Oct 16, 2006

கொங்கு நாட்டுச் சொற்கள் - மூன்றாம் பாகம்

சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை. பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை குறிப்பிடும் நண்பர்களின் பங்களிப்பு தொடர்ந்து உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது.

இந்தச் சொற்களில் பெரும்பாலானவை என் ஆயாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. நான் பார்த்த, பார்க்கப் போகும் மனிதர்களுல், ஆயாதான் இந்தச் சொற்களை இறுதியாக பயன்படுத்தியவரோ என்ற பதட்டமும் ஒட்டிக் கொள்கிறது. கிழவி தன்னோடு சேர்த்து புதைத்துக் கொண்டதோ என்ற சந்தேகமும் வருகிறது.

இன்னமும் என் மண்ணில் புழங்கிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும், எனக்கு இவற்றோடான அறிமுகம் அருகிக் கொண்டே வருவதும் இப்படி எண்ணக் காரணமாக இருக்கலாம்.

முத்து(தமிழினி) சில சொற்களைத் தந்து அடுத்த பட்டியலில் இணைத்துக் கொள் என்று சொன்னார். அவையும் இணைக்கப் பட்டிருக்கின்றன.

1. வங்கு - பொந்து, சந்து

2. கம்மனாட்டி - முட்டாள், மடையன்

3. உருமாளை - தலைப்பாகை

4. சிம்மாடு - தலைப்பாகை.
தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும்
போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.

5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)

6. அவுசாரி - விபச்சாரி

7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறும் மற்ற சாதிகள்.
உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள்
போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்(சக்கிலியர், பறையர்) இந்தக் கட்டுக்
கொலைக்காரர்கள் என்ற சொல்லுக்குள் வரமாட்டார்கள்.

8. ஓரியாட்டம் -சண்டை
சொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

9. மிஞ்சி - மெட்டி

10. பொல்லி - பொய்.

11. அக்கட்ட - அந்தப் பக்கம்.
அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.

12. இக்கட்ட - இந்தப் பக்கம்.
இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.

13. வேச காலம் - கோடை காலம்

14. ராவுடி - டார்ச்சர்
அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.

15. ராங்கு - தவறாக நடத்தல்.
ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?

16. அப்பு - அறை.
அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.

17. மொகற கட்ட - முகம்

18. செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

19. அக்கப்போரு - அட்டகாசம்
இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)

20. பொடனி - தலையின் பின்புறம்

21. முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்
குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.

22. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட 3.5
கிலோகிராம் வரும்)

23. அலும்பு - அலம்பல்.

24. அரமாலும் - ரொம்பவும்
அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.

25. திலுப்பாமாரி - மேனா மினுக்கி

26. அட்டாரி - பரண்.

27. புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த
நீர் புழுதண்ணி.

28. மக்காநாளு - அடுத்த நாள்

29. சீராட்டு - கோபம்.
கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.

30. அன்னாடும்- தினமும்

31. பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.
யார் விஷம் குடித்தாலும் இதைத்தான் சொல்லுவார்கள்

32. ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை
குறிப்பது.
ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத்
தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.

33.அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.

34. தாரை - பாதை
எறும்பு தாரை- எறும்பு ஊர்ந்த பாதை.

18 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

ஏலே எங்க இருந்து புடிக்குறீக? இம்புட்டு வார்த்தையவே!

வெற்றி said...

மணி,

/* திலுப்பாமாரி - மேனா மினுக்கி */

புரியவில்லையே? சற்று விளக்க முடியுமா?


/* மக்காநாளு - அடுத்த நாள் */

ம்ம்ம், இது தமிழ்ச் சொல்லா?

Anonymous said...

ராங்கு = wrong?

Vaa.Manikandan said...

