலைப்பும் மிக முக்கியம் என்பதை உணர்கிறேன்.

இது பல‌ரின் கவனத்தைப் பெற்றிருக்க வேண்டிய கட்டுரை என்பதும் தெரிகிறது. செய்வது செய்தாகிவிட்டது. இப்பொழுது புலம்பி என்ன பயன்?

இனிவ‌ரும் காலங்களில் தலைப்புகளிலும் கவனம் செலுத்துகிறேன்.

தங்களின் க‌ருத்துக்கு நன்றி.

Anonymous said...

தலைப்பு சரியில்லையா? இது தான் சூப்பர் தலைப்பு! இப்படி இருந்தா தானே எல்லாரும் படிப்பாங்க?!! என்ன மணிகண்டா, சொல்றது சரி தானே???

Vaa.Manikandan said...

தலைவா..கண்ணா,

ஏதோ நல்ல தலைப்பா வெச்சு, நல்ல மேட்ட‌ர் எதாவது எழுதினா வ‌ராதீங்க.

எப்பவாவது நான் மாட்டிக்கிட்டு பீல் பண்ணினா வந்து மண்ணெணெயை தெளிச்சு விட்டுட்டு போங்க...அட போங்கப்பு!

Thiagarajan.S PMP said...

கொஞ்சம் புரிஞ்சா மாதிரியும் இருக்கு!. புரியாத மாதிரியும் இருக்கு. கடைசியா என்ன சொல்ல வர்றீங்க.

ஓகை said...

- - பரிசுக்காக தமிழ்ப்பெயர் வைத்த
- - திரைப்படத்தைப் போலல்லாமல்
- - இந்தப் பதிவில் ஏமாந்ததின்
- - விதை
- - என்னுள் இருந்திருக்கிறது..