வெற்றி,

திலுப்பாமாரி - மேனா மினுக்கி

பொதுவாக‌ கேப்மாரி: பொய் சொல்பவன்/ள், மொல்லமாரி போன்று 'மாரி' என்ற சொல் பல சொற்கள்ளுடன் இணைந்து காணப்படுகிறது. ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது.

திலுப்பா என்ற சொல் 'திருப்பி'என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம். அவ ஒட்டியாணத்த மாட்டிகிட்ட்டு திருப்பிகிட்டுத் திரியறா போன்ற சொற்றொட‌ர்கள் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இங்கு திருப்பிகிட்டு என்பது மற்றவ‌ர்களிடம் காண்பிப்பது.

அந்தப் பக்கம் திரும்பி, இந்தப்பக்கம் திரும்பி என்னும் பொருளில்.

இதே போல மேனாமினுக்கி என்னும் பொருளில் 'திலுப்பாமாரி' என்ற சொல்லும் உபயோகப்படுத்தப் படுகிறது.

மக்காநாளு: மறுக்கா நாள் > மறு நாள் > அடுத்த நாள்.

அனானி,

wrong எனபதில் இருந்துதான் ராங்கு வந்திருக்கும்.

நன்றி நல்லவன். முதல் பத்தியில் சொன்னது போல மண்ணில் இருந்துதான். :)

வேந்தன் said...

//கட்டுக்கொலை
ஓரியாட்டம்
திலுப்பாமாரி //

இந்த வார்த்தைகளை நான் கேட்டதில்லை.

//அட்டாரி - பரண்//

இதை அட்டாலி என்று தான் நான் கேட்டிருக்கிறேன்

கார்திக்வேலு said...

மணி,
//கட்டுக்கொலை //
கேள்விப்பட்டதில்லை ...
எப்படி இந்த வார்த்தை
வந்திருக்கும் என்று தெரியுமா ?

ILA (a) இளா said...

மணி, நானும் இந்த மாதிரி ஒரு பதிவு போடனும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். நீங்க சொன்ன அதே கஷ்டம்தான். உக்காந்து யோசிக்க. எழுதுங்க வுட்டு போற வார்த்தைகளுக்கு நான் பொறுப்பு

Vaa.Manikandan said...

நன்றி இளா. தொட‌ரலாம்.

கார்திக்,
கட்டுக்கொலைக்கார‌ர்கள் என்று சொல்லுவார்கள்.

கவுண்ட‌ர் இனத்தில் சில சாதியின‌ரை வீட்டிற்குள் அனுமதித்து, அவ‌ர்களுடன் தங்கள் பாத்திரங்களையும் புழங்கிக் கொள்வார்வார்கள். நாவித‌ர்கள், குயவ‌ர்கள், வண்ணார்கள் போன்ற உள்ளூர்ச் சாதியின‌ரையும், வெளியூர்களில் இருந்து வந்து குடியேறிய சில சாதிகளையும் இவ்வாறு சொல்வார்கள்.

"கட்டிக் குலாவுறான் பாரு" கேள்விப்பட்டிருக்கலாம். அவனோடு கொஞ்சி மகிழ்கிறான்.

இத்தகைய வகையில் "கட்டிக் குலாவிக் கொள்ளும்" சாதிகள் "கட்டுக் கொலைச் சாதிகள்" ஆகியிருக்கக் கூடும்.

வேந்தன்,

//அட்டாரி - பரண்//

இதை அட்டாலி என்று தான் நான் கேட்டிருக்கிறேன்.

கொங்குப் பகுதியிலிருந்து சற்றே விலகி இருக்கும் சேலம், நாமக்கல் பகுதிகளில் இந்த 'அட்டாலி' புழக்கத்தில் இருக்கிறது.

பெத்தராயுடு said...

அப்புறம் தெல்லவாரி அப்படின்னு ஒரு சொல்லு இருக்கே.

எ.கா: அந்த தெல்லவாரி நாயி கூடப் போகாதேன்னா, கேட்டாத்தான?

Anonymous said...

ஓ...நீயும் சாதிவெறியனா?

Vaa.Manikandan said...

பெத்த‌ராயுடு,

என்னையக் கூட தெல்லவாரின்னு சொல்லுவாங்க :)

அனானி அண்ணாச்சி,

நான் எப்போ சாதிவெறி புடிச்சு அலஞ்சேன்? அடஙொக்கமக்கா!
எங்க அம்மா மத்த சாதிப் பசங்க கூட சுத்துறான் சுத்துறான் தூத்துன கதை எனக்குத் தான் தெரியும்.

அப்படி எல்லாம் எந்த வெறியும் இல்லைங்க!

Viji said...

Hai மணிகண்டன்,
நல்ல முயற்ச்சி, உங்களுடைய இந்த தலைப்பிலான எல்லா பதிவுகளையும் படித்து வருகிறேன், இன்னும் நிறைய தொகுப்புகள் எழுத வாழ்த்துக்கள்.

தங்ஸ் said...

super manikandan. enakku kinathukadavu pakkam..pollachi side-la..I will send u a mail

Chellamuthu Kuppusamy said...

மணி..here is my dime..

ஆனம் (ஆணம் என்று சொல்வார்களா தெரியவில்லை) - கொழம்பு.

கரைசோறு என்பது தயிர்/மோர் ஊற்றிக் கரைத்துச் சாப்பிடுவதையும், கொழம்பு ஊற்றிப் பிசைந்து சாப்பிடுவதை ஆனங்சோறு என்றும் சொல்வார்கள்.

"ஏலே..அனங்காச்சீட்டியா?" (கொழம்பு காய்ச்சி விட்டாயா?) என்று யாராவது கேட்டால் அவருக்குக் கண்டிப்பாக 60 வயதாவது இருக்கும்.

மொடவாண்டி - இடக்குப் பண்ணும் மனிதன்
கட்டீத்தின்னி - கணவனையோ/மனைவியோ இழந்த இராசியில்லாத நபர்களை வசையும் சொல்
இராசி - மகசூல்
பழம்படுதல் - கால்நடைகள் சினைப் பிடித்தல் (தேப்பா...மாடு பழம்பட்டுருச்சா?
வெசையா - விசையாய்/வேகமாய் (ஏன்டா, இத்தா வெசையா எங்க போறே?)

Anonymous said...

22. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட 3.5
கிலோகிராம் வரும்)

//vallam is used to scale the volume not the weight. 1 vallam = 4 ltrs. So comparing it with weight is inappropriate. same amount measurement(in vallam) of different kind of things will give different weights. for example 1 vallam of (weight) rice is not equal to same 1 vallam of sugar.

//7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறும் மற்ற சாதிகள்.
உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள்
போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்(சக்கிலியர், பறையர்) இந்தக் கட்டுக்
கொலைக்காரர்கள் என்ற சொல்லுக்குள் வரமாட்டார்கள்.

you would have avoided this, though your intention is to make the people know the words used in the local language, we can avoid cetain things, so that you can make everybody is comfortable with reading your articles. While publishing something you have to take care of these things. I hope you will agree with me and take care of these things in your future articles.

this post is good one. while reading felt like i am in my native place.

Thanks,
Senthil.

Syam said...

கருக்கல் - early morning..
கருக்கல்லயே கிளம்பிட்டான்..

குமரன் (Kumaran) said...

மணிகண்டன். பல சொற்கள் எங்கள் ஊரில் புழங்கும் சொற்களாகவோ அதற்கு மிக அருகிலோ இருக்கின்றன. அங்கிட்டு, இங்கிட்டு கேள்வி பட்டிருக்கீங்களா?

Vaa.Manikandan said...

நன்றி. அனைத்து நண்ப‌ர்களுக்கு.

கேள்விப்பட்டிருக்கிறேன் கும‌ரன். ஆனால் எங்கள் ஊர்ப்பக்கம் புழக்கத்தில் இல்லை.